கோயில் நுழைவுப் போராட்டம், வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும் பேசப்பட்டிருக்கிறது. இந்து மதத்தைப் பொறுத்தவரை, கோயில் கர்ப்பக்கிரகம்தான் சாதிய ஏற்றத் தாழ்வுகளின் பிறப்பிடமாக, உற்பத்திக் கேந்திரமாக இன்றளவும் விளங்குகிறது. எனவே, பாகுபாட்டின் - தீண்டாமையின் தோற்றுவாயில் சமத்துவத்தைக் கோரும்போது, அதில் வெற்றி பெறும்போது, சமூகத்தின் பிற நிலைகளில் இயல்பாகவே சமத்துவம் மிளிரும். அதனால்தான் கடவுளை மறுத்த பெரியார்கூட, கோயில் நுழைவு மற்றும் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்பதில் தீவிரம் காட்டினார். அர்ச்சகர் பதவிகளை ஜனநாயகப்படுத்துவது என்பது, சமூகத்தை ஜனநாயகப்படுத்துவதற்கான முதற்படி என்பதே அம்பேத்கரின் கருத்துமாகும்.

M.C.Raja
தற்பொழுது கோயில் நுழைவுப் போராட்டங்களை பார்ப்பனர்களும், தேவர்களும் முன்னின்று நடத்தியதாக ஆதாரமின்றி கட்டுக் கதைகள் ("தினமணி' - 8.7.2007; இல. கணேசன் பேட்டி - "புதிய பார்வை', ஆகஸ்ட் 2007) வெளிவரத் தொடங்கியுள்ளன. எனவே, கோயில் நுழைவுப் போராட்டங்கள் தொடர்பான வரலாற்றுப் பின்னணியை உற்று நோக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில், கோயில் நுழைவுக்கான முயற்சி 1872களிலேயே தொடங்கிவிட்டது. இதை நாடார் சமூகம் முன்னின்று நடத்தியது. பார்ப்பனரல்லாதார் இயக்கம், நீதிக்கட்சி என்றழைக்கப்பட்ட தென்னிந்தியர் நலவுரிமைச் சங்கம், 30.11.1917 அன்று நெல்லையில் நடைபெற்ற நீதிக்கட்சி தென்மண்டல மாநாட்டில், இந்து கோயில்களுக்குள் இந்து நாடார்களை அனுமதிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது. "ஆதிதிராவிடர் பொது இடங்களில் நடப்பதைத் தடுப்பவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்; அதற்கு ஒரு சட்டம் இயற்ற வேண்டும்' என எம்.சி. ராஜா 1921இல் கோரிக்கை வைத்தார்.

நீதிக்கட்சி அரசு 1925 இல் இயற்றிய இந்து அறநிலையத் துறைச் சட்டத்தின்படி நாடார்களும், ஆதிதிராவிடர்களும் கோயில்களில் அறங்காவலர் குழுவில் அங்கம் வகிக்க வழிவகை செய்யப்பட்டது. இந்த காலகட்டத்தில்தான் பெரியார் காங்கிரசில் வகுப்புரிமைக்காகப் போராடி, இனி காங்கிரசை ஒழிப்பதே என் வேலை என்று வெளியேறி சுயமரியாதை இயக்கம் கண்டார். 1926 தேர்தலில் நீதிக்கட்சி தோல்வியுற்றது. திராவிடர் இயக்கத்தின் சார்பில் முதல் கோயில் நுழைவுப் போராட்டத்தை நடத்தியவர் ஜே.எஸ். கண்ணப்பர். திருவண்ணாமலை கோயிலில் 7.2.1927 அன்று அவர் கோயில் நுழைவு செய்தார். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 30.4.1928 அன்று வழக்கு முடிவுற்றது. கோயில் குருக்கள் கண்ணப்பர் வரும்போது கதவை மூடிச் சென்றதால் ராமநாத சாஸ்திரி, குப்புசாமி குருக்கள் ஆகியவர்களுக்கு தலா ரூ. 100 அபராதம் விதிக்கப்பட்டது; கண்ணப்பருக்கு ரூ. 100 இழப்பீடு அளிக்கவும் உத்தரவிடப்பட்டது ("குடி அரசு' 6.5.28).

