கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

பார்ப்பனியம் உன் தாய்ப்பால் வழியாக உன் இரத்தத்தில் கலக்கும். அவள் தாலாட்டு மூலம் உன் மூளையில் பதியும். ஏனெனில் உலகத்தில் ஆகச் சிறந்த சூதும், சூழ்ச்சியும் நிறைந்தது பார்ப்பனியம்தான். இன்று பார்ப்பனிய சனாதனக் கோட்பாட்டுகளுக்கு ஆதரவு பெருகிக் கொண்டே போகிறது. அதற்குக் காரணம் நான் மேலே சொன்ன சொற்றொடரே! ஒரே சூலில் பிறந்து, ஒரே மார்பில் பால் குடித்து வாளர்ந்த இருவருக்கிடையில் பார்ப்பனியம் தன் நஞ்சை விதைத்து விடுகிறது. வாழ்வில் அண்ணன் தம்பி இரண்டு பேரும் பிறவிப் பகையாளியாய் மாறுகிறார்கள். எனவே பார்ப்பனியம் தன் எல்லையை விரிவுபடுத்துகிறது.

brahmanismஇன்று நடப்பது நூறு விழுக்காடு சனாதன ஆட்சியே. அதில் எந்த ஐயப்பாடும் இல்லை. இதை உறுதி செய்து கொள்ள நடுவணரசு செய்து வரும் அனைத்து நடவடிக்கைகளையும் உற்று நோக்கினால் நன்கு விளங்கும். இன்று நாடு பொருளாதாரத்தில் அதல பாதாளத்தில் விழுகிறது என்று அனைத்துப் பொருளாதார நிபுணர்களும் எழுதுகிறார்கள், பேசுகிறார்கள். ஆனால் உண்மையில் மனுதர்ம சட்டப்படி சூத்திரர்களின் சொத்துகள் அனைத்தும் பிடுங்கப்படுகின்றன. பிடுங்கப்பட்ட சொத்துகள் அனைத்தும் சனாதனவாதிகளின் கைக்கூலிகளிடம் ஒப்படைக்கப் படுகின்றன.

சூத்திரர்களின் ஆதரவு அரசுகளால் ஏற்படுத்தப்பட்ட பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல்., இண்டியன் ஏர்லைன்ஸ், எல்.ஐ.சி., இரயிவே, வங்கி போன்ற நிதி நிறுவனங்கள் சூத்திரனின் சொத்துகள்தானே? இந்தச் செல்வம் இருந்தால்தானே உன் பிள்ளையைப் படிக்க வைப்பாய். இந்துத்துவத்தை எதிர்த்து கேள்வி கேட்பாய். அதனைப் பிடுங்கி விட்டால் அடங்கிப் போவாயல்லவா? எந்தெந்த வகையிலெல்லாம் மக்கள் பணத்தை பறிக்க முடியுமோ, அந்தந்த வகையிலெல்லாம் பறிக்கிறார்கள். நம் பொருளாதார முதுகெலும்பை முறிக்கிறார்கள்.

பார்ப்பனியத்தை நடைமுறைப் படுத்திய அன்றைய மன்னர்கள்போல் பார்ப்பனிய அடிவருடியாய் இருக்கும் இன்றைய அம்பானியிடமும், அதானியிடமும் மக்கள் சொத்துகள் பிடுங்கிக் கொடுக்கப்படுகின்றன. ஒரு புறம் நம்மை பொருளாதார ஊனமாக்குகிறார்கள். மறுபுறம் நம் வருங்காலத் தலைமுறையினரின் மூளையின் உயிரோட்டத்தைப் பறிக்கிறார்கள். இன்னொரு புறம் நம் கால்களுக்கு கீழே உள்ள ‘குடி உரிமை’ என்ற பூமியைப் பறிக்கிறார்கள். நாம் அந்தரத்தில் தள்ளாடுகின்றோம்.

இவர்களின் வஞ்சக உத்தியை பாமர மக்கள் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு குங்குமத்தோடும், திருநீறோடும், பஞ்சாங்கத்தோடும், தேசபக்தியோடும் இன அழிப்பு நஞ்சு பரிமாறப் படுகிறது. பச்சைக் குழந்தை பாம்பை நோக்கித் தவழுவதைப்போல வரலாற்று வெளிச்சமறியா மக்கள், பக்தி இருள் வழியே செம்மறியாடுகளாக தற்கொலைப் பாதாளத்தை நோக்கி சாடுகிறார்கள்.

