அமெரிக்கா கியூபாவில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு மும்முரமாகப் பலமுறை ஈடுபட்டது. அதற்கு கியூபாவின் தீவான குவாண்டினா மோவைப் பயன்படுத்தவும் முடிவு செய்தது. அது இன்றைக்கும் அமெரிக்காவின் வசம் இருக்கிறது. கியூபா குடியரசுத் தலைவரின் மாளிகையை டிஆர் மாணவர் இயக்கத்தினர் கைப்பற்றினர். அவர்கள் பாட்டிஸ்டாவை எதிர்த்துப் போராடிய தீவிர வாதிகள் என்றாலும், அடிப்படைக் கம்யூனிஸ்டு எதிர்ப்பாளர்கள். அதன் காரணமாக அமெரிக் காவின் உதவியை நாடியவர்கள். இவர்கள் மீஸ்ட்ரா மலையில் நடுப்பகுதியிலுள்ள எஸ்காம்ப்ரே என்ற பகுதியில் முகாமிட்டு முன்பும் போராடியவர்கள் தான். இப்போது அதே பகுதியில் முகாமிட்டனர். இவர்களுடன், நிலத்தை இழந்த சில பண்ணை யார்கள், கம்யூனிச எதிர்ப்பில் மூழ்கிய பல இளைஞர்கள் என ஒரு பெரிய கூட்டம் திரண்டு விட்டது. இவர்களுக்கு அமெரிக்க மத்திய உளவு நிறுவனம், பணமும் ஆயுதமும் கொடுத்து உதவியது; தூண்டிவிட்டது.
1960 முதல் 1964 வரை இவர்கள் அடிபணியாது போராடியதிலிருந்தே, பெற்ற உதவிகளைக் கணக் கிட்டுக் கொள்ளலாம்... இனியும் அனுமதிப்பது ஆபத்து என்பதை உணர்ந்த பிடல் நேரடியாக அதை ஒடுக்குவதில் ஈடுபட்டார். நேராக அந்தப் பகுதிக்கே சென்றார். விவசாயிகளிடம் பேசினார்... எஸ்காம்ப்ரே பகுதியைச் சுற்றிலும் உள்ள சாலை களில் 200 அடிக்கு ஒரு பதுங்குகுழி வெட்டி, அதில் ஒரு காவல் வீரனை நிரந்தரமாகத் தங்க வைத்து அவர்கட்கு உணவு மூன்று வேளையும் அந்த இடத்திலேயே வழங்கிட ஏற்பாடு செய்தார். மூன்று மாதங்கள் இந்தக் காவல் நீடித்தது. எஸ்காம்ரே கலகக்காரர்கள் அணி அணியாகச் சரணடையத் தொடங்கினர். 1964-இல் கலகப்படை அடையாளம் தெரியாமல் கலைந்தது.
கியூபா மக்கள் பிடலின் ஆற்றலை வியந்து பாராட்டினர்... 1960-இல், பிடலைத் தீர்த்துக்கட்ட ஒரு மாபியா குழுத் தலைவனுக்கு 50,000 டாலர் கொடுத்தனர். இந்த ஏற்பாட்டை டொமினிக்கன் நாட்டின் சர்வாதிகாரி டுரிஜிலோ மூலம் செய்தனர். மாபியா குழுவினர், டுரிஜிலோவுக்கு ஒரு படையை குவாண்டினாமோவுக்கு அனுப்பி வைக்குமாறு ஒரு செய்தியை அனுப்பினர். அவர்கள் கேட்டுக் கொண்டபடி அங்கு ஒரு காட்டில் விமானம் மூலம் வந்து டுரிஜிலோ கூலிகள் இறங்கினர்.
புதர்களுக்குப் பின்னாலிருந்து வெளிக்கிளம்பி வந்த பிடலின் படையினர் அவர்கள் அனைவரையும் கைது செய்தனர். ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். பிடலைக் கொல்ல அனுப்பிய மாபியா கூட்டம், அவர்கள் செய்த சதியை ஒலி நாடாவில் பதிவு செய்ததோடு, சகல விவரங்களையும் பிடலுக்குக் கொடுத்து உதவி இருந்தனர் என்பது பின்னர்தான் தெரிந்தது. அவர்கள் சதி பற்றிய வீடியோ படத்தையும் பிடலுக்குத் தந்தனர்.
கொல்ல அனுப்பப்பட்ட மாபியா கும்பல், அமெரிக்காவிற்கு எதிராகவும், பிடலுக்கு ஆதர வாகவும் ஏன் நடந்துகொண்டது என்பது தெளி வாகத் தெரியவில்லை. ஆனால், பொதுவாக லத்தீன் அமெரிக்க நாடுகளில் தீ போல் பரவிவந்த அமெரிக்க எதிர்ப்பே காரணமாக இருக்கக் கூடும். பிடலைத் தீர்த்துக்கட்டி விட அமெரிக்க உளவு மையம் எடுத்த முயற்சிகள் ஒன்று இரண்டல்ல. உலகின் பல நாடுகளில் இத்தகைய அரசியல் படுகொலைகளைக் குறி தவறாது நிறைவேற்றி வருகிற உளவு மையம் பிடல் விஷயத்தில் மட்டும், 40 வருடங்களுக்கு மேலாக நூற்றுக்கணக்கான தடவைகள் முயன்றும் தோல்விதான் கண்ட பலன்.
சுருட்டில் நஞ்சு தடவிக் கொல்லப் பலமுறை முயன்றனர். இதைத் தெரிந்து, தாங்களே தயாரித்த சுருட்டைத் தவிர, பிறர் தரும் சுருட்டு எதையும் புகைக்காது இருந்தார். புகைபிடிக்கும் பழக்கம், ஒரு மனிதனை வழக்கத்திற்கு அடிமையாக்கிவிடும். எனவே எப்போதாவது சறுக்கிவிட நேரிடலாம் என உணர்ந்த பிடல் 1970-களில் புகைப்பதையே கைவிட்டார். அதேபோல் இறக்குமதி செய்யப் பட்ட எந்தக் குளிகையையும் மருந்துக்காகக் கூட சாப்பிடுவது இல்லை... ராஜ தந்திரிகளுடன் கை குலுக்கும் போதும் அவர்கள் மோதிரம் போட்டு இருக்கிறார்களா? என்பதைக் கவனிப்பாராம்.
