ஒன்றிய ஆட்சியின் தேர்வு நிறுவனம் நடத்தும் கெடுபிடிகளால் தற்கொலைகள் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது 2021-க்குப் பிறகு 2025 இல் முதல் முறையாக மிக மோசமான அளவுக்கு தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை குறைந்திருக்கிறது என்று புள்ளி விவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன இந்த ஆண்டு தேர்வு எழுத விண்ணப்பித்த 25 லட்சம் பேர் மட்டுமே தேர்வு எழுத முன் வந்துள்ளனர்.
- நீட் நுழைவுத்தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 14 மாணவர்களின் சேர்க்கையை ரத்து செய்ய, தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், 42 பேர், மூன்று ஆண்டு தேர்வெழுத தடை விதிக்கப்பட்டுள்ளது.
- எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக நீட் நுழைவுத் தேர்வை, தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இந்நிலையில், கடந்தாண்டு நடந்த நீட் தேர்வில், வினாத்தாள் கசிந்ததாகப் புகார் எழுந்தது.
- இது தொடர்பான வழக்கை சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. அதில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட 14 மாணவர்களின் மருத்துவ கல்லுாரி சேர்க்கையை ரத்து செய்துள்ளதாக, தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.
- கடந்த ஆண்டு நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக 255 எம்பிபிஎஸ் மாணவ, மாணவியர் மீது தேசிய மருத்துவ கமிஷன் நடவடிக்கை எடுத்து உள்ளது.
- கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வின்போது வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. நீட் தேர்வில் முழு மதிப்பெண் பெறுவது கடினம் என்ற சூழலில் கடந்த ஆண்டு தேர்வில் 67 பேர் 720 மதிப்பெண்களை பெற்றது சந்தேகங்களை எழுப்பியது.
- நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் 40 வழக்குகள் தொடரப்பட்டன. "குறிப்பிட்ட சில தேர்வு மையங்களில் மட்டும் முறைகேடுகள் நடைபெற்று உள்ளன" என்று தேசிய தேர்வு முகமை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.
- இதை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, "பீகார் தலைநகர் பாட்னா, ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபாக் ஆகிய பகுதிகளில் மட்டுமே முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இதர பகுதிகளில் முறைகேடுகள் நடந்ததற்கான ஆதாரங்கள் இல்லை. எனவே நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது" என்று தீர்ப்பளித்தது.
- இந்த சூழலில் கடந்த ஆண்டு நீட் தேர்வு முறைகேட்டில் தொடர்புடைய எம்பிபிஎஸ் மாணவ, மாணவியர் மீது தேசிய மருத்துவ கமிஷன் ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்கிறது.
- அவர்கள் 26 பேரும் சம்பந்தப்பட்ட மருத்துவ கல்லூரிகளில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். ஒட்டுமொத்தமாக 255 எம்பிபிஎஸ் மாணவ, மாணவியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
- கடந்த ஆண்டு நீட் தேர்வின்போது முறைகேடுகள் செய்து சிக்கிய 42 மாணவ, மாணவியர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அவர்கள் அடுத்த 3 ஆண்டுகளுக்கு நீட் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
- இந்த ஆண்டு அறிவியல் தொடர்பான கேள்வி பிரிவில் 156வது கேள்வியில் கீழ்கண்டவற்றுள், எவை காய்ச்சி வடிக்கப்படாத ஈஸ்ட் மூலம் உற்பத்தி செய்யப்படும் ஆல்கஹால் பானம் என்ற கேள்வி கேட் கப்பட்டு இருந்தது. இதற்கு 4 ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு இருந்தன. அதில் ஆப்ஷன் 1ல் பிராந்தி, 2ல் பீர், 3ல் ரம், 4ல் விஸ்கி என குறிப் பிடப்பட்டு இருந்தது. இக்கேள்வி மாணவ, மாணவிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல மாணவர்கள் இதற்கு சரியான விடை தெரியாமல் குழப்பம் அடைந்தனர். நீட் தேர்வில் போதை தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டதற்கு பெற்றோர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
- நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மையத்தில், நேற்று 720 மாணவிகள் நீட் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். 420 பேரின் வருகை பயோமெட்ரிக் சிஸ்டத்தில் பதிவு செய்யப்பட்ட போது, சர்வர் பிரச்னை ஏற்பட்டதால் காலதாமதம் ஏற்பட்டது. சர்வர்சரியாகவில்லை என்ற சூழ்நிலையில், மாணவிகளை தேர்வு மையத்திற்குள் பயோமெட்ரிக் இல்லாமலே தேர்வு எழுத அனுமதித்தனர். இதனிடையே முறையான ஏற்பாடுகள் செய்யாத தேசிய தேர்வு முகமையை கண்டித்து, பள்ளிக்கு எதிரில் மாணவிகளின் பெற்றோர்கள் சங்ககிரி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மறியலால் திருச்செங்கோடு-சங்ககிரி சாலையில் சுமார் 2 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனிடையே, பயோமெட்ரிக் சர்வர் சரியானவுடன் அனைத்து மாணவிகளிடமும் பயோமெட்ரிக் பதிவு செய்யப்பட்டது. இதனால் பெற்றோர்கள் நிம்மதியுடன் கலைந்து சென்றனர்.
