பெரியாரும் பெரியார் இயக்கமும் இந்துக் கடவுள்களை ‘புண்படுத்துகிறார்கள்’ என்று பார்ப்பனர்கள், சங் பரிவாரங்கள் ஓயாது கூக்குரலிடுவது வழக்கமாகி விட்டது.

அவர்களிடம் நாம் சில கேள்விகளை முன் வைக்கிறோம். “பாரத தேசம் இந்துக்கள் தேசம்; இந்துக்கள் மட்டுமே இந்த மண்ணின் குழந்தைகள்; நாம் துவக்கமே இல்லாதவர்கள்; நமது மூலாதாரம் எது என்பது சரித்திர மேதைகளுக்கே தெரியவில்லை” - இதுதான் சங்பரிவாரங் களின் ‘இலட்சியம்’; ‘கொள்கை’.

இது உண்மை என்றால் நமது இந்துக் கடவுள்கள் ஏன் மண்ணின் குழந்தைகளான சக இந்துக்களைக் கொல்ல வேண்டும்? ‘இந்து’க்களை அவதாரம் எடுத்து வந்து ஏன் அழிக்க வேண்டும்?

• இராமன் - இராவணனை அழிக்கவே அவதாரம் எடுத்தான் என்கிறார்கள்! இராவணன் - சங்பரிவார் கொள்கைப்படி - இந்த மண்ணின் குழந்தையான இந்து தானே?

• இராமன் தன்னுடைய அரசாட்சியில் ‘சம்பூகன்’ என்ற ‘இந்து’ சூத்திரன், ‘பிராமணர்’களைப் புறக்கணித்து நேரடியாகவே கடவுளை வணங்கினான் என்பதற்காக ‘சம்பூகனை’ வெட்டி மரணதண்டனை வழங்கியதாக வால்மீகி இராமாயணம் கூறுகிறது. - சம்பூகன் யார்? அவனும் இந்து தானே?

• நரகாசுரன் என்ற அசுரன், ‘தேவர்’களை எதிர்த்தான் என்பதற்காக மகாவிஷ்ணு அவதாரம் எடுத்து வந்து நரகாரசுனை அழித்தான் என்றும், அந்த அழிப்பை தீபாவளியாகக் கொண்டாடி மகிழுங்கள் என்றும் கூறுகிறீர்களே! நரகாசுரன் யார்? அவனும் இந்து தானே? ஓர் இந்துவை இந்துக் கடவுள் கொன்று ஒழித்ததை விழாவாகக் கொண்டாடச் சொல்கிறீர்களே! இதற்குப் பெயர் என்ன? இந்து படுகொலை நாள் கொண்டாட்ட திருவிழா நாளா?

• ‘தேவர்’களை எதிர்த்த இரணியனை சிங்க உருவம் எடுத்து, நரசிம்ம அவதாரமாக வந்து மகாவிஷ்ணு கொன்றானே! அந்த இரணியன் யார்? அவனும் இந்து தானே? பாரதத் தாயின் புதல்வன் தானே?

• ஏகலைவன் கட்டை விரலை துரோணாச்சாரி குருதட்சணையாகக் கேட்டதாக மகாபாரதக் கதை கூறுகிறதே; ஏகலைவன் யார்? அவனும் ஒரு இந்து தானே? இந்துக் கடவுள் ஓர் இந்துவை முடமாக்கலாமா?

• பாண்டவர்களும் இந்துக்கள் தான்; கவுரவர்களும் இந்துக்கள் தான் - சங்பரிவார் வாதப்படி. இருவருக்குமிடையே யுத்தத்தைத் தூண்டி இந்துக்களின் ஒரு பெரும் “சத்திரிய”க் கூட்டம் செத்து மடியக் காரணமாக இருந்தானே பகவான் கிருஷ்ணன் - இது இந்துப் படுகொலை அல்லவா? கிருஷ்ணன் இந்துக் காவலனா?

• இந்துக் கடவுள்கள் ‘சம்ஹாரம்’ என்ற பெயரில் இந்துக் கடவுள்கள் அழித்தொழித்தது - சக ‘இந்து’க்களைத் தானே?

• காந்தி என்ற ‘இந்து’வை ‘கோட்சே’ என்ற ‘இந்து’ ஏன் சுட்டுக் கொன்றான்? இந்துக்கள் மீதான பாசமா?

- இந்துக் கடவுள்கள் எல்லாம் ‘சம்ஹாரம்’ - ‘அழித்தொழிப்பு’ வேலைகளைச் செய்தது எல்லாம் யாருக்கு எதிராக? முஸ்லிம்களுக்கு எதிராகவா? கிறித்தவர்களுக்கு எதிராகவா? சக இந்துக்களுக்கு எதிராகத் தானே!

இப்படி கடவுளின் பெயரால் நடந்த ‘இந்து’ ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான படுகொலைகளைத் தட்டிக் கேட்பது இந்து விரோதமா? அல்லது இந்துக்களை படுகொலை செய்தது இந்து விரோதமா?

பரிவாரங்களே, பார்ப்பனர்களே பதில் சொல்லுங்கள்!

Pin It