ஈ.வெ. இராமசாமி என்கிற மானிடர் நான்காம் வகுப்பு வரை படித்தார். ஆனால் தமிழகத்திலும் இந்தியாவிலும் அய்ரோப்பிய நாடுகளிலும் சோவியத்திலும் அவர் உலவினார். எளிய மக்களிடமும், அறிஞர்களிடமும், மக்கள் தலைவர்களிடமும் அவர் நேரிடையாகப் பேசினார். 1920 முதல் 1973 திசம்பர் 19 வரையில் நடந்தும் கட்டை வண்டியிலும், பேருந்திலும், தொடர் வண்டியிலும், மகிழுந்திலும், சீருந்திலும், கப்பலிலும் பயணம் மேற்கொண்டார். அவருடைய பயணம் மிகமிக நெடியது.
ஏச்சுப் பேச்சையும், கல்லடி, சொல்லடி, செருப்படி, சாணியடி, அழுகிய முட்டை அடி இவற்றையும் எதிர் கொண்டார். ஆனால் அடிக்க அடிக்க மேலே மேலே சீறி எழும் பந்துபோலப் பேச்சிலும் எழுத்திலும் கிளர்ச்சியிலும் ஊக்கம் குன்றாமல் உழைத்தார்.
தன்னைப்போன்ற மனிதனை - வா, போ, வாடா, போடா என்று அழைப்பதை வெறுத்தார். தொடாதே, தீண்டாதே, இந்தத் தெருவில் நடக்காதே என்ற உரிமைப் பறிப்பைக் கடுமையாகக் கண்டித்தார். அவ்வுரிமைகளை மீட்டுத்தர அயராது பாடுபட்டார். அடியே, ஏண்டி, வாடி, போடி என்று தத்தம் மனைவியை, மற்ற சாதிப் பெண்களை அழைப்பதைச் சாடினார்.
கல்லையும், செம்பையும் கடவுளாக எண்ணிய கோடிக்கணக்கான மக்களைச் சம்மட்டிகொண்டு அடிப்பதுபோல் சாடி, தக்க விளக்கம் கூறிச் சிந்திக்க வைத்தார்.
மனிதனை, மனிதனாக மதிக்கும் மாண்பைக் கற்பித்தார். இவ்வகையில் படிந்து போன பழைமையை அப்பட்டமாக-அம்மணமாக - நிருவாணமாகத் தோலுரித்துக் காட்டிப் பேசியவர் அவர்; எழுதியவர் அவர். 53ஆண்டுக்காலம் ஓய்வறியாத போர் வீரராகப் பரப்புரை செய்தவர்; களத்தில் நின்றவர்; போராடியவர் அவர். அவர்தாம் பெரியார் ஈ.வெ.ரா.
அவருடைய அடிப்படைக் கொள்கைகள் மானிடத்தை எல்லாவித அடிமைத் தனங்களிலிருந்தும் விடுதலை செய்வதை நோக்கமாகக்கொண்டவை.
1. தாம் பிறந்த நாட்டில் பிறவி காரணமாக மேல்சாதி, கீழ்ச்சாதி இருப்பதை அடியோடு ஒழிக்க விரும்பினார்.
2. தாம் வாழும் சமுதாயத்தில் உழைப்பாளிகளாகவும் பெரிய எண்ணிக்கையிலும் உள்ள வெகு மக்களுக்குச் சமுதாயம், கல்வி, அரசியல் பதவி, அரசு வேலை இவற்றில் உரிய பங்கு வேண்டும் என்பதற்காக 53 ஆண்டுக்காலம் இடைவிடாது போராடினார். அப்போராட்டம் சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, வகுப்புவாரி இட ஒதுக்கீடு என்கிற வடிவங்களில் இன்றும் தொடர்கிறது.