தாயிக்கும் பிள்ளைக்கும், மனைவிக்கும் கணவனுக்கும், அண்ணனுக்கும் தம்பிக்கும், நண்பர்களுக்கும் இடையில் கூட பார்ப்பனியம் தன் வாள்வீச்சை நிகழ்த்துகிறது. பழிவாங்கலைத் தொடர்கிறது. எப்படி முடிகிறது பார்ப்பனியத்தால்? நஞ்சை அமுதமென அருந்தச் செய்யயும், மலைப்பாம்பை மண்புழுவென நம்பச் செய்யவும் எப்படி முடிகிறது? செவ்வாடை அம்மாவென்றும், கருஞ்சட்டைச் சாமிகளென்றும் நம் இளைய தலைமுறையின் மூளையை மலடாக்குகிறார்கள் இந்தப் பண்பாட்டுத் திருடர்கள்.

குடி உரிமைத் திருத்தச் சட்டம் இன்னும் கொடூரமானது. நினைக்கும்போதே நெஞ்சம் பதறுகிறது. குடி உரிமைத் திருத்தச் சட்ட பெயரைச் சொல்லி இந்தியாவையே ஒரு யாகக்குழியாக மாற்றி, அதில் இஸ்லாமிய மக்களையும் உழைக்கும் பாமர மக்களையும் எரித்து மகிழ நினைக்கிறார்கள். பாடுபட்டுச் சேர்த்த பணத்தையும், படித்த குழந்தைகளின் சான்றிதழையும் பறித்து விடுவார்களோ என்று பதறத் தோன்றுகிறது. நான்கு காடையர்கள் வழிமறித்து, இருப்பதை எல்லாம் அடித்துப் பிடுங்கிவிட்டுப் போவதைப் போல இவர்கள் கொண்டுவரும் குடி உரிமை திருத்தச் சட்டம் ஆழிப் பேரலை போல, பெரும் நிலநடுக்கம்போல இருப்பதை எல்லாம் பிடுங்கிக் கொண்டு நம்மை நடுத்தெருவில் விட்டுவிடும். பின்பு நாம் இந்தியத் தெருக்களில் பிச்சைகூட எடுக்க முடியாது.

நாம் தாலி நூலை எல்லாம் வித்து வாங்கிய வீடு முதற்கொண்டு பிடுங்கிக் கொண்டு நம்மை இந்தியக் குடியுரிமை இல்லாதவர்களென்று தடுப்பு முகாமுக்கு அனுப்பி விடுவார்களோ என்று பயப்படத் தோன்றுகிறது. இதை எல்லாம் எண்ணிப் பார்த்தால் சனாதனம் தன் வேலையை சரியாகச் செய்கிறதென்றுதானே பொருள். இல்லை என்றால் நாட்டில் ஏன் இப்படி ஒரு பொருளாதாரச் சிக்கல்? நம் நாடு ஏதேனும் போரைச் சந்தித்ததா? இல்லை இயற்கை சீற்றத்தால் பெரும் பேரழிவைச் சந்தித்ததா? சனாதன இந்துத்துவவாதிகள் திட்டமிட்டே நாட்டை சிதைக்கிறார்கள். மக்களாட்சிக்கு பாடை கட்டுகிறார்கள்.

இந்த இந்துத்துவ அடியாட்கள் ஆட்சிக்கு வந்த நாள் முதல் அழிம்புகளையும், அழிவுகளையுமே திட்டங்களாகக் கொண்டு வருகிறார்கள். கோடிக்கணக்கான மக்கள் உண்ண உணவின்றியும், உடுக்க உடையின்றியும் இருக்கும்போது கோடி கோடியாக செலவு செய்து சிலை வைப்பதும், கோயில் கட்டுவதுமாகவே மதவெறியைத் தூண்டி மக்களை பதற்றத்தில் வைத்திருக்கிறார்கள். மேலும், மேலும் மக்களை வதைப்பதையே தொழிலாகச் செய்து வருகிறார்கள்.

இத்தனை அழிம்புகளுக்கு நடுவிலேயும் தேசிய நலன் என்றும், இந்துத்துவ எழுச்சி என்றும் தெருவுக்குத் தெரு விளக்குப் பூசையும், வீட்டுக்கு வீடு சுமங்கிலிப் பூசையும் என்று மக்களை மழுங்கடித்துக் கொண்டே இருக்கிறார்கள். நாம் திக்குமுக்காடிப் போகும் அளவிற்கு முகநூல், பகிரி போன்ற ஊடகங்களில் மொக்கையாக மொண்ணையாக இருந்தாலும் ஏதேனும் பரப்பிக் கொண்டே இருக்கிறார்கள்.

