பார்ப்பன ஆதிக்கத்தால் இரண்டாயிரம் ஆண்டுகள் அடிமையாக்கப்பட்டுக் கிடந்த தமிழ்ச் சமூகம் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் முழுமையாக புறக்கணிக்கப்பட்டு வந்த நிலையை மாற்றிப் பார்ப்பனரல்லாதாரின் சமூகப் பொருளாதார நிலை உயரப் பாடுபட்ட இயக்கம் திராவிட இயக்கம். சாதி வருண அடிப்படையில் கல்வி மறுக்கப்பட்ட மக்களுக்கு அவ்வாய்ப்பை ஏற்படுத்தித் தர திராவிட இயக்கமும் தந்தை பெரியாரும் நடத்திய போராட்டங்கள் பல. 

man in worryசமூக சமத்துவத்திற்கான விதையை இந்த மண்ணில் ஊன்றியது நீதிக்கட்சி. நீதிக்கட்சி ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோதுதான் வகுப்புரிமை ஆணை பிறப்பிக்கப்பட்டு, சமூக நீதிக்கான வாசல் முதன் முதலில் திறக்கப்பட்டது. 

சென்னைப் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம் படிப்பதற்குத்தான் வழி இருந்ததே தவிர, தமிழ் படிக்கக் கதவு அடைக்கப்பட்டது. நீதிக் கட்சிப் பெரியவர்கள் ஆர்.வெங்கடரத்தினம் நாயுடு, டி.என்.சிவஞானம் பிள்ளை, எஸ்.முத்தையா முதலியார், டாக்டர் ஏ.இலட்சுமணசாமி முதலியார் போன்றோர் போராடிப் போராடித்தான் சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் மொழி கற்பிக்கப்படுவதற்கு வழிவகுத்தனர். 

நீதிக் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு ஆகிய தளங்களில் சமூக நீதிப் பார்வையோடு பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதில் முக்கியமான ஒன்று மருத்துவக் கல்வி. நீதிக் கட்சி ஆட்சிக்கு வருவதற்கு முன்புவரை சமஸ்கிருதம் தெரிந்தால் மட்டும்தான் மருத்துவம் படிக்க இயலும். சமஸ்கிருதம் யாருக்கெல்லாம் தெரிந்திருக்கும் என்று நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்த நிலையைப் பனகல் அரசர் தகர்த்தெறிந்தார்.

சென்னையில் இந்திய மருத்துவக் கல்லூரி உருவானது. அனைவரும் மருத்துவராவதற்கான வாய்ப்பு ஏற்பட்டது. 

தலைவர் கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சியில் கல்வி, வேலைவாய்ப்பில் அதுவரை 31% ஆக இருந்த இடஒதுக்கீடு 49% ஆக உயர்த்தப்பட்டது. அது பின்னர் 69% ஆகவும் உயர்த்தப்பட்டது. 

தந்தை பெரியார் ஒரு கூட்டத்தில் பேசும் போது "தாழ்த்தப்பட்ட மக்களை சட்டமன்றத்தில் பார்த்துவிட்டேன். ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளாகப் பார்த்துவிட்டேன். ஆனால் 110 ஆண்டுகால வரலாறு கொண்ட சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு தாழ்த்தப்பட்டவர் கூட நீதிபதியாக இல்லையே”

என்று தன்னுடைய வேதனையை வெளிப்படுத்தினார். பெரியாரின் கருத்தை கவனத்தில் கொண்டு அன்றைய முதல்வர் தலைவர் கலைஞர் அந்த வாரத்திலேயே மாவட்ட நீதிபதியாக இருந்த ஏ.வரதராஜன் அவர்களுக்குப் பதவி உயர்வு வழங்கிச் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக்கினார். இந்தியாவிலேயே உயர் நீதிமன்ற நீதிபதியான முதல் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் இவர்தான். அவரே பின்னர் உச்ச நீதிமன்றத்திலும் முதல் பட்டியலினத்தைச் சேர்ந்த நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார். 

திமுக 2006-ம் ஆண்டு ஐந்தாவது முறையாக ஆட்சிக்கு வந்தவுடன் பின் தங்கிய கிராமப்புற மாணவர்களுக்கும், நகர்ப்புற மாணவர்களுக்குமிடையே உள்ள வேறுபாட்டைக் களைந்திடவும், கல்வி கற்பதில் சமமான வாய்ப்புகளை உருவாக்கிச் சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் சமச்சீர்க் கல்வியை அறிமுகப்படுத்தியதோடு மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட தொழிற்கல்லூரிகளில் சேர்வதற்கு, அதுவரை கட்டாயமாக இருந்த நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்து சட்டம் இயற்றினார் அன்றைய முதல்வர் தலைவர் கலைஞர். 

ஆனால் இன்றைக்கு நிலை என்ன?

நீட் எனப்படும் நுழைவுத் தேர்வினால் ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவு சிதைக்கப்பட்டுள்ளது. 

பல ஆண்டுகளாகப் பணியில் உள்ள ஆசிரியர்களை, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை எனக் கூறி விளக்கம் கேட்கிறது கல்வித்துறை. இன்னொரு பக்கம் நீதிபதிகள் தகுதித் தேர்வில் யாரும் தேர்ச்சி பெற முடியாத வகையில் கேள்வித்தாள் கடினமாக தயாரிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு. 

நீதிக் கட்சியும் திராவிட இயக்கங்களும் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பெற்றுத் தந்த உரிமைகளைப் பறித்திடவே நுழைவுத் தேர்வும் தகுதித் தேர்வும்.

Pin It