periyar 509சுயமரியாதைச் சங்கத்தின் தலைவர் உயர் திரு. று.ஞ.ஹ. சௌந்திர பாண்டியன் அவர்கள் ராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவர் பதவியை க்ஷண நேரத்தில் ராஜினாமா செய்து உண்மைச் சுயமரியாதைக்கு உதாரண மாய் விளங்கிவிட்டார்.

திரு. பாண்டியன் அவர்கள் அந்த ஸ்தானத்தை ஒரு போதும் விரும்பினதேயில்லை. அவரது நண்பர்களின் வலியுறுத்தலுக் காகவும், ஒரு கொள்கைக்காகவும் அதாவது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நன்மை செய்வதற்காகவுமே அதை ஒரு ஆயுதமாக ஒப்புக் கொண்டது முதல் அந்த வேலையை மிக்க நீதியுடனும், பொறுப்புடனும், சுயமரியாதையுடனும் யாருடைய தயவு தாட்சண்யத்திற்கும் கட்டுப்படாமல், தனக்குச் சரியென்று தோன்றியபடி நடந்து வந்தார்.

முக்கியமாய் ஒடுக்கப்பட்ட சமூகத்தாருக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தாருக்கும் தன்னால் கூடியவரையில் அதன் மூலம் நன்மை செய்து வந்தார். பணக்காரர் ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் அதிகாரத்தையும், சலுகையையும் பிரயோகித்து வந்தார்.

பணக்காரர்கள் குற்றத்தை எடுத்துச் சொல்லுவதிலும், அவர்களின் பணத்திமிரான காரியங்களைக் காண்பதிலும், சிறிதும் பின் வாங்காது ஜாதித் திமிர்காரரைக் கண்டிப்பது போலவே தைரியமாய் கண்டித்து நட வடிக்கை நடத்தி வந்ததோடு அவர்களுக்கு அடிக்கடி புத்தி புகட்டியும் வந்தார். அப்பதவியின் மூலம் சுயமரியாதைக் கொள்கையை பல விஷயங்களில் நடை முறையில் நடத்திக் காட்டினார்.

தனக்கென்று வேறு தொழில் ஒன்றும் வைத்துக் கொள்ளாமல் தனது முழு நேரத்தையும் அதிலேயே செலுத்தி வந்தார். இவை மாத்திர மல்லாமல் எந்த நிமிஷத்திலும் “நாளைக்கும் அந்த வேலையில் இருக்க வேண்டும்” என்றாவது மறுபடியும் அதை அடைய வேண்டு மென்றாவது கருதாமல் ஒவ்வொரு நிமிஷமும் அந்தப் பதவியை அலட்சியமாய் கருதிக் கொண்டே நடுநிலையிலிருந்து பிசகாமல் தான் செய்ய வேண்டிய காரியங்களை துணிவுடன் செய்து வந்தார்.

(இவ்வளவு காரியங்களும் சர்க்கார் நியமனத்தின் மூலம் அப்பதவி கிடைத்ததினாலேயே தான் செய்ய முடிந்தது என்பதையும் குறிப்பிட்டு விடுகின்றோம். ஏனெனில் தேர்தல் மூலம் பதவி பெற்றிருந்தால், அங்கத் தினர்களுக்கு விலை கொடுத்தோ, வியாபாரம் பேசியோ அடிமைப்பட்டோ அடைந்தி ருக்க வேண்டுமாதலால் இவ்வளவு சுயேச்சையோடும், சுயமரியாதை யோடும், நாணயத்தோடும், நீதியோடும் இருந்திருக்கவே முடியாது)

இப்படிப் பட்ட ஒரு பெருமையும் நீதியும் வாய்ந்த கனவானின் நிர்வாகம் சிலருக் காவது தங்கள் நம்பிக்கைக்கு பாத்திரமில்லாமல் போவதில் ஆச்சரிய மொன்றுமில்லை. அதுமாத்திரமல்லாமல் பார்ப்பனரல்லாதார் இயக்க அரசியல் வானம் கருத்து அடித்த சண்டமாருதத்தால் பொதுக் கட்டுப்பாடு நாணயம் ஆகியவைகள் சின்னாபின்னப்பட நேர்ந்து.