மோதிரத்தில் நஞ்சு ஊசி செய்து ஏற்றவும் உளவு மையம் பல முறை முயன்றதாம். தனக்கு நம்பிக்கையுள்ளவர்கள் வீட்டில் மட்டுமே உணவு அருந்துவார். கழுகின் வேட்டையிலிருந்து தப்பிய ஒரே அரசியல் தலைவர் பிடல் என்றால், அது வெறும் புகழாரம் ஆகாது! வரலாற்று உண்மை.
ஐசன் ஹோவர் நேரடியாக சில நடவடிக்கை களை எடுத்தார். கியூபாவிடமிருந்து சர்க்கரை வாங்குவதைத் தடை செய்தார். வேறு பல பொருட் களையும் கியூபாவுக்கு அனுப்பத் தடை செய்தார். கியூபாவிலிருந்து 25,000 பேர் அமெரிக்காவிற்கு ஓடி விட, படகுகளைக் கொடுத்து உதவ ஏற்பாடு செய்தார். இவர்களில் பலர் டாக்டர்கள், என்ஜினி யர்கள், தொழிலதிபர்கள் ஆவர். இதனால், பொருளாதார நெருக்கடியும், ஆள் பற்றாக் குறையும் ஏற்பட்டது.
வெனிசூலாவில் சோவியத் யூனியன், விஞ்ஞான, தொழில் வளர்ச்சி கண்காட்சி ஒன்றை நடத்தியது. அதற்கு குவேராவும், வேறு சில அமைச்சர்களும் போயிருந்தனர். அதைத் திறந்துவைக்க வந்திருந்த அனடாஸ் மிக்கோயனை (சோவியத் துணைப் பிரதமர்) சந்தித்து, அதே கண்காட்சியை கியூபா விலும் நடத்த வேண்டும் என்றும், மிக்கோயன் திறந்துவைக்க வர வேண்டும் எனவும் அழைத்தனர். அழைப்பை ஏற்றார்.
மூன்று மாதங்கட்குப் பிறகு கியூபாவில் கண்காட்சி நடத்தவும், திறந்து வைக்கவும் மிக்கோயன் போனார். அவரை பிடல் விமான நிலையத்தில் வரவேற்றார். சில நாட்கள் தங்கி யிருந்த மிக்கோயன் பிடல், சே, ரால், ரோட்ரிகஸ் போன்ற இளம் தலைவர்களின் ஞானத் தந்தை யாகவே மாறிவிட்டார். சே தன் வீட்டிற்கு வருமாறு அழைத்தவுடன், வீட்டிற்குப் போய் உணவு அருந்திக்கொண்டே, சேயின் மனைவி யிடம் “இந்த முரட்டுப் பையனோடு எப்படியம்மா சமாளிக்கிறாய்? உலகையே உருட்டுகிற ஆளாகத் தெரிகிறாரே!” என்றாராம். குழந்தைகளை மடியில் வைத்துக் கொண்டார். அவர்கட்குப் பரிசுகளை வழங்கினார். அதைவிட அவர்களுடன் விளை யாடினார்.
அதாவது சுருங்கச் சொன்னால், அரசுக்கும் - இன்னோர் அரசுக்கும் இடையிலான உறவு என்று மட்டும் தொடங்காமல், ஆழமான தோழமைக்கு வித்திடப்பட்டது. ஒப்பந்தம் போட்டுக் கொள்ள சோவியத் யூனியனுக்கு வருமாறு அழைத்து விட்டுப் போனார். மறு மாதமே மாஸ்கோ போனார் பிடல் காஸ்ட்ரோ. அரசு மரியாதை வரவேற்பு முறைப்படி நடந்தது. அதைவிட ரஷ்ய மக்கள் காட்டிய அன்பும், மரியாதையும் பொங்கிப் புரண்டது என்று கூறலாம்.
தொழிற்சாலைகளுக்குச் சென்றபோது தொழி லாளர்கள் அவரைக் கட்டிப் பிடித்தனர். மாண வர்கள் மொய்த்தனர். வயதான பெண்கள் வாழ்த்துக் கூறினர். அன்பின் மழையில் நனைந்தார் பிடல்.
சோவியத் யூனியன் சர்க்கரை வாங்கிக் கொள்ள ஒப்பியது. வேறு பல தேவைப் பொருட் களை ஏற்றுமதி செய்யவும் ஒப்பியது. பெரும் தொகையைக் கடனாக வழங்கியது. அமெரிக்கா கியூபா சர்க்கரையை வாங்க மறுத்து பொருளாதார முற்றுகை போட்டிருந்த நேரத்தில் சோவியத் நாடு கை கொடுத்தது. கியூபா உற்பத்தி செய்யும் மொத்த அளவில், 10 விழுக்காடு சர்க்கரையை மட்டும்தான், ரஷ்யாவும், சோசலிச நாடுகளும் வாங்கினர். மலை போல எஞ்சியிருந்த சர்க்கரை பெரும் பிரச்சினைகளை உண்டாக்கிற்று.
எதற்கும் கலங்காமல், சகலருக்கும் கல்வி, சுகாதாரம் என்ற திட்டத்தை நிறைவேற்றி வந்தனர். ஹவானாவிற்குக் கிழக்கில், கடற்கரை ஓரமாக 48,000 ஏக்கர் சதுரப் பரப்பளவு உள்ள சதுப்பு நிலம் கழிமுகத் துவாரமாக இருந்தது. இதை பண்படுத்தி, பயிரிடக்கூடிய நிலமாகவும், சுற்றுலா மையமாகவும் ஆக்கிவிட, கியூபா அரசு விரும்பிற்று. இந்த இடத்தை பிடலும், தோழர்களும் ஆய்வு செய்து வந்தனர். ஒருமுறை அதன் மீது ஹெலி காப்டரில் பறந்தபோது, அது தாழப் பறந்து சேற்றில் பாதி புதைந்து நின்றுவிட்டது. புதை மணல் நிறைந்த பகுதி. முதலில் குதித்து வெளியில் வந்தவர் பிடல். அவர் கரையில் ஏறியபின் சட்டைப் பையில் வைத்திருந்த புத்தகத்தைப் படிக்கத் தொடங்கிவிட்டாராம்.
