யு9 பாதை திறந்தாயிற்று

ஈழத்தமிழர்களின் வாழ்வுபோல்

தலை இல்லாத் தென்னையும் பனையும் தான்

தெருவெங்கும் தோற்றுன்றன.

 

துக்கத்திலும்

அவமானத்திலும்

தலைகுனிந்து நிற்கும்

மரங்களுக்கும் எம்மக்களுக்கும்

துப்பாக்கி காட்டியே

ஆறுதல் சொல்கிறார்கள் படைகளும்

அவர்களின் குடைகளும்.

 

துப்பாக்கி தூக்கிய கைகள்

வெறுமையாக உயர்த்தப்பட்டபோது

வெளிநாட்டில் எம்தமிழ் மனங்கள்

விதைவையாய் போயின.

 

மாறிநின்றவர்களுக்குக் கூட

மாண்டவர்கள்

தமிழரின் அடையாளமாய் போயினரே.

 

திவசத்துக்குக் கூட

அடையாளம் இன்றி

வன்னி வடுவின்றி எலும்புகள் கூட

எரியத்தொடங்கிவிட்டன- ஆனால்

தலதாமாளிகையில்

தன்பல்லை வைத்துவிட்டு

பொக்குவாயுடன்; புத்தன்

வன்னிக்கு இறைச்சி தின்னப்போகிறான்.

 

தினம் மரங்கொண்டு திரிகின்றன

மனிதமற்ற மரத்துப்போன மரங்கள்.

 

தமிழனின் சிரங்கேட்டான் புத்தன்

கபாலம் கொண்டு

வெளிநாடுகளில் பிச்சையெடுத்துண்ண.

பிச்சாந்தி பிச்சாந்தி பிச்சாந்தி

 

வன்னிக் கம்பிவேலிகளுக்குப் பின்னால்

காய்ந்த முகங்கள்

இன்றும் கண்ணீர்தான் குடிக்கின்றன.

 

வன்னி அகதிகள் முகாமிருந்து

தோலாடை போர்த்த எலும்புகள்

வான் நோக்கி

மீட்பரை எதிர்பார்க்கின்றன

கருகிப்போன கர்த்தரிடம்.

 

ஈழத்து மக்கள் என்மக்கள் என்ற

தென்னித்தியத் தமிழர்கள் எல்லாம்

வோட்டை வித்துப் பணமாக்கிய பின்

மௌனித்து விட்டனர்

புலிகளின் துப்பாக்கிகள் போல்

பிரபாகனுக்குப் பின்

புல(ன்)ம்பெயர் தமிழர்கள் போல்.

 

மக்களுக்காய் உணவனுப்பு

மருந்தனுப்பு

என்ற கோசங்கள்

ஐரோப்பாவிலும் அடங்கிவிட்டன.

அதேமக்கள்

துப்பாக்கி வேலிகளுக்குப் பின்னால்

இன்றும் பட்டிணியுடன்தான்

கம்பிவேலிகளுக்குள் விழிசொருகியபடி.

 

புத்தனுக்கு மட்டும்

பெருவிழா எடுக்கப்படுகிறது.

தமிழ் யேசுவை சிலுவையில் தூக்கியதால்

ஐயோ என்று ஒப்பாரிவைத்து

அழுகிறார் அல்லா

சிவன் என்றும்போல் சுடலையில் தான்.

பேரிகைகள் முழங்க

பட்டுப்பீதாம்பரம் போர்த்திய

போதிமரப்புத்தன்

பெருவிழாவில் போதிக்கிறான்

கொல்லாமை இல்லையேல்

வெல்லாமை இல்லை

இது ஈழத்தின் புதிய பௌத்தம்.

- நோர்வே நக்கீரா