இவற்றுக்கு மட்டும் தமிழ்நாட்டு அரசிலும் மற்ற மாநில அரசுகளிலும் சட்ட வடிவங்களில் பாதுகாப்புக் கிடைத்திருக்கிறது. அவர் கோரியபடி, விகிதாசார வகுப்புவாரி உரிமை, 53 ஆண்டுக்கால அவருடைய உழைப்புக்குப் பிறகும் - அவர் மறைந்து 37 ஆண்டுகள் ஆன பிறகும் எட்டப்படாததாக இருக்கிறது.
3. மானிடத்தில் செம்பாதி - சரிபகுதி பெண்கள். ஆணுக்குப் பெண் சரிநிகர் என்ற எண்ணம் அவருடைய பிஞ்சு நெஞ்சில் முதன்முதலாகப் பதிந்த சமத்துவ எண்ணம் ஆணுக்கு உள்ள எல்லா உரிமைகளும் பெண்ணுக்கு வந்துசேரவேண்டும் என விரும்பிய அவர் 1929இலேயே அவற்றுக்குச் சட்ட வடிவிலான பாதுகாப்புக் கோரினார். அவர் கோரிய பெண்ணுரிமைப் பாதுகாப்புகள் இந்திய அரசினாலேயே சட்ட வடிவில் தரப்பட முடியும். அவர் சட்ட அவையை நாடாதவர். ஆயினும், அவரால் போற்றப்பட்ட சட்ட மேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர். தாம் இந்திய அமைச்சராக விளங்கியபோது பெண் மக்களுக்கு உரிய எல்லா உரிமைகளுக்கும் ஏற்ற சட்டங்களை 1947லேயே முன்மொழிந்தார். 1955லும் 1956லும் அவை நிறைவேற்றப்பட்டன.
பெண்ணுக்குச் சொத்தில் பங்கு உரிமை, மணவிலக்கு உரிமை, தத்துப்பிள்ளை ஆகும் உரிமை, மறுமண உரிமை எல்லாம் வந்துசேர்ந்தன. ஆயினும் இராமாயணம், மகாபாரதம், கந்தபுராணம் முதலானவற்றால் நெஞ்சில் பதிக்கப்பட்ட எண்ணங்களிலிருந்து - அந்தப்பண்பாட்டிலிருந்து பெண்களும் விடுபடவில்லை; ஆண்களும் விடுபடவில்லை; மக்கள் தலைவர்களும் விடுபட வில்லை; மெத்தப் படித்தவர்களும் விடுபடவில்லை; ஆட்சியில் உள்ளவர்களும் விடுபடவில்லை; கல்வித் திட்டமும் விடுபடவில்லை. மேலும் நூல்கள், புதினங்கள், பருவ ஏடுகள், நாளேடுகள் என்கிற அறிவு புகட்டும் கருவிகள் எல்லாவற்றிலும் இன்றும் இவை படிந்துள்ளன; இவை மேலாதிக்கம் பெற்றுள்ளன.
கருத்துகளை உருவாக்குகிற- பொழுது போக்கப் பயன்படுகிற திரைப்படங்கள், வானொலி, தொலைக்காட்சி, அரியதான இணையதளம் எல்லாவற்றிலும் - எல்லா மொழிகளிலும் இவை செல்வாக்கோடு திகழ்கின்றன.
சட்டங்கள் வடிவத்தில் தமிழகத்தில் வந்திருக்கிற பெண்ணுரிமை, சுயமரியாதைத் திருமண உரிமை, அனைத்துச் சாதியினரும் அருச்சகராகும் உரிமை, வகுப்புவாரி உரிமை பற்றிய எதுவும் கல்வியில் எந்த வகுப்பிலும்- முதல் வகுப்பில் தொடங்கிப் பட்ட மேற்படிப்பு வரையில் பாடமாக வைத்துக் கற்பிக்கப்படவில்லை. இவையெல்லாம் 1951முதல் அரசமைப்புச் சட்டத்திலும், தமிழக அரசுச் சட்டங்களிலும் பாதுகாப்புத் தரப்பட்டவை.