சுயநலமும், பேராசையும் நாட்டில் தாண்டவமாடியதின் பயனாய் நடந்த நிகழ்ச்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானங்களுக்கு அதிகமான தலைவிரி கோலம் ஏற்பட்டு அதைச் சுலபமாய் யாரும் கையாடும்படி செய்து விட்டது.

ஆகவே அது உசிதா உசிதமில்லாமல் கையாடப்படும்படியாக ஆனதும் அதிசயமல்ல. இந்த நிலையில் சிலர் ராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவர் மீது அதை பிரயோகிக்கக் கருதி அது வெளிப்பட்டால் தங்க ளுக்கு ஆமோதிக்கவும், ஆதரிக்கவும் கூட நபர்கள் கிடையாதென நினைத்து வெகு பத்திரமாக இரகசியத்திலேயே ஏற்பாடு செய்து திடீரென்று கொண்டு வந்திருப்பதாகத் தெரிகின்றது.

இத் தீர்மானம் வருமென்று தெரிந்திருந்தால், உடனே முன்னமேயே ராஜினாமா செய்திருப்பார். வெறும் மந்திரி சம்மதமான கட்சி காரணமாய் இத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தவிர திரு. பாண்டியன் அவர்கள் நிர்வாகத்தைப் பற்றி சிறிதாவது அதிர்ப்தி அடைந்து அதனால் கொண்டு வரப்பட்டது என்று யாராலும் சொல்லமுடியாது. அவரது நிர்வாகத்தில் யாரும் எந்தச் சமயமும் மீட்டிங்கில் அதிர்ப்தி பட்டதாக காட்டினதே கிடையாது.

உதாரணமாக சமீபத்தில் ராமநாதபுரம் ஜில்லா கலெக்டர் திரு. மெக்வீன் அவர்கள் மீட்டிங்கில் ஒரு காரியத்தில் பிரசிடெண்டின் நடவடிக் கைக்கு அதிர்ப்தி காட்டி ஒரு தீர்மானம் கொண்டு வந்தபோது, அதை ஆதரிக்கவோ ஆமோதிக்கவோ கூட அந்த கூட்டத்தில் ஒரு மெம்பரும் இல்லை. ஜில்லா கலெக்ட்டரை அனுசரித்துப் பேசக் கூட ஆளில்லை.

இது வரை எந்தப் பத்திரிகைகளாவது அவரது நிர்வாகத்தை ஆnக்ஷபித்தோ, அதிர்ப்தி காட்டியோ அல்லது கட்சிவாதம் நடந்ததாகவாவது காட்டியோ ஒரு வரியும் எழுதப்பட்டதாக சொல்ல முடியாது. அவர் நிர்வாக நேர்மைக்கு ஒரு சிறிய உதாரணம் வேண்டுமானால் ஒன்றைக் காட்டுவோம்.

அதாவது “எந்த மோட்டார் பஸ் காரராவது தீண்டப்படாத மக்கள் என்பவரை பஸ்ஸில் ஏற்றிச் செல்ல மறுத்தால் அந்த பஸ் லைசென்ஸ் கேன்சில் செய்யப் படும்” என்று * உத்திரவு போட்டார்.

பள்ளிக் கூட விஷயங்களில் தாழ்த்தப்பட்ட மக்களைச் சேர்க்காத பள்ளிக்கூட உபாத்தியாயர்களையெல்லாம் மாற்றியும், தண்டித்தும் சர்வ சாதாரணமாக எல்லாப் பள்ளிக் கூடங்களிலும் யாரும் படிக்கும் படியாய் செய்தார்.

நாட்டுக் கோட்டை நகரத்தார் விஷயங்களில் பணக்காரர்களை விட சாதாரண மக்களிடமே அதிக நேசம் வைத்தும் சீர்திருத்த வாலிப உலகத்திற்கு உர்ச்சாகத்தை தந்து அவ்வகுப்பில் அநேகருக்கு “பணமே எல்லாம் செய்யவல்லது” என்கின்ற உணர்ச்சியை மாற்றி, அன்பைப் பெருக்கி வந்தார்.

