தென்னிந்திய வரலாற்றில், இருபதாம் நூற்றாண்டின் முதல் இருபதுகளில் நீதிக் கட்சியின் தோற்றம் குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமைந்தது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், 3 சதவீத மக்கள் தொகை கொண்ட பார்ப்பனர்கள் மொத்த சமுதாயத்தின் அரசியல், பொருளாதாரக் களங்களில் ஆதிக்கம் பெற்றிருந்தனர். பார்ப்பனர், பார்ப்பனரல்லாதவரிடையே பெரும் இடைவெளி இருந்தது.

நீதிக்கட்சி அந்த இடைவெளியைக் குறைக்க வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கேட்டது. அக்கட்சியின் கோட்பாடுகள், திட்டங்களைத் தெளிவாக ஆய்வு செய்தால், அதனுடைய வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்பது சமூக நீதிக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது என விளங்கும்.

இத்தகு சூழலில், பார்ப்பனரல்லாத சமூகத்தைச் சார்ந்த தலைவர்களின் எழுத்துக்கள் வாயிலாகவும், ஆங்கிலேயக் கல்வியாளர்கள் வாயிலாகவும், பார்ப்பனரல்லாதவர்கள் எல்லாம் இனவழியே திராவிடர்கள் என்ற உணர்வும் வெளியாயிற்று. பார்ப்பனரல்லாத பிரிவினர் தம் நலன்களைப் பாதுகாக்க ஓர் இயக்கத்தை உருவாக்கினர்.

1916 ஆம் ஆண்டு பார்ப்பனரல்லாச் சமூகத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த தலைவர்களில் சிலர், சென்னை மையப் புகைவண்டி நிலையத்தின் அருகில் அமைந்துள்ள விக்டோரியா அரங்கில் தென்னிந்திய நல உரிமைக் கழகம் என்பதனைத் தொடங்கினர். அவர்களில் முதன்மையானவர் டாக்டர் நடேச முதலியார் ஆவார். மற்ற இருவர் டி.எம்.நாயர் என அழைக்கப்பட்ட தாராவத் மாதவன் நாயரும், சர். பிட்டி தியாகராய செட்டியும் ஆவர்.

பார்ப்பனரல்லாத சாதி இந்துக்களிடம் அரசியல் உணர்வை ஊட்டுவதே இச்சங்கத்தின் முதன்மை நோக்கமாக இருந்தது. இந்த அமைப்பு ஆங்கிலத்தில் ‘நீதி’ என்ற செய்தித்தாளையும், தமிழில் ‘திராவிடன்’ என்ற செய்தித்தாளையும் வெளியிட்டது. அதனால் இவ்வமைப்பினர் ‘நீதிக் கட்சியினர்’ என அழைக்கப்படலாயினர்.

சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் ஆளுமை படைத்திருந்த பார்ப்பன இனத்தவருக்கு, அதிலும் கல்வித் துறையிலும், அரசுப் பணிகளிலும் பார்ப்பனர்களின் ஆதிக்கத்திற்கு அறைகூவலாக இக்கட்சி இருந்தது. எனவே, நீதிக் கட்சியினர் போதுமான எண்ணிக் கைக்கேற்ற பிரதி நிதித்துவம் வேண்டுமென வேண்டினர், போராடினர்.

நீதிக்கட்சியின் தலைவர்கள் விபரமறிந்தவர்களாகவும், மெத்தப் படித்தவர்களாகவும் தங்களது முயற்சி, இலக்கு, தாம் செல்லும் திசை குறித்துத் தெளிந்த உணர்வு கொண்டவர்களாகவும் விளங்கினர். அவர்கள் வெறும் இலட்சிய வாதிகளாக மட்டுமல்லாமல் நடைமுறை அரசியல்வாதிகளாகவும் திகழ்ந்தனர்.

1917 ஆம் ஆண்டு பார்ப்பனரல்லாதார் பேரறிக்கை ஒன்றை இக்கட்சி வெளியிட்டது. டி.எம்.நாயர், தியாகராய செட்டியின் தலைமையில் கட்சி மிக வேகமாக வளர்ந்தது.

