பெண்கள் சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குச் செல்லக் கூடாது என்கிற தடை மீதான வழக்கில் 17 ஆண்டுகள் கழித்து உச்சநீதிமன்றம் 28.9.2018 அன்று தீர்ப்பு வழங்கியது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் இணைந் தும், நீதிபதி ஆர்.எப். நாரிமன், நீதிபதி டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் தனித்தனியாகவும் வழங்கிய தீர்ப்புகளில் சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு 10 அகவை முதல் 50 அகவை வரையில் உள்ள பெண்கள் செல்வதற்கு அரசமைப்புச் சட்டப்படி உரிமை உண்டு என்று தீர்ப்பளித்தனர். பெண் நீதிபதியாகிய இந்து மல்கோத்ரா மதநம்பிக்கை அடிப்படையிலான பழக்க, வழக்க நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என்கிற மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். அய்ந்து நீதிபதிகளும் இந்துக்கள் ஆவர்.

1951ஆம் ஆண்டு பம்பாய் அரசு எதிர் நரசு அப்பா மாலி வழக்கில் பம்பாய் உயர்நீதிமன்றம், தனிமனித உரிமைகளின் பெயரால் மத நம்பிக்கை சார்ந்த பழக்கம், வழக்கம் என்கிற நடைமுறைகளில் தலையிட முடியாது என்று தீர்ப்பளித்தது. ஆனால் 67 ஆண்டுகள் கழித்து சபரிமலை தீர்ப்பில், அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங் களான சுதந்தரம், சமத்துவம், தன்மதிப்பு ஆகியவற் றுக்குக் கட்டுப்பட்டதாகவே பழக்கம், வழக்கம், நம்பிக்கை சார்ந்த நடைமுறைகள் அமைந்திட வேண்டும் என்று நான்கு நீதிபதிகள் திட்டவட்டமாகக் கருத்துரைத்துள்ளனர். மதம் சார்ந்த வழக்கில் முற்போக்கான தீர்ப்பாக இது கருதப்படுகிறது.

1947க்குமுன்-பிரித்தானிய ஆட்சியில் திருவிதாங்கூர், மன்னராட்சியின்கீழ் ஒரு சிற்றரசாக விளங்கியது. சபரிமலை அய்யப்பன் கோயில் திருவிதாங்கூர் ஆட்சிப் பகுதியில் இருந்தது. அரச குடும்பத்துப் பெண்கள் அய்யப்பன் கோயிலுக்குச் சென்று வந்தனர். மாதத்தில் அய்ந்து நாள்களில் குழந்தைக்கு முதல் சோறு ஊட்டும் சடங்கை சபரிமலை அய்யப்பன் கோயிலில் தாய்மார்கள் நடத்தி வந்தனர். 1950இல் திருவிதாங்கூர் - கொச்சி இந்து மத நிறுவனங்கள் சட்டத்தின்படி திருவிதாங்கூர் அரசரின் பொறுப்பில் இருந்த சபரிமலைக்கோயில், திருவிதாங்கூர் தேவசம் வாரியத்தின் பொறுப்பில் சென்றது. இது தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாகும்.

1956இல் கேரளம் தனி மாநிலமானது. 1965இல் கேரள அரசு “கேரள இந்துக் கோயில்கள் (நுழைவு அனுமதி) சட்டம்” என்பதை இயற்றியது. இதன் நோக்கம் தாழ்த்தப்பட்டவர்களையும், பழங்குடியினரையும் தடையின்றிக் கோயில்களில் அனுமதிக்க வேண்டும் என்ப தாகும். அதன்பின் திருவிதாங்கூர் தேவசம் வாரியம் மூலம் மாதவிடாய் அகவைப் பருவத்தில் உள்ள பெண்கள் சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் வருவதைத் தடைசெய்யும் விதி 3(b) இச்சட்டத்தில் சேர்க்கப்பட்டது. அதுவரையில் பெண்கள் சபரிமலை அய்யப்பன் கோயி லுக்குச் சென்றனர். கருவறைப் பகுதிக்குச் செல்லாமல் வெளியிலிருந்தவாறே அய்யப்பனை வழிபட்டு வந்தனர்.

இச்சட்டம் இயற்றப்பட்ட போதிலும், நவம்பர்-திசம்பர் மாதத்தில் நடைபெறும் மகர விளக்குப் பூசை நடக்கும் காலம் தவிர, மற்ற மாதங்களில் எல்லா அகவைப் பெண் களும் சபரிமலைக்குச் சென்று வழிபட்டுக் கொண்டி ருந்தனர்.