1929 ஏப்ரலில் குத்தூசி குருசாமி முயற்சியில் ஈரோடு ஈஸ்வரன் கோயிலில், கோயில் நுழைவுப் போராட்டம் நடத்தப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் வழக்கு நடத்தி, சுயமரியாதை இயக்கத்தினர் வெற்றி பெற்றனர். 1929 மே 26 அன்று அண்ணல் அம்பேத்கர் தலைமையில் நாக்பூரில் சுயமரியாதை மாநாடு, உண்மை நாடுவோர் சங்கம் மூலம் நடத்தப்பட்டது. அம்பேத்கரை பற்றிய சிறப்பான அறிமுகத்துடன் அவருடைய தலைமை உரையை "ரிவோல்ட்' ஏடு (23.6.1929) வெளியிட்டது. அண்ணல் அம்பேத்கர் அவர்கள் 3.3.1930 அன்று நாசிக் காலாராம் கோயிலில் சத்தியாகிரகத்தை நடத்தினார். 500 பெண்கள் உள்பட 8,000 பேர் இதில் பங்கேற்றனர். 2.5.1932 அன்று சென்னை ஆதிதிராவிடர் சங்கத்தை சேர்ந்தவர்கள், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் நுழைந்து பூசை செய்து வழிபட்டனர். அதே போல திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலிலும் பண்டிதர் அயோத்திதாசர் மகன் பட்டாபிராமன் தலைமையில் ஆதிதிராவிடர்கள் கோவிலுக்குள் சென்று வழிபாடு நடத்திவிட்டு வந்தனர். "ஒன்றும் குடிமுழுகிப் போய் விடவில்லை' என 3.5.32 "திராவிடன்' ஏடு எழுதியது.

இவ்வாறு எண்ணற்ற முயற்சிகள், சாதி ஒழிப்பையும், உரிமை வேட்கையையும் மய்யமாகக் கொண்டு, கோயில் நுழைவுப் போராட்டங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

31.1.1933 அன்று டாக்டர் சுப்பராயன், சென்னை சட்டமன்றத்தில் கோயில் நுழைவு உரிமைக்கான சட்டவரைவு ஒன்றை கொண்டு வந்தார். அப்போது சுப்பராயன் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தார். நீதிக்கட்சி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. "சுப்பராயன் எதிர்க் கட்சியைச் சார்ந்தவர் என்ற காரணத்தினால், நீதிக்கட்சியினர் இதை ஆதரிக்காமல் விட்டுவிடக் கூடாது. இம்மசோதாவை கட் டாயம் ஆதரிக்க வேண்டும்' என்று மசோதா வரும் முன்பே பெரியார் எழுதினார் ("குடி அரசு' - 10.11.32). இம்மசோதா மீது நடைபெற்ற விவாதத்தில் தாத்தா ரெட்டமலை சீனிவாசன் உட்படப் பலரும் பேசினர். நீதிக் கட்சியில் சிலர் ஆதரித்தனர், சிலர் நடுநிலை வகித்தனர். மசோதாவுக்கு ஆதரவாக 56 வாக்குகளும் நடுநிலையாக 19 வாக்குகளும் பதிவாயின. எதிர்ப்பு என்பதே இல்லை. சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவுக்கு வைசிராய் ஒப்புதல் கொடுக்காத காரணத்தால், இது சட்டமாக்கப்படவில்லை.

சுப்பராயன் மசோதாவிற்கு மாற்றாக ரங்க அய்யர் கோயில் நுழைவு மசோதா ஒன்று டெல்லி சட்டசபையில் (பார்லிமெண்ட்) 24.3.1933 அன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவில் பல குறைபாடுகள் இருந்தன. இதனால் இதை அம்பேத்கர் ஆதரிக்க மறுத்தார். காந்தி இதை ஆதரித்துப் பிரச்சாரம் செய்ய ஜி.டி. பிர்லா, ராஜாஜி, தேவதாஸ் காந்தி ஆகியோர் கொண்ட குழுவை அமைத்தார். 1935இல் தேர்தல் வருவதைக் கருத்தில் கொண்டு காங்கிரஸ் கட்சியினர் இம்மசோதாவை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளாமலேயே குழி தோண்டி புதைத்தனர்.

சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி ஆட்சி 1937 தேர்தலில் தோல்வி கண்டது. 1937இல் ராஜாஜி முதல் அமைச்சரானார். எம்.சி. ராஜா அப்போது அவர்களுடன் இருந் தார். 15.8.1938 அன்று எம்.சி. ராஜா கோயில் நுழைவு மசோதா ஒன்றை சட்டமன்றத்தில் தாக்கல் செய்து, "டாக்டர் சுப்பராயன் மசோதாவிற்கு, கவர்னர் ஜெனரல் ஒப்புதல் தரவில்லை. ரங்க அய்யர் மசோதா புதைக்கப்பட்டது. எனவே, கோவில் நுழைவு உரிமைக்காக நான் இப்போது இந்த மசோதாவை தாக்கல் செய்கிறேன்'' என்றார். முதல்வர் ராஜாஜி, "வேண்டாம் திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள்' என்றார். எம்.சி. ராஜா, முடியாது விவாதத்திற்கு எடுத்துக் கொண்டே ஆக வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார். உடனே ராஜாஜி இந்த மசோதாவை எதிர்த்துப் பேசிவிட்டு வாக்கெடுப்புக்கு விட்டார். இதற்கு 24 பேர் ஆதரவு தெரிவித்தனர்; 130 பேர் எதிர்ப்புத் தெரிவித்தனர். கோயில் நுழைவில் ராஜாஜியின் அக்கறையும், யோக்கியதை யும் இவ்வளவுதான்.