1917 ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள், கோவையில் நீதிக் கட்சியின் மாநில முதல் நாடு நடைபெற்றது. அதன் பிறகு ஆண்டுதோறும் சென்னை மாநிலத்தில் தமிழ், தெலுங்குப் பகுதிகளில் தொடர்ந்து மாநாடுகள் நடைபெற்றன. சட்டசபையில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ அடிப்படையில் பார்ப்பனரல்லாத இனத்தினரின் பிரதிநிதித்துவத்தை வென்றடைவது ஒரு முதன்மை குறிக்கோளாக இருந்தது. உண்மையில் நீதிக்கட்சி பார்ப்பனரல்லாதவரிடம் ஓர் எழுச்சியை ஏற்படுத்தியது.

மாண்டேகு - செம்சுபோர்டு சீர்திருத்தம்

1919-ல் அறிமுகப்படுத்தப்பட்ட மாண்டேகு-செம்சு போர்டு சீர்திருத்தம் இந்திய மாநிலங்களின் சட்ட மன்றங்களின் இயல்பினை மாற்றுவதாக அமைந்திருந்தது. மாநில ஆட்சியின் நிர்வாகத் துறைகள், ஒதுக்கப்பட்ட துறைகள், மாற்றப்பட்ட துறைகள் எனப் பகிர்வு செய்யப்பட்டன. ஒதுக்கப்பட்ட துறைகளை ஆளுநரும், அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக் குழுவினரும் நிர்வகித்தனர். மாற்றப்பட்ட துறையானது பொது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தினரின் பொறுப்பின் கீழ் வந்தது.

1919 ஆம் ஆண்டு மாண்டேகு-செம்சுபோர்டு சட்டப்படி அமையப் பெற்ற சட்டமன்றத்திற்கான முதல் பொதுத் தேர்தல் 1920 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 30 ஆம் நாளும், டிசம்பர் 1, 2 நாள்களிலும் தேர்தல் நடைபெற்றது. தேர்தலைப் புறக்கணிக்குமாறு தீவிரப் பிரச்சாரத்தைக் காங்கிரஸ் மேற்கொண்டது. காங்கிரஸ், நீதிக் கட்சியை எதிர்த்தது.

நீதிக்கட்சி மாண்டேகு - செம்சு போர்டு சீர்திருத்தங்களை ஏற்க முடிவு செய்தது. தேர்தல் பிரச்சாரத்தை மிகுந்த ஆவலுடன் எதிர்கொண்டு பெருவாரி யான வெற்றியும் பெற்றது. 98 இடங்களில் 63 இடங்களைக் கைப்பற்றியது. நியமன உறுப்பினர்களில் இக்கட்சியின் ஆதரவாளர்கள் 18 பேர் இடம் பெற்றனர். 127 பேர் அடங்கிய அவையில் நீதிக்கட்சியின் வலிமை 81 ஆக இருந்தது. பார்ப்பனரல்லாத இந்துக்களுக்கு இடங்கள் ஒதுக்கியதால் சட்ட மன்றத்தில் போதிய பிரதிநிதித்துவம் பெற ஒதுக்கீடு வாய்ப்பாக அமைந்தது.

சென்னை மாநில ஆளுநராக இருந்த வெலிங்டன் பிரபு சர். பி.டி. தியாகராய செட்டியை அமைச்சரவை அமைக்க அழைப்பு விடுத்தார். ஆனால், அழைப்பை ஏற்காத தியாகராயர் கடலூர் ஏ. சுப்பராய ரெட்டியாரை பதவி ஏற்கச் செய்தார்.

இது நீதிக்கட்சியின் முதல் அமைச்சரவை என்பது மட்டுமல்லாது சென்னை மாநிலத்தின் முதல் அமைச்சரவையாகவும் அமைந்தது. 1920 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 17 ஆம் நாள் புதிய அமைச்சரவை பதவியேற்றது. அப்போது முதல் அமைச்சர் என்ற பதவி கிடையாது.