இந்நிலையில், தீவிர அய்யப்ப பக்தரான எஸ். மகேந்திரன் என்பவர் பெண்கள் சபரிமலைக் கோயிலுக்குச் செல்வதற்குத் தடைவிதிக்கக் கோரி 1990இல் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். 1991 ஏப்பிரல் 5 அன்று கேரள உயர்நீதிமன்றம் 10 அகவை முதல் 50 அகவை வரை உள்ள பெண்கள் சபரிமலைக் கோயிலுக்குச் செல்ல தடைவிதித்தது. இதுகுறித்து 15 ஆண்டுகள் எவரும் மேல் முறையீடு செய்யவில்லை.

2006இல் கன்னட நடிகை செயமாலா சபரிமலை அய்யப்பன் கோயில் கருவறைக்குள் சென்று அய்யப் பனைத் தொட்டு வழிபட்டதாகக் கூறினார். இது பெரும் விவாதப் பொருளானது. நடிகை செயமாலாவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்நிலையில், இளம் வழக்குரைஞர்கள் சங்கத்தின் சார்பில் 2006 ஆகத்து 4 அன்று பத்து முதல் அய்ம்பது அகவை வரை உள்ள பெண்களைச் சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

2008 மார்ச்சு 7 அன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.பி. சின்கா, வி.எஸ். சிர்புர்கர் ஆகியோர் இந்த வழக்கை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தனர். அதன்பின் எட்டு ஆண்டுகள் இந்த வழக்குக் கிடப்பில் போடப்பட்டிருந்தது. 2017 அக்டோபர் 13 அன்று உச்சநீதிமன்றம் 5 நீதி பதிகள் கொண்ட அரசமைப்புச் சட்ட அமர்வு இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று கூறியது. இதன்படி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கன்வில்கர், ஆர்.எப். நாரிமன், டி.ஒய். சந்திரசூட், இந்துமல்கோத்ரா ஆகியோரைக் கொண்ட அரசமைப்புச் சட்ட அமர்வு 2018 சூலை 17 முதல் ஆகத்து 1 வரை இவ்வழக்கை விசாரித்தது; நீதிபதிகள் 28.9.2018 அன்று தீர்ப்பு வழங்கினர்.

இந்த வழக்கு விசாரணையின் போது மாதவிடாய் அகவைக்குள் இருக்கும் பெண்களுக்கான கோயில் நுழைவுத் தடை நீடிக்க வேண்டும் என்பதற்கு அய்யப்ப பக்தர்கள் சங்கம், நாயர் சேவை சங்கம் பந்தளம் அரசக் குடும்பத்தினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் முதன்மையாக மூன்று காரணங்கள் முன்வைக்கப்பட்டன.

1. அய்யப்ப பக்தர்கள் இந்து மதத்தில் தனித்துவமான பிரிவினர் எனும் தகுதிக்குரியவர்கள் (Denominational Status); எனவே அரசமைப்புச் சட்டம் பிரிவு 26இன்படி, மத நம்பிக்கை சார்ந்த நடவடிக்கைகளை அவர்களின் வழக்கப்படி பின்பற்றிக் கொள்ள உரிமை உண்டு.

2. சபரிமலைiயில் உள்ள அய்யப்பன் நைஷ்டிக பிரம்மச்சாரி அதாவது கடுமையான பிரம்மச்சரியம் பூண்டு தவநிலையில் இருக்கிறார். அதனால் 10 முதல் 50 அகவைப் பெண்கள் அவரைத் தரிசிக்க அனுமதிப்பது அய்யப்பனின் பிரம்மச்சரியத்தைக் குலைக்கும்.

3. கேரள  அரசு 1965இல் இயற்றிய இந்துக் கோயில்கள் (நுழைவு அனுமதி) சட்டம் விதி (3b)இல் பழக்க-வழக்க நடைமுறைகளின்படி, பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட கோயில்களுக்குப் பெண்கள் செல்ல முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

ஆண் நீதிபதிகள் நால்வரும், அய்யப்ப பக்தர்கள் இந்து மதத்தின் தனியான ஒரு பிரிவினர் என்பது நடப்பில் இல்லை; இதற்கான சாத்திர ஆதாரமும் இல்லை என்பதால் இதை ஏற்க முடியாது என்று தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர். ஆனால் நீதிபதி இந்து மல்கோத்ரா தன்னுடைய தீர்ப்பில், அய்யப்ப பக்தர்கள் ஒரு தனிப் பிரிவினர் என்றும் அதனால் பெண்களுக்கான தடைநீடிக்க வேண்டும் என்றும் கருத்துரைத்துள்ளார்.

