“யாகத்துக்காக நீங்கள் நெருப்பைமூட்டி அதில் யாகத்துக் காகவே பொருள்களைக் கொட்டி ஜாதியை சுத்தம்செய்துவிடலாம். தீங்குகளை ஒழித்து விடலாம் என்று கூறுகிறீர்கள். ஒருவனை ஜாதியி லிருந்தும் தீங்கிலிருந்தும் விடுவிக்கும் சக்தி நீங்கள் வளர்க்கும் யாக நெருப்புக்கு உள்ளே இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். அது அந்த யாக நெருப்புக்கு வெளியே இருக்கிறது. அந்த நெருப்பு மக்களின் சிந்தனைகளில் மூட்ட வேண்டிய நெருப்பு. நான் அந்த நெருப்பைத்தான் மூட்டுகிறேன்; நீங்கள் மூட்டிய யாக நெருப்பு அணைந்துவிடும்; நான் மக்களின் சிந்தனையில் மூட்டும் நெருப்பு அணையாது” என்று பதிலடி தந்தார் புத்தர்.
பெரியார் 1953ஆம் ஆண்டு நடத்திய விநாயகன் சிலை உடைப்புப் போராட்டம் வர்ணாஸ்ரம எதிர்ப்புக்கான போராட்டம்தான். 1952இல் தமிழ்நாட்டில் தேர்தலில் போட்டி யிட்டு மக்களை சந்திக்காமல் கொல்லைப்புற வழியாக பார்ப்பனர் இராஜகோபாலாச்சாரி முதல்வரானார். பார்ப்பன மேலாதிக்கத்தை நிறுவி வர்ணாஸ்ரமத்தை காப்பாற்ற வும் ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி வாய்ப்புகளைப் பறிப்பதிலும் தீவிரம் காட்டினார். இன்று மோடி ஆட்சி அமுல்படுத்திவரும் ‘வர்ணாஸ்ரம’ கொள்கைகள்தான் அன்றைக்கு இராஜ கோபலாச்சாரியின் திட்டங்களாகவும் இருந்தன என்று கூறலாம்.
பெரியார் வெகுண்டெழுந்து போராடினார். அந்த வரலாற்றுப் பின்னணியில் பெரியார் நடத்திய போராட்டங்களில் ஒன்றுதான் விநாயகன் சிலை உடைப்பு கிளர்ச்சி. “வர்ணாஸ்ரம முறையை ஜனநாயகத்தின் பெயரால் நிலைநாட்ட முனைகிறார் ஆச்சாரியார். இதோ, கடைசிச் சிகிச்சையாக கணபதி உருவ பொம்மையை 27.5.1953 அன்று மாலை 6.30 மணிக்கு தூள்தூளாக்கி மண்ணோடு மண்ணாய் கலக்கி விடுங்கள்” என்று அறிவித்தார் பெரியார். விநாயகன் எதிர்ப்புக்கு குறியீடாக பெரியார் புத்தரை முன் வைத்தார்.
“புத்தர் விழாவைக் கொண்டாடி பிள்ளையாரை விழாவில் உடையுங்கள்” என்றார். கோயில்களில் இருக்கும் விநாயகர் சிலைகளை தூக்கி வந்து பெரியார் உடைக்கச் சொல்லவில்லை; “கடைகளில் விநாயகன் பொம்மைகளை காசு கொடுத்து வாங்கி உடையுங்கள்” என்றார். “அரசு தடை போட்டால் தடையை மீற வேண்டாம். வீடுகளில், கடைகளில்,சொந்த இடங்களில் உடைத்து மண்ணில் கலந்து விடுங்கள்” என்றார். இப்போது இந்து முன்னணியினர் இரசாயன விநாயகன் சிலைகளை கடலில் கரைக்கச் சொல்கிறார்கள். நீர் நிலைகளை மாசுபடுத்துகிறார்கள். ஆனால் விநாயகன் சிலையை உடைக்கச் சொன்ன பெரியார், மண் பொம்மைகளை உடைத்து தூளாக்கி மண்ணோடு மண்ணாகக் கலக்கி விடுங்கள் என்று கூறியிருக்கிறார். திருச்சியில் பெரியாரே சிலையை உடைத்தார். பார்ப்பனர்களும், பார்ப்பனியத்துக்கு பலியான ‘சூத்திரர்களும்’ இதற்கு எதிர்ப்பாக பெரியார் உருவப்படத்தை எரிக்கிறார்கள் என்று செய்திகள் வந்தன. அப்போது பெரியார், “எரிப்பதற்கு என்னுடைய படத்தையும் அதற்கான செலவுத் தொகையையும் நானே தருகிறேன்” என்று ‘விடுதலை’ நாளேட்டில் அறிவித்தார். எதிரிகளின் எதிர்ப்பு வழியாகவே தனது கொள்கைகளை மக்களிடம் கொண்டு சென்றவர் பெரியார்.
