அயோத்தியில் இராமன் பிறந்தான் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், இன்றைய அயோத்தியில், அவுரங்கசிப் காலத்தில் கட்டப்பட்ட பாபர் மசூதியை இடித்துவிட்டு, அந்த இடத்தில் இராமனுக்கு கோயில் கட்ட வேண்டும் என்று சங் பரிவார் அமைப்பினர் முயன்று வருகின்றனர். இதனால் ஏற்பட்ட மோதல்களிலும், கலவரங்களிலும் பல்லாயிரக்கணக்கானோர் இறந்துள்ளனர். இத்தகைய சூழலில், அனைத்து கலவரங்களுக்கும் அடிப்படையான, “இராமன் அயோத்தியில் பிறந்தான்” என்ற நம்பிக்கையை ஆய்வுக்கு உட்படுத்துவது அவசியமாகிறது.

முதல் இராமாயணம் எது?

raman 330இராமன் அயோத்தியில் பிறந்தான் என்ற நம்பிக்கைக்கு, கிமு 4 ஆம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட வால்மீகி இராமாயணமே காரணம். எனவே இராமாயணங்களை ஆராய்வது அவசியமாகிறது. இராமாயணங்கள் மொத்தம் 48. இவற்றுள் புத்த இராமாயணங்கள் மூன்றும், ஜைன இராமாயணங்கள் மூன்றும் அடங்கும். முதலில் தோன்றிய இராமாயணம் வால்மீகி இராமாயணம் என்று தவறாக கருதுவோரே பெரும்பான்மை. ஆனால், முதல் இராமா யணத்துக்கு “தசரத ஜாதகம்” என்று பெயர். இது கிமு 500ஆம் ஆண்டைச் சேர்ந்த புத்தமத இராமாயணமாகும். இதற்கும் பார்ப்பன வேத மதத்துக்கும் தொடர்பில்லை. தசரத ஜாதகத்தின் படி, தசரதன், இன்றைய அயோத்தியில் இருந்து 200 கிமீ தொலைவில் உள்ள வாரணாசியை தலைநகராக கொண்டு ஆண்ட மன்னன். எனவே இவனுடைய மகன் இராமன் பிறந்த இடம் வாரணாசி அரண்மனை என்று கொள்வதே முறையாகும். ஆனால், தசரத ஜாதகத்தை அடிப் படையாகக் கொண்டு தொகுக்கப்பட்ட வால்மீகி இராமாயணத்தில், தசரதனின் தலைநகரம் அயோத்தி என்று மாற்றப்பட்டுள்ளது.

அதே போல், தசரத ஜாதகத்தில் சகோதரர் களாக காட்டப்பட்டுள்ள இராமனையும் சீதையையும், வால்மீகி, கணவன் – மனைவியாக காட்டியுள்ளார். புத்த மத ஜாதகக் கதைகள், புத்த மதக் கட்டுக்கதைகளின் தொகுப்பு. இந்த தொகுப் பில் தசரத ஜாதகமும் ஒன்று. இதில், இராமன் புத்தரின் அவதாரமாக காட்டப்பட்டுள்ளான். ஆனால், தசரத ஜாதகத்தை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்ட வால்மீகி இராமாயணத்தில், அயோத்திய காண்டத்தில், 109ஆவது சர்க்கத்தில், இராமன் புத்தரைத் திட்டுவதாக காட்சியமைக்கப்பட்டுள்ளது. இராமன், புத்தரை திருடன் என்றும், புத்த மதத்தை நாத்திகவாதம் என்றும் தூற்றி யுள்ளான். எனவே, வால்மீகி இராமாயணம், புத்த மத எதிர்ப்பு பிரச்சாரத்துக்காக, பார்ப்பனர்களால் வடமொழி யில் உருவாக்கபட்ட இதிகாசம் என்பது புலனா கிறது. அதோடு மட்டுமில்லாமல், கிமு 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர், இராமாயணத்தில் குறிக்கப்பட்டுள்ளதால், இராமாயணக் கற்பனை சம்பவங்கள் நடந்த காலம் என்பது புத்தருக்குப் பிந்தைய காலம் என்பதும், திரேத யுகத்தில் இல்லை என்பதும் தெளிவாகிறது.