நீதிபதி சந்திரசூட் தன்னுடைய தீர்ப்பில், “பெண்கள் கோயிலுக்குச் செல்லக் கூடாது என்பதற்கு மத சாத்திர ஆதாரங்கள் இருந்தால்கூட, அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களான சுதந்தரம், சமத்துவம், தன்மதிப்பு ஆகியவற்றுக்கு அது அடிபணிந்ததாகவே இருக்க வேண்டும். அரசமைப்புச் சட்டத்தின் அடிப் படை அலகாக இருப்பது தனிமனிதரே! எனவே தனிமனிதனின் சுயமரியா தையைக் காக்கின்ற கண்ணோட்டத் துடன் தான் தற்போதுள்ள கட்டமை ப்பையும் சட்டங்களையும் அணுக வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி ஏ.எம். கன்வில்கர் அளித்த தீர்ப்பில், “மதத்தில் ஆணாதிக்கத்தை அனுமதிக்க முடியாது; பிரிவு 25(1) இன்படி எல்லா அகவையினரும் ஆண், பெண் வேறுபாடு இல்லாமல் வழிபடு வதற்கு உரிமை உள்ளது. பெண்களின் உடற் கூறைக் காரணம் காட்டி அவர்களை விலக்குவதும், அவர்களின் வழிபாட்டு உரிமையை மறுப்பதும் அரச மைப்புச் சட்டத்துக்கு எதிரானது” என்று கூறியுள்ளனர். நீதிபதி டி.ஒய். சந்திரசூட் இன்னும் ஒருபடி மேலே சென்று, “மாதவிடாய் அகவையினராக இருப்பதைக் காரணம் காட்டி அவர்களை விலக்கம் செய்வது தீண்டாமையின் வடிவமே ஆகும்; புனிதம்-தீட்டு என்கிற பெயரால் எவரையும் இழிவுபடுத்துவதற்கு அரசமைப்புச் சட்டம் இடமளிக்காது” என்று கூறி பெண்களின் கோயில் நுழைவு உரிமையை நிலைநாட்டியுள்ளார்.

கேரள அரசு 1965இல் இயற்றிய இந்துக் கோயில்கள் (நுழைவு அனுமதி) சட்டத்தின் பிரிவு (3b) செல்லாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்து மதத்தில் உள்ள எல்லாப் பிரிவினரும், வகுப்பினரும் கோயிலில் வழிபடு வதற்கு; பழக்கம் மற்றும் வழக்கம் என்கிற நடைமுறை (Custom and Usage) தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்ட சட்டத்தில், அதன் அடிப்படை நோக்கத்திற்கு எதிராக, வழக்கம் என்கிற பெயரால் பெண்கள் கோயிலுக்குச் செல்வதற்குத் தடை விதிக்கும் விதி (3b) அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று நான்கு நீதிபதிகள் அறிவித்தனர்.

இத்தீர்ப்பை பெரும்பாலோர் வரவேற்றனர். கேரளத்தில் ஆட்சியில் இருக்கும் இடதுசாரி சனநாயகக் கூட்டணியின் முதலமைச்சர் பினராய் விசயன் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி பெண்கள் சபரிமலைக்குச் செல்வதற்கு உரிய ஏற்பாடுகளும் பாதுகாப்பும் வழங்கப்படும் என்று அறிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான ஆட்சிக் காலத்தில் கேரள அரசு சபரிமலைக் கோயிலுக்குப் பெண்கள் செல்வதை உச்சநீதிமன்ற வழக்கு விசாரணையில் தொடர்ந்து ஆதரித்து வந்தது. ஆனால் காங்கிரசுக் கட்சியின் தலைமையிலான ஆட்சி இதை எதிர்த்து வந்தது.