1971ஆம் ஆண்டு சேலத்தில் பெரியார் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தில் இராமன், விநாயகன், கிருஷ்ணன் ஆபாச பிறப்புகளை ஓவியங்களாக எடுத்துச் சென்றபோது சிலர் ஊர்வலத்தினர் மீது செருப்பு வீச, அதே செருப்பை பெரியார் தொண்டர்கள் எடுத்து, இராமன், விநாயகன், கிருஷ்ணன் மீது அடித்தார்கள். அதற்காக பெரியார் படத்தை சில ஊர்களில் எதிர்ப்பாளர்கள் எரித்தார்கள். செருப்பால் அடித்து போராட்டம் நடத்தினார்கள். அப்போதும் பெரியார், “நானே எனது படத்தையும் செருப்பையும் பாதி விலைக்கு தருகிறேன். நன்றாக அடியுங்கள். உங்கள் எதிர்ப்பு வழியாகவே எனதுகொள்கைகள் பரவும்” என்று அறிக்கை விடுத்தார்.
விநாயகன் சிலை உடைப்புப் போராட்டத்தை புத்தர் விழாவோடு பெரியார் ஏன் இணைத்தார் என்பதை நாம் கருதிப் பார்க்கவேண்டும். புத்த மார்க்கத்தில் மிகவும் போற்றப்படுவது அரச மரம். அந்த மரத்தின் கீழ் தான் புத்தருக்கு அறிவு ஒளி கிடைத்தது என்று ஒரு கதையும் உண்டு. எனவே அரசமரத்தடிகளில் புத்தர் சிலைகள் வைக்கப்பட் டிருந்தன. புத்தமதத்தை வன்முறை ஊடுருவல் சூழ்ச்சி முறைகளில் ஒழித்த பார்ப்பனர்கள், மரத்தின் கீழே அப்போது வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலைகளை அழித்து, அங்கே விநாயகன் சிலை களை வைத்தார்கள் என்றும் ஆய்வுகள் உண்டு.
பெரியார், புத்தரை மிகவும் மதித்த தலைவர், புத்தரின் விழாக்களில் பங்கேற்றுப் பேசியிருக்கிறார். வரலாற்றில் வர்ணாஸ்ர மத்துக்கு எதிராக மக்கள் இயக்கத்தைத் தொடங்கி வைத்தவர் புத்தர்தான்.
புத்தர் இயக்கம் முன் வைத்த மூன்று முழக்கங்களை பெரியார் விரும்பி ஏற்று, அதையே தனதுஇயக்கத்துக்கான முழக்கமாக வும் ஆதரித்துப் பேசினார். ‘புத்தம் சரணம் கச்சாமி; தம்மம் சரணம் கச்சாமி; சங்கம் சரணம் கச்சாமி’ - இதுதான் புத்தர் முன் வைத்த முழக்கம்.
“அறிவைப் (புத்தம்) போற்றுவோம்;
சமநீதி தத்துவத்தைப் (தம்மம்) போற்றுவோம்;
இயக்கத்தைப் (சங்கம்) போற்றுவோம்”
- என்பதே இந்த முழக்கங்கள் முன் வைத்த கருத்து.
“பிராமணனைப் போற்று; அவன் கூறும் கடவுளுக்கு பயந்து அதற்கான கடமைகளை மேல் உலகம் போவதற்கான வேத சடங்கு முறைகளை பின்பற்று” என்று வேதகாலப் பார்ப்பனியம் மக்களை சுரண்டிய காலத்தில் புத்தர் இந்த புரட்சி முழக்கங்களை முன் வைத்ததை நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அந்தக் காலத்தில் இது புரட்சியின் குரல்தான்!