காங்கிரஸ் இயக்கம் 1885இல் தொடங் கப்பட்டது. 1916 வரையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடுகளில், தாழ்த்தப்பட்ட மக்களைப் பற்றி எந்த ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. 1917இல் அன்னி பெசன்ட் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில்தான் தீண்டாதார் பிரச்சனை பற்றி பேசப்பட்டது. 1919க்குப் பிறகு காந்தி காங்கிரசை கைப்பற்றுகிறார். காந்தி வர்ணசிரம ஆதரவாளர், அழுத்தமான இந்து சனாதனி, வெளிவேடத்திற்கு தீண்டாமை ஒழிப்பைப் பற்றி பேசி வந்தவர்.

"தீண்டாதார்களுக்கு நான் கூறும் பொதுவான யோசனை என்னவென்றால், தீண்டாமை தீமை நடைமுறையில் இருக்கும் வரையில், அவர்கள் ஆலயப் பிரவேச உரிமையை சோதனை செய்து பார்க்க வேண்டாமென்பதுதான். கர்ப்பகிரகத்திற்குள் செல்லும்படி நான் யாருக்கும் யோசனை கூறியதே இல்லை'' ("யங் இந்தியா' - 8.12.1927).

யார் இந்த மதுரை வைத்தியநாத அய்யர்? 1922இல் திருப்பூர் காங்கிரஸ் மாநாட்டில் நாடார்கள் கோவில் நுழைவு தீர்மானம் கொண்டு வந்தால், காங்கிரசை விட்டே விலகி விடுவேன் என மிரட்டி தீர்மானம் நிறைவேறாமல் செய்தவர். சேரன் மாதேவி குருகுலப் போராட்டத்தில், பார்ப்பன சிறுவர்களோடு மற்ற சாதிச் சிறுவர்கள் ஒன்றாக அமர்ந்து உணவருந்தலாம் எனத் தீர்மானம் கொண்டு வந்தவுடன் காங்கிரஸ் காரிய கமிட்டியிலிருந்து விலகியவர். இந்நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அவர் தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துச் சென்றார் என்ற கூற்றில் உண்மை இருக்க முடியுமா?

1939 சூலை 8 அன்று வைத்திய நாத அய்யர், அமைச்சர் டி.எஸ்.எஸ். ராஜன் வருவதாகச் சொல்லி, குருக்களை இரவு இருக்கச் சொல்லியிருந்தார். இரவு 8.45 மணிக்கு 5 ஆதிதிராவிடர்களையும், ஒரு நாடாரையும் வைத்தியநாத அய்யர் (அய்ந்து ஆதிதிராவிடர்கள் : சுவாமி முருகானந்தம், பி. கக்கன், முத்து, சின்னையா, ஆர். பூவாலிங்கம், விருதுநகர் நகர மன்ற உறுப்பினர் எஸ்.எஸ். சண்முக நாடார்) அழைத்துச் சென்றார் (ஆதாரம் : "தமிழ் நாட்டில் காந்தி' பக். 624). அதற்குப் பிறகு வெளியில் வந்து "அரிசன ஆலயப் பிரவேசம்' நடந்துவிட்டதாக அறிவித்தார். இதை அறிந்த பட்டர்கள், கோயிலைப் பூட்டி விட்டுச் சென்றனர். அங்கு அறங்காவலராக இருந்த ஆர்.எஸ். நாயுடு, நீதிக் கட்சிக்காரர். எனவே, அவர் மறுநாள் பூட்டை உடைத்து கோயிலைத் திறந்து விட்டார். "இரவு 8.45 மணிக்கு மந்திரி வருகிறார் என்று சொல்லி கோயில் பட்டரை ஏமாற்றி கூட்டிக் கொண்டு, நிர்வாகி ஆர்.எஸ். நாயுடு வந்தார். அந்நேரம் பார்த்து கோயிலுக்குள் நுழைந்த வைத்தியநாதய்யரிடம் பட்டர் ஒரு ரூபாய் வாங்கிக் கொண்டு தீபாராதனை காண்பித்து விபூதி கொடுத்தார். அதன் பின்னரே அவருடன் வந்தவர்கள் - அய்ந்து பஞ்சமரும் ஒரு நாடாரும் எனத் தெரிந்தது என வர்ணாசிரம சங்கம் சார்பில் துண்டறிக்கை விநியோகிக்கப்பட்டது'' ("விடுதலை' - 13.7.1939).