1950-60, 1960-70, 1970-80, 1980-90, 1990-2000, 2000-2010 என அறுபதாண்டுக் காலத்தில் இங்கே பிறந்த - வளர்ந்த - படித்த-உயர்கல்வி பெற்ற கோடிக்கணக்கான ஆண்களுக்கும் பெண்களுக்கும் கல்வித் திட்டம் மூலம் இவை கற்பிக்கப்படவே இல்லை. அத்தகைய மூடத்தனமான கல்வியைப் பெற்று, பழைமை எண்ணங்களிருந்து விடுபடாத கோடிக்கணக்கானவர்கள் அடங்கிய மக்கள் பரப்பில் எங்கோ ஒரு மூலையில் நாள்தோறும் பெரியார் தொண்டர்கள் பெரியாரின் கொள்கைகளைப் பரப்புவதைச்செய்கிறோம்.
“கடவுள் இல்லை”, “கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி”,
“பார்ப்பான் என்றும், பறையன் என்றும், சூத்திரன் என்றும் சொல்லாதே!”;
“இராமன் குடிகாரன்; சீதை விபச்சாரி”
“கந்தன் பிறப்புக் கதை அருவருப்பானது”
“ஆணுக்குப் பெண் சரிநிகர்”
எனத் தமிழகத்தின் எந்த ஊரிலும், எந்தத் தெருவிலும், எந்தச் சிலரும் இன்று மேடையேறிப் பேசலாம்; முழக்கலாம். இந்தஒரு வெற்றியை நமக்குப் பெற்றுத் தந்தவர் தந்தை பெரியார். 1960, 1970களில் அவருடைய சொற்பொழிவுகளை எப்போதோ கேட்டவர்கள்; எங்கோ படித்தவர்கள்; அவரை நேரில் பார்த்தவர்கள்; 70,80 வயதினராக எல்லா இடங்களிலும் இன்று இருக்கிறார்கள். இன்னும் 20 ஆண்டுகளில் இவர்கள் மறைந்துவிடுவர்.
“அவர்கள் பெரியார் கட்சிக்காரர்கள்; அவர்கள் அப்படித்தான் பேசுவார்கள்” என்று கூறிவிட்டு, அவற்றைத் தாங்கிக்கொள்கிறார்கள் (கூடிடநசயவந) தமிழக மக்கள். அவ்வளவுதான். இது நமக்கு வெற்றிபோல் தோன்றுகிறது. ஆனால், அவர்கள் எல்லோரும் அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை. தந்தை பெரியாரின் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி என்பது இந்த வடிவத்தில்தான் இன்று உள்ளது.
வேறு எப்படி அவருடைய அடிப்படைக்கொள்கை வெற்றிபெற்றுள்ளது என்பதை நடுநிலையிலிருந்து நெஞ்சில் கை வைத்துச் சிந்தித்து நாம் விடைகூற வேண்டும்; எண்பிக்க வேண்டும்; நிலைநாட்ட வேண்டும்.
இரண்டு செய்திகளை நாம் நன்றாக விளங்கிக் கொள்ள முயற்சிப்போம் .
1. ஆணும் பெண்ணும் சமம் என்னும் எண்ணம் அவருடைய பிஞ்சு நெஞ்சில் 1887 வாக்கில் பதிந்தது.
2. அந்தச் சமத்துவம் வந்து சேருவதற்கான வழிவகைகள்பற்றி - சட்டப் பாதுகாப்புகள்பற்றி 1929இல் தெளிவான திட்டங்களைச் சுயமரியாதை இயக்க முதலாவது மாநாட்டுத் தீர்மானங்களாக அவர் வடித்துத் தந்தார். அவையெல்லாம் உரிமையியல் சட்டம் சார்ந்தவை. அவற்றைப்பற்றிய சட்டங்களைச் செய்திட அன்றைய மாகாண அரசுக்கோ, இன்றைய மாநில அரசுக்கோ உரிமையில்லை. இந்திய அரசு என்கிற மய்ய அரசுதான் அதற்கான சட்டங்களைச் செய்ய முடியும்.