புத்தர் செய்த ஒரே தவறு - பார்ப்பனர்களை அவர்களும் ‘தம்மத்தை’ ஏற்பதாகக் கூறியதை ஏற்று மனித நேயத்தோடு தனது இயக்கத்தில் சேர்த்ததுதான். பார்ப்பன ஊடுருவலே புத்த மார்க்கத்தின் கொள்கைகளை சிதைத்தது. எந்த மண்ணில் புத்த மார்க்கம் வேர் விட்டதோ, அந்த மண்ணிலே துடைத் தெறிந்து அழித்தது. இந்த வரலாற்றுப் படிப்பினை தான் பெரியாரை விழிக்கச் செய்தது. திராவிடர் கழகத்தில் பார்ப்பனர்களுக்கு இடமில்லை; கொள்கையை ஏற்பவர்கள் இருந்தால் வெளியி லிருந்து தாராளமாக ஆதரிக்கலாம் என்பதில் பெரியார் உறுதியாக இருந்தார். அத்தகைய ஊடுருவல் புத்த மார்க்கத்தில் நிகழ்ந்ததுபோல் நடந்து விடக் கூடாது என்பதற்குத்தான், ‘திராவிடர்’ என்ற குறியீட்டுச் சொல்லை இயக்கத்தின் அடையாள மாக்கினார்.
“கடவுள் இல்லை இல்லவே இல்லை; கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்; பரப்பியவன் அயோக்கியன்; வணங்குகிறவன் காட்டு மிராண்டி” என்ற சமரசமற்ற முழக்கங்களை தனது சிலைகளுக்கு கீழேயும் கல்வெட்டு களாகவும் பெரியார் பதிக்கச் சொன்னார் என்பதைப் பார்க்கும்போது, புத்த மார்க்கத்துக்கு நேர்ந்த விபத்து, திரிபுவாதங்கள் எதிர்காலங் களில் தனது கொள்கைகளுக்கும் நேர்ந்துவிடக் கூடாது என்ற கருதிதான் என்றே நினைக்கத் தோன்றுகிறது.
குழந்தைகளுக்கு பெரியார் சூட்டிய பெயர்களைப் பார்த்தாலே தெரியும். சித்தார்த்தன், புத்தன், கவுதமன், அசோகன், கவுதமி இப்படிப்பட்ட பெயர்களைத் தான் ஏராளமாக சூட்டியிருக்கிறார். புத்த மார்க்கம் பெரியாரை எப்படி ஈர்த்திருந்தது என்பதற்கு இவையெல்லாம் சான்றுகளாக நாம் கருதலாம்.
கி.மு.563இல் கபிலவஸ்துவில் பிறந்த சித்தார்த்தரின் தந்தை சுத்தோதனர், அப்பகுதி யின் அரசர் என்றாலும் மனுதர்ம விதிப்படி ஆட்சி செய்யும் சத்திரியர் குலம் அல்ல என்றும், அவர் ஆட்சி செய்த பகுதி முடியரசாகவோ அல்லது குடியரசாகவோ நடக்கவில்லை என்றும் சுழற்சி முறையில் ஆட்சி அதிகாரம் நடந்தது என்றும் அம்பேத்கரும் தேவி பிரசாத் சட்டோபாத்யா போன்ற இந்திய தத்துவ ஆய்வாளர்களும் கூறுகிறார்கள். புத்தர் பிறந்த இனக்குழுவான சாக்கியர் குலம் சத்திரியர் வம்சம் அல்ல என்கிறார்கள்.
அப்போது இந்தியா என்ற நாடு இல்லை. இப்போதுள்ள வடநாடு தென்னாட்டுப் பகுதி களில் வாழ்ந்தவர்கள் நாகர்கள். அவர்கள்தான் திராவிடர்கள். இந்தியா முழுதும் பேசப்பட்ட மொழி தமிழ் என்கிறார் புரட்சியாளர் அம்பேத்கர். தென் பகுதியில் நாகர்கள் சமஸ்கிருதத்தை ஏற்க மறுத்ததால் திராவிடர்கள் என்ற அடையாளத்தைத் தக்க வைத்துக் கொண்டனர் என்றும் அம்பேத்கர் கூறுகிறார்.