ஆனால் அவர் ஆங்கிலத்தில் பிரிமியர் எனவும் அல்லது முதன்மை அமைச்சர் எனவும் அழைக்கப்பட்டார். அவரின் பரிந்துரையின் பேரில் மாற்றப்பட்ட ஒரு பாதி அதிகாரப் பகிர்வுத் துறைக்கு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர்.

கல்வி, பொதுப்பணி, கலால், பதிவுத் துறைக்கு பனகல் அரசர் என்றழைக்கப்பட்ட பி.இராமநாயனிங்கர், கூர்மா வெங்கட்ட ரெட்டி, நாயுடு (கே.வி. ரெட்டி நாயுடு) ஆகிய ஆந்திர மாநிலப் பகுதியினர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர்.

உடல்நலக் குறைவினால் மிகக் குறுகிய காலத்திலேயே சுப்பராயலு ரெட்டியார் பதவி விலகினார். அவரது இடத்திற்கு ஏ.பி.பாத்ரோ நியமிக்கப்பட்டார்.

அமைச்சரவையில் பார்ப்பனரல்லாதவர்களே முழுவதும் இருந்தனர். அதனால் ஆளுநர் பி.இராஜகோபாலாச் சாரி, பி.சீனிவாச ஐயங்கார், சி.பி.இராம சாமி ஐயர் ஆகியோரை மிக முதன்மைப் பொறுப்புகளில் நியமித்தார். 1921 ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 12 ஆம் நாள் சென்னை சட்டமன்றம் தொடங்கியது.

நீதிக் கட்சியின் அமைச்சரவை 1923 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் நாள் சட்டமன்றத்தின் காலம் முடிவுற்றதால் கலைக்கப்பட்டது. 1923 அக்டோபர் 31 ஆம் நாள் சென்னை மாநில சட்ட மன்றத்துக்கு இரண்டாவது பொதுத் தேர்தல் நடைபெற்றது. இத் தேர்தலில் பல்வேறு காரணங்களினால் நீதிக்கட்சி வலுவிழந்தது.

ஆயினும், சட்ட மன்றத்தில் கூடுதலாக 17 பேர் நீதிக்கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1923 ஆம் ஆண்டு நவம்பர் 19-ல் இரண்டாவது நீதிக்கட்சி அமைச் சரவை பனகல் அரசர் தலைமையில் அமைந்தது. ஏ.பி.பாத்ரோ, டி.என்.சிவஞானம் பிள்ளை ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். அப்துல்லா கட்டாலா சாகிப் பகதூர், எஸ்.அற்புத சுவாமி உடையார், டி.சி. தங்கவேல் பிள்ளை ஆகியோர் அமைச்சரவை செயலாளராயினர்.

டாக்டர் சி.நடேச முதலியார், ஓ. தணிகாசலம் செட்டி ஆகிய திராவிட இயக்க முன்னோடித் தலைவர்கள் அதிருப்தியுற்று எதிர்முகாம் சென்றனர். இந்தக் கசப்புணர்வு நம்பிக்கையில்லாதத் தீர்மானம் வரை சென்றது. அதுவும் தோற்கடிக்கப்பட்டது. பி. தியாகராய செட்டி 1925 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் நாள் மறைந்தார். அவரது மறைவுக்குப் பின் பனகல் அரசர் கட்சிப் பொறுப்பேற்றுக் கட்சிக்குப் புத்துயிர் ஊட்ட முயன்றார்.

டாக்டர் சுப்பராயனின் சுயேச்சை அமைச்சரவை

1926 ஆம் ஆண்டு நவம்பர் 8-ல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 98 இடங்களில் 41 இடங்கள் பெற்றது. அது தனிப் பெருங்கட்சியாக விளங்கியது நீதிக்கட்சியினர் 21 இடங்களையே பெற்றனர். இந்திய தேசிய காங்கிரஸ் அமைச்சரவை அமைப்பதில்லை என முடிவெடுத்தது. ஆளுநராயிருந்த கோஷ்சன் சுயேச்சை அமைச்சரவை அமைக்க டாக்டர் சுப்பராயனுக்கு அழைப்பு விடுத்தார்.