மய்ய அரசில் திராவிட அரசியல் கட்சியினர் என்றும் பெரும்பான்மைபெற இயலாது. அங்குப் பெரும்பான்மை பெற்றிருந்த தேசிய காங்கிரசுக் கட்சியினரும், சிறுபான்மையினராக இருந்த பொதுவுடைமைக் கட்சியினரும் இதில் முதலடியை எடுத்துவைக்க முன்வரவில்லை.
ஆனால், 1931 முதல் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்டிருந்த ஈ.வெ.ரா. வுக்கும், டாக்டர் அம்பேத்கருக்கும் இடையே 1936 முதற்கொண்டும், 1940சனவரி முதற்கொண்டும் நெருக்கமான உறவும் நட்பும் ஏற்பட்டன. 1954இல் இந்த நட்பு உச்ச நிலையை அடைந்தது. இருவரிடையே நல்ல புரிதலும் ஏற்பட்டது.
பெரியார் விரும்பிய பெண்ணுரிமைச் சட்டங்கள் எல்லாவற்றுக்கும் சட்ட வடிவம் தருகிற தன்மையில், 1947இல் “இந்துச் சட்டத்திருத்த மசோதா” என்கிற பெயரில் பலவற்றை நாடாளுமன்றத்தில் டாக்டர் அம்பேத்கர் முன்மொழிந்தார். அவையெல்லாம் ஒன்றுவிடாமல் டாக்டர் அம்பேத்கர்1951இல் அமைச்சர் பதவியிலிருந்து விலகிய பிறகு- 1955லும் 1956லும் சட்டங்களாக நிறைவேற்றப்பட்டன.ஆனால், அச்சட்டங்களை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான பண்பாட்டுத்தளத்தை இங்கு ஆடவரும் உருவாக்கவில்லை; மகளிரும் உருவாக்கவில்லை. அரசும் உருவாக்கவில்லை.
மேலும், ஆண் - பெண் சம உரிமை முழுவதுமாக வந்து சேர வேண்டப்படுகின்ற சமதர்ம சமுதாய அமைப்பு இங்கு மலரவில்லை. இது மலராமல் இங்கு ஆண்-பெண் சமத்துவம் என்பது முழுமையாக வரமுடியாது. உலகம் முழுவதற்கும் இது பொருந்தும், நிற்க.
1947இல் பெண்ணுரிமைபற்றிய சட்ட வரைவுகளை முன்மொழிந்த டாக்டர் அம்பேத்கர், மிகப் பெரிய தொலைநோக்குடனும் அறிவுக் கூர்மையுடனும் இன்னொரு சட்டத்திருத்தத்தையும் முன்மொழிந்திருந்தார்.
அது என்ன?
“இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு அந்தத் தேதிவரையில் நடப்பிலிருந்த பழைய பழக்க வழக்கச் சட்டங்கள் செல்லுபடியாக மாட்டா” என்பதே அச்சட்ட வரைவின் அமைப்பாகும்.
அது என்றைக்கு 1947இல் முன்மொழியப் பட்டதோ அன்று முதல் 1951 வரையில் இராசேந்திர பிரசாத் அதைக் கடுமையாக எதிர்த்தார்; தேசிய காங்கிரசைச் சார்ந்த பழைமைவாதிகள் எதிர்த்தனர். 1951இல் அந்த வரைவு ஏற்கப்படாமல் அடியோடு நீக்கப்பட்டது.
அந்த விதி நிறைவேற்றப்பட்டிருந்தால் இன்று அரசமைப்புச் சட்டத்தில், விதிகள் 13,372 இவற்றில் உள்ள, “நால்வருணம் இன்றும் செல்லும்” என்கிற பாதுகாப்பு இருக்காது.
விதி 25இல் உள்ள “பழைய பழக்க வழக்கங்கள், ஆகமவிதிகள் இன்றும் செல்லும்” என்கிற பாதுகாப்பு இருக்காது.