காவிகளுக்குள் கருத்தொற்றுமை உண்டா?

இது ஒருபுறமிருக்க, வாரணாசி இராமனை அயோத்தி இராமனாக்கிய காவிகளுக்காவது கருத்தொற்றுமை உண்டா? என்றால், அதுவும் இல்லை. ஆர். எஸ். எஸ் சிந்தனையாளர்களாக தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் ஒவ்வொரு போலி ஆய்வாளரும் ஒவ்வொரு கருத்தை கூறுகின்றனர். Ancient Geography of Ayodhya (அயோத்தியின் பண்டைய புவியியல்) என்ற புத்தகத்தில் ஷ்யாம் நாராயண் பாண்டே என்பவர், இராமன் பிறந்த இடம் ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள ஹெரத் என்கிறார். அகண்ட பாரதக் கனவு காணும் பாண்டேக்கள், ஆப்கானிஸ்தான் வரை போனதில் நமக்கு ஆச்சரியம் எதுவும் இல்லை. Vedic People (வேத மக்கள்) என்ற நூலில், ராஜேஷ் கவுச்சர் என்பவர், ஆப்கானிஸ்தான் நதியான ஹரியுத் நதியின் கரை தான், வால்மீகி இராமா யணத்தில், இராமன் பிறந்ததாக கூறப்பட்டுள்ள சராயு நதிக்கரை என்கிறார். இன்னொரு காவி ஆய்வாளரான கிருஷ்ணா ராவ், திராவிட நாகரிகமான சிந்து சமவெளி நாகரிகத்தை ஆரிய நாகரிகம் என்றும், சிந்து மக்கள் பேசிய மொழி சமஸ்கிருதம் என்றும் பொய்யுரைப்பதில் வல்லவர். அந்த வல்லமையினால், இராமன் பிறந்த இடம் ஹரியானா மாநிலத்தில் உள்ள பனவாலி என்கிறார். ஆக, இராமன் பிறந்த இடம் இது தான் என்று முடிவு செய்வதில் கூட, ஹிந்துத்துவ வாதிகள் மத்தியில் கருத்தொற்றுமை இல்லாத போது, இராமன் பிறந்த இடம் அயோத்தி தான் என்று நிறுவ முயல்வது, எப்படி நியாயமாகும்?

இன்றைய அயோத்தி இராமாயண அயோத்தியா?

அடுத்ததாக, இராமாயணத்தில் குறிப்பிடப் பட்டுள்ள அயோத்தியும், இன்றைய அயோத்தியும் ஒன்றா? என்பதை ஆய்வுக்குட்படுத்துவோம். இன்றைய அயோத்தியின் பழைய பெயர் “சாகேதா”. சாகேதாவில் மனிதன் வாழ்ந்ததற்கான அடையாளங்கள், கிமு 8ஆம் நூற்றாண்டில் இருந்து தான் பதிவாகியுள்ளன. கிமு 8ஆம் நூற்றாண்டில், வால்மீகி இராமாயணத்தில் சொல்லப்பட்ட அளவுக்கு நகரக் கட்டமைப்புகள் சாகேதாவில் இல்லை. சாகேதா சரியாக எந்த இடத்தில் இருக்கின்றது என்பதற்கான குறிப்புகள் எந்த ஹிந்துமத நூலிலும் இல்லை. புத்த மத நூல்களில் தான் அதை பற்றிய துல்லியமான குறிப்புகள் உள்ளன. “ஸம்யுக்த நிகா” என்ற புத்தமத நூலில், சாகேதா இருக்குமிடம் குறிக்கப் பட்டுள்ளது. மேலும், சாகேதா, கி.மு. 6ஆம் நூற்றாண்டுக்கும் கிமு 5ஆம் நூற்றாண்டுக்கு நடுவில், இக்சுவாகு (கரும்பு) பேரரசின் தலைநகராகவும் இருந்துள்ளதாக இந்நூல் கூறுகிறது. தசரதன் இக்சுவாகு மன்னன் என்று ஹிந்துமத நூல்களும் கூறுவதிலிருந்து, புத்த மத கதையை மட்டுமல்ல, புத்தமத பேரரசுப் பெயரையும் பார்ப்பனர்கள் திருடியிருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ள முடிகிறது. மேலும், மனிதன், கரும்பு (இக்சுவாகு) பயிரிட ஆரம்பித்து 6000 ஆண்டுகள் தான் ஆகிறது என்று Archaeology in Oceania என்ற ஆய்விதழில், ஜான் டேன்ஸ் என்ற ஆய்வாளர் ஆய்வறிக்கையை எழுதியுள்ளார் (1993). எனவே மறுபடியும், திரேத யுகத்தில் இராமாயணம் நடக்கவில்லை என்பது உறுதியாகிறது.

