1.பெயரற்ற வீதிகளில்
ஒளிந்திருக்கும் அந்நியம்
வன்கொடுமை மிருகங்களுக்குச்
சிறகுகள் இருந்தன.
வீடுகளின் அலங்காரக்
கண்ணாடி மரங்களின் உடல்
சிவப்பால் தளும்பிக்கொண்டிருக்கிறது
2. குருதியிழந்த வெளிறிய உடல்கள்
ஊரெல்லைப் புதுமலையாய்க்
குவிக்கப்பட்டிருக்கின்றன.
தோல்வியுற்ற தெய்வங்களைப்
புசிப்பதற்கான பெரும்பசி
தனக்குவரட்டுமெனக்
காத்திருக்கிறாள் பச்சையுடைநங்கை
தன் நம்பிகளுடன்.
3. ஆசனவாயில் குறிபார்த்து
சுட்டவனுக்கான பரிசுப்பட்டயம்
அதிக மார்புகளைக்கொய்து
வீசியவர்களால் களவாடப்பட்டது
4. மிச்சமிருப்பவர்களை
அழுகுரல் வற்றியதினத்தில்
கொலை செய்துகொள்ளலாம் என்று
காத்திருக்கிற புத்தனின் வாயில்
துருத்தி நிற்கும்
கோரப்பற்களின் ஊடேவழியும்
குருதிச்சிவப்பைத் தத்துக்கொண்டு
செம்பழுப்பாய் மாறிவிட்டிருந்தது
அனாதி நகரம்.