fidel castro

வரலாற்று நாயகன் காஸ்ட்ரோவுக்கு வீரவணக்கம்!

தொண்ணூறு அகவையிலும் துடிப்புமிக்க இளைஞர்களின் சிந்தனைத் தூண்டுணர்ச்சியாய் விளங்கியவர் பிடல் காஸ்ட்ரோ. ஆயுதப்புரட்சியில் வெற்றி கண்டு அரசமைத்தாலும் ஆயுதப்புரட்சியாளர்களுக்கு மட்டுமின்றி, அறவழிப் போராட்டம் நடத்துவோர்க்கும் உந்துவிசை அளித்தவராய் வாழ்ந்தவர் புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ. அவர் கியூப நேரப்படி 25.11.2016 மாலை காலமானார் என்ற செய்தி உலகெங்கும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கியூபாவின் கம்யூனிஸ்ட் ஆட்சித் தலைவராக விளங்கிய அவரை, கம்யூனிஸ்ட் அல்லாத நாடுகளின் தலைவர்களும் போற்றினர். இறுதிவரை சமூக மாறுதலின் அடையாளச் சின்னமாகவும் புரட்சியின் கலங்கரை விளக்கமாகவும் இளைஞர் நெஞ்சில் வீற்றிருந்தவர் பிடல் காஸ்ட்ரோ.

தென் அமெரிக்க நாடுகளை தனது வேட்டைக் காடாகவும், அந்நாட்டின் ஆட்சியாளர்களை தனது கங்காணிகளாகவும் பயன்படுத்தி வந்த வட அமெரிக்காவின் புதிய காலனி ஆதிக்கத்தின் முகத்தில் குத்தி, அதன் மூக்கை உடைத்தவர்கள் பிடல் காஸ்ட்ரோவும் அவரின் தோழர்களும். வட அமெரிக்கக் கங்காணியாக ஏவல் செய்த கியூபாவின் சர்வாதிகாரி பாடிஸ்ட்டாவின் இராணுவ அரசை வீழ்த்தும் போரில், பிடல் காஸ்ட்ரோவும் சே குவேராவும் இரட்டையராய் இணைந்தனர்.

வட அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூக்குக்கு முன்னால் உள்ள கியூபா, ஒரு சிறு தீவு. இன்றும் அதன் மக்கள் தொகை 1 கோடியே 27 இலட்சம். 1959இல் பிடல் காஸ்ட்ரோவும் சே குவேராவும் தலைமை தாங்கிய புரட்சி வெற்றி பெற்ற போது, கியூபாவின் மக்கள் தொகை இன்னும் குறைவு. ஆனால், உலகத்தை ஆட்டிப் படைக்கும் வட அமெரிக்க வல்லாதிக்கம் தன் மீது வாலாட்டாமல் தடுத்து வைத்தது அந்த கியூபா.

சின்னஞ்சிறு தேசங்களால் ஏகாதிபத்தியங்களை - பெரிய நாடுகளின் ஆதிக்கத்தை எதிர்த்துச் சமாளிக்க முடியாது என்று செயல்படாவாதம் பேசிக் கொண்டிருப்போருக்கு கியூபா தக்க பாடமாகும்.

சனநாயகம், மனித உரிமை என்றெல்லாம் பீற்றிக் கொள்ளும் வடஅமெரிக்கா பிடல் காஸ்ட்ரோவைக் கொல்ல 638 முறை தனது சி.ஐ.ஏ. உளவுத்துறை மூலமும், கியூபக் கருங்காலிகள் மூலமும் முயன்று தோற்றது.

சோவியத் ஒன்றியம் வீழ்ந்தவுடன் கியூபாவின் கம்யூனிஸ்ட் ஆட்சி முடிவுக்கு வரும் என்று கருதியோர் உண்டு. ஆனால், காஸ்ட்ரோ புயல் தாங்கியாக நின்று கியூப சமத்துவ சமூக அமைப்பைக் காத்தார்.

