நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவரான பனகல் அரசரின் பிறந்தநாள், 1866 ஜூலை 9 இல்அவர் பிறந்தார். நீதிக்கட்சியின் சார்பில் சென்னை மாகாணத்தில் ஆறு ஆண்டுகள் முதலமைச்சராக இருந்து மகத்தான சாதனைகளை அவர் படைத்தார். வேலை வாய்ப்புகளில் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை உறுதி செய்து முதல் ஆணை பிறப்பித்தவர் பனகல் அரசர். ஆனால் பார்ப்பன அதிகார வர்க்கம் அதை அமல்படுத்தாமல் முடக்கியது. பிறகு கல்வியில் பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு இடம் கிடைக்காத நிலையில் அவர்களுக்கு இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக கல்லூரியில் மாணவர் சேர்க்கைக் காண குழு ஒன்றை அமைத்து பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு கல்லூரியில் இடம் கிடைக்க வழிவகை செய்தார்.

panagal kingஅறநிலையத் துறையை முதன் முதலில் உருவாக்கியவர் அவர்தான், அதுவரை கோயில்கள் பார்ப்பனர்களின் சொந்த பராமரிப்பில் கொள்ளையடிக்கப்பட்டு வந்தது. அறநிலையத்துறையை பனகல் அரசர் உருவாக்கிய காலத்தில் பெரியார் காங்கிரஸ் கட்சி இருந்தார். காங்கிரஸ் கட்சியும் நீதி கட்சியும் எதிரும் புதிரும் ஆக இருந்த காலகட்டம், ஆனாலும் பெரியார் பனகல் அரசரின் அறநிலையத்துறை திட்டத்தை ஆதரித்து கடற்கரையில் கூட்டம் போட்டு பேசியது ஒரு வரலாற்றுக் குறிப்பு.

அரசு பதிவேடுகளில் பறையர், பஞ்சமர் என்றுதான் அன்றைக்கு குறிப்பிடப்பட்டு வந்தது, இதற்கு பதிலாக ஆதி திராவிடர் என்ற சொல்லைத்தான் பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தவர் பனகல் அரசர். ஒரு மாணவன் மருத்துவம் படிக்க வேண்டும் என்று சொன்னால் அவருக்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற ஒரு நிலை இருந்தது, பார்ப்பனர்கள் மட்டும்தான் மருத்துவத்தில் சேர முடியும் என்ற நிலையை மாற்றி சமஸ்கிருதம் ஒரு அடிப்படை தகுதி அல்ல என்பதை உறுதி செய்தவர் பனகல் அரசராவார்.

யுனானி, ஆயுர்வேதம், சித்தா போன்ற மருத்துவ முறைகளுக்கு உயிர் கொடுத்தவரும் அவர்தான். கிராமங்களில் இலவச மருத்துவத்தை ஊக்கப்படுத்துவதற்காக ஊரக மருத்துவ திட்டத்தை அவர்தான் முதன்முதலில் கொண்டு வந்தார். பார்ப்பனர்கள் இவரை சகித்துக் கொள்ள முடியாமல் அவமானப்படுத்துவற்கான வழிகளை தேடிக்கொண்டிருந்தனர். ஒரு முறை பார்ப்பனர் கட்டுப்பாட்டில் உள்ள திருச்சி தேசியக் கல்லூரிக்கு பனகல் அரசரை அழைத்திருந்தனர், பனகல் அரசருக்கு சமஸ்கிருதம் தெரியாது, அவரை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக வரவேற்பு பத்திரத்தை சமஸ்கிருதத்தில் எழுதியிருந்தார்கள். ஆனால் பனகல் அரசர் அதற்கு சரியான பதிலடி கொடுத்தார். அவர் தனது பதிலுரையை சமஸ்கிருதத்திலேயே பேசினார். தனக்கும் சமஸ்கிருதம் தெரியும் என்பதை அப்போது உறுதிப்படுத்தி பார்ப்பனர்களின் மூக்கை உடைத்தவர் பனகல் அரசர்.

அவர் மறைவின்போது பெரியார் எழுதிய எழுத்துகள் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும், “ஒரு யுத்தம் முடிந்து வெற்றிக் குறியோடு நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் போர் வீரர்கள் சேனாதிபதியின் உத்தரவை எதிர்பார்த்து இருந்த போது சேனாதிபதி இறந்து விட்டார் என்று செய்தி கிடைக்குமானால், அந்த சமயத்தில் போர் வீரர்களின் மனம் எப்படி துடிக்குமோ, அதுபோல் நம் தமிழ் மக்கள் துடித்திருப்பார்கள்” என்று பனகல் அரசரின் மரணம் குறித்து பெரியார் ஒரு இரங்கல் செய்தியை எழுதினார்.

பார்ப்பனரல்லாத மக்களின் விடிவெள்ளியாக திகழ்ந்த ஒரு மூத்த தலைவரான பனகல் அரசரை நன்றியுடன் நினைவு கூறுவோம்.

- விடுதலை இராசேந்திரன்

Pin It