சமீபத்தில் இந்திய குடியுரிமை சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவின் பல மாநிலங்களில் மாணவர்கள் மற்றும் எதிர்க் கட்சியினர் போராடி வருகின்றனர்.

புதுச்சேரியில் ஆட்சியே போனாலும் குடியுரிமை சட்டத் திருத்தத்தை அமல்படுத்த மாட்டோம் என முதல்வர் நாராயணசாமி புதுச்சேரியில் இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது பேசியுள்ளார். இவரது இந்தப் பேச்சு புதுச்சேரி மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்ட மசோதாவை கேரளத்தில் அமல்படுத்த மாட்டோம் என்றும், 'குடியுரிமை சட்டத் திருத்தத்திற்குப் பயன்படும் என்பதால் தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப் போவதில்லை' என்றும் முதல்வர் பினராயி விஜயன் அறிவித்திருக்கிறார்.

Pinarayi Vijayan against caaமேலும் ஒருபடி மேலே சென்று திருவனந்தபுரத்தில் எதிர்க் கட்சியான காங்கிரசுடன் இணைந்து குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக சத்தியாகிரகப் போராட்டம் நடத்தினார் பினராயி விஜயன்.

மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் எதிர்க்கட்சியுடன்கூட கூட்டணி சேர்ந்து போராடலாம் என்ற எல்லைக்குச் சென்றிருக்கிறார் அந்த மாநில முதல்வர்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த சில தினங்களாக மக்களைத் திரட்டி கொல்கத்தா நகர வீதிகளில் பிரம்மாண்டப் பேரணிகளை நடத்தி வருகிறார். இதனால் கொல்கத்தா நகரமே ஸ்தம்பித்துப் போயுள்ளது. இப்படியாக மாநில அரசுகள் பதவியை துச்சமாக மதித்து வீதிகளில் இறங்கியுள்ளார்கள்.

அசாம் மாநிலத்தில் சர்பானந்தா சோனோவால் தலைமையில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடந்து வருகிறது. "அசாமில் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு உடனடித் தீர்வு காண வேண்டும். குடியுரிமை சட்டத் திருத்தத்தை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும். நாங்கள் கட்சியில் இருந்தும், ஆட்சியில் இருந்தும் விலகினால்தான் பிரச்சனை தீரும் என்றால், நாங்கள் 12 பேரும் ராஜினாமா செய்யவும் தயாராக இருக்கிறோம்" என்று பா.ஜ.க. எம்.எல்.ஏ. பத்மா ஹசரிகா நேரிடையாகவே எச்சரித்துள்ளார்.

ஆக அவர்கள் தங்கள் பதவியைக் குறித்து எந்தக் கவலையும் படவில்லை. மக்கள் நலனே முக்கியம் என்றிருக்கிறார்கள்.

இதில் பாஜக மாநில அரசும் இறங்கியிருப்பது பிரச்சனையின் வீரியத்தைக் காட்டுகிறது.

ஆனால் தமிழகத்தின் நிலை என்ன? இங்கு பாஜக ஆட்சியா நடக்கிறது? இல்லை. பாஜகவின் எம்எல்ஏக்கள் இந்த ஆட்சியை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்களா?

எதுவுமே இல்லை.

ஆனாலும் பாஜக கொண்டு வந்த குடியுரிமை சட்டத் திருத்தத்தை அதிமுக ஆதரித்துக் கொண்டிருக்கிறதே என்று இந்திய நாடே தமிழகத்தை சந்தேகக் கண்ணோடு பார்க்கும் அவல நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறது மாநில அரசு.

இந்த சட்டம் நிறைவேறுவதற்குக் காரணமே அதிமுகவும், பாமகவும் மட்டும்தான் என்ற உண்மை இளைஞர்களின் பார்வைக்கு சென்றிருக்கிறது.

ஆனாலும் அதைப் பற்றியெல்லாம் எந்தக் கவலையோ, அச்சமோ இன்றி ஈழத் தமிழர்க்கு இரட்டைக் குடியுரிமை என்று பம்மாத்து செய்து கொண்டிருக்கிறது. இஸ்லாமியர்களை பயப்பட வேண்டாம் என்று ஆறுதல் படுத்திக் கொண்டிருக்கிறது.

நீட்டில் ஓராண்டு தடை என்று இவர்கள் சொன்னதை நம்பி, அனிதா உயிரிழந்ததை நினைவில் வைத்திருக்கும் தமிழக மக்கள் இவர்களின் ஆறுதலை நம்பவா போகிறார்கள்?

மக்கள் பிரச்சனைகளை முன்னிட்டு பதவிகளைத் தூக்கி எறியும் முதல்வர்களுக்கு மத்தியில், மக்கள் பிரச்சனைகளை தூக்கி எறிந்துவிட்டு முதல்வர் பதவியைப் பிடித்துக் கொண்டிருக்கும் எடப்பாடியை நம்புவதற்கு அவர்களுக்கு பைத்தியமா பிடித்திருக்கிறது?

- சஞ்சய் சங்கையா

Pin It