வைதீகர்களிடமும் பணக்காரர்களிடமும் பேசும் நேரமெல்லாம் தனக்கு மிக்க கஷ்டமாக இருப்பதாகவே இருக்கும். வாலிபர்களிடமும், சாதாரண மக்களிடமும், தாழ்த்தப்பட்ட மக்க ளிடமும் பேசும் நேரத்தையே மிக்க உர்ச்சாகமாகக் கருதுவார்.

இப்படிப் பட்ட குணமுள்ள ஆட்சியில் வைதீகர்களுக்கும், செல்வந்தர்களுக் கும், பிரபுத்தனக்காரருக்கும் அதிருப்தி ஏற்பட்டதும் நம்பிக்கை இல்லை என்று சொல்ல வேண்டி வந்ததும் திரு. பாண்டியன் அவர்களுக்கு ஒரு நற்சாட்சிப் பத்திரமாகும்.

இதன் மூலம் மற்ற மெம்பர்கள் போர்டிலிருந்து சீர்திருத்த உலகத்திற்கும், சுயமரியாதை உலகத்திற்கும், சமதர்ம உலகத்திற்கும் தொண்டு செய்ய திரு. பாண்டியனை உதவியது ஒரு பெரிய உபகாரமே யாகும். ஆதலால் இந்த நிலை ஏற்பட்டதற்கு நாம் உண்மையாகவே மகிழ்ச்சியடைகின்றோம்.

திரு. பாண்டியன் அவர்கள் பெரிய தனவந்தர். அதாவது வருஷம் 50 ஆயிரம் ரூபாய் முதல் லட்ச ரூபாய் வரை வருவாயுள்ள செல்வக் குடும் பத்தைச் சேர்ந்தவர். ஆகவே அவர் தனக்கு பணமில்லாததால் பணக்காரரை வெறுத்தார் என்று யாரும் சொல்லி விட முடியாது.

திரு. பாண்டியன் அவர்கள் ராமநாதபுரம் ஜில்லா போர்டுத் தலைமைப் பதவியில் பட்டுக் கொண்டதாலும், மற்றும் அரசியல் தொல்லை யாலும் சுயமரியாதை இயக்கத்திற்கு நஷ்டம் ஏற்பட்டதே தவிர, அதாவது அவர் வெளியில் இருந்தால் எவ்வளவு பலன் ஏற்பட்டு இருக்குமோ, அவ்வளவு பலன் ஏற்பட்டது என்று சொல்ல முடியாது.

இது நிற்க, ஸ்தல ஸ்தாபன சுயாட்சி என்பதும், சீர்திருத்தம் என்பதும், அரசியல் சுதந்திரம் என்பதும் நாட்டிற்கும், பாமர மக்களுக்கு ஏழை மக்க ளுக்கு, தாழ்த்தப்பட்டவர்களுக்கு எவ்வளவு தூரம் பயனளிக்கக் கூடியதா யிருக்கின்றது என்பதை பொது ஜனங்கள் அறிய இது ஒரு சந்தர்ப்பமாக ஏற்பட்டது மற்றொரு விதத்தில் மகிழ்ச்சியடையத் தக்கதாகும்.

ஆகவே இன்றைய தினம் இந்நாட்டில் பொதுஜனங்களுக்கு பிரதிநிதியாக பிரபுத்தனமும், வைதீகமும்தான் இருக்க யோக்கியதையுடைய அரசியல் சுதந்திரங்கள் இருக்கின்றனவே ஒழிய உண்மையான மக்களின் பிரதிநிதித்துவத்திற்கு எவ்வித சாதனம் இல்லை என்பது உறுதியாகிவிட்டது.

இது தவிர ஸ்தல ஸ்தாபன நிர்வாகங்கள் இந்த மாதிரி காரணங்களில் அடிக்கடி மாறி மாறித் தொல்லையடையாமல் ஒரே ரீதியில் நடைபெற வேண்டுமானால் ஸ்தல ஸ்தாபனங்களுக்கு சுதந்திரமாய் நடக்கக்கூடிய ஒரு நிர்வாக உத்தியோகஸ்தர் இருப்பாரானால் இம்மாதிரிக் காரியங்களால் கொள்கைகள் மாறுபடாமல் இருக்கலாம்.

