kolam against caa 1அதிகார ஊழல் முறைகேடுகள் தவிர வேறு எதையுமே இந்த மக்களுக்குக் கொடுக்காத பாசிச பிஜேபியின் கைப்பாவையான அதிமுக அடிமைகள், தங்கள் ஆட்சியை பாதுகாத்துக் கொள்ள எந்த எல்லைக்கும் சென்று வன்முறையையும், ஜனநாயக விரோத பாசிசத்தையும் கட்டவிழ்த்துவிடத் துணிந்து விட்டார்கள்.

ஸ்டெரிலைட் ஆலை முதலாளிக்காக தூத்துக்குடியில் அப்பாவிப் பொது மக்கள் 13 பேரை படுகொலை செய்து தங்களின் ஆத்திரத்தையும், வஞ்சத்தையும் தீர்த்துக் கொண்ட இந்தப் பாசிசக் கும்பல், தற்போது இந்தியாவையே மத ரீதியாகத் துண்டாட வன்மத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் கொடிய மனநோயாளிகளின் ஆசையை நிறைவேற்ற, அதே வன்மத்தோடும், வஞ்சத்தோடும் மீண்டும் அடக்குமுறைகளை செயல்படுத்த ஆரம்பித்து இருக்கின்றது. சென்னை பெசன்ட் நகரில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோலம் வரைந்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்த ஆறு பேரை எடப்பாடியின் எடுபிடி காவல்துறை வெட்கமே இல்லாமல் தீவிரவாதிகளைக் கைது செய்வது போல கைது செய்துள்ளது.

இதன் மூலம் தமிழ்நாட்டு மக்கள் எந்த வகையிலும் பாசிச மோடி அரசு கொண்டு வந்திருக்கும் தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை சட்டத் திருத்த மசோதா போன்றவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது என நேரடியாகவே மிரட்டல் விடுத்துள்ளது. காவல்துறையையும், குண்டாந்தடிகளையும் வைத்துக் கொண்டு இந்த அரசு போராட்டத்தை ஒடுக்கி விடலாம் என நினைக்கின்றது. அதையும் மீறிப் போராடினால் தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுக் கொன்று விட்டு ஒன்றும் தெரியாத பிள்ளைப் பூச்சிகள் போல முகத்தை வைத்துக் கொண்டு, அதற்கும் தங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என மக்களை நம்ப வைக்கவும் இவர்கள் தயங்க மாட்டார்கள்.

சாமானிய எளிய மக்களின் நியாயமான போராட்டங்களைக் கூட அரக்கத்தனமாக அடக்கி ஒடுக்கிய பாசிச ஜெயலலிதாவின் பயிற்சிப் பட்டறையில் இருந்து வெளிவந்த இந்த அடிமை கும்பல்களிடம் வேறு எந்த மாதிரியான போக்கையும் நாம் எதிர்பார்க்க முடியாது. எப்படி ஜெயலலிதாவின் ஆட்சி ஒரு காட்டாட்சியாக ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்கியதோ. அதற்கு எந்த வகையிலும் சளைக்காமல் குறுக்கு வழியில் ஆட்சியைக் கைப்பற்றிய இந்தக் கும்பல் காட்டாட்சியை நடத்திக் கொண்டு இருக்கின்றது.

ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள தமிழ்நாட்டின் அனைத்து நலன்களையும், உரிமைகளையும் பாசிச பிஜேபியிடம் விற்றுவிட்ட இந்தக் கும்பல், தற்போது எந்த மாபாதகத்தையும் செய்து மோடியின் மனதை குளிர்விக்க காத்துக் கிடக்கின்றது.

தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராகவும், குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராகவும் மத வேறுபாடுகளைக் கடந்து, ஜனநாயகத்தையும், நீதியையும் நிலைநாட்ட விரும்பும் அனைத்து சக்திகளும் கடும் அடக்கு முறைகளையும், சித்திரவதைகளையும் பொருட்படுத்தாமல் போராடி வருகின்றனர். நாடு முழுவதும் முஸ்லிம்களுக்கு எதிரான கடும் வன்முறையை மோடி அரசு கட்டவிழ்த்து விட்டுள்ளது. உத்திரப் பிரதேசத்தில் 15க்கும் மேற்பட்டோரை அந்த மாநில காவி போலீஸ் சுட்டுக் கொன்றிருக்கின்றது. முஸ்லிம்களின் வீடுகளும், கடைகளும் குறிவைத்து அடிக்கப்படுகின்றன. மோடி அரசால் போராடும் மக்கள் மீது ஏவி விடப்பட்டுள்ள அனைத்து வன்முறைகளிலும் ஆர்.எஸ்.எஸ் கூட்டு சேர்ந்துள்ளது. பல இடங்களில் காவல் துறையுடன் அவர்களின் ஒப்புதலோடு ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள், காவல்துறை போன்று வேடமிட்டு போராட்ட சக்திகள் மீது வன்முறைத் தாக்குதலை நடத்தியுள்ளன. நாடு முழுவதும் அறிவிக்கப்படாத அவசர நிலை கொண்டு வரப்பட்டு இருக்கின்றது.