அய்யப்ப பக்தர்கள் இத்தீர்ப்பை எதிர்த்தனர். ஆர்.எஸ்.எஸ்.-ம் பா.ச.க.வும் கேரளத்தில் தங்கள் அரசியல் செல்வாக்கை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பாக இத்தீர்ப்பைப் பயன்படுத்திக் கொண்டன. அய்யப்ப பக்தர்களை முன்னிறுத்தி, கேரளம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களையும் பேரணிகளையும் சங் பரிவார அமைப்புகள் நடத்தின. குறிப்பாக, பெண்களைப் பெரு மளவில் திரட்டி “நாங்கள் சபரிமலைக்குச் செல்ல மாட்டோம்” என்று கூறச் செய்தனர். கேரள அரசும், திருவிதாங்கூர் தேவசம் வாரியமும் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு விண்ணப்பம் போட வேண்டும் என்று வலி யுறுத்தினர். இத்தீர்ப்புக்கு எதிரான போராட்டங்களில் காங்கிரசுக் கட்சியும் தீவிரமாகப் பங்கேற்றது.

ஐப்பசி மாத பூசைக்காக சபரிமலை அய்யப்பன் கோயில் 17.10.2018 அன்று திறக்கப்பட்டது. அய்யப்ப பக்தர்கள் என்ற போர்வையில் சங் பரிவாரத்தினர் சபரிமலைக்கு வந்த பெண்களை வழியில் தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பினர். ஆந்திரத்திலிருந்து தன் கணவர், இரண்டு பிள்ளைகளுடன் வந்த மாதவி காவல் துறையின் பாதுகாப்புடன் பம்பையைக் கடந்து மலை ஏறும்போது ‘பக்தர்களால்’ மேற்கொண்டு செல்லவிடாமல் தடுக்கப்பட்டார். இதேபோன்று பல பெண் செய்தியாளர்கள் அச்சுறுத்தப்பட்டனர்; தாக்கப் பட்டனர். அதனால் காவல் துறையினர் தடியடி நடத்தினர். ‘பக்தர்கள்’ காவல்துறையினர் மீது கற்பனை வீசித் தாக்கினர்.

இரண்டு பெண்கள் காவல் துறையினரின் பாது காப்புடன் 18 படிகள் அருகில் சென்ற போது ‘பக்தர்கள்’ தரையில் அமர்ந்து அய்யப்ப முழக்கங்களை எழுப்பி மறியல் செய்தனர். அப்போது அய்யப்பன் கோயிலின் அர்ச்சகர்களும் (தந்திரிகள்) பூசையை நிறுத்திவிட்டு 18 படிகள் முன் அமர்ந்து பசனைப் பாடல்களைப் பாடி னார்கள். தலைமை அர்ச்சகர் கண்டராரு ராஜிவாரு பெண்கள் கோயிலக்குள் நுழைந்தால் கருவறையின் கதவை மூடிவிடுவோம் என்று எச்சரித்தார். இதனால் கொந்தளிப்பான நிலை ஏற்பட்டது. பந்தளம் அரசக் குடும்பத்தினரும், அய்யப்பன் கோயில் தலைமை அர்ச்சகர்களும் சபரிமலை அய்யப்பன் கோயில் அவர் களுடைய சொத்து போல் கருதி நடந்து கொண்டு வருகின்றனர். அதன்பின், காவல்துறை ஐ.ஜி. ஒலி பெருக்கியில் அவ்விரு பெண்களும் திரும்பிச் செல்ல ஒத்துக்கொண்டனர் என்று அறிவித்தார். அதனால் பெரும் மோதல் தவிர்க்கப்பட்டது. முறைப்படியான 5 நாள்கள் நடைத் திறப்புக்குப்பின் கோயில் 22.10.18 அன்று மூடப்பட்டது. எந்த ஒரு பெண்ணும் 18 படிகளை ஏறி அய்யப்பனை வழிபடவிடாமல் பக்தகேடிகள் தடுத்து விட்டனர். அடுத்து, மண்டல - மகர விளக்கு பூசைக்காக நவம்பர் 17 அன்று கோயில் திறக்கப்பட உள்ளது.

பல்வேறு அமைப்புகளின் சார்பில் 8.10.18 அன்று சீராய்வு விண்ணப்பங்கள் உச்சநீதிமன்றத்தில் அளிக்கப்பட்டன. இதை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதி மன்றம் மறுத்துவிட்டது. தசரா விடுமுறைக்குப்பின் இந்த விண்ணப்பங்களை ஏற்றுக்கொண்ட உச்சநீதி மன்றம் இவற்றின் மீதான விசாரணை 13.11.18 அன்று தொடங்கும் என்று அறிவித்துள்ளது.