புத்தர் பிறந்த சாக்கியர் குலம், நாகர்கள் மரபு வழிப்பட்டவர்கள். அவர்கள் பேசிய பாலி மொழி, திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். சாக்கியர்கள், “பிராமணர்களை வணங்குவதோ, மதிப்பதோ இல்லை. தானம் கொடுப்பதும் இல்லை” என்று கடும் சினத்துடன் அம்பக்தன் என்ற ‘பிராமணன்’ புத்தரிடம் கேட்டதாகவும் புத்தரின் சாக்கியர் குலம் இழிவானது என்று கூறியதாகவும் பவுத்த கருத்துகளின் தொகுப்பான ‘திரிபிடகம்’ கூறுகிறது. புத்தரின் சாக்கிய குலம் வர்ணாஸ்ரம தர்மப்படி பார்ப்பன மேலாதிக்கத்தை எதிர்த்து வந்திருக்கிறது என்ற முடிவுக்கு வர முடிகிறது. திராவிட சாக்கிய மரபில் பிறந்த புத்தர், ஒரு ‘சூத்திரர்’ என்று வரலாற்றாளர்கள் கூறுகிறார்கள்.
புத்தர் அறிவைத் தேடி புறப்பட்டபோது அவருக்கு வயது 29. அவர் துறவுக்குக் காரணமாக சொல்லப்படும் கதையை அம்பேத்கர் மறுக்கிறார். ஒரு நோயாளி, ஒரு முதியவர், ஒரு பிணம். இதைப் பார்த்து கவலைப்பட்ட புத்தர் துன்பங்களிலிருந்து விடுதலை பெற அறிவைத் தேடும் முயற்சியாக துறவியாக முடிவு செய்தார் என்ற கதை அறிவுக்குப் பொருந்தக் கூடியதாக இல்லை. 29 வயது வரை இத்தகைய துன்பத்துக்கு உள்ளாகும் மனிதர்களை புத்தர் சந்திக்கா மலேயே இருத்திருப்பாரா? அப்படி இருந்திருக்க முடியாது. புத்தரின் துறவுக்கு வரலாற்று ரீதியான காரணத்தை அம்பேத்கர் விளக்குகிறார்.
புத்தரின் சாக்கிய குலத்துக்கும் மற்றொரு குலமான கோலியர் என்ற குலத்துக்கும் இடையே எல்லையாக ரோகினி என்ற ஆறு இருந்தது. இந்த ஆற்றின் நீரைப் பயன்படுத்தும் முதல் உரிமை யாருக்கு என்பதில் இரண்டு இனக் குழுக்களுக்கிடையே சண்டை. சாக்கியர்கள் ஒன்று கூடி கோலியர்கள் மீது தாக்குதல் நடத்த முடிவு எடுத்த போது - சித்தார்த்த புத்தர் போர் என்ற முடிவை எதிர்க்கிறார். சாக்கியர் சங்கம் புத்தரை புறந்தள்ளுகிறது. புத்தரும் கபிலவஸ்துவை விட்டு வெளியேறினார்.
ஆனால், இந்த மேலோட்டமான நிகழ்வுகளையும் கடந்து நிற்கிறது புத்தரின் துறவு. இனக் குழுக்கள் தங்களுக்குள் சண்டையிட்டு அழிவதற்கும் இந்த அழிவுகளுக்கு அரசுகளின் ஆதரவும் அடக்குமுறைகளும் காரணமாக இருந்ததை உணர்ந்த புத்தர், வேதகால சமூகக் கட்டமைப்பை உறுதிப்படுத்திக் கொண் டிருந்த ‘வர்ணாஸ்ரமத்தை’ ஒழித்து மக்களுக்குள் சமநீதி உருவாக வேண்டிய தேவையை உணர்ந்ததால் உருவானதே பவுத்தம் என்பதே பல ஆய்வாளர்கள் கருத்தாக இருக்கிறது. “ஜாதியக் கொடுமைகளையும் புரோகிதர்களின் ஏமாற்று மோசடிகளையும், சடங்குகளையும் ஒழிக்க வந்ததுதான் பவுத்தம்” என்று நேரு தனது மகள் இந்திராவுக்கு சிறையிலிருந்து எழுதிய கடிதத்தில் கூறுகிறார்.