கோயில் நுழைவை பகிரங்கமாக நடத்தும் நோக்கமும் துணிவுமின்றி, இரவு 8 மணிக்கு மேல் கோயில் நுழைவு நாடகமாடியதற்குக் காரணம் என்ன என்பதை பெரியார் விளக்குகிறார் : "தேர்தல் வந்தது, கதவும் திறந்தது. வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை மனதிற்கொண்டே வைத்தியநாதய்யர் நாடகமாடினார். இது, ராஜாஜியின் சூழ்ச்சி. இதனால் ஆதிதிராவிடர்களுக்கு நிரந்தரப் பயன் எதுவும் இல்லை. செய்கிற சட்டத்தை ஒழுங்காகவும் நன்றாகவும் செய்ய வேண்டும் என பெரியார் வேண்டுகோள் விடுத்தார்'' ("விடுதலை', 12.7.1939).

நடேச அய்யர் தலைøமயில் வைதிகர் கள் கோயில் நுழைவை எதிர்த்து வழக்கு தொடுத்தனர். இதிலிருந்து வைத்தியநாத அய்யரைக் காப்பாற்றவே, ராஜாஜி ஆலய நுழைவு அவசர சட்டம் ஒன்றை இயற்றினார். பின்பு அது சட்டமாக்கப்பட்டது. இதனால் அவர்கள் கைது செய்யப்படாமல் காப்பாற்றப்பட்டனர். இதைத்தான் வரலாறு படைத்த ஆலயப் பிரவேசம் என்று வி.கே. ஸ்தாது நாதன் 7.7.07 அன்று "தினமணியில்' எழுதியிருக்கிறார். இதைவிட ஒரு பெரிய மோசடி என்னவென்றால், 8.7.07 அன்று "தினமணி'யில் "மீனாட்சி அம்மன் கோயிலில் 68 ஆண்டுகளுக்கு முன் தீண்டாமையை அகற்றிய அரிஜன ஆலயப் பிரவேசம்' என்று ஒரு படத்தை வெளியிட்டுள்ளதுதான். உண்மையில் அந்தப்படம், ஆலயப் பிரவேசம் நடந்ததாக சொல்லப்படும்போது எடுக்கப்பட்ட படமல்ல. வேறு எங்கோ எடுக்கப்பட்ட படம் அது.

இதைவிட ஒரு பெரிய கொடுமை, விடுதலைச் சிறுத்தைகள் மண்ணுரிமை மாநாட்டில் இயற்றிய தீர்மானம். "காந்தியார் கோயில் நுழைவு நடத்தச் சொன்னதாகவும், வைத்தியநாத அய்யர் தலைமையில் அது நடந்ததாகவும், அவருடன் முத்துராமலிங்கத் தேவர் இருந்ததாகவும் - அதனால் அந்த நாளில் கோயில் நுழைவை நடத்த வேண்டும்' என்றும் "நமது தமிழ்மண்' (சூலை 2007) தலையங்கம் கூறுகிறது. இந்த கோயில் நுழைவுப் போராட்டம் நடந்த காலத்தில் முத்துராமலிங்கத் தேவர் சட்டமன்ற உறுப் பினர். அவர் அதில் கலந்து கொண்டதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை. அவர், சத்தியமூர்த்தி அய்யரின் ஆதரவாளர். போராட்டம் நடத்திய வைத்திய நாத அய்யரோ ராஜாஜியின் சீடர். காங்கிரஸ் உட்கட்சிப் பூசல் இருந்த நேரம் அது. வைத்திய நாதய்யரே கோயில் நுழைவுப் போராட்டத்தை நடத்தவில்லை என்னும்போது, அதில் முத்துராமலிங்கத்திற்கு இடமேது?

அண்ணல் அம்பேத்கரின் காலாராம் கோயில் போராட்டமே ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குறியீடாக இருக்க முடியும். சாதி இந்துக்கள் நடத்தாத ஒரு போராட்டத்தைக் கொண்டாடுவது, வரலாற்றை முன்மொழிவதாகாது; வரலாற்றைப் பிழையாக
மொழிவதிலேயே அது முடியும்.