தமிழ்நாடு மாணவர் கழக சார்பில் “யார் தேச விரோதிகள்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னையில் திராவிடர் விடுதலைக் கழக தலைமை அலுவலகத்தில் 5.2.2017 அன்று மாலை நடைபெற்றது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையின் விரிவாக்கம். (சென்ற இதழ் தொடர்ச்சி)
மத நம்பிக்கைகள் உணர்வுகளோடு பிணைந்து கிடக்கின்றன. இந்த உணர்வுகளை மதவெறியாகக் கட்டமைக்கப்படுவது மிக மிக எளிது. பகுத்தறிவை மறுக்கும் வெற்று உணர்வுகள் அவ்வளவு ஆபத்தானவை. ‘நாம் எல்லோரும் இந்து; அதுவே நமக்குப் பெருமை அதுவே நமது அடையாளம்; அதுவே நமக்கான நாடு’ என்று பேசுவதும் உணர்வுகளைத் தூண்டி அதை வெறியாக மாற்றுவதும் தான் சங்பரிவார்களின் தொடர்ந்த வேலைத் திட்டமாக இருக்கிறது. அதற்காகவே அவர்கள் நிகழ்வுகளை திட்டமிட்டு உருவாக்கு கிறார்கள். இந்த உணர்வுகளை ஒரு முனைப் படுத்துவதற்கு ஒரு எதிரியை கட்டமைக்க வேண்டிய அவசியம் வந்துவிடுகிறது. இஸ்லாமியர்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள். பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிரி நாடு என்ற இவர்களின் முழக்கம், இந்தப் பின்னணியிலிருந்துதான் உருவாகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
பயங்கரவாதிகளை நாட்டில் நடமாட அனுமதிக்க மாட்டோம் என்று வாய்க் கொழுப்புடன் பேசி வரும் பார்ப்பன ராஜாக்கள், பாபர் மசூதி இடித்துத் தள்ளியதை தேச பக்தி நடவடிக்கை என்று கூறுகிறார்களா? பாபர் மசூதியை ‘அவமானச் சின்னம்’ என்று இறுமாப்புடன் பேசினார்களே அதற்குப் பெயர்தான் பேச பக்தியா?
1992ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ஆம் தேதி பாபர் மசூதியை இந்த வன்முறை காவிக் கும்பல் இடித்துத் தள்ளியது. அப்போது உ.பி.யில் முதல்வராக இருந்தவர் கல்யாண் சிங் என்ற பா.ஜ.க.காரர்தான். “எங்களை கரசேவை நடத்த அனுமதியுங்கள்; மசூதியின் பாதுகாப்புக்கு முழு உத்தரவாதத்தையும் உங்களுக்கு தருகிறோம்” என்று ஒரு மாநிலத்தின் முதலமைச்சரே அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் உறுதி மொழி தந்தார். உறுதிமொழியை காப்பாற்றினார்களா? இதைவிட சட்டவிரோதம், தேச விரோதம் வேறு இருக்க முடியுமா? பாபர் மசூதியை இடித்துத் தள்ளிவிட்டு என்ன சொன்னார்கள்? ‘இது தன்னெழுச்சியாக நடந்தது; இந்துக்களின் கோபத்தின் வெளிப்பாடு’ என்று இந்த கொடூரமான வன்முறையை நியாயப்படுத்தினார்கள்.
பாபர் மசூதியை ராமன் பிறந்த இடமாக மாற்றிக் காட்டுவதற்கு இவர்கள் பல ‘மாஜிக்’ வேலைகளை செய்ததையும் இளைய சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டும். இந்திய ‘சுதந்திரம்’ அறிவிக்கப்பட்ட அடுத்த இரண்டு ஆண்டுகளிலேயே இந்த ‘தில்லுமுல்லுகள்’ தொடங்கிவிட்டன. அப்போது பாகிஸ்தான் பிரிவினை நடந்து முடிந்துவிட்டது. எல்லைப் பகுதியில் மதக் கலவரங்கள் மோசமாக நடந்து கொண்டிருந்தன. அந்த சூழ்நிலையில் ‘அகில பாரத இராமாயண மகாசபை’ எனும் அமைப்பு, பாபர் மசூதியின் வாயிலில் 9 நாட்கள் இராமாயண ‘உபன்யாசகங்களை’ நடத்தி, ‘இராமன் பட்டா பிஷேகம்’ கதையையும் நடத்தி முடித்தாகி விட்டது.