சிரமப்பட்டு வெளியேறி வந்த சீலியாவும், இதர தோழர்களும் “எங்களைக் காப்பாற்ற முயற்சிக்காமல், புத்தகம் படிக்கத் தொடங்கி விட்டீர்களே... ஏன்?” என்று கேட்டபோது, பிடல் சிரித்துக்கொண்டே சொன்னாராம், “இதைவிட மோசமான புதை மணலில் நம் மக்கள் சிக்கி இருக்கிறார்கள். இங்கே நமது ஹெலிகாப்டர் பாதிதான் மூழ்கியிருக்கிறது. இதிலிருந்து தப்ப முடியாத நீங்கள், இதை விட ஆழமாக மூழ்கி யிருக்கிற நமது மக்களை எப்படிக் காப்பாற்ற முடியும்?” எனச் சொன்னாராம். பையில் வைத்திருந்த புத்தகத்தை மூன்று நாட்களாக படிக்க நேர மில்லையாம்... இதுதான் தொந்தரவு செய்யப் படாத நேரம் என்பதால் படித்தாராம். எவ்வளவு நெருக்கடிகள் மிகுந்து அழுத்தினாலும் புத்தகங் களுக்குள் அமிழ்ந்துவிடுகிற ஒரு பக்குவம் அவரிடம் இருந்தது. அந்தச் சதுப்பு நிலத்தை பல ஆண்டுகள் முயன்றும், மேம்படுத்தவே முடிய வில்லை. “இயற்கையை எதிர்த்துப் போரிட முடியாது. ஒத்தி வைப்போம்” என்றார் பிடல்.
ஐ.நா. சபையின் 25-வது ஆண்டு விழா நியூயார்க்கில், பெரும் விழாவாக ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. உலக நாடுகளின் புகழ்மிக்க தலை வர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியாக அமைந்தது. சோவியத் நாட்டின் நிகிடா குருசேவ், இந்தி யாவின் பிரதமர் ஜவகர்லால் நேரு, யுகோவின் டிட்டோ, எகிப்தின் நாசர், கானாவின் நெக்ரூமா, சீனாவின் சூ- என்-லாய், இந்தோனேசியாவின் சுகர்னோ, கியூபாவின் பிடல், அமெரிக்காவின் ஐசன் ஹோவர், டான்சானியாவின் சிக்கோ தோரே என அரசியல் நட்சத்திரக் குவியல் நியூயார்க்கில் மட்டுமல்லாது, உலகின் கவனத்தையே ஈர்த்தது. முப்பத்தி நான்கு வயதே நிறைந்திருந்த பிடல், இவர்கள் மத்தியில் எல்லோரையும் கவர்ந்த சிவப்பு நட்சத்திரமாக பத்திரிகைகளால் வருணிக்கப் பட்டார். அப்பொழுது ஐ.நா.வின் செயலாளராக இருந்தவர் டாக் ஹேமர் சீல்டு.
நியூயார்க்கில் பிடலின் குழுவினர்க்கு ஒதுக்கப் பட்டிருந்த நட்சத்திர விடுதி, கேட்ட கட்டணமும், போட்ட நிபந்தனைகளும் பிடலுக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. தன் குழுவினரை அழைத்துக் கொண்டு, டாக் ஹேமர் சீல்டின் அலுவலகத்துக்குப் போனார். “நாங்கள் இங்கேயே வராந்தாவில் தங்கவும் தயார், அல்லது பூங்காக்களில் திறந்த வெளிகளில் படுத்துறங்கவும் தயார். நாங்கள் மலைகளில் வாழ்ந்தவர்கள் என்பதைத் தாங்களறி வீர்கள். ஐ.நா. சபை, அமெரிக்காவில் இருப்பதே சரி தானா என்பதைப் பரிசீலிக்க வேண்டும்” என்றாராம்.
இந்த உரையாடலுக்குப் பிறகு, கருப்பு நிற மக்கள் வாழும் மன்காட்டனிருந்த ஒரு விடுதியில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு அனுமதி பெற்ற விபச்சார விடுதி இருந்தது. அதை மையப் படுத்தியே அமெரிக்கப் பத்திரிகைகள் எழுதின. “விபச்சார விடுதி வைத்திருப்பதைப் பற்றி வெட்கப் படாத அமெரிக்கா, அந்தத் தெருவில் நடப்பது அவமரியாதைக்குரியது என்று எழுதுகிற மாய் மாலத்தை உணரக்கூடிய சக்தி கூட அமெரிக்க மக்களுக்கு இல்லையென்றால் இயேசுநாதரே பிறந்து வந்தாலும் உங்களை மன்னிக்கமாட்டார்” என்றார்.
இங்கு தங்கியிருந்த பிடல் காஸ்ட்ரோவைச் சந்திக்க நிகிடா குருசேவ் வந்தார். பத்திரிகைகள் படம் பிடிக்கக் காத்திருந்தன. பிடலும், குருசேவும் கட்டித் தழுவியபடி படப்பிடிப்பாளர்களுக்குக் காட்சி தந்தனர். மறுநாள் செய்தியும், படமும் அதுதான்.
இதன் பிறகு ஐ.நா. சபையில் நிகிடா ஏகாதி பத்திய நடவடிக்கைகளைக் கண்டித்து “உலக அமைதி கெடுவதற்கு அவர்கள்தான் காரணம்” என்று சாடினார். பிடல் உற்சாகமாகக் கை தட்டினார். பின்னர் பேசிய பிடல், 4 ஙூ மணி நேரம் பேசியது வரலாற்றுப் புகழ் பெற்றது. அதில் நாடு களின் சுதந்திரம், உலகின் அமைதி பற்றியே பேசினார்.
அமெரிக்க மக்களுக்கும் நட்புறவுச் செய்தியை அறிவித்தார். “இளம் தலைவரின் ராஜதந்திர மேதாவித்தனமான சொற்பொழிவு” என ஏடுகள் புகழ்ந்தன.
