ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு ஒன்றிய‌ அமைச்சரவை ஏன் திடீர் முடிவுக்கு வந்தது?

 இதற்குப் பின்னால் பீகார் சட்டமன்றத் தேர்தல் எனும் கட்சி அரசியல் அடங்கி இருக்கிறது. பிற்படுத்தப்பட்டோர் வாக்குகளைக் குறிவைப்பதே இந்த திடீர் அறிவிப்பின் நோக்கம். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் இந்த சமூகநீதி கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. தமிழ்நாடு சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாடு முழுமைக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களின் ஒருமித்த குரலாக இந்த கோரிக்கை உருவாகியுள்ளது.

ஒன்றிய‌ பாஜக ஆட்சி இதைக் கடுமையாக எதிர்த்து வந்தது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது மோடி கடுமையாக எதிர்த்துப் பேசினார். ஜாதி கணக்கீடு கேட்பவர்கள் பிரிவினைவாதிகள் என்றும் `அர்பன் நக்சல்கள்' என்றும் தடித்த வார்த்தைகளைப் பயன்படுத்தினார். நாடாளுமன்றத்தில் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த உள்துறை இணை அமைச்சர் நித்தியானந் ராய் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதி கணக்கெடுப்புகள் எடுக்கும் திட்டம் அரசிடம் இல்லை என்றும் இது அரசின் உறுதியான கொள்கை (Matter of policy) என்றும் கூறினார்.

இப்போது இந்த திடீர் அறிவிப்பை வெளியிட்ட ஒன்றிய‌ ஆட்சி, எப்போது செயல்படுத்த இருக்கிறது என்ற காலக்கெடுவை அறிவிக்கவில்லை. இதற்கு தேவையான சுமார் ரூபாய் 25000 கோடி நிதியையும் ஒதுக்கீடு செய்யவில்லை. நிர்வாக கட்டமைப்புகளையும் உருவாக்கவில்லை.

1871-ல் பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை தொடங்கியது. அப்போது ஜாதிகளின் கணக்கெடுப்பையும் இணைத்தது. 1931ம் ஆண்டு வரை மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் ஜாதி கணக்கெடுப்பும் இணைந்து நடத்தப்பட்டது. இதன்‌ வழியாக 4737 ஜாதிகள் மற்றும் துணை ஜாதிகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. அதன் பிறகு 1941-ல் ஜாதி கணக்கெடுப்பு நடந்தது. அப்போது உலகப் போர் நடந்த காலம், எனவே கணக்கெடுப்பு முடிவுகள் வெளியிடப்படவில்லை. `சுதந்திர இந்தியா' மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதி பற்றிய தகவல்களை எடுக்கத் தேவையில்லை என்று முடிவு செய்தது. அதிகார‌ அரசியலை தங்கள் பிடிக்குள் முடக்கி வைத்திருந்த பார்ப்பன அதிகார வர்க்கத்தின் திட்டமிட்ட சதி இது.

அரசியல் நிர்ணய சபையின் தலைவராக இருந்த அம்பேத்கர் சமூக நீதிப் பார்வையில் இந்த ஜாதி கணக்கெடுப்புகள் கட்டாயம் தேவை என்ற முடிவுக்கு வந்தார். பட்டியலின மற்றும் பழங்குடிப் பிரிவினருக்கான இட ஒதுக்கீடு அரசியல் சட்டத்தில் இணைக்கப்பட்டதன் காரணமாக இந்த மக்களின் கணக்கெடுப்பை நடத்த வேண்டிய கட்டாயத்தை அவர் உருவாக்கினார். அதன் காரணமாக தொடர்ந்து எடுக்கப்பட்ட கணக்கெடுப்புகளில் பட்டியலின மற்றும் பழங்குடியினர் மக்கள் தொகை எண்ணிக்கை மட்டும் கணக்கிடப்பட்டன.

பிற்படுத்தப்பட்டோர் மக்களுக்கான கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும் அம்பேத்கர் தொடர்ந்து வலியுறுத்தினார். அதற்கான‌ கூட்டத்தில் 340 பிரிவு ஒன்றையும் உருவாக்கினார். அரை நூற்றாண்டுக்குப் பிறகு மண்டல் ஆணையம் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டை பரிந்துரைத்த போது 1931 ஆம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பையே அடிப்படையாகக் கொள்ளப்பட்டது.

2011-ஆம் ஆண்டு ஒன்றிய ஆட்சியின் ஊரக வளர்ச்சித் துறை நாடு தழுவிய ஜாதிகளின் எண்ணிக்கையை சேகரித்தது, இது சர்வே மட்டும் தான். ஜாதிகளின்‌ சமூக பொருளாதார நிலை குறித்து ஆய்வு அல்ல. (Socio-Economic and caste Census(SECC). மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தும் நோக்கத்துக்காக இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன் ஒரு பகுதி மட்டும் 2016ல் வெளியிடப்பட்டது. ஜாதிவாரியான‌ மக்கள் தொகை கணக்கெடுப்பின் விவரங்கள் வெளியிடப்படவில்லை. கணக்கெடுப்பில் நடந்த குளறுபடிகளே இதற்குக் காரணம்.