ஆனால் இன்று சட்ட சபையிலும் ஸ்தல ஸ்தாபன நிர்வாகத் தலைமையிலும் ஒரே கனவான்கள் பெரிதும் இருப்பதால் அதை ஏற்படுத்த முடியவில்லை. ஆன போதிலும் இவை களுக்காக வெல்லாம் நம்பிக்கை இல்லாத் தீர்மானச் சட்டம் வேண்டாம் என்று நாம் சொல்ல வரவில்லை.

அது இருந்துதான் தீர வேண்டும். இன்றைய தினம் கக்ஷி பிரதிக்கக்ஷிகளால் மந்திரி போட்டிகளால், அரசியல் தகராருகளால் தான் இது வரை ³ சட்டம் பிரயோகிக்கப்பட்டிருக்கின்றதே தவிர நிர்வாகக் குற்றத்திற்குத் திறமைக்கு பிரயோகிக்கப் படவில்லை.

இம்மாதிரி காரியங்களால் உடனே தலைமை ஸ்தானம் காலிசெய்யப்பட வேண்டியதும் ஒரு விதத்தில் அவசியமாகும்.. இல்லாத வரை இக் கக்ஷிகள் நிர்வாகத்திற்குள் புகுந்து, ஸ்தாபனங்களை மிக்க கேவலமாக ஆக்கி விடும்.

இந்தக் குறிப்பிட்ட சம்பவம் கூட சுயமரியாதை உணர்ச்சியினால் ஏற்பட்ட தாகும். ஏனெனில் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு போதிய மெஜார்ட்டி இல்லை என்பது உறுதியானாலும் இம்மாதிரி மனப்பான்மை உள்ள இடத்தில் இனி இருப்பது கொஞ்சமும் சுயமரியாதை அல்ல என்றே விலகி விட்டார்.

ஆனால் மற்ற சம்பவங்களில் மெஜாரிட்டி மெம்பர்கள் எந்தக் காரணத்தை கொண்டானாலும், ஒருவரை வேண்டியதில்லை என்று கருதிவிட்டால் அவர் மறுபடியும் அதிலேயே இருக்கும்படியாக இருந்தால் அந்த மெஜாரிட்டி மெம்பர்கள் தொல்லையால் நிர்வாகம் பாதிக்கப்படாதா என்று கேட்கின்றோம்.

மெஜாரிட்டிக்கு விரோதமாய் உள்ளே இருந்து எப்படி யாருடைய தயவின் மீது சமாளித்துக் கொண்டிருந்தாலும் அது சுயமரியாதை அற்ற தன்மையோடு, நிர்வாகம் பாழ் என்றே சொல்லுவோம்.

பொதுவாக பதவிகள் அடையும் மார்க்கமும் மந்திரிகளாய் வரப்பட்டவர்கள் நிலையும் இன்று இருப்பது போலவே என்றும் இருக்குமேயானால் கீழ் நிர்வாகங்களுக்கு எவ்வளவு பந்தோபஸ்து ஏற்படுத்தினாலும் இப்படித்தான் நடக்கும்.

சாதாரணமாக மந்திரிகளுக்குக் கூட இந்த நிபந்தனைகள் தானே இருக்கின்றது. அதாவது நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்தால் விட்டு விட்டுப் போய் விட வேண்டும் என்பதாகத் தானே இருக்கின்றது. ஆகவே மேலுள்ளது போலவே தான் கீழ் இருப்பதும் இருக்கின்றது. ஆதலின் நாம் இதை மாத்திரம் குற்றம் சொல்வது ஒழுங்காகாது.

இவைகளையெல்லாம் நினைப்பதற்கு முன் ஜனநாயகம் நல்லதா, தனி நாயகம் நல்லதா, அல்லது பஞ்சாயத்து குடிஅரசு நாயகம் நல்லதா, என்று முடிவு செய்வதில் தான் உண்மை நன்மை கிடைக்க முயர்ச்சி செய்ய முடியும்.

(குடி அரசு - தலையங்கம் - 28.12.1930)

Pin It