நால்வருணம், பழைய வழக்கச்சட்டங்கள் இவற்றைப் பாதுகாப்பதற்காக இருக்கிற விதிகள் இவை என்பது பெரும்பான்மையான வழக்கறிஞர்களுக்குத் தெரியாது; நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள், கட்சிகளின் தலைவர்கள், பேராசிரியர்கள், சமுதாயத் தலைவர்கள், பொதுமக்கள் இவர்களில் பலருக்கும் தெரியாது.
இவர்களுக்கெல்லாம் எடுத்துச் சொல்லி “நால்வருண ஏற்பாட்டையும், பழைய பழக்கவழக்கச் சட்டங்களையும், ஆகம விதிகளையும் பாதுகாக்கிற விதிகள் 13, 25, 372 ஆகியவற்றை அரசமைப்புச் சட்டத்திலிருந்து நீக்குங்கள்” என்று கோரித்தான் 26.11.1957இல் அரசமைப்புச் சட்டத்தின் இந்தப் பகுதிகளை மட்டும் அச்சிட்டு எரிக்கச் செய்தார், பெரியார்.
10,000 கறுஞ்சட்டை வீரர்கள்-3 ஆண்டு தண்டனை உண்டு; 3000 ரூபா தண்டம் உண்டு என்று தெரிந்தே அரசமைப்புச் சட்டத்தை எரித்தார்கள். உலக நாடுகளில் எதிலும் அன்றுவரை அரசியல் சட்டத்தை எவரும் எரிக்கவில்லை. இதைக்கண்டு இந்திய அரசு அதிர்ச்சி அடைந்தது; உலகமே மூக்கின் மேல் விரலை வைத்துச் சிந்தித்தது.
“அரசியல் சட்டம் புனிதமானது” என்ற எண்ணம் உலகெங்கும் ஆட்சி செலுத்திய காலமது. பெரியாரின் கட்டளையை ஏற்று 10,000 பேர் அரசியல் சட்டத்தை எரித்தனர். 3000 பேர் ஒரு மாதம் வெறும் காவல் தண்டனை முதல் மூன்றாண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை வரை பெற்றனர். நான் 18 மாதம் கடுங்காவல் பெற்றேன்.
சிறை வாழ்வின்போதே இரு மறவர்கள் மாண்டனர். வெளியில் வந்தவுடன் 20 பேர் செத்தனர். பல நூறு குடும்பங்கள் சீரழிந்தன. அவர்களுள் ஓராயிரம் பேர் 2010 இல் வயிற்றுப்பாட்டுக்குப் போராடுவோராக உள்ளனர் என்பதை நேரில் நாம் கண்டிருக்கிறோம்.
நால்வருணம், பழக்க வழக்கம், ஆகமம் இவற்றைப் பாதுகாக்கும் சட்டத்தை 53 ஆண்டுகளுக்கு முன் எரித்தோம். அதன் காரணமாக, அச்சட்டப் பகுதியை நீக்குகிற முயற்சியில் எத்தனைத் தப்படி முன்னேறியிருக்கிறோம்?
கடந்த 53 ஆண்டுகளில் இந்திய தேசிய காங்கிரசு, சனதா, பாரதிய சனதா, பொதுவுடைமைக் கட்சிகள் என்கிற அனைத்திந்தியக் கட்சிகளோ, மாநிலக் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகமோ பின்னர் தோன்றிய அ.தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க. மற்றும் வட மாநிலக்கட்சிகளோ நாடாளுமன்றத்தில் இதற்காக என்ன முயற்சியை எடுத்தன?