பார்ப்பனிய வேதகால கட்டமைப்பை பவுத்தம் தகர்த்தது என்பதற்கு சான்றாக பவுத்த மார்க்கம் ‘சூத்திரர்’களை பெண்களை பிட்சுகளாக ஏற்றதைக் குறிப்பிடலாம். “பிறப்பினால் ஒருவன் சண்டாளன் ஆவதும் இல்லை; பிறப்பினால் ஒருவன் பிராமணன் ஆவதுமில்லை” என்றார் புத்தர். “பிராமணனே பிறப்பில் உயர்ந்தவன்; ஏனையோர் தாழ்வானவர்கள்” என்று அஸ்ஸலாயனா என்ற பார்ப்பனர் புத்தரிடம் சொன்னபோது, புத்தர் அந்தப் பார்ப்பனருக்கு தந்த பதில் மிகவும் அற்புதமானது.
“அண்டை நாடுகளில் எஜமானன், அடிமை என்ற இரு பிரிவினர்தான் இருக் கிறார்கள். அடிமைகூட எஜமானாக மாற முடியும். ஆனால் உங்கள் வர்ணாஸ்ரம அமைப்பு - ஏன் மாற்றங்களுக்கு இடம் தருவது இல்லை? உலகத்தில் எங்கும் இல்லாத ஒரு சமூக அமைப்பை வைத்திருக்கிறதே!” என்று கேட்ட புத்தர் தொடர்ந்து பேசுகிறார்.
“யாகத்துக்காக நீங்கள் நெருப்பைமூட்டி அதில் யாகத்துக்காகவே பொருள்களைக் கொட்டி ஜாதியை சுத்தம் செய்துவிடலாம், தீங்குகளை ஒழித்து விடலாம் என்று கூறுகிறீர்கள். ஒருவனை ஜாதியிலிருந்தும் தீங்கிலிருந்தும் விடுவிக்கும் சக்தி நீங்கள் வளர்க்கும் யாக நெருப்புக்கு உள்ளே இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். அது அந்த யாக நெருப்புக்கு வெளியே இருக்கிறது. அந்த நெருப்பு மக்களின் சிந்தனைகளில் மூட்ட வேண்டிய நெருப்பு. நான் அந்த நெருப்பைத் தான் மூட்டுகிறேன்; நீங்கள் மூட்டிய யாக நெருப்பு அணைந்துவிடும்; நான் மக்களின் சிந்தனையில் மீட்டும் நெருப்பு அணையாது” என்று பதிலடி தந்தார் புத்தர்.
“உடலுக்குள் ஆன்மா இருக்கிறதா? உடலும், ஆன்மாவும் வெவ்வேறானதா என்று கேட்ட சீடர்களிடம் அந்த அனுமான ஆராய்ச்சிகளில் நான் ஈடுபடுவது இல்லை. காரணம் இதனால் மனித இனத்துக்கு எந்த நன்மையும் கிடையாது” என்பதே புத்தரின் பதிலாக இருந்தது.
தனது சீடர்களிடம் புத்தர் கூறுகிறார், “பிட்சுக்களே; உடல் - ஒரு பொருள் தான்; அதற்குள் ‘ஆத்மா’ இருக்கிறது என்றால், அந்த ‘ஆத்மா’ நோய் உள்ளிட்ட இன்னல்களை உடலுக்கு தந்திருக்குமா? உடலுக்குள் ஆத்மா இல்லை என்கிறார். இதுவே புத்தரின் ‘அனாத்மா’ (ஆத்மா அற்றது) கோட் பாட்டின் கருத்து. ‘கந்த சம்யுத்தம்’, ‘மகாவக்கம்’ ஆகிய நூல்களில் புத்தரின் இந்த கருத்துகள் பதிவாகி யிருப்பதை ஆய்வாளர்கள் எடுத்துக் காட்டு கிறார்கள். பெரியார் கடவுள் மறுப்போடு, “ஆன்மா, மோட்சம், நரகம், பிதிர்லோகம்’ மறுப்பையும் புத்தரைப் போலவே முன் வைத்தார்.