அதே நேரத்தில், கியூபாவில் அரசுடைமை யாக்கப்பட்டுவிட்ட அமெரிக்க நிறுவனங்கள், தங்களுக்கு வரவேண்டிய கடன் பாக்கிக்காக பிடல் வந்த விமானத்தைக் கைப்பற்றிவிட வழக்குத் தொடர்ந்தனர். எனவே, கியூபா விமானம் அவரை இறக்கிவிட்ட மறுவினாடியே கியூபாவுக்குத் திரும்பிவிட்டது.
விடுதியில் வந்து பிடலை நிகிடா சந்தித்த பிறகு, அவரது விடுதிக்கே போய் நேருவும் சந்தித்து வாழ்த்துக் கூறி “இளம் வயதுக்குள், உலகின் வரலாற்று வரியாக ஆகிவிட்டதற்காக வாழ்த்துக்கள்” என்றார். டிடோ மட்டும் அவரைக் கை குலுக்கவோ, பேசவோ இல்லை. இவரும் அவரைச் சந்திக்க முடியவில்லை. பிரான்சின் அதிபர் டிகால் மட்டும் பிடலிடம் பாதுகாப்பாக இருக்க வேண்டியதன் அவசியத்தை, முறைகளை சில மணி நேரம் விளக்கிக் கூறியதாகக் கூறப்படுகிறது.
நேரு - பிடல் சந்திப்பிற்குப் பின்னர், இரு நாட்டு உறவுகளும் பலப்படத் தொடங்கின. இந்தியா, கியூபாவின் கல்வி முயற்சிக்குப் பல நன்கொடைகளை வழங்கியது. நேரு காலம் வரையில் உலக சமாதானத்திற்காக விடாது குரல் எழுப்பி வந்ததை வரலாறு மறக்காது. பிடல் திரும்புவதற்காக ரஷ்ய இல்யூசின் விமானம் தயாராக இருந்தது.
ஐ.நா. கூட்டம் முடிந்தவுடன், நிகிடாவும் ஐசன் ஹோவரும் சந்திப்பதாக இருந்தது. அந்தக் கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக அமெரிக்கா அனுப்பிய யு. 2 விமானம் ரஷ்யாவின் மீது வேவு பார்க்கப் பறந்தபோது சுட்டு வீழ்த்தப்பட்டது. அதை ஓட்டிய விமானி பவர்ஸ் உயிருடன் சிறைப் பிடிக்கப்பட்டார். அவர் உளவுபார்க்க வந்ததைத் தொலைக்காட்சிப் பேட்டியில் ஒப்புக்கொண்டார். குருசேவ், அமெரிக்காவை கடுமையாகச் சாடினார். சந்திப்பை ரத்து செய்துவிட்டு ரஷ்யா திரும்பி விட்டார். அமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யா மட்டுமல்லாது, அதன் அருகில் இருந்த கியூபாவும், அமெரிக்கர்களால் எதிரி ஆக்கப்பட்டது.
கியூபாவிற்குத் திரும்பிய பிடல், நிதி மந்திரி யிடம், “ஆயுதம் வாங்கிடப் பணம் இருக்கிறதா?” எனக் கேட்டார். பாட்டிஸ்டா ஓடியபோது பணப் பெட்டியையும், வாங்கியிருந்த ஆயுதங்கள் பலவற்றையும் கடத்திச் சென்று விட்டது தெரிந்தது. ஒரே ஒரு கணக்கில் 5 மில்லியன் டாலர் வங்கியில் இருந்தது. அதை வைத்து, ஐரோப்பாவில் ஆயுதங் களை வாங்கி வர பாதுகாப்பு மந்திரி புறப்பட்டார். பிரான்ஸ், பெல்ஜியம், டென்மார்க், இத்தாலி எனப் பல நாடுகளிலும் ஆயுதங்கள் வாங்கிட எடுத்த முயற்சி வெற்றி பெறவில்லை. பணம் தந்தாலும், ஆயுதம் விற்க மறுத்துவிட்டனர். அமெரிக்காவின் அச்சுறுத்தலே காரணம் என்பது தெரிந்தது.
இறுதியாக இத்தாலி மட்டுமே சிலவகை ஆயுதங்களைக் கொடுக்க முன் வந்தது. பிரான்சி லிருந்து ஓரளவு ஆயுதங்களுடன் வந்த கப்பல் ஹவானா துறைமுகத்தில் நங்கூரம் போட்டிருந்த போது வெடித்துச் சிதறியது. 60 பேர் மாண்டனர். இதுவும் அமெரிக்கச் சதியே என்பதை உணர்ந்த பிடல், எந்த வினாடியிலும் அமெரிக்கா முழுத் தாக்குதலைத் தொடுக்கக்கூடும் என எதிர்பார்த்து, மக்களைத் திரட்டி, பாதுகாப்புக்குத் தயாராக இருக்கும்படியும், முதல் வீரனாக, தான் நிற்கப் போவதைத் துப்பாக்கியைத் தூக்கிக் காட்டிய போது, இரு வெண்புறாக்கள் அவரது தோள்களில் மக்களின் முழக்கத்திற்கிடையே வந்திறங்கியது.
“நூறு, இருநூறு தேர்ந்தெடுக்கப்பட்ட, கட்சி களால் கட்டுப்படுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப் பினர்கள் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினால், அதை ஜனநாயகமே என ஒப்பும் பலர், பல லட்சம் மக்களைத் திரட்டி, அவர்களிடம் விளக்கிக் கூறி, ஒப்புதல் பெற்று ஒரு செயலில் ஈடுபடும்போது மனித உரிமை மீறல், ஜனநாயகப் படுகொலை என்கிற குழப்பம் எப்பொழுது தீருமோ?” எனக் கேட்டார் பிடல்... “பிடல் நீங்கள் கூறுவதுதான் சரி” என்று மக்கள் முழங்கினார்கள். இவ்வாறு மக்களைத் திரட்டி, அவர்களிடம் அடுத்த திட்டத்தை விளக்கி விட்டு, நடவடிக்கையில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் பிடல்.
