fidel castro 398

தோழர்களே, நெருக்கடிக் காலங்களில் எந்த மக்களையும் வழிநடத்திச் செல்ல, அதிமானுட முயற்சி தேவைப்படும். அவர்களின்றி மாற்றங்கள் ஏற்படுவது சாத்தியமில்லை. புரட்சிகர மக்களாலேயே தேர்ந் தெடுக்கப்பட்ட, அவர்களால் அதிகாரம் வழங்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகளை ஒன்று சேர்த்துள்ள இதுபோன்ற கூட்டம், அந்தப் பிரதி நிதிகளின் வாழ்க்கையில் அவர்களுக்குக் கிடைத்த மாபெரும் கௌரவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அந்த கௌரவத்துடன், புரட்சியாளராக இருக்கும் சிறப்புத் தகுதியும் சேர்ந்துகொள்கிறது. இந்த சிறப்புத் தகுதி நமது உணர்விலிருந்து விளைந்ததாகும்.

நான் சோசலிஸ்டாக, அல்லது மேலும் தெளிவாகச் சொல்வதென்றால், கம்யூனிஸ்டாக ஆனது ஏன்? சோசலிஸ்ட் அல்லது கம்யூனிஸ்ட் என்னும் கருத்துரு வாக்கத்தை வெளிப்படுத்துகிற இந்தச் சொல், உழைப்பு, திறமை, மானுட ஆற்றல் ஆகியவற்றால் வழங்கப்படும் பொருண்மைச் செல்வம் அனைத்தையும் ஏழைகளும் பொருளில்லாதவர்களும் இழந்த நாளிலிருந்தே அவர்களைச் சுரண்டி வரும் சிறப்புரிமை பெற்றவர்களால் மிகவும் திரிக்கப்பட்டுள்ளது, அவதூறு செய்யப் பட்டுள்ளது. இந்த இரண்டக நிலையில், காலங் காலமாக, எல்லையே இல்லாமல் மனிதன் எத்தனை காலம் வாழ்ந்திருப்பான்? இதற்கான விளக்கம் உங்களுக்குத் தேவையற்றதாக இருக்கலாம். ஆனால், நமது பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்கும் ஒரு சிலருக்கு விளக்கம் தேவைப்படக்கூடும்.

நான் அறிவிலியோ, தீவிரவாதியோ, கண்மூடித் தனமாகச் செயல்படுவனோ அல்லன், பொருளா தாரத்தைப் பயின்றதன் காரணமாகத் தானாகவே எனது கருத்துநிலையை உருவாக்கிக் கொண்டவனும் அல்லன் என்பது புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்பதற் காகவே எளிய சொற்களில் பேசுகிறேன்.

சட்டமும், அரசியல் அறிவியலும் கற்கும் மாணவனாக நான் இருந்த போது - அப்போது சட்டப் படிப்புக்குத்தான் மேலதிக முக்கியத்துவம் இருந்தது - அவற்றைக் கற்பிப்பவர் யாரும் எனக்கு இருக்கவில்லை. அப்போது இருபது வயதே ஆகியிருந்த எனக்கு விளை யாட்டுகளிலும், மலை ஏறுவதிலும் விருப்பம் இருந்தது உண்மைதான். மார்க்ஸியம்-லெனினியம் ஆகியவற்றைக் கற்பதற்கு ஆசிரியர் யாரும் இல்லாத அந்தச் சமயத்தில், நான் வெறும் கோட்பாட்டாளனாகவே இருந்தேன் என்றாலும் சோவியத் யூனியன் மீது முழு நம்பிக்கை வைத்திருந்தேன். புரட்சி நடந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு லெனினின் பணி உடைக்கப்பட்டது. எத்தகைய வரலாற்றுப் படிப்பினை இது! காலனியத்துக்கும் அதன் பிரிக்க முடியாத துணைவனான ஏகாதிபத்தியத்துக்கும் எதிரான போராட்டத்தின் மகத்தான கட்டத்தைக் குறிக்கும் இன்னொரு மகோன்னதமான சோசலிசப் புரட்சிக்கான வேறோர் எடுத்துக்காட்டை மானுடகுலம் பெறும் வகையில் ரஷியப் புரட்சியைப் போன்றதோர் நிகழ்வு ஏற்படுவதற்கு இன்னும் எழுபது ஆண்டுகள் தேவைப்படாது என்று தயக்கமில்லாமல் சொல்ல முடியும்.

