இந்தியாவின் மதச்சார்பின்மையை சுக்கு நூறாக உடைக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்தப் போவதாக அறிவித்திருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்தின்படி, அண்டை நாடுகளான வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் இருந்து இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், ஜெயினர்கள், பாரசீகர்கள், கிறித்தவர்கள் இந்தியாவுக்கு வந்தால் அவர்கள் குடியுரிமை பெறலாம். ஆனால் இசுலாமியர்கள் வந்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படாது.

அதேபோல இலங்கையில் இருந்து வரும் தமிழர்களுக்கும், அவர்கள் இந்துக்களாக இருந்தாலும் குடியுரிமை வழங்கப்படாது. ஆக, பாஜகவின் அணுவில் ஊறிப்போன மத வெறுப்பும், தமிழின விரோதப் போக்குமே இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தில் அப்பட்டமாக வெளிப்பட்டிருக்கிறது. தமிழ், தமிழர் என்றெல்லாம் மோடி பேசுவதெல்லாம் பாஜக மீதான வெறுப்புணர்வை கரைக்கும் முயற்சியே தவிர, உண்மையான பற்றில்லை என்பதற்கு இது ஒன்றே போதுமானது. 2019ஆம் ஆண்டில் இந்த சட்டத்திற்கு எதிராக மிகக் கடுமையான போராட்டங்கள் நாடு முழுவதும் வெடித்தன. போராட்டங்களை கட்டுப்படுத்த முடியாமல் பாஜக அரசு திணறி வந்த நிலையில், கொரோனா பேரிடர் பரவி ஒட்டுமொத்த உலகையும் முடக்கியது. அதில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களும் முடங்கின.

இந்நிலையில் தேர்தல் சமயம் பார்த்து, இச்சட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்திருக்கிறது ஒன்றிய அரசு. அப்போது இச்சட்டத்தை உறுதியாக எதிர்த்த மதச்சார்பற்ற அமைப்புகள், இப்போதும் உறுதியோடு எதிர்க்கின்றன. ஆனால் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக அப்போது வாக்களித்தது அதிமுக. மாநிலங்களவையில் அதிமுகவின் உறுப்பினர்கள் 11 பேர் ஆதரிக்கவில்லையென்றால் இந்தச் சட்டம் நிறைவேறியிருக்காது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் ஒரு இசுலாமியருக்கு கூட பாதிப்பே இல்லை என்று பேசினார் எடப்பாடி பழனிசாமி. ஆட்சியை தக்க வைக்க வேண்டுமென்பதற்காக, பாஜகவிற்கு அடிபணிந்து தமிழ்நாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி செய்த துரோகங்களில் இதுவும் ஒன்று.

“மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்கக்கூடாது, ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்” என்று திமுகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் திருத்தம் கோரியதை கூட அதிமுக அன்று ஆதரிக்கவில்லை. ஆனால் இன்றைக்கு பாஜகவின் கூட்டணியில் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவது தவறு என நாடகமாடுகிறார் எடப்பாடி பழனிசாமி. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு சிறுபான்மை சமூகத்துக்கு எடப்பாடி பழனிசாமி இழைத்த அநீதிகளால், அச்சமுகங்களின் வாக்குகளை பெற முடியாமல் அதிமுக திணறிக் கொண்டிருக்கிறது. உள்ளாட்சி தேர்தல்கள் மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தலில் ஒட்டுமொத்த சிறுபான்மை சமூகங்களும் அதிமுகவை புறக்கணித்தது. இதனால் தற்போது சி.ஏ.ஏ. சட்டத்தை எதிர்ப்பதைப் போல நாடகமாடுகிறார் எடப்பாடி பழனிசாமி.

உண்மையில் இது இசுலாமியர்களுக்கோ, ஈழத் தமிழர்களுக்கோ மட்டுமேயான பிரச்னை அல்ல. இந்துக்களுக்கும் மிகப்பெரிய ஆபத்து இச்சட்டத்தில் இருக்கிறது. இச்சட்டத்தின்படி குடிமக்கள் பதிவு செய்து கொள்ளும் முறை வந்தால், நாம் ஒவ்வொருவரும் நமது பெற்றோர் - பாட்டன் - முப்பாட்டன் கால ஆவணங்களைக் காட்டித்தான், நாங்கள் எல்லோரும் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என நிரூபிக்க வேண்டும். இல்லை என்றால், நம்மை எல்லாம் இந்த நாட்டுக் ‘குடிமக்கள் இல்லை’ என்று சொல்லி, நமது குடியுரிமையைப் பறித்து விடுவார்கள். உரிய ஆவணங்கள் இல்லை என்பதற்காக நாட்டில் 11 விழுக்காட்டினருக்கு ஆதார் அட்டையே வழங்கப்படவில்லை. அவர்களில் இந்துக்களும் இருக்கிறார்கள். எனவே இந்துக்களுக்கும் இதில் ஆபத்து இருக்கிறது.

2019ஆம் ஆண்டில் வடகிழக்கு மாநிலங்களில் பெரும் வன்முறையை தூண்டுவதற்கும், நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பதற்கும் காரணமாக இருந்த இந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை பாஜக அரசு மீண்டும் அமல்படுத்தியிருப்பது மனிதத் தன்மையற்ற ஒரு செயல். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இதன் பின்விளைவுகளை பாஜக நிச்சயம் சந்திக்கப் போகிறது.

- விடுதலை இராசேந்திரன்

Pin It