புத்தர் கூறிய கதை
“உலகம் நிலையானதா? நிலையில்லாததா? என்ற கேள்விக்கு விளக்கம் வேண்டும் என்றும், அப்போது தான் பவுத்தத்தில் இணைவேன்” என்று புத்தரிடம் கேட்டிருக்கிறார் ஒருவர். அவரது பெயர் மாலுங்கிய புத்தர். அதற்கு புத்தர் அளித்த பதில் மிகவும் ஆழமானது. புத்தர் ஒரு கதையை கூறுகிறார்.
“ஒருவர் மீது நஞ்சு கலந்த அம்பு பாய்ந்து விடுகிறது. உடனே மருத்துவரிடம் சிகிச்சைக்கு அழைத்துப் போகிறார்கள். அப்போது, அந்த நோயாளி மருத்துவரிடம், “மருத்துவரே, என் மீது இந்த அம்பை வீசியவன் பிராமணனா? க்ஷத்திரியனா? வைசியனா? சூத்திரனா? கருப்பனா? சிவப்பனா? அந்த வில் எத்தகையது? வில்லின் நாண் எந்தப் பொருளால் ஆகியது? இவற்றுக்கெல்லாம் விளக்கம் வேண்டும். இல்லாவிட்டால் நான் சிகிச்சைக்கு ஒப்புக் கொள்ள மாட்டேன் என்று கூறுவானேயானால், அவன் இந்த வினாக் களுக்கு விடை தெரிந்து கொள்வதற்கு முன்பே செத்துப்போய் விடுவான். அதுபோலவே உலகம் நிலையானதா? நிலையற்றதா என்பதைப் புரிந்து தெளிவு பெற்ற பிறகே புத்த மார்க்கத்துக்கு வருவேன் என்றால், விளக்கம் - விடை கிடைப்பதற்கு முன்பே மரணம் வந்து விடும். உலகம் நிலையற்றது என்று மோட்சம் போக நம்புகிறவர்களுக்கும், மூப்பு, நோய், இறப்பு உண்டு. உலகம் தான் நிலையானது என்று நம்புகிறவர்களுக்கும் இதே பிரச்னைகள் உண்டு. எனவே இந்தப் பிரச்னைக்குள் நுழைந்து நான் அலசி ஆராய்ச்சி செய்வதெல்லாம் கிடையாது” என்று பதில் கூறினார் புத்தர்.
“மனிதர்களை கடவுள் படைத்தாரா?” என்ற கேள்விக்கும் புத்தரின் பதில் இது போலவே இருந்தது. “மனிதன் அனுபவிக்கும் இன்பம், துன்பம், கடவுள் படைத்தது என்றால், அந்தக் கடவுள் இந்த துயரங்களையும் மனிதர் களோடு சேர்த்து படைத்தாரா? கொலையாளி களையும், திருடர்களையும் கடவுள் தான் படைத்தாரா என்ற கேள்வியை எழுப்பிய புத்தர், இப்படித்தான் கடவுள் படைப்பு என்றால் ஒரு மனிதனுக்கு நற்செய்கையில் எப்படி ஊக்கமும் உற்சாகமும் கிடைக்கும்” என்ற அறிவார்ந்த கேள்வியை எழுப்பினார்.
வேதங்கள் கடவுளை ‘பிரம்மம்’ என்று கூறுகிறது. அந்தக் கடவுளைஅடைவதற்கு தங்களுடைய ‘வேதம்’ வழிகாட்டுவதாக ‘பிராமணர்கள்’ கூறினார்கள். வாசேத்தர் என்ற இளம் பார்ப்பனர் ஒருவர் இது குறித்து புத்தரிடம் நடத்திய உரையாடல் ‘தீவிக்க சுத்தம்’ என்ற பவுத்த நூலில் இடம் பெற்றுள்ளது. வெவ்வேறு பாதைகளை ‘பிரம்மத்தை’ அடைவதற்கு பார்ப்பனர்கள் வழி காட்டுகிறார்கள் என்பது உண்மையா என்று வாசேத்தர் கேட்ட கேள்விக்கு புத்தர் சில எதிர் கேள்விகளை முன் வைத்தார்.