ஆயினும், இன்று புவிக்கோளத்திற்கு மேலே தொங்கிக் கொண்டிருக்கும் மிகப் பெரும் ஆபத்து, நவீன ஆயுதங்களின் அழிவாற்றலிலிருந்து வரக்கூடும். அந்த அழிவாற்றலால் புவிக் கோளத்தின் அமைதியைச் சீர்குலைத்து, புவிப்பரப்பின் மேல் மானுட வாழ்வு இருப்பதைச் சாத்தியமற்றதாக்கச் செய்யமுடியும்.

டைனோசார்கள் மறைந்ததுபோல, மனித இனமும் மறைந்துவிடும். ஒருவேளை, அறிவாற்றலுள்ள புதிய உயிர் ராசிகள் தோன்றுவதற்கான காலமும் வரலாம். அல்லது அறிவியலாளர்கள் பலர் புரிந்துகொண்டது போல, சூரிய மண்டலத்திலுள்ள அனைத்துக் கோள்களும் அவற்றின் துணைக்கோள்களும் உருகிப் போகுமளவுக்கு சூரிய வெப்பம் அதிகரிக்கலாம்.

அந்த அறிவியலாளர்கள் பலரின் கோட்பாடுகள் - நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு அவை தெரியா மலிருக்கலாம் - உண்மையாக இருக்குமேயானால் - செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள மனிதன் இன்னும் கூடுதலாகக் கற்று மெய்நிலைமைக்குத் தன்னைத் தகவமைத்துக்கொள்ள வேண்டும். மானுடகுலம் இன்னும் நீண்டகாலம் உயிர் பிழைத்திருக்குமானால், எதிர்காலச் சந்ததியினர் நாம் அறிந்துள்ளதைவிட அதிகம் அறிந்திருப்பர். ஆனால், முதலில் அவர்கள் மிகப் பெரும் பிரச்சினையைத் தீர்க்கவேண்டியிருக்கும். தங்களுக்குத் தேவைப்படும் குடிநீர், இயற்கை மூலவளங்கள் ஆகிய வற்றின் அளவுகளுக்குள்ள வரம்புகளுடன் தவிர்க்க முடியாதபடி முரண்படுகின்ற யதார்த்த நிலைமைகளை எதிர்கொண்டுள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு உணவளிப்பது எப்படி என்பதுதான் இந்தப் பிரச்சினை.

உங்களில் சிலரோ, பலரோ இந்தப் பேச்சில் அரசியல் எங்கே இருக்கிறது என்று நினைக்கக்கூடும். வருத்தத்தோடுதான் இதைச் சொல்கிறேன் என்பதை நம்புங்கள். ஆனால் இங்கும், இந்த மிதமான சொற்களிலும் அரசியல் இருக்கத்தான் செய்கிறது. மானுடகுலத்தவராகிய நம்மில் பலர், இந்த யதார்த்த நிலைமைகளின் மீது ஆழ்ந்த அக்கறை செலுத்தி, விலக்கப்பட்ட கனிகளை உண்ட ஆதாம், ஏவாள் காலத்தில் நடந்ததையே தொடர்ந்து செய்யாமல் இருப்பார்கள் என்று நம்புவோமாக. தங்களிடம் தொழில்நுட்பமோ, மழையோ, நீர்த்தேக்கங்களோ ஏதுமில்லாத, மணல்களால் மூடப்பட்டுள்ளவற்றைத் தவிர வேறு எந்த நீரூற்றும் இனி இல்லாமலுள்ள ஆப்பிரிக்க மக்களுக்கு நாம் எப்படி உணவளிக்கப் போகின்றோம்? பருவநிலைப் பாதுகாப்பு பற்றிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ள அரசாங்கங்கள் அனைத்தும் என்ன சொல்லப் போகின்றன என்பதை நாம் பார்க்கத்தான் போகிறோம்.