மூல வழக்கின் விசாரணையின் போது, நாயர் சேவை சங்கத்தின் சார்பில் மூத்த வழக்குரைஞர் பராசரன் வாதிட்டார். அப்போது அவர், “கடவுளே இந்த வயதுடைய பெண்கள் கோயிலுக்குள் வருவதை விரும்பவில்லை; பிறகு நாம் எப்படி அனுமதிக்க முடியும்? இது கோயிலின் புனிதத் தன்மையைக் காப்பதற்காகத் தொன்றுதொட்டுவரும் நிகழ்வாகும். சபரிமலைக்கு ஆண்கள் தங்களது தாய், மகள், சகோதரி என எவரையும் அழைத்து வர உரிமை உள்ளது. ஆனால் அவர்களின் அகவை பத்துக்குக் குறைவாகவும் அய்ம் பதைக் கடந்தும் இருக்க வேண்டும்” என்று கூறினார்.

1.10.18 நாளிட்ட தினமணி ஏட்டில் வெளிவந்த கட்டுரையில், “இந்தப் பிரச்சனையின் அடிப்படை நம்பிக்கை சார்ந்தது. பெண்களின் மாதவிடாயை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கு அனுமதி மறுக்கப் படுகிறது என்கிற தவறான வாதம் முன்வைக்கப்படுகிறது. அது நிராகரிக்கப்பட வேண்டும். சபரிமலையில் அய்யப்பன் நைஷ்டிக பிரம்மச்சரியத்துடன் கூடிய கடுமையான தவத்தில் இருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள். அப்படித்  தவக் கோலத்தில் இருக்கும் சபரிமலை அய்யப்பனின் சந்நிதியில் பெண்கள் அனுமதிக்கப்படக்கூடாது என்பது மாதவிடாய் காரணமாக அல்ல; தர்ம சாஸ்தாவின் தவநிலை காரணமாக என்பதை உணர வேண்டும். தனது தவம் கலைந்துவிடக்கூடாது என்பதற்காக அய்யப்பன் தனக்குத்தானே விதித்துக் கொண்ட கட்டுப்பாடு இது” என்று கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு, சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குப் பெண்களை அனுமதிக்கக் கூடாது என்று கூறுவோர், சொற்களை எவ்வளவுதான் மாற்றி மாற்றிப் போட்டாலும், அவர்களின் முதன்மையான கருத்து - மாதவிடாய் என்பது தீட்டு; மாதவிலக்கு ஆகும் பெண்களும் தீட்டானவர்கள் -தூய்மையற்றவர்கள்-பிரம்மச்சரிய நிலையில் உள்ள அய்யப்பன் முன் நிற்பதற்கும் வழிபடுவதற்கும் தகுதி அற்றவர்கள் என்பதே ஆகும்.

எல்லா மதங்களும் பெண்களை இழிவுபடுத்து கின்றன. ஆனால் இந்து மதம் போல் ‘தீட்டு’ என்பதன் பெயரால் மற்ற மதங்கள் பெண்களை இழிவுபடுத்து வதில்லை. எல்லா மதங்களிலும் ‘புனிதம்’ என்கிற கோட்பாடு இருக்கிறது. ஆனால் இந்து மதத்தில் புனிதம் என்பதற்கு எதிராகத் ‘தீட்டு’ - தூய்மையற்ற நிலை - தீண்டாமை என்பதை முன்னிறுத்தி மனிதர்களை இழிவுபடுத்தல் - ஒடுக்குதல் என்பது பிற மதங்களில் இல்லை. மனுதர்ம சாத்திரத்தில் 5ஆம் பகுதியில் விதி 55 முதல் 110 வரை மனிதர்கள் தொடர்பான தீட்டுகள், அவற்றுக்கான கழுவாய்கள் பற்றி கூறப்பட்டுள்ளன. விதி 57 இறப்புத் தீட்டு பற்றியும் விதி 61 பிறப்புத் தீட்டு பற்றியும் கூறுகிறது. விதி 66இல் வீட்டுவிலக்கானவள் நான்காம் நாள் முழுகியதும் தூய்மையடைவாள் என்று சொல்லப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான போராட்டத்தில் பெண்கள் முன்னிலை வகிப்பதில் வியப்பதற்கில்லை. அந்த அளவிற்கு இந்துமதம் பெண்களை அடிமை மனநிலையில் ஆழ்த்தி வைத்திருக்கிறது. நூறு ஆண்டு களுக்கு முன் கேரளத்தில் கீழ்ச்சாதிப் பெண்கள் தங்கள் மார்பகங்களை மறைக்கக்கூடாது என்கிற நடைமுறை இருந்தது. இதை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்ற போது, மார்பகங்களை சேலையால் மூடிய பெண்களின் மார்புத் துணியை, மார்பகங்களை மறைக்காத பெண்கள் கிழித்தனர் என்பது வரலாறு.