ஜான் கென்னடி அமெரிக்காவின் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரும் பிடலும் சமகாலச் சிந்தனையோட்டத்தைச் சேர்ந்தவர்கள். தனிப்பட்ட முறையில் இருவரும் ஒருவரையொருவர் மதித்ததாகத் தெரிகிறது. இருவருமே நூல்கள் வாசிப்பதில் அக்கறையுள்ள வர்கள். கென்னடி கெடுபிடி அரசியலை விரும் பாதவர் என நம்பப்பட்டது. ஆனால், கியூபா மீது படையெடுப்பதற்கான திட்டமும், பிடலைத் தீர்த்துக் கட்டுவதற்கான திட்டமும் முன்கூட்டியே தயாரிக்கப்பட்டிருந்தது. அரசுக்கும், நடப்புக்கும் தொடர்பு இல்லாமல், தான் நினைத்த மூப்பாக மத்திய உளவு மையம் இயங்கி வந்தது... கியூபா விலும், லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் மக்கள் மத்தியில் ஏற்பட்டு வந்த உணர்வுகளை கவனத்திற் கொண்டு, லத்தீன் அமெரிக்க நாடுகளின் வளர்ச்சிக் கான ஒரு திட்டத்தையும், அதற்கென 20 பில்லியன் நிதி ஒதுக்குவதாகவும் குறிப்பிட்டார். அவர் கூட்டிய மாநாட்டில் பிடல் கலந்துகொள்ளவில்லை. ஆறு மாதங்களுக்கு முன்னர் அர்ஜண்டைனாவில் பேசிய போது “30 பில்லியன் ஒதுக்கிட அமெரிக்கா தயாரா?” என பிடல் கேட்டிருந்தார். அந்த ஒலி மாநாட்டில் எதிரொலித்தது. அமெரிக்கப் பத்திரி கைகள் கூட, பிடலின் திட்டத்திற்குக் கென்னடி ஒப்புதல் என்பதைப் போல எழுதின. அதில் எந்தப் பணமும் கியூபாவிற்கு வரவில்லை. மாறாக பன்றி வளைகுடா படையெடுப்பிற்கு முழு தயாரிப்பு நடந்துகொண்டிருந்தது.
அமெரிக்கா பன்றி வளைகுடா படையெடுப்பைத் துரிதப்படுத்தியதற்கு சில காரணங்களைக் கூறிற்று. கியூபாவிலிருந்து நடுத்தர வர்க்கத்தினர் அமெரிக் காவுக்கு ஓடிவந்த வண்ணம் இருந்தனர். லத்தீன் அமெரிக்க நாடுகளில் சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராடியோர்க்கு கியூபா பல வகைகளில் உதவியது. அல்ஜியர்ஸ் விடுதலைப் போராட்டத்தில் கியூபர்கள் நேரில் குதித்தனர். காங்கோவிலும் கியூபா வீரர்கள் பயிற்சி தந்து வந்தனர். கியூபாவின் டாக்டர்கள் 43 நாடுகளில் சேவை செய்வதில் ஈடுபட்டிருந்தனர்.
கியூபா டாக்டர்கள் மருத்துவத்திலும், மக்களோடு மக்களாகச் சேர்ந்து வாழ்வதிலும் பயிற்சி பெற்றுத் தேறி இருந்ததால், அமெரிக்க அரசு பெரும் பணச் செலவில் நிறுவியிருந்த அமைதிப்படையை விட அதிக செல்வாக்கைப் பெற்று வந்தது. சோவியத் நாட்டின் உதவியோடு பல தொழிற்சாலைகள் கட்டப்படுவதும் அமெரிக் காவின் கண்களை உறுத்தி இருக்கலாம். எல்லா வற்றிற்கும் மேலாக ஒரு ரஷ்ய நண்பன் அமெரிக்க வட்டத்திற்குள் இருப்பதை அமெரிக்கா விரும்ப வில்லை.
எனவே, குவாண்டினாமோ தீவில் விமானம் மூலம் படைகளை இறக்குவது, மறுபுறம் கிழக்குப் பகுதியிலிருந்து பறந்து வந்து விமானத் தாக்குதலை நடத்துவது, மீஸ்ட்ரா மலைப்பகுதியில் எஸ்காம்ப்ரே பகுதியிலிருந்த புரட்சிக் குழுவையும் கிளப்பி விடுவது, நாட்டில் பல பகுதிகளில் ஏககாலத்தில் கலவரங்களை நடத்துவது. இதற்குக் கென்னடி ஒப்புதல் தந்தார். தாக்குதலில் கியூபா நாட்டி லிருந்து வெளியேறி வந்திருந்த கியூபர்களை முன்னிறுத்திப் போரிடக் கூறினார்.
கியூபா விமானத்தின் அடையாளங்கள் பொறித்த பி. 26 விமானங்கள் ஹவானா மீது பறந்து பிடல் எதிர்ப்புப் பிரசுரங்களைப் போட்டன. அடுத்து விமான நிலையத்தில் குண்டு போட்டு மூன்று விமானங்களை அழித்தனர். பன்றி வளை குடாவில் படகுகளில் நெருங்கி வந்துகொண் டிருந்தனர். மீஸ்ட்ராவை நோக்கியும் ஒரு கப்பல் வந்தது. மீஸ்ட்ரா கரையோரம் முழுவதிலும் விவசாயிகள் துப்பாக்கிகளை ஏந்தி நின்றனர். கப்பலை ஓட்டி வந்த அமெரிக்க அதிகாரி, ஒரு குண்டுகூட வெடிக்காமல், திரும்பிச் சென்று விட்டார். எஸ்காம்ப்ரே பகுதியிலிருந்த தீவிர வாதிகள் சுற்றி வளைத்துத் தாக்கப்பட்டனர். குவாண்டினாமோ வந்திறங்கிய படையில் பலர் சரணடைய நேரிட்டது.
பன்றி வளைகுடாச் சண்டை மட்டும் எஞ்சி யிருந்தது. பிடல், ரால், சே இன்னும் பலர் நேரில் போரில் குதித்தனர். பன்றி வளைகுடாவை நோக்கி வந்த படகு தாக்கப்பட்டு நீரில் மூழ்கத் தொடங்கியது. கரையோரம் படைவீரர்களை விட பல்லாயிரக் கணக்கில் திரண்டிருந்த மக்கள் கைகளில் சாதாரணத் துப்பாக்கிகள் இருந்தன.