சட்ட மன்றத்துக்குப்போகாத திராவிடர் கழகமோ, மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியோ, பெரியார் திராவிடர் கழகமோ, சிந்தனையாளர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், மானிட உரிமைக் காப்பு அமைப்பு முதலானவையோ இதற்காக மேற் கொண்ட முயற்சி என்ன? எப்போது முயன்றார்கள்? இங்கே தமிழ்நாட்டில் மட்டும் முயன்றால் என்ன பயன்? பழக்க, வழக்கம், ஆகம விதி, இவற்றுக்கான பாதுகாப்பை அப்படியே வைத்துக்கொண்டு -அனைத்துச் சாதியினரும் அருச்சகர் ஆகலாம் என்கிற சட்டமும், சுயமரியாதைத் திருமணம் செல்லுபடியாகும் என்கிற சட்டமும் எந்த அளவுக்குப் பயன்படும்?
சுயமரியாதைத் திருமணச் சட்டம் 20-1-1968 நடப்புக்கு வந்தது.
அத்துடன் சுயமரியாதைத் திருமணம் என்றால் என்ன? அதன் வரலாறு என்ன? ஏன் அது செல்லாது என்று கூறப்பட்டது? அது செல்லுபடியாவதற்கு ஏற்றபடி, 1968இல் சட்டம் செய்யப்பட்டதால் ஏற்பட்ட நன்மைகள் யாவை? அதற்கு மாறாக, ஏற்கெனவே நடத்தப்பட்டு வந்த திருமண முறையால் ஏற்பட்ட கேடு அல்லது இழிவு அல்லது குறைபாடு என்ன? என்கிற செய்திகள் பற்றி, 1968க்குப் பிறகு கடந்த 42 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஓர் ஆண்டு முழுவதும் நடைபெறும். இந்துக்கள் வீட்டுத் திருமணங்களில் சுயமரியாதைத் திருமணங்கள் த்தனை என்பதுபற்றி, எந்த ஓர் ஆண்டிலும் புள்ளி விவரம் பதிவு செய்யப்படவில்லை. அந்தந்த ஊர் மணியக்காரர் (ஏ.ஹ.டீ) வழியாக இனி வரும் ஓர் ஆண்டிலாவது அப்படிப்பட்ட புள்ளி விவரம் அரசினால் பதிவு செய்யப்படவேண்டும்.
இவ்விரண்டு திட்டங்களையும் இன்றைய திராவிட முன்னேற்றக் கழக அரசினர் மேற்கொள்ள வேண்டும் - நிறைவேற்ற வேண்டும் என அன்புடனும் வற்புறுத்தியும் வேண்டிக் கொள்கிறோம். நிற்க.
“பழக்க வழக்கம், ஆகம விதி என்பவை எழுதப்பட்ட சட்டங்களைவிட வலிமையானவை” என்பதுதான் இந்துச் சட்டத்தின் உயிரான பகுதியாகும். இவை அடியோடு ஒழிக்கப்படுவது என்பது இந்திய அளவிலான இந்திய அரசமைப்பை அடியோடு மாற்றுவதனால் மட்டுமே முடியும்.
இதைப் புரிந்து கொள்ளாமல், தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் 1968முதல் நிறைவேற்றப்பட்ட இவ்விரண்டு சட்டங்கள் மட்டுமே நாம் பெற்ற வெற்றி என்று நம்பினால் அது தவறாகும்.
நால்வருணப் பாதுகாப்பை ஒழிக்க இவை போதா. ஆகம விதி, பழக்கபழக்க வழக்கச் சட்டம், இவற்றை நீக்கிவிடவும் இவை உதவமாட்டா.
பார்ப்பனப் புரோகிதம், கோயில்கள், மடங்கள், மசூதிகள் மாதா கோயில்கள் இவற்றுக்கு உரிய அசையும் சொத்துகள், அசையாச் சொத்துகள் சிந்தாமல் சிதறாமல் அப்படியே இங்கு இருக்கும். இந்துச் சட்டமும் அரசமைப்புச் சட்டமும் நீதி மன்றங்களும் நாடாளுமன்றமும் இவற்றுக்குப் பாதுகாப்பாக இருக்கும். இச் சூழல்களில் “மதச்சார்பற்ற” தன்மை இங்கே எப்படி வரும்?