ஜீ.எஸ்.டி.யைக் கொண்டுவந்து நடைமுறைப் படுத்திவிட்டால் நாடு ஒளிரும் என்றார்கள். ஜீ.எஸ்.டி.யைக் கொண்டு வந்து எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன? ஏதாவது ஒரு துறையில் முன்னேற்றத்தை அவர்கள் கொண்டு வந்திருக்கிறார்களா? வரலாறு முழுக்க ஆய்வு செய்தால் பார்ப்பனிய இந்துத்துவா மனித குலத்திற்கு எதிராக எவ்வாறு செயல்பட்டு வந்திருக்கிறது என்று தெரிய வரும். வரலாற்றில் பொதுமக்கள் நலனுக்காகப் பாடுபட்டதாகவோ, போராடியதாகவோ எங்கும் காணக் கிடைக்காது. எங்கும் எதிலும் சுயநலமே. அவர்கள் சமூக வாழ்க்கை சுயநலம். அவர்கள் வழிபாடு சுயநலம். அவர்கள் புராணங்கள் சுயநலம். ஏன் தெய்வங்களைக் கூட சுயநலம் சார்ந்தே முன்னிறுத்துகிறார்கள்.

கிருஷ்ணன் வெண்ணைத் திருடுவதை திருநாளாகக் கொண்டாடுகிறார்கள். அடுத்த வீட்டில் போய் கடவுள் வெண்ணை திருடினால் தப்பில்லையா? சமூக உளவியலில் மேலோர் திருடினால் குற்றமில்லை என்ற நிலையை கிருஷ்ண பிறப்பைக் கொண்டாடி நியாயப் படுத்துகிறார்கள். இன்னும் ஆழமாகப் பார்த்தால் உழைப்பின் முதன்மைப் பொருளை எல்லாம் ஆள்பவர்களுக்கு உரியதே என்ற கருத்தை வலியுறுத்திக் கொண்டாடும் விழாவாகத்தானே கிருஷ்ணன் பிறப்பு கோரத் தாண்டவம் ஆடுகிறது.

இப்படி எதை எடுத்தாலும் சுயநலம் சார்ந்த ஒரு சமூகமே பார்ப்பனியக் கூட்டம். எனவே நாட்டைத் திட்டமிட்டே சூறையாடுகிறார்கள். நாட்டின் பணம் முழுக்க அவர்கள் கருவூலத்திற்குப் போகின்றன. ஆர்.எஸ்.எஸ். கருவூலம் நிரம்பி வழிகிறது. அதற்கு அடியாட்களாய், எடுபிடியாய், விபீசணனாய், அனுமானாய், சிலபல வால் வளர்த்து சேவகம் செய்கின்றன.

ஒழுக்கத்தைப் பேசி, தூய்மையை முன்னெடுப்பதாகப் பேசி, புனிதத்தை நிலை நாட்டுவதாய் சொல்லி அவர்கள் வரலாறு நெடுகிலும் கயமைத் தனத்தையே பேணி வந்திருக்கிறார்கள். பரதனுக்கு உரிய அரச முடியை விட்டுக் கொடுத்ததாய் பொய் சொல்லி, சந்தேகப்பட்டு சீதையைக் காட்டுக்கு விரட்டி இல்லறம் பேணாத இராமனை, தவம் செய்த சம்புகனைக் கொன்று அதிகார வர்க்கத்திற்கு அடிபணிந்து நாடாளத் தெரியாத இராமனை தெய்வமாய்க் கட்டமைத்த இந்தக் குற்றப் பரம்பரையினர் உழைக்கும் மக்களை கடந்த ஈராயிரம் ஆண்டுகள் நிம்மதியாய் வாழவிடாமல் துன்புறுத்தியே வந்திருக்கிறார்கள்.

மனிதாபிமானம் உள்ளவர்களே... வரலாற்றை சற்று உற்று நோக்குங்கள். அதன் பக்கங்கள் தோறும் நம் முன்னோர்களின் கண்ணீரும், குருதியும் இன்னும் காயாமல் அதன் நெடி வீசிக் கிடப்பதைக் காண்பீர்கள். நமது கொழுத்த உழைப்பை அனுபவித்து வந்த பார்ப்பனியம் இன்னும் கடைவாயை நக்கிக் கொண்டு கொடூர மிருகமாய் உருமிக் கொண்டே நிற்கிறது. நாம் விழிப்புணர்வு பெற்று, ஒன்று பட்டாவிட்டால் அது நம்மீது பாய்வது தவிர்க்கப்படாததாய்ப் போய்விடும்.

- இறை.ச.இராசேந்திரன், மும்பை