கெடுவாய்ப்பாக, நான் ஒரு தீண்டத்தகாத இந்துவாகப் பிறந்து விட்டேன். அதைத் தடுப்பது என் சக்திக்கு அப்பாற்பட்டது. ஆனால், அருவருக்கத்தக்க இழிவான நிலையில் வாழ்வதை என்னால் தடுத்துக் கொள்ள முடியும். எனவே நான் உறுதியாகக் கூறுகிறேன்: நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன்.
தனித்து இருந்த ஒரு நீர்த் துளி கடலிலே கலந்து, கரைந்து தன் இருத்தலைத் தொலைப்பது போல் ஒரு தனி மனிதன் சமூகத்தில் கரைந்து தன் முழுமையைத் தொலைத்துவிடுவதில்லை. மனிதன் சுதந்திரமானவன். அவன் இந்த சமூகத் திற்குத் தொண்டு செய்வதற்காகப் பிறக்க வில்லை. தான் மேம்பாடு அடைவதற் காகவே பிறந்தான். இந்தக் கருத்து புரிந்து கொள்ளப் பட்டதாலேயே வளர்ந்த நாடுகளி லெல்லாம் ஒரு மனிதன் மற்றொரு மனிதனை அடிமைப்படுத்திவிட முடிவ தில்லை. தனி மனிதனுக்கு எந்தவொரு பாத்திரமும் வழங்காத மதம் எனக்கு ஏற்புடையதில்லை. அதனால் தனி மனிதனை ஏற்றுக்கொள்ளாத இந்து மதம் எனக்கு ஏற்புடையதாயில்லை.
ஒரு வகுப்பைச் சேர்ந்தவர்கள் மட்டுமே கல்வி பெற முடியும், இரண்டாம் வகுப்பினர் ஆயுதம் ஏந்தவும், மூன்றாவது வகுப்பினர் வாணிபம் செய்யவும், நான்காவது வகுப்பினர் அடிமைகளாக இருக்கவும் வேண்டும் என்று சொல்லும் எந்த மதத்தையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. எல்லோருக்கும் கல்வி அவசியம், எல்லோருக்கும் ஆயுதம் அவசியம், எல்லோருக்கும் வாணிபம் செய்வது அவசியம். இந்த அடிப்படையை மறந்த மதம் ஒரு வகுப்பாருக்கு மட்டும் கல்வி கொடுத்து, பிறரை அறியாமை இருட்டில் தள்ளிவிடுவது மதமே அல்ல. அது அவர்களை எப்போதும் அடிமைகளாகவே வைத்திருப்பதற்கான (வஞ்சக) ஏற்பாடு...
ஒரு மதத்தின் அடிப்படையான கோட்பாடு என்பது, ஒரு தனி மனிதனின் ஆன்ம வளர்ச்சிக்கு ஏதுவான சூழலை உருவாக்கித் தருவதே. இதை நீங்கள் ஒப்புக்கொண்டால் இந்து மதத்தில் இருந்து கொண்டு உங்களை நீங்கள் மேம்படுத்திக் கொள்ள முடியாது என்பது தெளிவு. ஒரு மனிதனின் வளர்ச்சிக்கு அவசியமானவை மூன்று. அவை பரிவு, சமத்துவம் மற்றும் சுதந்திரம். இவற்றில் ஏதாவது ஒன்று இந்து மதத்திலிருந்து உங்களுக்குக் கிட்டும் என்று உங்கள் அனுபவத்தை வைத்துச் சொல்ல முடியுமா?
தீண்டத்தகாதவர்களுக்கு சட்டம் வழங் கும் உரிமைகளைக் காட்டிலும் சமூக விடு தலையே தேவை. அந்த சமூக விடுதலை உங்களுக்குக் கிடைக்காத வரைக்கும் சட்டம் வழங்கும் எந்த உரிமைகளும் எதற் கும் பயன்படாது. சிலர் உங்களுக்கு உடல் சார்ந்த சுதந்திரம் முழுமையாக இருக்கிறது என்று அறிவுறுத்த விளை வார்கள். உண்மைதான். நீங்கள் சட்டத்திற்கு உட்பட்டு எங்கு வேண்டுமானாலும் போகலாம், எதை வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் அந்தச் சுதந்திரத்தால் என்ன ஆகப்போகிறது? ஒரு மனிதன் உடம்பினால் மட்டுமல்ல சிந்தனை களினாலும் ஆக்கப்பட்டவன். வெறும் உடல் சார்ந்த சுதந்திரத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது?
சிந்தனைகளின் விடுதலையே அவசியமான விடுதலை. ‘உடல் சார்ந்த சுதந்திரம்' என்பதன் உண்மை யான பொருள் என்ன? அவன் தன் விருப்பத்திற்கேற்றபடி எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்ள உரிமை இருக்கிறது என்பது தானே? ஒரு கைதியின் விலங்கு ஏன் கழற்றப்படுகிறது? அதன் கோட்பாடு என்ன? விலங்கு கழற்றப் பட்டதால் விடுதலை பெற்ற அவன் இனி தன் விருப்பப்படியே தன் நடத்தைகளை அமைத்துக் கொள்ளவும் தனக்கு இருக்கும் ஆற்றல்களைத் தடையின்றி முற்றும் முதலாகப் பயன்படுத்திக்கொள்ளவுமே. ஆனால் தன் சிந்தனைகளில் விடுதலையை அடையாத ஒருவனுக்கு உடல் சார்ந்த விடுதலை மட்டும் வழங்கப்பட்டால் அதனால் என்ன பயன்? சுதந்திர சிந்தனையே உண்மையான விடுதலை.
சிந்தனைகள் சுதந்திரமானவையாக இல்லை யென்றால் கை விலங்கிடப்படாவிட்டாலும் அவன் அடிமைதான்! உயிரோடு இருந்தாலும் அவன் பிணம்தான்.
(டிசம் 6 - அம்பேத்கர் நினைவு நாள்)
(தாயப்பன் அழகிரிசாமி மொழி பெயர்ப்பில் ‘தலித் முரசு’ வெளியிட்டுள்ள அம்பேத்கர் உரை நூலிலிருந்து)