‘இராம ராஜ்யம்’ என்று காந்தியே கூறினாரே; அதைத் தானே நாங்கள் கூறுகிறோம் என்று பா.ஜ.க.வினர் சிலர் கூறுகிறார்கள். பா.ஜ.க. பேசும் இராஜ்யம், இந்து புராண நாயகன் ‘இராமன்’ அமைத்ததாக புராணங் களில் கூறப்படும் ‘இராஜ்யம்’. ஆனால் காந்தி கூறியது புராண கடவுளான ‘இராமராஜ்யம்’ அல்ல.
வழிபாடு கூட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு காந்தியே இதைத் தெளிவு படுத்தியிருக்கிறார்:
“Let no one commit the mistake of thinking that Rama Rajya means a rule of Hindus.” (1947ஆம் ஆண்டு பிப். 6ஆம் நாளில் காந்தி கூறியது; காந்தியார் நூல் தொகுப்பு)
தான் கூறும் இராமன் ஆட்சி ‘இந்துக்களின் ஆட்சி அல்ல’ என்று தெளிவுபடுத்துகிறார், காந்தி.
சரி, ‘இராம இராஜ்யம்’ எப்படி நடந்தது? வால்மீகி இராமாயணம் என்ன கூறுகிறது?
• ‘சம்பூகன்’ என்ற பழங்குடி ‘சூத்திரன்’, ‘வர்ணாஸ்ரமத்தை’ மீறுகிறான். கடவுளை நேரடியாக வணங்கும் உரிமை பிராமணர்களுக்கு மட்டுமே உண்டு என்பதை மீறி, கடவுளை நோக்கி தவமிருக்கிறான். ‘இராம இராஜ்யத்தில்’ அகால மரணங்கள் ஏதும் நடப்பதில்லை என்று கூறுகிறது வால்மீகி இராமாயணம். ஆனால், ‘சம்பூகன்’ வர்ணாஸ்ரம தர்மத்தை மீறியதால் ஒரு பிராமணப் பெண் வயிற்றில் உருவான கரு சிதைந்து, அகால மரணம் நிகழ்ந்து விட்டது என்று இராமனிடம், ‘பிராமணர்கள்’ முறை யிடுகிறார்கள். நாரதனோடு ஆலோசனை நடத்துகிறான் இராமன். உடனே உருவிய வாளோடு புறப்படுகிறான். ‘சம்பூகனிடம்’ விளக்கம்கூட கேட்கவில்லை. அவன் தலையை வெட்டி வீழ்த்துகிறான். உடனே தேவர்கள் ‘பூமாரி’ பொழிந் தார்களாம். ‘சூத்திரன்’ அவனுக்கு விதிக்கப்பட்ட தர்மத்தை மீறினால் ‘மரண தண்டனை’ என்பதே இராம ராஜ்ய நீதி. வால்மீகி இராமா யணத்திலுள்ள இந்த சம்பவத்தை தமிழில் எழுதிய கம்பன் ‘தமிழ்ச் சமூகம்’ இதை ஏற்காது என்பதால் திட்டமிட்டு தவிர்த்து விடுகிறான். ‘வால்மீகி’ இராமனை, அதாவது ‘ஒரிஜினல்’ வர்ணாஸ்ரம இராமனை தமிழ்நாடு ஏற்காது என்ற உண்மை கம்பனுக்கே தெரிந்திருக்கிறது. ஆனால் எடப்பாடி ஆட்சிக்குத்தான் உரைக்கவில்லை.
• இராமன் வனவாசம் போவதற்கு முன்பு, ‘நாட்டில் பிராமணர்களுக்கு எந்தக் குறையும் வராமல் பார்த்துக் கொள்’ என்று தம்பி பரதனுக்கு உபதேசம் செய்துவிட்டு, தன்னுடைய பொன் பொருள் ஆபரணங்களை யெல்லாம் ‘பிராமணர்’களுக்கு தானம் வழங்கி விட்டுத்தான் வனவாசம் போனான் - இதுதான் இராமராஜ்யம்.