அதே போல், இன்னொரு புத்தமத நூலான “அட்டகதா”வில், பிரசனஜித் என்ற புத்த மன்னன், தனஞ்சயா என்ற வணிகனிடம், சாகேதா நகரத்தை உருவாக்கச் சொன்னதாக குறிப்புகள் உள்ளன. அப்போது பேரரசின் தலைநகரம் ஷ்ரவதி தானேயன்றி, சாகேதா இல்லை. இரண்டு நகரங்களுக்கும் 100 கிமீ இடைவெளி உண்டு. கிமு 5ஆம் நூற்றாண்டில், சாகேதா, புத்த மகத பேரரசின் கீழ், ஒரு இரண்டாந்தர நகரமாகவே இருந்துள்ளது. மற்றுமொரு புத்த நூலான “டிகா நிகயா”வில், ஆறு முக்கிய நகரங்களில் ஒரு நகரமாக சாகேதா குறிப்பிடப்பட்டுள்ளது.

கிமு 3ஆம் நூற்றாண்டில், மவுரியப் பேரரசர் அசோகர் பல புத்த விகாரங்களை சாகேதாவில் அமைத்தார். பிற்கால மவுரியப் பேரரசு, புஷ்யமித்ர சுங்கன் என்ற பார்ப்பன படைத் தளபதியின் துரோகத்தால் வீழ்ந்தது. அரியணையை கைப்பற்றிய புஷ்யமித்ர சுங்கனின் ஆட்சி காலத்தில் தான், பார்ப்பனியம் மீண்டும் உயிர் பெற்றது. இந்த காலகட்டத்தில், சாகேதாவிக்கு ஒரு ஆளுநரை நியமித்த தகவல், தானதேவா கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. அதன்பின், ஆதிகிரேக்க குஷன் பேரரசின் படையெடுப்பால், சாகேதாவில் பல புத்த அடையாளங்கள் அழிக்கப்பட்டன. கிபி.100இல் நடந்த கிரேக்க படையெடுப்பை பற்றிய தகவல்கள், யுக புராணத்தில் உள்ளன. கிபி 300இல் எழுதப்பட்ட “விஷ்ணு ஸ்மிரிதி”யில், 52 வைணவ புனித ஸ்தலங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் ஒரு இடமாகக்கூட “அயோத்தி” அங்கீகரிக்கப்படவில்லை.

சாகேதா பெயர் மாற்றம்

சாகேதா நகரத்தை “அயோத்தி” என்று மாற்றிய சிறுமை குப்தர்களையே சாரும். குப்தர் ஆட்சி (கிபி 320-550) பார்ப்பனர்களின் பொற் காலமாகத் திகழ்ந்தது. புத்த மதத்தில் ஊடுருவிய பார்ப்பனர்கள், அதை தங்களுக்கு ஏற்ற வகையில், சனாதன மதமாக மாற்றிக்கொண்டனர். பாசர், காளிதாசர் போன்ற பார்ப்பன கவிஞர்கள், சாகேதாவை, இராமயண அயோத்தியோடு தொடர்புப்படுத்தி பல பொய் சமஸ்கிருத பாடல்களை இயற்றினர். பார்ப்பன சூழ்ச்சியால், சாகேதா “அயோத்தி” ஆனது. கரண்டண்டா கல்வெட்டில் (கிபி 436), அயோத்தி, கோசல மாகாணத்தின் தலைநகரமாக பொறிக்கப்பட் டுள்ளது. ஸ்கந்த குப்தா ஆட்சிகாலத்தில், அயோத்தி ஒட்டுமொத்த குப்த பேரரசின் தலைநகரமாக மாறியது. சாகேதாவை அலுவல்பூர்வமாக, “அயோத்தி”யாக மாற்றியதும் ஸ்கந்தகுப்தா தான்.