தொன்றுதொட்டு இருந்துவரும் நம்பிக்கை, பழக்க-வழக்க நடைமுறை என்கிற பெயரால் இந்துமத ஆதிக்க வாதிகள் மதம் சார்ந்த மாற்றங்களை எதிர்த்து வருகின்றனர். கணவன் இறந்தவுடன் மனைவியையும் உடன் வைத்து எரிக்கும் உடன்கட்டை ஏறுதல் என்கிற வழக்கத்தை ஒழிக்க 1829இல் ஆங்கிலேய அரசு சட்டம் கொண்டுவந்த போது பார்ப்பன சனாதனவாதிகள் எதிர்த்தனர். குழந்தை மண ஒழிப்பு, கைம்பெண் மறுமணம், தேவதாசி முறை ஒழிப்பு, தலித்துகள் கோயில் நுழைவு போன்றவற்றை மதநம்பிக்கை - பழக்க வழக்கம் என்கிற பெயரால் படித்த அறிவாளிகள் எனப்பட்ட பார்ப்பன-இந்துமத ஆதிக்கவாதிகள் எதிர்த்தனர். 1950க்குமுன் வரை பெண்களுக்கு மணவிலக்கு உரிமை, சொத்துரிமை கிடையாது. ஆண்கள் பல பெண்களை மணக்கலாம். இந்த இழிநிலைகள் எல்லாம் சட்டத்தின் மூலம் மாற்றப்பட்டன.

பழக்க-வழக்க நடைமுறைகள் என்கிற பெயரால் இந்து மதத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை, ஆதிக்க நிலையை அகற்றுவதற்காக மேதை அம்பேத்கர் 1947இல் இந்துச் சட்டத் தொகுப்பு மசோதாவை அரசமைப்புச் சட்ட அவையில் முன்மொழிந்தார். அவர் கொண்டு வந்த திருத்தத்தின் விபரம் :

“இந்தச் சட்டத்தில் திட்டவட்டமடாகக் குறிப்பிட்டவை நீங்கலாக -

அ) இந்துச் சட்டம் பற்றிய மூலபாடம் (text) விதிகள், பொருள் விளக்கம் (interpretation) அல்லது இந்தச் சட்டம் நடப்புக்கு வருவதற்கு முன்னால் ஏற் கெனவே நடப்பில் இருந்த எந்தப் பழக்கச் சட்டமும் வழக்கச் சட்டமும் - இந்தச் சட்டம் நடப்புக்கு வந்த உடனேயே நீக்கப்பட்டுவிடும். இந்தச் சட்டத்தில் சொல்லப்பட்ட எந்தவொன்றும் உடனடியாக நடப் புக்கு வந்துவிடும்.

ஆ)  இந்தச் சட்டம் நடப்புக்கு வருவதற்கு முன்னால், இந்தச் சட்டத்துக்குப் பொருந்தாத தன்மையில் இதற்கு முன்னர் நடப்பில் இருந்த எந்தச் சட்டமும் உடனடியாக நீக்கப் பெற்றுவிடும்” (அம்பேத்கர் நூல் திரட்டு - இந்துச் சட்டத் தொகுப்பு மசோதா நூல் (ஆங்கிலம்) பக்கம் 54).

அரசமைப்புச் சட்ட அவையில் இந்துமத ஆதிக்க வாதிகளின் எதிர்ப்பால் இது நிறைவேறாமல் தடுக்கப் பட்டதால் 1951இல் அம்பேத்கர் தன் அமைச்சர் பதவி யிலிருந்து விலகினார்.

பழக்கச் சட்டம், வழக்கச் சட்டம் குறித்து அம்பேத்கர் கொண்டுவர விரும்பியதன் ஒருதப்படிதான் 28.9.18 அன்று உச்சநீதிமன்றம் சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குப் பெண்கள் செல்லலாம் என்று வழங்கிய தீர்ப்பு ஆகும்.

பெண்ணுரிமையை, சமத்துவத்தை, சனநாயகத்தைப் போற்றுகின்ற அனைவரும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு செயல்வடிவம் பெற உறுதுணையாக நிற்போம்.