கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

கியூபாவில் புரட்சிகர ஆயுதப் போராட்டம் வழியாக அங்கே நடந்த பாடிஸ்டாவின் சர்வாதிகார ஆட்சியை தூக்கி எறிந்து சோஷலிச ஆட்சியை நிறுவிய ஃபிடல் காஸ்ட்ரோ 90ஆம் வயதில் நவம்பர் 26 அன்று முடிவெய்தினார்.

fidel castro 320கூப்பிடும் தூரத்திலுள்ள நாடு அமெரிக்கா. கியூபாவுக்கும் அமெரிக்காவுக்கும் உள்ள தூரம் 150 கிலோ மீட்டர் தான். ஆனாலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நின்ற அவரை அமெரிக்காவால் வீழ்த்த முடியவில்லை. பொருளாதாரத் தடைகள்; ஆட்சிக் கலைப்பு சதித் திட்டங்கள்; காஸ்ட்ரோவைக் கொல்ல சதி என அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டது அமெரிக்கா. காஸ்ட்ரோவைக் கொல்ல அமெரிக்க உளவு நிறுவனம் 638 முறை சதித் திட்டம் தீட்டி தோற்றதாக செய்திகள் கூறுகின்றன.

‘சோஷலிசம் அல்லது மரணம்’ என்ற முழக்கத்தை அவர் முன் வைத்தார். அவரது ‘சோஷலிசம்’ - இனவெறி எதிர்ப்பு, கல்வி வளர்ச்சி, சமூக மேம்பாடு என்ற சமுதாய சமத்துவக் கண்ணோட்டத்தை முதன்மைப் படுத்தியது. இதுவே அவர் முன்மொழிந்த சோஷலிசத்தின் தனித்துவம்.

உயர்கல்வியை மக்களுக்கு அரசு வழங்க வேண்டும் என்பதற்கு முன்னுரிமை தந்து செயல்பட்டார். “நமது புரட்சியால் விளைந்த மிகச் சிறப்பான பயன்களில் ஒன்று நாட்டில் பாலியல் தொழில் செய்யும் பெண்கள்கூட பட்டதாரிகளாக இருப்பது தான்” - என்று பெருமையுடன் கூறினார். கல்வியை முழுமையாக இலவசமாக்கியது கியூபா. உலகிலேயே தலைசிறந்த மருத்துவக் கல்வியை வழங்கி, ஆற்றல் மிக்க மருத்துவர்களை உருவாக்கிய பெருமையும் சின்னஞ்சிறு கியூபாவுக்கு உண்டு. உலகிலேயே இத்தாலிக்கு அடுத்த நிலையில் கியூபாவில்தான் மருத்துவர்கள் அதிகம்.

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை சந்தித்த கியூபாவுக்கு உதவிக்கரம் நீட்டிய சோவியத் ஒன்றியம், 1990களில் தகர்ந்தபோது கியூபா மக்கள் உணவின்றி உடல்நலிந்து தவித்த நிலையிலும் கியூபா தன்னைத் தானே சரி செய்து கொள்ளும் வலிமையை பெற்றிருந்தது. அடிப்படைத் தேவைகள் இன்னமும் முழுமை பெறாத நாடாகவே கியூபா இருக்கிறது என்பது உண்மைதான். ஆனாலும், அதன் மனித வளத்தை மேம்படுத்தி, நாட்டின் வளங்களை மக்களுக்குப் பகிர்ந்து கொள்ளும் ஆற்றல் மிக்க இளைய தலைமுறை அங்கே வந்து விட்டது. கியூபா மக்களுக்கு வழங்கிய கல்வி தான் இவை எல்லாவற்றுக்குமே அடிப்படை.

காஸ்ட்ரோ, பிறப்பால் ஸ்பெயின் நாட்டுக்காரர். ஸ்பெயின் மொழி அவரது தாய்மொழி. ஆனால், அவர் இலத்தீன் மொழி பேசும் மக்களுக்காகப் புரட்சியை நடத்தினார். இலத்தீன் மொழி பேசும் இலத்தின் அமெரிக்க நாடுகளின் மதிப்புக்குரிய தலைவராக உயர்ந் தார். மக்களை உண்மையாக நேசிக்கும் புரட்சியாளர்களை, ‘மொழி வாதம்’ அன்னியர் என்று குறுகிய கூண்டுக்குள் அடைத்துவிட முடியாது என்பதற்கு காஸ்ட்ரோவைவிட வேறு சான்று தேவை இல்லை.