பன்றி வளைகுடாப் போர்த் தோல்வி அமெரிக் காவில் அரசியல் புயலைக் கிளப்பியது. பிடல் எனும் பேருருவம் மக்கள்முன் எழும்பி நின்றது.
பன்றி வளைகுடாப் போரில் நான்கு அமெரிக்க விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. வளைகுடாவில் சிறிய கப்பல் மூழ்கியது. வீரர்கள் சிலர்தான் கொல்லப்பட்டனர். 4000 பேர் கைதாகினர். கியூபர்களுக்கு மூன்று விமானங்கள் சேதம். உயிர்ச் சேதம் மிக மிகக் குறைவு. அமெரிக் காவின் கௌரவம் சிதறுண்டது. சின்னஞ் சிறு கியூபா வென்று நின்றது. அதே காலத்தில் வியத்னாமிலும் பலத்த சேதங்களை அமெரிக்கா அனுபவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பிடல் 4000 கைதிகளையும் விடுவிக்க ஒப்புக் கொண்டார். அதற்கு ஈடாக ஒரு பெரும் தொகையையும், நீண்ட மருந்துப் பட்டியலையும் அனுப்பினார். அமெரிக்கா ஏற்றது. செஞ் சிலுவைச் சங்கத்திடம் கைதான அனைவரும் ஒப்படைக்கப் பட்டனர். கியூபாவில் மனித உரிமை மீறல் என்ற பிரச்சாரத்திற்கு, 4000 பேர் பதில் கூற வேண்டிய வராய்த் திரும்பினர்.
சோவியத் நாட்டிற்கும் கியூபாவுக்கும் இடை யிலான வர்த்தக உறவில் இதுவரை ஆயுதம் வரவே இல்லை. இப்போது இதர சரக்குகளுடன் அவையும் வந்து இறங்கிய வண்ணம் இருந்தன. கியூபாவில் கல்விப் புரட்சியே நிறைவேறிக்கொண்டிருந்தது. ஆறு ஆண்டுகளுக்குள்ளாக எல்லாக் குழந்தைகளும் பள்ளிகளுக்குச் சென்றன.
படித்துத் தேறிய முதியோரின் எண்ணிக் கையும் பெருகிற்று. அதை யுனெஸ்கோவே பாராட்டி ஒப்புக்கொண்டது. சுகாதாரத் துறையில் அதைவிட பெரும் புரட்சி நடந்தது. நூறு பேருக்கு ஒரு டாக்டர் என வளர்ந்துவிட்டது. இதனால் தான் பிற நாடுகளுக்கும் சேவை செய்ய டாக்டர்கள் படை படையாகப் புறப்பட முடிந்தது. ஏதோ எண்ணிக்கையில் மட்டும் பெருத்தது என்பது தவறு. உலகப் புகழ் பெற்ற மருத்துவர்கள் தோன்றினர் (கால் பந்தாட்ட வீரர் மாரடோனா, கியூபாவில் தான் சிகிச்சைக்குப் போனார்). அமெரிக்கர்கள் பலரும் அங்கே சிகிச்சைக்குப் போவது வளர்ந்து வந்தது. அவர்கள் வர அனுமதித்தார் பிடல். டாலரையும் ஒரு புழக்க நாணயமாக பிடல் அங்கீகரித்தார். இருந்தாலும் ஏகாதிபத்திய வரிப் புலியின் கோடுகளும், புள்ளிகளும் மாறவே இல்லை. கியூபா தன்னம்பிக்கையுடன் முன்னேறிக் கொண்டு இருந்தது.
உலகக் கம்யூனிஸ்டு இயக்க மாநாடு மாஸ்கோவில் கூட்டப்பட்டது. அதில் சே கியூபாவின் பிரதிநிதியாகப் பங்கேற்றார். சோவியத் ஆதர வாளராக இருந்தார். இந்த மாநாட்டின் போதே சீனாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையிலான வேறு பாடு வெளிப்பட்டது. பிடலும், சேயும் சீன வெற்றி பற்றி பெருமிதம் கொண்டு இருந்தாலும், ரஷ்யாவின் முக்கியத்துவத்தைப் பாராட்டினர், கருத்து மாறுபாட்டைக் கைவிட வேண்டினர். “எதிரிக்கு இடம் கொடுக்காதீர்கள்” என்பதுதான் அவர்களது முக்கியமான வாதம். “வியத்னாமிற்கு ரஷ்யாவும், சீனாவும் சேர்ந்து உதவிட வேண்டும்” என்றும் வற்புறுத்தினர்.
சீனாவும் கியூபாவிற்கு சர்க்கரை வாங்கியும், பணம் வாங்காமல் ஆயுதம் கொடுத்தும் உதவியது. சில மாதங்கட்குப் பிறகு, சோவியத் ஆதரவு நிலையில் கியூபா நிற்பதால், சீனா சகல தொடர்பு களையும் கைவிட்டது. சோவியத் உதவி அதிகரித்தது. வியத்னாமில் அமெரிக்கா பின்வாங்கிக் கொண்டு இருந்தது. இதைப் பார்த்த சே, “உலகின் பல நாடுகளில் பத்து வியத்னாம்களை உண்டாக்கி விட்டால், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு முடிவு கட்டி விடலாம்” என்பார். அவ்வாறு உருவாக்கும் நோக்குடன்தான் காங்கோவுக்கும், பொலிவியா வுக்கும் போனார்.
சே குவேரா விரும்பியபடி, சோவியத் நாட்டின் உதவியுடன் பல தொழிற்சாலைகள் கட்டி முடிக்கப் பட்டன. அவற்றைக் கொண்டு வருவதிலும், கட்டி முடிப்பதிலும் காலதாமதமான போது, கடுமை யாக விமர்சித்தார் சே.