kolam against caa 2இவ்வளவு பெரிய வன்முறையை ஜனநாயக ரீதியாகப் போராடும் சக்திகளுக்கு எதிராக மோடி அரசும், அதன் பரிவாரங்களும் திட்டமிட்டு கட்டவிழ்த்து விட்டும் இந்த நாட்டின் நீதிமன்றங்கள் அனைத்தும் அதைக் கண்டு கொள்ளாமல் கள்ள மெளனம் காத்து வருகின்றன. அரசு உறுப்புகள் அனைத்தும் காவிமயமாக்கப்பட்டு, அதன் துணையுடன் ஆர்.எஸ்.எஸ் தனது செயல்திட்டங்களைத் துணிந்து ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகின்றது. ஆனால் இந்த நாட்டின் மக்களை மத ரீதியாகத் துண்டாட நினைப்பதை இந்த மண்ணின் ஆன்மாவாக விளங்கும் சகிப்புத்தன்மையும், சகோதரத் தன்மையும் ஒருபோதும் ஏற்காது. அதனால்தான் இதற்கு எதிராக ஒட்டுமொத்த இந்தியாவும் போர்க்கோலம் பூண்டிருக்கின்றது.

இந்தி பேசும் மாநில மக்களே தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராகவும், குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராகவும் போராடும் போது இந்தியாவிலேயே கருத்துரிமையைக் காக்க முதலில் களம் காணும் தமிழகம் மட்டும் சும்மாவா இருக்கும்?. திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், மார்க்சிய, பெரியாரிய இயக்கங்களும், பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளும் இதற்கு எதிராக கடுமையாகப் போராடி வருகின்றன. பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களும் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கின்றார்கள். குடியுரிமை சட்டத் திருத்த மசோதவுக்கு ஆதரவாக வாக்களித்து இஸ்லாமிய மக்களுக்கும், ஈழத் தமிழ் மக்களுக்கும் துரோகம் செய்த அதிமுக லும்பன் கும்பல் கொஞ்சம் கூட வெட்க மானமே இல்லாமல் தொடர்ந்து இந்த சட்டத் திருத்தத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றது.

இந்த வெட்கங்கெட்ட ஆட்சிக்கு எதிராக நடைபெறும் ஒவ்வொரு போராட்டமும் அதற்குக் கிலியை ஏற்படுத்துகின்றது. இந்த ஆட்சிக்கு எதிரான மனநிலையும் இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற எண்ணமும் மக்கள் மனதில் மிகத் தீவிரமாக உள்ளது. நடைபெறும் ஒவ்வொரு போராட்டமும் அதிமுகவின் அழிவு காலத்திற்கு கட்டியம் கூறுவதால், போராட்டங்கள் எந்த வடிவத்தில் நடைபெற்றாலும் அதை முளையிலேயே கிள்ளியெறிய அரச பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது. ஆனால் இந்த அடிமைகளின் அச்சுறுத்தலுக்குப் பயந்தவர்கள் அல்ல தமிழ்நாட்டு மக்கள். இன்று மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராகவும், குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராகவும் கோலம் போட்டு, கோலத்தைக் கூட தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டும் ஒரு போராட்ட வடிவமாக மாற்றி இருக்கின்றார்கள். அலங்கோலமான இந்த ஆட்சியை தங்களின் கோலத்தின் மூலம் அம்பலப்படுத்த போர்க்கோலம் பூண்டிருக்கின்றார்கள். சமூக வலைத்தளங்கள் எல்லாம் கோலத்தால் அல்லோலகல்லோபட்டுக் கிடக்கின்றது. ‘சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி’ என்ற பழமொழி போன்று ஆகியிருக்கின்றது தமிழக காவல்துறையின் நிலை. அடக்குமுறைகள் அதிகரிக்க, அதிகரிக்க அதற்கு எதிரான போராட்டங்களும் அதிகரிக்கும் என்பதை இந்த அரசு உணர வேண்டும்.

பாசிச பிஜேபியின் ஊதுகுழலாக, அடிமைகளாக மாறி இருக்கும் இந்தக் கும்பலை கூடிய விரைவில் தமிழக மக்கள் விரட்டி அடிக்கத்தான் போகின்றார்கள். வரலாற்றில் மக்களின் போராட்டங்களை ஒடுக்கிய அரசுகள் எல்லாம் குப்பைத் தொட்டியில் வீசி எறியப்பட்டுள்ளன என்பதை கூடிய விரைவில் இவர்களும் பார்க்கத்தான் போகின்றார்கள்.

- செ.கார்கி

Pin It