காங்கிரசின் உதவியுடன் சுயேச்சை அமைச்சரவை பதவியேற்றது. நீதிக் கட்சியினர் எதிர் வரிசையில் இருந்தனர். சைமன் குழு வருகையை ஆதரித்ததன் விளைவால் சுப்பராயன் அமைச்சரவைக்கு ஆபத்து ஏற்பட்டது. வேல்சு இளவரசர் வருகையை எதிர்த்த காங்கிரஸ், தனது ஆதரவை விலக்கிக் கொண்டது. நீதிக் கட்சியினர் சுப்பராயனின் உதவிக்கு வந்தனர்.

இந்த அமைச்சரவையில் அமைச்சராக இருந்த முத்தையா முதலியார்தான் வகுப்புரிமை ஆணை என்பதை வெளியிட்டுச் சமூக நீதியை நிலைநாட்டினார்.

நீதிக்கட்சியினர் தங்களது செல்வாக்கை வலுப்படுத்திக் கொண்ட நிலையில் தங்களது தலைவர் பனகல் அரசரை 1928 டிசம்பர் 16 ஆம் நாள் இழந்தனர்.

நான்காவது பொதுத் தேர்தலில் நீதிக்கட்சி வெற்றி பெற்ற போது பி. முனுசாமி நாயுடு தலைமையில் நீதிக் கட்சியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தார். 1930 அக்டோபர் 27-ல் பி.டி.இராசன் (பொன்னம்பலம் தியாக ராசன்) டி.குமாரசாமி ஆகியோர் அமைச்சர்களாகப் பங்கேற்றனர்.

நீதிக் கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அவர்களுடைய தீர்க்கமான இலட்சியங்களை அடைவதைக் கடினமாக்கின. முனுசாமி நாயுடு பதவி விலகினார். 1932 நவம்பர் 5-ல் ஸ்ரீ தவி வாரு ஸ்ரீ ராமகிருஷ்ண ஸ்வாசாலப்பதி ரெங்காராவ் அவருக்குப் பின் பதவி யேற்றார். அவர் தான் பொப்பிலி அரசர் என அழைக்கப் பெற்றார்.

அவர் சுமார் மூன்றரை ஆண்டுக் காலம் முதன்மை அமைச்சராகப் பதவியிலிருந்தார். உடல்நலக் குறைவின் காரணமாக அவர் பதவி விலகிட நேர்ந்த போது 4.4.1936 முதல் 24.8.1936 வரை பி.டி.இராஜன் முதன்மை அமைச்சரானார்.

மீண்டும் பொப்பிலி அரசர் 25.8.1936 முதல் 31.3.1937 வரை முதன்மை அமைச்சராய் இருந்தார். 1936 இல் அவரது ஆட்சிக்காலம் முடிந்தாலும் புதிய இந்திய அரசியல் சட்டம் அறிமுகப் படுத்தப்பட்டதால் புதிய ஆட்சியினர் பதவிக்கு வரும் வரை ஆட்சி நீடித்தது. 1935 ஆம் ஆண்டு சட்டத்தின்படி முதன் முதலில் பொதுத் தேர்தல் நான்கு நாட்கள் நடைபெற்றது. 215 இடங்களில் 159 இடங்கள் காங்கிரசுக்கும் 21 இடங்கள் மட்டும் நீதிக் கட்சியினருக்கும் கிடைத்தன. நீதிக் கட்சியின் தோல்வி இது.

தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற காங்கிரஸ் 1935 ஆம் ஆண்டு இந்தியச் சட்டப்படி ஆளுநரிடம் உள்ள கூடுதல் அதிகாரம் குறித்துக் கோரிக்கை வைத்தது. ஆளுநரின் உறுதிமொழி பெற்ற பின்னரே ஆட்சி அமைப்போம் என காங்கிரஸ் கூறியதால் பதவியேற்கத் தாமதமாயிற்று.

