இரத்த வாந்தியெடுத்து
அப்பா இறந்த போதும்
காச நோயால் மூச்சிறைத்து
அம்மா இறந்த போதும் 
எங்களிடம் சத்தியம்
வாங்கிக்கொண்டார்கள்
அவர்களுக்குப்பிறகு
குவாரியில் கல் உடைக்கும்
வேலைக்கு நாங்கள்
போகக்கூடாதென்று.

பெற்றவர்கள் இறந்தபிறகு
மூத்தவள் என்ற
தகுதி அடிப்படையில்
எனக்கும் வேலை கிடைத்தது
அதே கல் குவாரியில்.

அரைத்தூக்கத்தில்
பதறியடித்து எழுந்து
அவதியாக முகம் கழுவி
கலைந்த  கூந்தலை
கைகளால் அள்ளி முடித்து
பழைய சோற்றைப்பிழிந்து
தூக்குவாளியில் போட்டு
அயர்ந்துறங்கும்
தங்கைகளின் நெற்றியில்
அவசரமாக முத்தமிட்டு
தெருமுனையில் நிற்கும்
குவாரி வண்டியில் ஏற
சுவாசப்போராட்டத்தில்
தொடர் இருமல் சத்தம்.

இன்று எப்படியும் மறக்காமல்
தங்கைகளிடம்
சத்தியம் வாங்கிவிடவேண்டும்
நம் குடும்பத்திலிருந்து இனிமேல்
யாரும்  குவாரியில்
கல் உடைக்கும் வேலைக்கு
போகக்கூடாதென்று.

அப்பா அம்மா இறந்து போன
அடுத்த நாள்
பால் ஊற்ற எலும்புகளைத்தேட
ஒன்று கூடக்கிடைக்காமல் 
மயானக்காவலனிடம் கேட்க
எறியாத இரண்டு நுரையீரல்களை
எரியூட்டு மேடையின் ஓரத்தில்.
அடையாளம் காட்டியது
அடிக்கடி என் கனவில் வருகிறது
இப்போதெல்லாம்.

- பிரேம பிரபா

Pin It