- ராமநாதபுரம் அரசு பெண்கள் கலை அறிவியல் கல்லூரியில் நேற்று நீட்தேர்வை 360 பேர் எழுதினர். இங்கு கீழக்கரை பகுதியை சேர்ந்த மாணவி ஸ்வஸ்திகா ஹரிணி தேர்வு எழுதும் போது, 45ம் எண் வினாத் தாளை வழங்குவதற்கு பதிலாக, 46ம் எண் வினாத்தாள் வழங்கப்பட்டது. அரை மணிநேரம் கழித்து மீண்டும் வினாத்தாளை மாற்றிக் கொடுத்தனர். இதனால் மாணவியும், மாணவனும் சரியாக தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் கண்ணீர் மல்க ஸ்வஸ்திகா ஹரிணி தேர்வு மையத்தை விட்டு வெளியே வந்தார்.
- சேலம் அரசு கலைக்கல்லூரி தேர்வு மையத்தில் 480 பேர் நீட் தேர்வு எழுதினர். தர்மபுரி மாவட்டம் நரிப்பள்ளியைச் சேர்ந்த மாணவன் சிபுபாரத் என்பவர் மையத்திற்கு வந்த நிலையில், தகவல் பலகையில் அவரின் பெயர் மற்றும் தேர்வெண் இடம்பெறவில்லை. அங்கு இருந்த அதிகாரிகள் ஹால் டிக்கெட்டை வாங்கி பார்த்தபோது, அதில் அரசு கலைக் கல்லூரி, சேலம் பைபாஸ் மெயின் ரோடு, கலெக்ட்ரேட் என இருந்தது. இதையடுத்து சிபுபாரத் அவசரம், அவசரமாக தர்மபுரிக்கு புறப்பட்டுச் சென்றார். இதேபோல் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த தமிழரசி என்ற மாணவி உள்பட 5க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், தர்மபுரிக்கு பதில் சேலத்திற்கு வந்தனர். பின்னர், அவர்கள் விபரம் தெரிந்து அவசரம், அவசரமாக வாடகை கார், கால்டாக்ஸி மூலம் தர்மபுரிக்கு சென்றனர்.
- நீட் வினாத்தாளை ரூ.40 லட்சத்திற்கு தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட கும்பல் ராஜஸ்தானில் சிக்கியது.
- இதேபோல ஆள் மாறாட்டம் செய்தும் பல்வேறு மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கி தர மாணவர்களிடம் தலா ரூ 20 லட்சம் வாங்கிய நான்கு பேரை ஓடிசா காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மையத்தில் மற்றொரு மாணவரின் பெயரில் போலியான தேர்வு கூட அனுமதி சீட்டுடன் ஒரு மணி நேரம் தேர்வு எழுதிய பின் மாணவர் ஒருவர் அதிகாரிகளிடம் சிக்கினார்.முறைகேட்டில் ஈடுபட்டவரிடம் விசாரித்த போது பயிற்சி மையமே போலி அனுமதி சீட்டை தந்ததாக கூறியுள்ளார்.
- விடுதலை இராசேந்திரன்