இவற்றிற்கு சில ஆண்டுகளுக்குப் பின் “குருசேவின் ஆலோசனையின் படி, கியூபாவில் ரஷ்ய ஏவுகணைகளைக் கொண்டு வந்து நிறுவி விட வேண்டும்” என்ற செய்தி பிடலிடம் கூறப் பட்டது. அதை சே குவேராவும் ராலும், பிற தோழர்களும் உற்சாகத்துடன் வரவேற்றனர். பிடல், பலவாறாக யோசித்தார்.
1. நாம் கேட்காமலே ரஷ்யர்கள் தாங்களாக இந்த முடிவை எடுக்க என்ன காரணம்?
2. நம்முடன் கலந்து பேசாமல், ஒப்புதல் பெறாமல் இந்த யோசனை வந்தது ஏன்?
3. ரஷ்ய ஏவுகணை மட்டுமா வரும். அத் துடன் அதனை இயக்கப் பயிற்சி பெற்ற ரஷ்யர்களும் வர வேண்டி இருக்கும்.
4. இவற்றை கியூபா மக்களும், லத்தீன் அமெரிக்க நாடுகளும் எப்படிப் பார்ப் பார்கள்?
5. இதை அமெரிக்கா கண்டுகொள்ளாமல் இருக்குமா?
6. ரஷ்ய ஏவுகணை பற்றியும், ரஷ்ய வீரர் களின் நடமாட்டத்தையும் எத்தனை நாட் களுக்கு மூடி மறைக்க முடியும்? ஏனெனில், கியூபா மக்களின் உறவினர்கள் பலர் அமெரிக்காவில் குடியிருப்பதால், அவர்கள் மூலமாவது செய்தி பரவத்தானே செய்யும்.
7. இந்த ஏவுகணைகள் யாருடைய கட்டுப் பாட்டில் இருக்கும்? இயக்குவதற்கான கடைசிக் கட்டளையிடுகிறவர் யார்?
என்ற பல கேள்விகளையும் பிடல் எழுப்பி விடை காண முயன்றார். எனவே, உடனே ஒப்புதல் தெரி விக்கவில்லை. அமெரிக்கத் தாக்குதல் நிச்சயம். அதைத் தடுக்க ஆயுதம் வேண்டும் என்பதில் மட்டும் உடன்பட்டார்.
சோவியத் நாட்டுக்குத் தலைவர்கள் என்ன வாக்குறுதிகளைக் கொடுத்தார்கள் என்பதும், முதலில் தயங்கிய பிடல், பின்னர் ஏன் ஏற்றுக் கொண்டார் என்பதற்கான காரணங்களும் இது வரை வெளிவரவில்லை.
ரஷ்ய - கியூபா ஏவுகணை விவகாரம் இரு நாடு களிடையே நம்பிக்கை, ஏமாற்றம், மகிழ்ச்சி, துயரம் என்ற உணர்ச்சிகள் ஏறி இறங்கிக் கொந்தளிக்கக் காரணமாகிவிட்டது. இனிப்பாகத் தொடங்கி கசப்பாக முடிந்த கதைதான் அது.
அமெரிக்காவின் கழுகுக் கண்ணிற்குத் தென் படாமல் சரக்கு மூட்டைகளுக்குள் ஏவுகணை கொண்டு வரப்பட்டு, கியூபாவில் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்த இடங்களில் நிறுவியும் முடித்து விட்டார்கள். ரஷ்ய வீரர்கள் நடமாடியதைக் கண்ட பிறகுதான், விசாரித்தறிந்து, ஏவுகணை இருப்பதைத் தெரிந்துகொண்டனர். அமெரிக்கா அதிர்ச்சியில் அலறத் தொடங்கியது. ‘மார்புக்கு நேராகத் துப்பாக்கி’, ‘அழிவின் விளிம்பில் உலகம்’, ‘நியூயார்க் - வாஷிங்டன் எரியப் போகிறது’ என்ற தலைப்பிட்ட செய்திகள் அமெரிக்க மக்களைக் கலங்க வைத்தது. உலகமே அதிர்ச்சிக்கு உள்ளானது என்பதுதான் உண்மை.
கூட்டுச் சேரா நாடுகளின் தலைவர்கள், உலகம் அழிவின் விளிம்பிற்குக் கொண்டு போகப் பட்டிருப்பதாகவும், அதைத் தவிர்க்க, மனித குலத்தைக் காக்க, ரஷ்ய அமெரிக்கத் தலைவர்கள் உடனே சந்திக்க வேண்டுமெனவும், ஐ.நா. சபை, பாதுகாப்புச் சபை உடனே கூடவேண்டும் என்றும் அறிக்கை விட்டனர்.
உலகின் வேண்டுகோளை ஏற்று, கென்னடியும், குருசேவும் கேம்ப் டேவிட்டில் சந்திக்க தேதி குறிக்கப்பட்டது. பேச்சு வார்த்தை சுமூகமாக முடிந்தது. சோவியத் நாடு ஏவுகணைகளை எடுத்துக் கொண்டு போய்விட ஒப்பியது. “கியூபாவின் அரசுரிமையில், உள் விவகாரங்களில் தலை யிடோம்” என அமெரிக்கா உறுதியளித்தது. இந்த முடிவை வானொலி, தொலைக்காட்சி மூலம் கேட்டுத்தான் தாள் தெரிந்து கொண்டதாகவும், முடிவு எடுப்பதற்கு முன்பாக ஒரு வார்த்தைகூட தன்னிடம் குருசேவ் கூறவில்லை என்றும் சீறினார் பிடல். சே குவேரா பகிரங்கமாகவே சோவியத் யூனியனைத் தாக்கினார். “திரிபுவாதத்தின் சுய வடிவம் அம்பலமாயிற்று” என்று சீனா விமர்சித்தது.