பொருளாதார ஏற்றத் தாழ்வுகளைவிட சமூக வளர்ச்சிக்கு முன்னுரிமை தந்தது அவரது சோஷலிசப் பாதை. இனவெறி அரசியலுக்கு எதிராக அவர் வெகுண்டு எழுந்தார். 25 ஆண்டுகால சிறை வாசத்துக்குப் பிறகு, தென்னாப்பிரிக்க சிறையிலிருந்து விடுதலைப் பெற்ற ‘கருப்பின மக்கள்’ தலைவர் நெல்சன் மாண்டேலா, தனது தளராத வயதிலும் கியூபாவுக்கு நீண்ட தூரம் பயணித்து காஸ்ட்ரோவுக்கு நன்றி தெரிவிக்க வந்தார். அப்போது மாண்டேலா கூறினார் :

“காஸ்ட்ரோ, கியூபாவிலிருந்து வெகு தூரத்திலுள்ள அங்கோலாவுக்கு தென்னாப்பிரிக்க இன ஒதுக்கலை எதிர்த்துப் போராடிய மக்களுக்காக உங்கள் இராணு வத்தை அனுப்பி வைத்தீர்கள். அதுவே அங்கோலாவின் (இப்போது நமீபியா) விடுதலையை விரைவுபடுத்தியது. அதற்கு நன்றி செலுத்தவே நான் ஆப்பிரிக்காவி லிருந்து வெகுதூரம் கடந்து கியூபா வந்துள்ளேன். நீங்கள் எப்போது எங்கள் தேசத்துக்கு வரப் போகிறீர்கள்?”

தம்மிடம் இருக்கும் குறைந்தபட்ச ‘ஆற்றல்’களைக்கூட பாதிக்கப்பட்டவர் களுடன் பகிர்ந்து கொள்வதே காஸ்ட்ரோ வின் சர்வதேசப் பார்வை.

2016ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதி அவர் ‘கிரான்மா’ இதழுக்கு ஒரு கட்டுரை எழுதினார். அதுவே அவரது கடைசி எழுத்து. மதத்தின் ஆபத்துகளையும் அறிவியல் சிந்தனையின் அவசியத்தையும் வெளிப் படுத்தியது அக்கட்டுரை.

“மதத்தின் கோட்பாடுகள் உலகம் முழுதும் ஒரே தன்மையில்தான் இருக்கின்றன. அமெரிக்காவின் சர்வதேச மனித உரிமைகளுக்கான பிரகடனம், மனசாட்சி, சுதந்திரம், பகுத்தறிவை வலியுறுத்தினாலும் ஒருவரையொருவர் சகித்துக் கொண்டு வாழ வேண்டும் என்ற மதக் கோட்பாட்டையே கூறுகிறது.

அறிவியலும் அதனடிப்படையிலான ஆராய்ச்சிகளும் மனித சமுதாயத்தை வாழ வைத்தாலும் மதங்களையும் மத நம்பிக்கைகளையுமே உலகம் முன்னிறுத்து கிறது. வறட்சியாலும் பல்வேறு காரணங் களாலும் மக்கள் உணவு பற்றாக்குறையில் அவதியுறும்போது அது சொர்க்கத்தில் கிடைக்கும் என்று மதம் கூறுகிறது” என்ற மதங்களின் ஆபத்தான கருத்துகளையே தனது இறுதி கட்டுரையில் அழுத்தமாகக் கண்டித்தார்.

மக்களுக்கான கல்வி, இனங்களின் சமத்துவம், இன ஒடுக்கல் எதிர்ப்பு, மனித நேயம் நிறைந்த சர்வதேசப் பார்வை என்ற தனித் தன்மையே காஸ்ட்ரோவின் மதவாத எதிர்ப்பு தனித்துவம். பெரியாரியத்துடன் அவரது சிந்தனை மிக நெருங்கி இருப்பதை நாம் உணர முடிகிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் உண்மைத் தலைவர்கள் இதயங்கள் ஒன்றுபோலவே துடிக்கின்றன.

ஆனாலும் நமக்கு ஒரு நெருடல் உண்டு. சிங்கள இன ஒடுக்கலுக்கு எதிராக காஸ்ட்ரோ காட்டிய வழியில் ஆயுதப் போராட்டம் நடத்திய விடுதலைப் புலிகள் மீதும் அதற்கு ஆதரவாக நின்ற மக்கள் மீதும் சிங்கள இராணுவம் இனப் படுகொலையை நடத்தி முடித்தப் பிறகும் அய்.நா.வில் கியூபா சிங்கள அரசின் பக்கமே நின்றது நியாயமா?

2009இல் அய்.நா.வில் இலங்கை ‘பயங்கரவாதத்தை’ ஒழித்துவிட்டதாகப் பாராட்டி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கியூபாவின் அய்.நா. பிரதிநிதியே வடிவமைத்தது ஏற்கக் கூடியதா? இவற்றை சுட்டிக் காட்டாமல் எப்படி இருக்க முடியும்?

சென்னையில் காஸ்ட்ரோ - மாவீரர்களுக்கு வீர வணக்கம்!

நவம்பர் 27 மாவீரர் நாளில், கியூபா புரட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோ நவம்.26இல் முடிவெய்தினார். சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் மயிலாப்பூர் செயின்மேரீஸ் பாலம் அருகே காஸ்ட்ரோவுக்கும் ஈழத்தின் மாவீரர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தினர். நிகழ்வில் ஜான் மண்டேலா, வடசென்னை மாவட்டத் தலைவர் ஏசுகுமார், மயிலாப்பூர் மற்றும் இராயப்பேட்டைப் பகுதியைச் சார்ந்த 40 கழகத் தோழர்கள் பங்கேற்று, மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.