இராமாயண ‘உபன்யாசங்’களைத் தொடர்ந்து பாகவதர்களும் தீட்சதர்களும் அய்யங்கார்களும் ஒரு தொழிலாகவே நாடு முழுதும் நடத்தி வந்தார்கள். பார்ப்பனர்களுக்கு ஏதாவது ஒரு நெருக்கடி ஏற்பட்டால், உடனே இராமாயணத்தை எடுத்துப் படியுங்கள் என்று இராஜகோபலாச்சாரி கூறினார். அவர் ‘சக்கரவர்த்தி திருமகள்’ என்று ‘கல்கி’ பத்திரிகையிலேயே இராமாயணப் பெருமைகளை சீதையை முன் வைத்து ஒரு தொடரையும் எழுதினார். ‘இராஜாஜி’ ஒவ்வொரு வாரமும் எழுதிய தொடருக்கு உடனுக்குடனேயே தனது ‘முரசொலி’ நாளேட்டில் ‘மூக்காஜி’ என்ற புனைப் பெயரில் கலைஞர் கருணாநிதி மறுப்புத் தொடரை எழுதினார். இது வரலாறு.
அதேபோலத்தான் மசூதி வாசலிலும், ‘இராமாயண உபன்யாசங்களை’ 9 நாள் நடத்தி முடித்தவுடன், இறுதி நாளன்று இரவில் ‘கிளைமாக்ஸ் காட்சி’ ஒன்று நடந்தது.
“1949ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி விடியற்காலை பாபர் மசூதியின் மய்ய மண்டபத்துக்குள் ‘இராமன், சீதை சிலைகள்’ திடீரென்று காட்சி அளித்தன; இராம உபன்யாசத்தைக் கேட்க வந்த இராமனும் சீதையும் சிலையாக அப்படியே மசூதிக்குள் நுழைந்து விட்டார்கள்” என்று சொன்னால் கடைந்தெடுத்த மடையன்கூட அந்த கற்பனையை நம்புவானா? ஆனால், ஆர்.எஸ்.எஸ். அப்படித் தான் கூறியது.
அதன் அதிகாரபூர்வ பத்திரிகையான ‘ஆர்கனைசர்’ இப்படித்தான் பிறகு எழுதியது.
“வரலாற்று முக்கியத்துவம் பெற்ற டிசம்பர் 23 அன்று காலை ஸ்ரீஇராமச்சந்திரன், சீதாதேவி ஆகியோரின் சிலைகள் ‘ஜென்மஸ்தான’த்தில் மாயமாகத் தோன்றின” (‘ஆர்கனைசர்’ மார்ச் 29, 1987).
அது என்ன ஜென்மஸ்தானம்! அதாவது அவர்கள் பிறந்த இடமாம். அது மசூதிக்குள் தான் இருந்ததாம். கடவுள்கள் பிறக்கிறார்களா? அப்படியானால் அவர்களுக்கு இறப்பு உண்டா? வால்மீகி இராமாயணம், இராமன் குதிரைக்குப் பிறந்தான் என்கிறது. இவர்கள் இராமன் ஒரு அவதாரம் என்று வேறு கூறுகிறார்கள். அவதாரம் எடுத்த கடவுள், தனது பிறப்பிடத்தில் மசூதி கட்ட ஏன் அனுமதித்தது? இப்படி எத்தனையோ கேள்விகளை கேட்கலாம். உண்மையில் என்ன நடந்தது என்பதை அந்த பைசாபாத் மாவட்டத்தின் ஆட்சித் தலைவராக இருந்த கே.கே.நய்யார் அன்றைய உ.பி. முதல்வராக இருந்தவருக்கு கடிதமாகவே எழுதி விட்டார்.