அதனால் ஆளுநர் நீதிக் கட்சியைச் சேர்ந்த கே.வி.ரெட்டி நாயுடுவை அமைச்சரவை அமைக்க வேண்டிக் கொண்டார். 1937 ஏப்ரல் 2 ஆம் நாள் முதல் காங்கிரசின் சார்பில் இராஜாஜி முதன்மை அமைச்சராய் பதவியேற்று 1937 ஜூலை 14 வரை ஆட்சியிலிருந்தார்.

1926 முதல் 1929 வரை உள்ள இடைப்பட்ட சுப்பராயனின் ஆட்சிக் காலந்தவிர 1920 முதல் 1937 வரை சென்னை மாநிலத்தை நீதிக் கட்சியினர் ஆட்சி செய்தனர். நீதிக்கட்சி ஆட்சியின் பல நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்கன. பொதுப் பணியில் பார்ப்பனரல்லாத வகுப்பினருக்குப் போதிய பிரதிநிதித்துவம் அளிக்கும் முயற்சியினை நீதிக் கட்சி மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. தாழ்த்தப்பட்ட இனத்தினரின் நிலையை மேம்படச் செய்தல், கல்வித் துறையில் சீர்திருத்தம் முதலியன செய்தன.

வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணை 1921, 1922-ல் இயற்றப் பட்ட வகுப்புவாரி பிரதி நிதித்துவ அரசாணைகள் மூலம் உள்ளாட்சி அமைப்புகள், கல்வி நிலையங்கள் ஆகியவற்றில் ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு கூடுதல் விகிதத்தில் ஒதுக்கீடுகளைச் செய்தது.

1924-ல் பனகல் அரசரின் அமைச்சரவை உருவாக்கிய பணியாளர் தேர்வு வாரியம் 1929-ல் தேர்வாணையக் குழுவாக உருவெடுத்தது. இத்தகைய அமைப்பு இந்தியாவிலேயே முதலாவதாக அமைந்தது.

இந்து சமய அறநிலையச் சட்டம் எப்பொழுதும் கண்டிராத சமூக, சமய சீர்திருத்த முயற்சியாக நீதிக் கட்சியினரால் 1921-ல் மேற்கொள்ளப்பட்டது. இந்த முயற்சியானது கோயில் சொத்துக்களைத் தவறாகப் பயன்படுத்தியதையும், ஊழலின் ஊற்றுக் கண்களையும் வீழ்த்தியது. இச்சட்டத்தின் மூலம் கோவில்கள், மடங்களின் சொத்துக்கள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன.

பெண்களின் விடுதலைக்கு நீதிக் கட்சியினரே காரணமாயினர். 1.4.1921-ல் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் வழி பெண்கள் விடுதலை இயலக் கூடியதாயிற்று. 1926-ல் தான் ஆளுநர் இச்சட்டத்திற்கு ஒப்புதல் தந்தார். பெண்கள் சட்ட மன்றத்திற்கு நியமிக்கப்படவும், தேர்தலில் போட்டியிடவும் முதன் முதலில் சென்னை அரசே சட்டமியற்றியது இதன் வாயிலாகத் தேர்தலில் பெண்களுக்குப் போட்டியிடத் தகுதியில்லை என்ற நிலை நீங்கியது.