பிற்படுத்தப்பட்ட ஜாதிகளின் பெயர்ப் பட்டியல்களை ஒன்றிய அரசு தயாரித்து அதை மக்களிடம் காட்டி எந்த ஜாதி பிரிவின் கீழ் நீங்கள் வருகிறீர்கள் என்ற கேள்வியை எழுப்பி இருக்க வேண்டும். அப்படி ஒன்றிய அரசு பட்டியல் ஏதும் தயாரிக்காமல் மக்களிடமே தங்கள் ஜாதிப் பெயரைக் கூறுமாறு கேட்டதால் ஒவ்வொரு ஜாதியினரும் தங்களது ஜாதிகளைக் கூறினார்கள். அதன்படி இந்தியாவில் 46 லட்சம் ஜாதிகள் இந்த பட்டியலில் பதிவாகிவிட்டன.

இந்தியாவில் 2011 இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதிலும் ஜாதி வாரி கணக்கெடுப்பு சேர்க்கப்படவில்லை அரசியல் சட்டத்தின் அழுத்தம் காரணமாக பட்டியலின பிரிவினர் எண்ணிக்கை மட்டுமே எடுக்கப்பட்டது. அடுத்த 10 ஆண்டுகளான 2021 இல் எடுக்க வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பை ஒன்றிய பாஜக ஆட்சி தள்ளிப் போட்டது. கொரோனா தொற்று பரவி இருந்தது அதற்கு ஒரு காரணமாக கூறப்பட்டது. கொரோனா தொற்று முடிந்த நிலையில் இதற்கான முயற்சிகள் எதையும் ஒன்றிய ஆட்சி எடுக்கவில்லை.

இந்த நிலையில் பீகாரிலும் தெலுங்கானாவிலும் ஜாதி வாரி கணக்கெடுப்பு மட்டும் நடத்தப்பட்டது. இது கணக்கெடுப்பு தானே(Survey) தவிர ஜாதிகளின் சமூக வரலாற்றுப் பின்னணியை கொண்ட `சென்செக்ஸ்' அறிக்கை அல்ல.

கர்நாடக மாநிலத்தில் 2015-ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த சீதாராமையா இதே போல் கணக்கெடுப்பையும் நடத்தினார். 10 ஆண்டுகளுக்கு பிறகு தான்‌ அந்த கணக்கெடுப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் உச்சநீதிமன்றம் பீகார் அரசு எடுத்த கணக்கெடுப்பை நிராகரித்துவிட்டது.

இது தொடர்பாக அடிப்படையான ஒரு உண்மையை பரிசீலிக்க வேண்டும். இந்து மதத்தில் மட்டும் தான் ஜாதி இருக்கிறது. இந்து சமூகம் ஒரு ஜாதிய சமூகமாக இருக்கிற காரணத்தினால் தான் ஜாதி கணக்கெடுப்பும் தேவைப்படுகிறது. அதிலும் ஜாதி அடக்குமுறைகளுக்கு வழிவகுக்கும் ஏற்றத் தாழ்வுகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டிருப்பதால் தான் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு நீதி வழங்குவதற்காக இந்த கணக்கெடுப்பு தேவைப்படுகிறது.

இந்து சமூகம் சமத்துவமான சமூகம் அல்ல அது பாகுபாடுகளை நிலை நிறுத்துகிற ஒரு சமூகம் என்று பெரியார் இயக்கம், திராவிட இயக்கம் தொடர்ந்து கூறி வருகிறது. அதன் காரணமாக இந்த பாகுபாடுகளுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும் காரணமான பார்ப்பனியத்தை இந்து மத சாஸ்திர சம்பிரதாயங்களை,‌ பழக்க வழக்கங்களை பெரியார் இயக்கம் கேள்விக்கு உட்படுத்தியது. இதற்காக இந்து மதத்தை புண்படுத்துகிறார்கள் என்று குற்றம் சாட்டியவர்கள் இவர்கள்தான்.

இப்போது அவர்களே "ஆம் இந்து மதத்தில் பாகுபாடு இருக்கிறது" என்பதை ஒப்புக்கொண்டு ஜாதி வாரி கணக்கெடுப்புக்கு முன் வந்திருக்கிறார்கள் என்பதை நாம் குறிப்பிட்டாக வேண்டும். சனாதன தர்மம் தான் உயர்ந்தது. இதில் வர்ண பேதத்திற்கு இடம் இல்லை என்று கூறி வந்தவர்கள் சனாதன தர்மம் என்பது ஜாதிகளுக்கு உட்பட்டது தான் என்ற கருத்தையும் இப்போது ஒப்புக் கொண்டு இருக்கிறார்கள். ஜாதி ஒழிப்பு சமூகநீதி என்ற‌ அடித்தளத்தின்‌மீது தான்‌இந்து சமூக ஒற்றுமையை உருவாக்க முடியும் அதற்கு தடையாக நிற்கும் சானதனமும் பார்ப்பனியமும் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும். 

- விடுதலை இராசேந்திரன்