வேதங்களில் சொல்லப்படும் ‘பிரம்மத்தை’ கடவுளை - எந்த ஒரு ‘பிராமணராவது’ நேரில் பார்த்திருக் கிறாரா? அல்லது இந்த ‘பிராமணர்களின்’ குருநாதர்கள் பார்த்திருக்கிறார்களா? இந்த குருநாதர்களில் யாரேனும் ஒரு மாணவராவது பார்த்திருக்கிறாரா? புத்தரின் இந்தக் கேள்விகளுக்கு அப்படி பார்த்ததாக எந்த ‘பிராமணரும்’ கூறவில்லை என்று வாசேத்தரிட மிருந்து பதில் வருகிறது. “தாங்களே அறியாததை பார்க்காததை பிறருக்கு - அதை அடைவதற்கான பாதை காட்டுவதாகக் கூறுவது முட்டாள்தனம் அல்லவா” என்றுகேட்கிறார் புத்தர்.
“வேத பார்ப்பனியம் ஒதுக்கி இழிவு செய்த சூத்திரர்களை பிட்சுகளாக அங்கீகரித்தது புத்த மார்க்கம். வேதத்தை சூத்திரன் படிக்க தடை போட்டது பார்ப்பனியம். ஆனால் முடிதிருத்தும் நாவிதர் சமூகத்தில் பிறந்த உபாலி பவுத்த சங்கத்தில் புத்தருக்கு அடுத்த இடத்தில் உயர்த்தப்பட்டதோடு பவுத்த நூலான திரிபிடகத்தைப் படித்து மற்றவர்களுக்கு விளக்கக் கூடிய உரிமையையும் பவுத்த சங்கம் வழங்கியிருந்தது” என்ற தகவலை அம்பேத்கர் எடுத்துக் காட்டுகிறார்.
பெண்களை இயக்கத்தில் சேர்க்க முதலில் தயங்கினார் புத்தர். பவுத்தத்தின் நெறி பிறழ்ந்து விடுமோ என்ற அச்சம் இருந்தது. பிறகு நிபந்தனைகளோடு இணைத்துக் கொண்டார். அன்றைய சமூக நிலையோடு பொருத்தி புத்தர் முன்னெடுத்த செயல்பாடாக இதைப் பார்க்க வேண்டும். வீதிகளை சுத்தப்படுத்தும் வேலைசெய்து வந்த சுனிதாவை சங்கத்தில் சேர்த்து துறவியாக்கினார் என்ற தகவலும், அந்தப்பெண் பல பாடல்களை இயற்றக்கூடிய ஆற்றல் பெற்றார் என்பதையும், ‘தேரிகதா’ என்ற பவுத்த நூல் விவரிப்பதை ஆய்வாளர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள். “புத்தர் ஒரு நாத்திகராக இருந்தாலும் அவரைப் போல் மக்களால் கடவுளாக மதிக்கப் பட்டவர்கள் வேறு எங்கும் பார்க்க முடியாது” என்று கூறுகிறார் அம்பேத்கர். “தன்னிடம் தெய்வீகத் தன்மை இருக்கிறது என்று பெருமைப்படும் ஆணவமற்ற எளிய மனிதர்” என்று படம் பிடிக்கிறார் அம்பேத்கர்.
பெரியாரும் இப்படித்தான் வாழ்ந்தார். “என்னை மகாத்மாவாக்கி விடாதீர்கள்” என்று கேட்டுக் கொண்டார், பெரியார். “அப்படி மதிக்கப்படாமல் எனது வார்த்தைகள், அபிப்பிராயங்கள் அதற்குண்டான சரியான மதிப்புப் பெற வேண்டுமானால், நான் அயோக்கி யனாகவும் மாறாக பணம் சம்பாதிப்பவனாகவும் திருடனாகவும் கருதும்படியாக பிரச்சாரம் செய்பவர்கள் உதவி செய்தவர்களே ஆவார்கள். எந்தக் காரணத்தைக் கொண்டும் மனிதத் தன்மைக்கு மீறிய எந்த குணத்தையும் என் மீது சுமத்தி விடாதீர்கள்” என்று சொன்னவர், பெரியார்.