நாம் இந்தப் பிரச்சினைகளில் இடைவிடாது கவனம் குவிக்க வேண்டும். இந்தப் பிரச்சினைகளின் அடிப்படை அம்சங்களுக்கு அப்பால் அவற்றை விரிவாக எடுத்துரைக்க நான் விரும்பவில்லை.

எனக்கு விரைவில் 90 வயதாகிவிடும். இப்படிப் பட்ட எண்ணம் எனக்கு ஒருபோதும் தோன்றியதில்லை. அது ஒருபோதும் எந்த முயற்சியின் விளைவாக இருந்ததில்லை. அது வெறும் தற்செயல் நிகழ்வு. நானும் விரைவில் மற்ற எவரையும் போல் ஆகிவிடுவேன்.

நமது முறை வரும், நம் எல்லோருக்கும். ஆனால், இந்தப் புவிக் கோளத்தில் கியூபக் கம்யூனிஸ்டுகளின் கருத்து எஞ்சியிருக்கும் - இந்தக் கோளத்தில் நாம் உற்சாகத்துடனும் கண்ணியத்துடனும் வேலை செய்தால் மானுட குலத்துக்குத் தேவையான பொருள் வகை, பண்பாட்டுச் செல்வங்களை நம்மால் உற்பத்தி செய்யமுடியும், அதனைப் பெறுவதற்காக நாம் உறுதி தளராமல் போராட வேண்டும் என்பதற்குச் சான்றாக. கியூப மக்கள் வென்று வருவார்கள் என்ற செய்தியை இலத்தின் அமெரிக்காவிலும் உலகிலும், உள்ள சகோதரர்களுக்கு நாம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

இந்த அறையில் நான் பேசுவது இது கடைசித் தடவைகளில் ஒன்றாக இருக்கக்கூடும். தேர்ந்தெடுக்கப் படுவதற்காக இந்தப் பேராயத்தில் எந்த வேட்பாளர் களின் பெயர்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளனவோ அவற்றை ஆதரித்து வாக்களித்துள்ளேன். எனக்கு அழைப்பு விடுத்து எனது பேச்சைக் கேட்கும் கௌரவத்தை அளித்த உங்களுக்கு நன்றி. இந்த மகத்தான முயற்சிக்காக தோழர்களாகிய உங்கள் அனைவரையும், முதலாவதாக தோழர் ரவுல் காஸ்ட்ரோவையும் பாராட்டுகிறேன்.

நாம் தொடர்ந்து அணிவகுத்துச் செல்வோம், நாம் எதைச் செம்மைப்படுத்த வேண்டுமோ அதைச் செம்மைப்படுத்துவோம், மிக முழுமையான விசுவாசத் துடனும் ஒன்றுபட்ட சக்தியுடனும் - மார்ட்டி, மேஸியோ, கோமெஸ்* ஆகியோரைப் போல, தடுத்து நிறுத்தப்பட முடியாத அணிவகுப்பில்.

* 19ஆம் 20ஆம் நூற்றாண்டுகளில் கியூபாவின் விடுதலைக்காகப் போராடியவர்கள் : ஹோஸெ மார்ட்டி (1853-1895); ஹோஸெ மாஸியோ (1845-1896); யுவான் கோமெஸ் (1854- 1933)

(கியூபக் கம்யூனிஸ்ட் கட்சியின் 7ஆவது பேராயத்தின் முடிவில் 19.04.2016 அன்று ஃபிடல் காஸ்ட்ரோ வழங்கிய கருத்துகள். இதுதான் அவர் ஆற்றிய கடைசி உரை.)

தமிழில்: எஸ்.வி.ராஜதுரை

Pin It