இவற்றைப்பற்றிப் பெரியார் தொண்டர்கள் எல்லோரும் பொறுமையாக எண்ணிப்பார்க்க வேண்டும்.
1. தந்தை பெரியார் 1919 முதல் வகுப்புவாரி உரிமைக்குக் குரல் கொடுத்தார். போராடினார். சட்டப்படி இது ஏற்கப்பட்டுள்ளது. ஆயினும் இன்றுவரை வெகு மக்களுக்கு விகிதாசாரப் பங்கு உரிமை வரவில்லை.
2. 1922 முதல் தீண்டாமை ஒழிப்பு, நால் வருண ஒழிப்புக் கோரி முழங்கினார். இவற்றுக்குப் பாதுகாப்புத் தரும் இராமாயணம், மனுநீதி இவற்றை எரிக்கச் சொன்னார். ஆனால் இவற்றைப் பாதுகாக்கும் அரசமைப்புச் சட்டம் இன்றும் நம்மை ஆள்கிறது. இதை அடியோடு மாற்றிட அவர் விரும்பினார். அதுபற்றி இன்றளவும் எவரும் இணக்கமான முயற்சியை மேற்கொள்ளவில்லை.
3. 1927 முதல் கருத்தளவில் சமதருமம்பற்றிப் பேசிய பெரியார், 1932 முதல் 1935 வரையிலும் தீவிர சமதருமப் பரப்புரை செய்தார். 1964 முதல் 1973 வரை அப்பணியைத் தொடர்ந்து செய்தார். சமதருமம் வராமல் பெண்ணுரிமை முழுவடிவில் இங்கு வராது. தீண்டாமைக் கொடுமை ஒழியாது. மூடநம்பிக்கை ஒழிப்பு வெற்றி பெறாது என்கிற புரிதல் பெரியார் தொண்டர்களுக்கு வரவில்லை.
4. 1938இலும், 1939இலும் பெரியார் முன் வைத்த “தமிழ்நாடு”, “திராவிடநாடு” பிரிவினைக் கோரிக்கை தெளிவற்றது. 1945 செப்டம்பர் 30இல் அவர் முன் வைத்த “சுதந்தரத் திராவிடநாடு” கோரிக்கையும், 1.11.1956இல் அவர் முன்வைத்த “சுதந்தரத் தமிழ்நாடு” கோரிக்கையும் மிகத் தெளிவானவை. “தனிச் சுதந்தர நாடு” கோரிக்கைகள், சோசலிச சோவியத்து ஒன்றியம் 1990இல் கலைக்கப்பட்ட பிறகு செல்வாக்கோடு திகழ முடியவில்லை. அப்போது முதல் உலக நாடுகள் மன்றம் என்ற அய்க்கிய நாடுகள் அவை பல் இல்லாத பாம்பாகிவிட்டது. அய்ரோப்பாவையும், சீனாவையும், சப்பானையும், மிஞ்சி இன்னமும் அமெரிக்கா ஒற்றை அதிகார ஆதிக்க மய்யமாக விளங்குகிறது. அது உலக அமைதியை உருக்குலைக்கிறது. மொழிவழி, இனவழி அடிப்படையிலான விடுதலை இயக்கங்களைத் துடைத்தெறிகிறது.
இவற்றையெல்லாம் உள்வாங்கிக்கொண்டு, இந்திய ஒற்றை ஆதிக்க மய்யத்தை உடைத்துத் தன்னுரிமைபெற்ற தமிழ்நாடு - மற்றும் உள்ள மொழி வழி மாநிலங்களைக் கொண்ட ஓர் உண்மையான மதச்சார்பற்ற சமதருமக் கூட்டாட்சிக் குடியரசாக இந்தியாவை உருவாக்கினாலன்றி, தந்தை பெரியாரின் கொள்கைகளை நாம் வென்றெடுக்க முடியாது என்பதை நாம் அனைவரும் உணருவோம். அந்நிலை வந்துசேர ஆவன செய்வோம், வாருங்கள்!