உலகெங்கும் நடந்த விடுதலைப் போராட்டங்களுக்கும் சனநாயகப் போராட்டங்களுக்கும் கியூபா ஆதரவளித்து வந்தது. பல நாடுகளுக்கு இலவசமாக தனது மருத்துவர்களை அனுப்பி உதவி செய்தது. அமெரிக்காவும் அதன் கூட்டாளி நாடுகளும் கியூபாவுக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதித்துத் தனிமைப்படுத்தின.

இருந்தும், அவற்றையெல்லாம் எதிர்கொண்டு அந்நாட்டு மக்களுக்கு தொடக்கக் கல்வியிலிருந்து இறுதிக் கல்வி வரை இலவசமாக வழங்கி வருகிறது கம்யூனிச ஆட்சி! அதேபோல், அனைவருக்கும் அனைத்து நிலையிலும் இலவசமாக மருத்துவம் வழங்கி வருகிறது. அமெரிக்க முகாமின் பொருளாதார முற்றுகையால், அதன் இயல்பான வளர்ச்சியும் வளமையும் பாதிக்கப்பட்டிருந்தாலும் தன்மானத்தோடு தன் காலில் நிற்கும் நாடாக இன்றும் கியூபா விளங்குகிறது.

வரலாற்றுச் சாதனை படைத்து நிலைத்துவிட்ட கியூபாவுடன், இப்பொழுது அமெரிக்காவும் உறவு கொண்டுள்ளது. பிடல் காஸ்ட்ரோ காலத்திலேயே தூதரக உறவு ஏற்பட்டது. இந்த வளர்ச்சி மகிழ்ச்சிக்குரியதுதான்!

இவ்வளவு சாதனைகள் இருந்தும், உலகெங்கும் வாழும் தமிழர்களின் நெஞ்சில் முள்ளாகக் குத்தக்கூடிய ஒரு தவறையும் காஸ்ட்ரோவின் கியூபா 2009இல் செய்தது. அதன்பின்னரும் செய்தது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கியூபா ஆதரிக்கவில்லை. அதன் இந்நிலைபாடு தமிழர்கள் நெஞ்சில் காயமாய் இருந்த வேளையில், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல், கியூப அரசின் இன்னொரு நிலைபாடு இருந்தது. அதுதான், தமிழீழத்தில் சிங்கள அரசு நடத்திய இனப்படுகொலை பற்றியும் விடுதலைப்புலிகள் நிகழ்த்திய “வன்முறை” குறித்தும் இலங்கை அரசே விசாரிக்க ஓர் ஆணையம் அமைக்க வேண்டுமென்று 2009 சூன் மாதம், சுவிட்சர்லாந்து ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் தீர்மானம் முன்மொழிந்தபோது, இந்திய – இலங்கை அரசுடன் சேர்ந்து கியூபா அத்தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தது. அதே கூட்டத்தில், ஈழத்தமிழர்களை அழித்து விடுதலைப்புலிகளைத் தோற்கடித்ததற்காக இலங்கை அரசைப் பாராட்டி இந்தியா கொண்டு வந்த தீர்மானத்தை கியூபா ஆதரித்து வாக்களித்தது.

அடுத்தடுத்து, ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் ஈழத்தில் இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலை பற்றி விசாரிக்க வேண்டுமென்று வட அமெரிக்கா கொண்டு வந்த கண்துடைப்பானத் தீர்மானங்களைக் கூட கியூபா எதிர்த்து வாக்களித்தது.

பிடல் காஸ்ட்ரோ உயிரோடு இருக்கும்போதே, அவர் வழிகாட்டலில் அவர் தம்பி ரால் காஸ்ட்ரோ நடத்தும் கம்யூனிஸ்ட் ஆட்சி, ஒர் இனப்படுகொலையை ஆதரிக்கிறதே என்ற குமுறல் தமிழர் நெஞ்சமெல்லாம் எழுந்தது. கியூபாவின் அச்செயல், அந்நாட்டிற்கு மட்டுமின்றி வரலாற்று நாயகனாய் விளங்கக்கூடிய காஸ்ட்ரோவுக்கும் நிரந்தரக் கரும்புள்ளியாய் அமைந்து விட்டது!

சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் தன் நாட்டு நலனுக்காக பிறநாட்டு நலனைப் பலியிடும் அதே பாதையில் கியூபாவும் சென்றுவிட்டதே என்ற துயரம் தமிழர் நெஞ்சங்களைக் கவ்வியது. அதற்காக கியூப அரசைக் கண்டித்தோம்.

இது ஒருபக்கம் இருந்தாலும், தமிழினத்தின் அறமும் வரலாற்றுப் பார்வையும் குறுகிய தன்னல நோக்கம் கொண்டவை அல்ல! ஈழ விடுதலைப் போராட்டத்தில் தவறிழைத்ததற்காக பிடல் காஸ்ட்ரோவின் முழு ஈக வரலாற்றையும், புரட்சி வரலாற்றையும் முற்றிலுமாக மறுக்க மாட்டோம்.

கியூபப் புரட்சியின் நாயகன் – ஏகாதிபத்திய எதிர்ப்பு வரலாற்றின் திசைகாட்டி – இன்றைக்கும் இளைஞர்களின் எழுச்சிச் சொல்லாக விளங்கும் பிடல் காஸ்ட்ரோ அவர்களுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் வீரவணக்கம் செலுத்துகிறது!

பிடல் காஸ்ட்ரோவின் சிந்தனைகள் தமிழ்நாட்டில் தமிழ்த்தேசிய வழிகாட்டலுக்குப் பயன்படும். “ஒரு புரட்சியாளன் தனது இலட்சியத்தை ஒளிவு மறைவின்றி தனது பகைவனுக்கும் நண்பர்களுக்கும் தெரிவிக்க வேண்டும்” என்றார் காஸ்ட்ரோ. “தற்காத்துக் கொள்வதற்காக பகைவனிடம் தனது இலட்சியத்தை நேரடியாக வெளிப்படுத்தாமல் சுற்றி வளைத்துச் சொல்வதோ அல்லது மறைத்துப் பேசுவதோ சந்தர்ப்பவாதத்தின் தொடக்கம்” என்றார் காஸ்ட்ரோ. தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு இது எச்சரிக்கை தரும் மிகச்சிறந்த வழிகாட்டு நெறியாகும்.

தன் இலட்சியத்தை ஒளிவு மறைவின்றி சொல்வதன் மூலம் பகைவனின் தாக்குதலை எதிர் கொள்ள புரட்சியாளர்கள் அணியமாக இருக்க வேண்டும். ஆயுதப் புரட்சி நடத்துவோர் ஆயுத வழியில் எதிர் கொள்ள வேண்டும். தமிழ்த்தேசியப் பேரியக்கம் போல், அறவழிப் போராட்டம் நடத்துவோர் சிறைக்குச் செல்லவும் தூக்கு மேடை ஏறவும் அணியமாக இருக்க வேண்டும்.

“நிலவுகின்ற அரசின் எதேச்சாதிகாரத்தின் மீது சீற்றமும், நிலவுகின்ற அரசியல் அநீதிகள் மீது வெறுப்பும் இளைஞர்கள் நெஞ்சில் கனலாக எரிந்தால், அவர்களுக்கு ஒவ்வொரு விடியற்காலமும் சேவல் கூவுகின்ற ஓசை புரட்சிக்கான அழைப்போசையாகவே கேட்கும்” என்றார் பிடல் காஸ்ட்ரோ.

இவ்வாறான காஸ்ட்ரோவின் விழிப்புணர்ச்சிச் சிந்தனைகள் தமிழ் இளைஞர்களுக்கு வழி காட்டட்டும்!

- பெ.மணியரசன், தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்

Pin It