“மசூதியில் ஒருவரும் இல்லாத நேரத்தில் சில இந்துக்கள் அங்கு புகுந்து சிலைகளை வைத்து விட்டனர். அப்போது 15 காவல் துறையினர் இருந்தும் இதைத் தடுக்கவில்லை” என்று எழுதினார். அது அத்துமீறிய ஆக்கிரமிப்பு அல்லவா?
பாபர் மசூதிக்குள் நடந்த அதே ஆக்கிரமிப்புதான் இப்போது கோயம்புத்தூர் வெள்ளியங்கிரி வனப் பகுதியிலும் நடக்கிறது. ‘ஆதியோகி சிவன்’ சிலை அத்துமீறி உரிய அனுமதியின்றி நிறுவப்பட்டு, அது ஒரு நாட்டின் பிரதமராலும் திறக்கப்பட்டிருக்கிறது. அந்தக் காலத்தில் விட்ட புருடாவைப்போல், “ஈஷா யோக தியான மண்டபத்துக்கு அருகே ஆதியோகி சிவன் தானாகவே தோன்றினான்” என்று கதைவிட முடியாது. காதில் பூ சுற்றாதே என்று மக்களே பதில் சொல்லி விடுவார்கள். இதுவும்கூட காலத்தின் போக்கில் உருவான சிந்தனை மாற்றம்தான். எனவேதான் பழைய கட்டுக்கதைகள் இனி விலை போகாது என்று மூட்டைக் கட்டி வைத்துவிட்டு, “இனி கடவுளிடம் கோரிக்கைளை வைத்து பக்தர்கள் வரக்கூடாது; உங்களுக்குள்ளேயே மாற்றத்தை உருவாக்கிக் கொள்ள வாருங்கள்; யோகாவில் தான் அது கிடைக்கும்; அந்த யோகாவை உருவாக்கியவர் தான் ஆதியோகி” என்று சந்தையில் புதிய பக்தி தயாரிப்புப் பொருளை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள் ஜத்குருக்கள்.
அது இருக்கட்டும்; மீண்டும் இந்த தேசபக்தர்கள் கடப்பாறை தூக்கிய கதைக்கு வருவோம்.
1992 டிசம்பர் 6ஆம் தேதி மசூதி இடிக்கப் பட்டவுடன் நாடு முழுதும் கொந்தளித்தது. வேறு வழியின்றி அதன் காரணமாக அடுத்த 10 நாட்களிலேயே விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்தார்கள். லிபரான் என்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்டது ஆணையம். அந்த ஆணையம் முறையாக விசாரணை நடத்தவே பா.ஜ.க. ஆட்சியினர் அனுமதிக்கவில்லை. முட்டுக்கட்டைப் போட்டு வந்தார்கள். நீங்கள் நம்பமாட்டீர்கள், 48 முறை அந்த விசாரணை ஆணையத்தின் காலவரம்பு நீட்டிக்கப்பட்டுக் கொண்டே வந்தது. 17 ஆண்டு காலத்துக்குப் பிறகு, 2009ஆம் ஆண்டில்தான் நாடு முழுதும் கடும் எதிர்ப்புகள் வந்த நிலையில் அந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்கள்.
அந்த அறிக்கையின் ஒரு பகுதியை மட்டும் படித்துக் காட்டுகிறேன். இந்த தேசபக்த கும்பலின் உண்மை முகத்தைப் புரிந்து கொள்ள இந்த அறிக்கையே போதும்.
“பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவம் என்பது கரசேவகர்களால் தன்னெழுச்சியாக ஏற்பட்ட கோபம் அல்லது உணர்ச்சியின் வடிவம் விளைவாக ஏற்பட்டது என்று சில அரசியல், சமூக அமைப்புகளின் தலைவர்கள் கூறுவதை ஏற்க முடியாது. மசூதி தகர்க்கப்பட்ட விதம், மசூதியை தகர்க்கும் வேலையை மேற்கொண்ட கரசேவகர்களின் எண்ணிக்கை மசூதியின் மேல் மாடத்துக்குச் சென்ற கரசேவகர்கள், தங்கள் முகங்களை மூடிக் கொண்டு, தங்கள் அடையாளத்தை மறைத்துக் கொண்ட விதம், மாடத்துக்குள்ளிருந்த சிலைகள் மற்றும் பணப் பெட்டிகளை நீக்கியுள்ளமை, பின்னர் அவற்றை புதிதாக கட்டப்பட்ட கோயிலில் வைத்துள்ளமை (make shift temple) மசூதி இடிப்புக்காகப் பயன்படுத்தப்பட்ட கருவிகள் மற்றும் பொருள்கள், மிக அவசரகதியில் (தற்காலிக) கோயில் கட்டப்பட்டிருத்தல் ஆகிய அனைத்தையும் பரிசீலனை செய்து பார்க்கும் போது மசூதி இடிப்பு மிகவும் துல்லியமான தயாரிப்புப் பணிகளுக்குப் பின்னரும் நன்கு திட்டமிட்ட பின்னரும் மேற்கொள்ளப்பட்ட ஒன்று என்றே முடிவுக்கு வரவேண்டி யிருக்கிறது”
இந்த தேசபக்த கும்பல் முகத்தை மூடிக்கொண்டு கடப்பாறைகளைத் தூக்கிக் கொண்டுபோய் இடித்திருக்கிறது. இதைவிட கோழைத்தனம் வேறு இருக்க முடியுமா? இந்தத் தாக்குதல் நன்கு திட்ட மிடப்பட்டது என்கிறது ஆணையத்தின் அறிக்கை.
தொலைக்காட்சியில் அமர்ந்து கொண்டு அணுஉலை ஆபத்துக்குப் போராடியவர்களையும் மத வெறியை எதிர்ப்பவர்களையும் திமிர்ப் பார்வையோடு ஏளனத்தோடு தேச விரோதிகள் என்று குற்றம் சாட்டும் பார்ப்பனர்களைக் கேட்கிறோம்; இந்த விசாரணை அறிக்கைக்கு, என்னப்பா, உமது பதில்?
இந்த மசூதியை இடித்ததற்குப் பிறகு உ.பி. பா.ஜ.க. முதல்வர் கல்யாண்சிங் கல்கத்தாவிலே போய் என்ன பேசினார், தெரியுமா?
“மசூதியை இடிக்கும் வேலையை ஒப்பந்தக்காரர்களிடம் கொடுத்திருந்தால் அவர்கள் இடிப்பதற்கு வெகுநாட்கள் எடுத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் எங்களுடைய கரசேவகர்களோ எங்களுடைய நோக்கத்தை 5 மணி நேரத்திலேயே செய்து முடித்து விட்டார்கள்.”
எப்படிப்பட்ட திமிர் பேச்சு! உடனே இதற் கெல்லாம் என்ன ஆதாரம் என்று இங்கே சில காவிக் கும்பல் எதிர் கேள்வி கேட்கும். ‘அவசரப்படாதே, ஆதாரத்தோடு தான் கூறுகிறோம்’ என்பதே நமது பதில். அப்போது மேற்கு வங்க முதலமைச்சராக இருந்த ஜோதிபாசு, இந்த வெறி பிடித்த கல்யாண்சிங் பேச்சை வீடியோ பதிவுடன் லிபரன் ஆணையத்துக்கு மேற்கு வங்க அரசின் சார்பில் ஒரு ஆவணமாகவே சமர்ப்பித்தார். ஆணையத்தின் சாட்சியங்களில் ஒன்றாக அது ஏற்கப்பட்டது.
தேச பக்த கொழுந்துகளே! இந்த வராறுகளை எல்லாம் வீதிக்கு வீதி இனி இளைய சமுதாயம் பேசத்தான் போகிறது! அதைப் பார்க்கத்தான் போகிறீர்கள்!
(அடுத்த இதழில் முடியும்)