குப்தர் ஆட்சி முடிந்தபின் கூட, “சாகேதா” இராமபக்தர்களின் நகரமாக மாறவில்லை. கிபி ஏழாம் நூற்றாண்டில், சுவான் ஜாங்க் என்ற சீனப் பயணி சாகேதாவுக்கு வந்து, பல குறிப்புகளை எழுதி வைத்திருக்கிறார். அதில், அவர் அயோத்தியை ஒரு புத்த நகரமாகவே குறிப்பிட்டுள்ளார். சாகேதாவை அயோத்தி என்று மாற்றியதன் விளைவாக, எட்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட ஜைன புராணமான “ஆதி புராணத்தில்” சாகேதா என்ற சொல்லோடு, அயோத்தி என்ற சொல்லும் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 13ஆம் நூற்றாண்டில், வைணவத்தில், “இராமநந்தி” என்ற பிரிவு உருவான பின் தான், சாகேதாவில் இராமப் பக்தி பரவ ஆரம்பித்தது. இந்தி மொழி இலக்கணமும், இலக்கியங்களும் இந்த காலகட்டத்தில் தான் வளர ஆரம்பித்தன. இதன் விளைவாக, சமஸ்கிருத வால்மீகி இராமாயணம் ஹிந்தியில் மொழி பெயர்க்கப்பட்டது. இராமபக்தியும் மென்மேலும் வளர்ந்தது. ஆனாலும், 15ஆம் நூற்றாண்டிலும், 16ஆம் நூற்றாண்டிலும்கூட, சாகேதா சைவ சமய நகரமாகவே இருந்தது. இதே காலகட்டத்தில், 1574இல் துளிதாசரால் எழுதப்பட்ட “இராமசரித மனாஸ்” என்ற நூலிலும் அயோத்தி, புனித ஸ்தலமாக குறிப்பிடப்படவில்லை. இத்தனைக்கும், துளசிதாசர் இந்த நூலை எழுதியதே அயோத்தியில் இருந்து தான்!இவ்வாறாக, 16ஆம் நூற்றாண்டிலும் கூட இராமபக்தர்களின் நகரம் என்ற நிலையை அடையாத அயோத்தி, 18ஆம் நூற்றாண்டில் தான் நயவஞ்சகமாக இராமபூமி யாக மாற்றப்பட்டுள்ளது. திட்டமிட்டு, இந்தியா முழுவதும் இருந்து, பல இராமநந்தி பார்ப்பன துறவிகள் அயோத்தியில் குடியமர்த்தப்பட்டனர். மதவெறியும் தூண்டிவிடப்பட்டது. இறுதியாக, பல கலவரங்களையும் நடத்தி, உயிர் பலிகளையும் வாங்கி, மசூதி இடிப்பு வரை இந்த சிக்கல் வளர்ந்துள்ளது (வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது).

ஆக, தசரத ஜாதகம் உள்ளிட்ட கற்பனைப் புராணங்களை வைத்துப் பார்க்கும் போதும், இராமன் பிறந்த இடம் அயோத்தி இல்லை என்பது தெளிவாகிறது. ஒரு பேச்சுக்கு இராமன் பிறந்த இடம் அயோத்தி என்று வைத்துக் கொண்டாலும் கூட, அந்த இராமாயண அயோத்திக்கும், தற்போதுள்ள அயோத்திக்கும் (சாகேதா) எந்த தொடர்பும் இல்லையென்பதும், ஆதாரங்களின் மூலம் தெளிவாகிறது. எனவே, சங் பரிவார் அமைப்பினரின் திட்டமிட்ட பொய் பிரச்சாரங்களை முறியடிக்க, இந்த வரலாற்று ஆதாரங்களையும், புராண குறிப்புகளையும் துணையாகக் கொள்வோம். மதவெறி பரவலைத் தடுப்போம்.

(வரலாற்றில் பார்ப்பனிய வன்முறை எனும் தலைப்பில் திராவிடர் விடுதலைக் கழகம் பிப்.24, 2019இல் நடத்திய கருத்தரங்கில் ஆற்றிய உரை)

Pin It