முத்துலெட்சுமி அம்மையார்

1927-ன் ஆரம்பத்தில் டாக்டர் முத்து லெட்சுமி ரெட்டியைச் சட்டமன்றத் திற்கு ஆளுநர் நியமனம் செய்தார். இந்கிழ்ச்சியை இந்தியப் பெண்களின் விடியல் எனலாம். டாக்டர் முத்து லெட்சுமி அம்மையார் அனைவரும் நன்கு அறிந்த பெண்மணி ஆவார். இவர் தேவதாசி முறை ஒழிப்பு, பெண் கல்வி, பெண்கள் மேம்பாடு ஆகியவற்றுக்குப் பெரிதும் உழைத்தவர் ஆவார். இந்திய சட்டமன்றங்களில், அதிலும் முதலாவதாக சென்னை சட்டமன்றத்தின் உறுப்பினரான முதல் இந்தியப் பெண்மணி இவராவார். பின்னர் ஏற்பட்ட சட்டசபையின் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கள்ளர் இனத்தினர் குற்றப் பரம்பரைச் சட்டத்தினால் இழிவும் பாதிப்பும் அடைந்திருந்தனர். ஆதலின் அவர்களை மேம்படுத்த நீதிக்கட்சி அமைச்சரவை பெரும் முயற்சி மேற்கொண்டது. 1921-ல் நீதிக் கட்சி அரசு கள்ளர் சீர்திருத்தச் சட்டம் குறித்த சுற்றாணை பல்வேறு நிலைகளிலும் அவர்களை மேம்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.

கள்ளர்கள் குடியேற்றம் முதலியவையும் அவர்களது மேம்பாட்டுக்கான பள்ளிகள், விடுதிகள், தொழிற் பள்ளிகள் தொடங்குதல் முதலியவையும் நீதிக்கட்சியினரின் சாதனைகளாகும். குற்றப் பரம்பரையினர் நிலையிலிருந்த கள்ளர்கள், ஒரு நிலையான குடியேற்றம் செய்யப்பட்டதன் விளைவாக, குற்றப் பரம்பரையினர் சட்டமே இரத்தானது. இவ்வாறாக சமூகக் களங்கம் களைந்தெறியப்பட்டது. தாழ்த்தப்பட்ட இனத்தவரின் நல்வாழ்வுக்காக நீதிக் கட்சி அரசு, அவ்வின மக்கள் கல்வியை ஊக்கமுடன் பெறுவதற்குத் தொழிலாளர் ஆணையரை நியமித்தது.

வட்டிக் கடைக்காரர்கள், நிலக்கிழார் ஆகியோரின் கொடும் பிடியிலிருந்த அவர்களை மீட்கக் கூட்டுறவு இயக்கங்களைத் தொடங்கியது. கல்வி நிலையங்களில் தாழ்த்தப்பட்ட மாணவரின் எண்ணிக்கைப் பெருகியது. டாக்டர் சுப்பராயன் அமைச்சரவை தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான விடுதிகளைத் தொடங்கியது. மேலும், நில மேம்பாட்டுக் கடன் சட்டம், வேளாண்மைக் கடன் சட்டம் முதலியவற்றையும் நிறைவேற்றியது.

காவிரி பாசனப் பகுதியின் நீர்ப்பாசன வசதிக்காக 1924-ல் மைசூர் அரசாங்கத்துடன் ஓர் ஒப்பந்தமும் கையெழுத்தானது.

பிற சீர்திருத்தங்கள்

பெண்களின் திருமண வயதினை உயர்த்தியது. தொழிலாளர் ஈட்டுறுதிச் சட்டம், தொழிற்சங்கச் சட்டம் ஆகியனவும் நிறைவேறின. மக்கள் நல்வாழ்வுத் துறை உருவாகியது. தூத்துக்குடி துறைமுகக் கழகச் சட்டம், சென்னை தொழிற்துறை உதவிச் சட்டம் நிறைவேறின. இந்திய மருத்துவ முறை உரிய ஆக்கம் பெற்றது.

நீதிக் கட்சியினர் தேவதாசி முறையை ஒழித்தனர். சென்னை பல்கலைக் கழகச் செயல் முறையைத் திருத்தி அமைத்தனர். அக்டோபர் 1928-ல் நிறைவேறிய அண்ணாமலைப் பல்கலைக்கழகச் சட்டம் குறிப்பிடத்தக்கதாகும். நீதிக் கட்சியினர் ஆட்சியில் தான் 1926-ல் ஆந்திரப் பல்கலைக் கழகமும், 1929-ல் அண்ணாமலை பல்கலைக் கழகமும் உருவாயின.

அண்ணாமலைப் பல்கலைக் கழகம், பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வித் தேவையை உயர்த்துவதாக அமைந்துள்ளது.

Pin It