பெரியாரும் புத்தரும் இங்கே ஒரே புள்ளியில் இணைவதைப் பார்க்கிறோம்.
புத்தரும் புத்தரின் சீடர்களும் நாடு முழுதும் சுற்றி மக்களை சந்தித்தார்கள்; விவாதித்தார்கள்; உரையாடினார்கள். பெரியாரும் பெரியார் இயக்கமும் அதைத்தான் செய்தது. பெரியார் சுற்றுப்பயணம் செய்யாத நாட்களே இல்லை. ஒவ்வொரு நாளும் மக்களை சந்தித்துப் பேசுவதே பெரியாருக்கு உற்சாகத்தை யும் உடல்நலப் பாதுகாப்பையும் தந்தது.
புத்தர் 29 வயதில் வீட்டைவிட்டு வெளியேறி 7 ஆண்டுகள் மக்கள் வாழ்வியலில் சந்திக்கும் பிரச்னைகள் அனுபவங்களின் வழியாக உணர்ந்தார். அதே அனுபவங்கள் இளமைக் காலம் முதல் பெரியாருக்கும் இருந்தது. தந்தையின் கடையில் சிறுவனாக வியாபாரத்திற்கு உதவியபோதும் வீட்டைவிட்டு வெளியேறி வடமாநிலங்களில் துறவியாக சுற்றித்திரிந்த போதும், கொள்கைக்காக கதர் மூட்டைகளை சுமந்து சென்று மக்களிடம் விற்பனை செய்தபோதும், காங்கிரஸ் கட்சியின் பொறுப்புகளை ஏற்று கடமையாற்றிய போதும் அவருக்குக் கிடைத்த அனுபவங்கள் அதன் வழியாக உருவாகிய எண்ண ஓட்டங்கள், சுயமரியாதை என்ற ‘தம்மம்’ நோக்கி பெரியாரை உந்தித் தள்ளியது.
புத்தர், 43 ஆண்டுகள் பார்ப்பனியத்துக்கு எதிராக மக்களை அணி திரட்டி, 80ஆவது வயதில் முடிவெய்தினார். புத்தரின் பேச்சுகளும் உரைகளும், விவாதங்களும் அவரது காலத்தில் தொகுக்கப்பட வில்லை. புத்தர் மறைந்து சுமார் 400 ஆண்டுகளுக்குப் பிறகுதான் ‘திரிபிடகம்’ என்ற பெயரில் நூல்களாக எழுதப்பட்டன. ஆனால் பெரியார் வாழ்நாள் முழுதும் ஆற்றிய உரைகள், எழுத்துகள், அவர் நடத்திய ‘குடிஅரசு’, ‘புரட்சி’ பகுத்தறிவு இதழ்கள் வழியாக அச்சு வடிவம் பெற்றிருந்தாலும், அவைகள் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லப்படாமல் பெரியார் உருவாக்கிய நிறுவனம், இயக்கத்தோடு முடங்கிக் கிடந்த நிலையில் தான், பெரியார் திராவிடர் கழகம் ‘குடிஅரசு’ தொகுப்புகளை தேடிப் பிடித்து தொகுத்து வெளியிட முன் வந்தது. இதற்காக சட்டப் போராட்டங்களை சந்திக்க வேண்டியிருந்தது. பெரியார் கருத்துகளை முடக்கிவிடக் கூடாது என்று நீதிமன்றத்தின் வழியாக போராடி பெற்ற உரிமைதான், இன்று பல்வேறு பதிப்பகங்கள் வழியாக தொகுதி தொகுதியாக வெளி வந்து கொண்டிருக்கின்றன. சமூக மன்றத்துக்காக களமிறங்கி நிற்கும் இளைஞர்களிடமும் ஜாதி ஒழிப்புப் பெண்ணுரிமைக் களங்களில் பயணிக்கும் தோழர்களிடமும் பெரியாரின் சிந்தனைகள் அறிவாயுதமாக பயன்படுகிறது.
(தொடரும்)