கீற்றில் தேட...

இராணுவமயமாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் தமிழர் பாரம்பரிய தொன்மைகளையம் விழுமியங்களையும் அழிக்கும் அல்லது முக்கியத்துவத்தை குறைக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் துப்பாக்கிகளின் மிரட்டலோடு செவ்வனே செய்து வருகிறது. சமய சின்னங்களையும் அதுபற்றிய சிந்தனைகளையும் அவ் சமயம் சாராத இன்னோர் இனத்தின் மேல் திணித்தல் என்பது அவ்வினத்தின் வீரியத்தை இல்லாது செய்வதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையே.

புத்தரின் நெறி எவ்வாறாயினும் சிறிலங்காவைப் பொறுத்தவரை புத்தர் என்பது பேரினிவாதத்தின் குறியீடாக்கப்பட்டுள்ளது. சிங்கள ஆக்கிரமிப்பு மற்றும் சிங்கள அரசியல் புத்தர் சார்ந்ததாகவே காணப்படுகிறது. இனவன்முறைகளை ஆதரிப்பவர்களாயும் சிறுபான்மையினரின் உரிமைகளை மறுப்பவர்களாயும் பெளத்த பீடாதிபதிகளே முக்கியமாக திகழ்வது சிறிலங்காவில் புத்தரின் அரசியல் செல்வாக்கிற்கு உதாரணம்.

வடக்கிலும் சரி கிழக்கிலும் சரி தமிழர் அதிகமாக வாழும் பிரதேசங்களில் நிறுவப்படும் புத்தர் சிலைகளுக்கு ஆயுதமேந்திய படையினர் பாதுகாப்பு கொடுப்பதென்பது சிங்கள பெளத்தத்தை தமிழ் மக்கள் மீது திணித்தலின்றி வேறென்ன!!!!!

தமிழர் தாயகப்பிரதேசங்களில் புத்தரின் அதிகரிக்கும் வருகையானது நீண்ட காலத்தில் தமிழர் தொன்மை அழிக்கப்பட்டு தமிழர் சமய நெறிகள் சிதைக்கப்பட்டு கட்டுக்கோப்பற்ற தமிழர் சமுதாயத்தை உருவாக்கி அடிமைப்படுத்தப்படும் அரசியல் நெறியை கொண்டுவருவதற்கான ஏற்பாடாகும். ஆயுத பலத்தோடு சமயம் திணிக்கப்படுவது என்பது வெறுமனே அரசியலே தவிர வேறெந்த காரணங்களும் இருக்க முடியாது.

இன்றைய காலகட்டத்தில் பெளத்தமத விசேட தினங்களுக்கு யாழ்ப்பாணம், கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களில் சிங்கள மாவட்டங்களை விட முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. வெளி அலங்காரங்கள், விருந்துபசாரங்கள் போன்றவற்றினூடாக சிங்களர்களுடைய கலாச்சாரத்தில் ஆர்வத்தை ஏற்படுத்தி ஒற்றுமையாக உள்ளோம் போன்றதான பிரமையை உருவாக்கி, தமிழருக்கு மறுக்கப்படும் உரிமைகளை பற்றி தமிழர் சிந்திப்பதை மழுங்கடிக்கும் உளவியல் உத்தியை பயன்படுத்துகிறார்கள். இதிலே கணிசமான அளவு வெற்றி கண்டுவிட்டார்கள் என்று கூட சொல்லலாம்.

சிங்கள நிகழ்வுகளை சிங்கள பிதேசங்களில் கண்டுகழிப்பது அல்லது கொண்டாடுவதென்பது வித்தியாசமானது. ஆனால் தமிழர் தாயகப் பிதேசங்களில் எத்தனையோ ஆயிரம் உயிர்களை காவு கொடுத்துவிட்டு பல கோடி சொத்துகளை இழந்து விட்டு நிற்கும் மக்களிடையே புத்தரின் களியாட்ட தினங்களை விமர்சையாக கொண்டாடுதலும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்தல் என்பதும் தமிழர் தமது இருப்புகளை இழந்து வருகின்றனர் என்பது தான்.

இந்த சமய அரசியல்களை நாம் தெளிவாக புரிந்து நடக்க வேண்டும். திணிக்கப்படும் புத்தரிலிருந்து தமிழர் விலகி நடக்க வேண்டும். தமிழர் கலாச்சாரமும் நெறிகளும் மிகவும் தொன்மையானது என்பதையும் எப்படியும் வாழலாம் என்றில்லாது இப்படித்தான் வாழ வேண்டும் என்ற சமூக வரன்முறை கொண்ட இனம் தமிழர் இனம் என்பதையும் இன்றைய இளைஞர்களும் பெற்றோர்களும் புரிந்து கொள்ள வேண்டும். நாம் செய்யும் சமுதாயப் பிழைகளினூடாக பெளத்த அரசியல் உள் நுழைந்து எமது விழுமியங்களை சிதைப்பதற்கு மிக ஆவலோடு இருப்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

எமது பிரதேசங்களை எமது விழுமியங்களை தொலைக்காது கட்டியெழுப்புவோம்...பெளத்தத்தின் கழியாட்ட அரசியல் மாயைக்குள் தமிழர் விழுமியங்களை தொலைக்காது தடுப்பதற்கு, இன்றைய‌ பெற்றோர்கள் பிள்ளைகள் மேல் எடுக்கும் கண்டிப்பான சில கட்டுப்பாடுகளே உதவும்.

- மா.குருபரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)