• காட்டுக்கு தம்பி பரதன் தன்னைச் சந்திக்க வந்தபோது, “பிராமணர்கள் சுபிட்சமாக இருக்கிறார்களா? அவர்களுக்கு எந்தக் குறையும் வந்து விடக் கூடாது” என்று கவலையுடன் அறிவுறுத்துகிறான். ஏனைய வெகு மக்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை.
• வால்மீகி இராமாயணத்தை தமிழில் மொழி பெயர்த்தவர் சி.ஆர். சீனிவாச அய்யங்கார். அயோத்தியா காண்டம் 100ஆவது சருக்கம் - பரதனிடம் இராமன் நடத்திய விசாரணையை இவ்வாறு கூறுகிறார், அய்யங்கார்:
“பவுத்தன், சார்வாகன் (இவர்கள் வேதத்தை எதிர்த்தவர்கள்) முதலிய நாஸ்திகர்களுடன் பழகாமல் இருக் கிறாயா? .... அவர்கள் புராணங் களையும் தர்ம சாஸ்திரங்களையும் பெரியோர்களுடைய சம்பிரதாய பரம்பரைப்படி அர்த்தம் செய்யாமல், கேவலம் தர்க்கத்தைப் பிரயோகித்து, அவை இகத்திலும் பரத்திலும் பயனற்றவை என்று வாதிப்பவர்கள்; அவர்களை உள் நாட்டில் இருக்க விடாதே; (அதாவது அழித்துவிடு)” என்கிறான் இராமன். வேதங்களை எதிர்க்கும் நாத்திகர்களை அழித்து விட வேண்டும் - இதுதான் இராம ராஜ்யம்.
• பரதனிடம் மேலும் இராமன் கூறுகிறான்: “திருடனும் பவுத்தனும் ஒன்றே. பவுத்தனுக்கும் நாஸ்திகனுக்கும் பேதமில்லை.” (சுந்தரகாண்டம் 15ஆவது சருக்கம்) - அதனால்தான் பகுத்தறிவாளர்கள் இப்போதும் இராம பக்தர்களால் கொலை செய்யப்படுகிறார்கள்.
புத்த மார்க்கம் தோன்றிய பிறகு அதை வீழ்த்த பார்ப்பனர்களால் எழுதப்பட்டதே இராமாயணம் என்பதற்கு - இது ஒரு மறுக்க முடியாத சான்று என்று எடுத்துக் காட்டுகிறார் பெரியார்.
புத்தர்களையும் சிந்திப்பவர்களையும், பகுத்தறிவாளர்களையும் திருடன் என்பதுதான் இராமராஜ்யம்.
“இராமராஜ்யத்தில் பிராமணர்கள் - ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் -அவரவர்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளையும் விதிக்கப்பட்ட வேலைகளையும் ஒழுங்காகக் கடைபிடித்து அதில் திருப்தியடைந்து, கடவுளின் ஆசியைப் பெற்று வருகிறார்கள்” என்று பெருமையுடன் கூறுகிறது - வால்மீகி இராமாயணம். (6ஆவது சருக்கம்)
• காட்டிலிருந்து நாட்டுக்குத் திரும்பிய இராமன், சீதையின் கற்பை சந்தேகித்து, உண்மையான கற்பை நிரூபிக்க, தீயில் புகுந்து வெளியே வருமாறு உத்தரவிடுகிறான். சீதை தீயில் குதித்து கற்பை நிரூபித்தாள். ஆனால் தான் கற்புடையவனாக இருந்தேன் என்பதை இராமன் நிரூபிக்க தீயில் இறங்கவில்லை. ஆணுக்கு ஒரு நீதி; பெண்ணுக்கொரு நீதி இதுதான் இராமராஜ்யம்.
• இராமராஜ்யம் என்பது ‘வர்ணாஸ்ரம ராஜ்யம்’. வேத எதிர்ப்பாளர்களை அழித்து ஒழிப்பதே ராமராஜ்யத்தின் தர்மம்.
இந்த இராஜ்யத்தை அமைக்கத்தான் இப்போது யாத்திரை வருகிறார்கள். இதை மானமுள்ளவர்கள் அனுமதிப் பார்களா?