இருந்தாலும் இருநாட்டு உறவுகளும் முறிய வில்லை. சில மாதங்கட்குள்ளாக பல மூத்த ரஷ்யத் தலைவர்கள், கியூபாவிற்குச் சென்று தலைவர் களிடம் விளக்கம் தந்தனர். அவர்களில் அனடோஸ் மிக்கோயன் முக்கியமானவர். லெனினுடன் இருந்த மூத்த பரம்பரையைச் சேர்ந்த தலைவர் அவர் ஒருவர்தான். ஆத்திரத்துடன் இருந்த பிடலிடம், ரஷ்யாவில் புரட்சி வெற்றி பெற்ற போது, 14 நாட்டுப் படைகள் முற்றுகையிட்ட வரலாற்றை நினைவுபடுத்தினார். உள்நாட்டில் நிலப்பிரபுக்களும், எதிர்ப் புரட்சியாளர்களும் கலகங்கள் செய்ததையும், புரட்சி அரசிடம் பணமோ, ஆயுதமோ, உணவுக் கையிருப்போ இல்லாதிருந்த கொடுமையான சூழ்நிலையை விளக்கியவர்,
“உதவி என்று கேட்க எங்களுக்கு அன்றைக்கு யார் இருந்தார்கள்? லெனின் பயன்படுத்த ஒரு பழைய போர்டு கார் கிடைத்தது. அது ஓடிய நாளைவிட பட்டறையில் கிடந்த நாட்களே அதிகம். மின்சாரம் சில நகரங்களுக்கு மட்டும் இருந்தது. எத்தனை மொழிகள்? இனங்கள். பிரச்சினைகள் எண்ணிலடங்காதவை. சமாளித் தோம். மாற்றியமைத்தோம். விண்வெளிக்கே கலத்தை அனுப்பி விட்டோம்... இன்றைக்கும் நம் கடமை முடியவில்லை. ஏகாதிபத்தியம் உள்ள வரை அமைதியாக இருப்பது சாத்தியம் இல்லை.
ஏவுகணை வைக்கப்பட்டதையும், எடுக்கப் பட்டதையும் குறித்துக் கவலைப்படாதீர்கள். அந்த ஏவுகணைகள் உலகின் எந்த மூலையிலிருந்தும் தாக்கக் கூடியவைதான். அவை உங்கள் நண்பர் களிடம்தான் இருக்கின்றன. அமைதியாக இருங்கள்” என்று ‘ஞானத்தந்தை’ என்ற முறையில் உரிமை யோடு பேசியவர், இரண்டாம் உலகப் போரின் போது பட்ட பாடுகளையும் விளக்கினார். நெடு நாட்களுக்குப் பிறகே கியூபா நாட்டுத் தலைவர்கள் சமாதானம் அடைந்தனர். அமெரிக்க எதிர்ப்பு ரஷ்ய - கியூபா உறவை, சோவியத் ஆட்சி மாற்றத் திற்குப் பிறகும் காத்து வருகிறது...
1958-இல் புரட்சி வெற்றி பெற்று, இன்று வரை நிலையாக நீடித்து வரும் ஆட்சி கியூபா ஆட்சிதான். அன்று முதல் இன்று வரை இடை விடாத அமெரிக்க சதிகளுக்கும், தாக்குதலுக்கும் இரையாகாமல் நிமிர்ந்து நடைபெற்றுக்கொண் டிருக்கிறது. சோவியத் மண்ணிலும், சோஷலிச நாடுகளிலும் தலைகீழ் மாற்றம் ஏற்பட்ட பிறகும் நீடித்து நிற்கிறது கியூபா... ஒரே கட்சியும், ஒரே தலைவரும் பல பத்து ஆண்டுகட்கு மேலாகத் தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மரியாதையையும் அதிகப் படுத்தியுள்ளது. ஆய்வாளர்களையும் திகைக்க வைத்துள்ளது.
கியூபா பொருளாதாரத் துறையில் பாய்ச்சல் வேகத்தில் முன்னேற முடியவில்லை. ஏனெனில், கியூபாவில் மூலப் பொருள்கள் கிடைக்கவில்லை. அவை அரிதாகக் கிடைக்கின்றன. சோவியத் நாடு தொழிற்சாலைகளைக் கட்டிக் கொடுத்தாலும், அவை உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்ய முடியவில்லை. அமெரிக்காவின் பொருளா தார முற்றுகை முதற்காரணம்... அது இன்றைக்கும் விவசாய நாடாகத்தான் நீடிக்கிறது. சர்க்கரைதான் மிக முக்கிய உற்பத்திப் பொருள். அதை விற்பதிலும் உலகப் போட்டி இருக்கிறது.
எல்லோருக்கும் வீடு, எல்லோருக்கும் கல்வி என்பதில் மகத்தான வெற்றியை ஈட்டிய கியூபா மேல்நாட்டு வாழ்க்கைத் தரத்தை எட்ட முடிய வில்லையே என்ற ஒரு விமர்சனம் இருக்கிறது. அவ்வாறு இருந்தும் கியூப மக்கள் அந்த ஆட்சியைக் காப்பதில் உறுதியாக இருப்பது ஏன்? என்ற ஒரு கேள்வியும் எழுகிறது. லத்தீன் அமெரிக்க நாடுகளைப் பொறுத்தவரையில் கத்தி முனையில் நீண்டகாலம் அடக்கி வைத்திருக்க முடியாது.
எனவே, அடக்கி ஒடுக்கி ஆட்சி நடத்து வதாகக் கூற முடியாது. அள்ளித் தர அமெரிக்கா இருந்தும், அதை வாங்கிக்கொள்ள துரோகிகள் இல்லை என்றுதானே அர்த்தம்... கியூப மக்கள் தங்கள் நாட்டிற்கு உள்ள வாய்ப்பு வசதிகள், சங்கடங்கள், குறைகள் அனைத்தையும் தெரிந்து இருப்பதும், அதைத் தீர்க்க ஓர் அர்ப்பணிப்புள்ள, மக்கள் மீது விசுவாசமுள்ள அரசும் இருப்பதாக மக்கள் நம்புவதே இதற்கு முக்கிய காரணமாகும்... ஆட்சி அதிகாரப் பொறுப்பிலுள்ள அமைச்சர்கள் மக்களோடு மக்களாகக் கலந்து வாழ்கின்றனர்.
கியூபாவின் பொருளாதார பலத்தை ஒரு நடுத்தர நாட்டு வருவாயோடு ஒப்பிடலாம். அது எரிபொருள் எண்ணெய்க்காக அந்நியச் செலா வணியைச் சம்பாதிக்க வேண்டிய நாடாகவே நீடிக்கிறது. இருந்தும் எழுத்தறிவின்மையை ஒழித்தது என்பதும் உலகிலேயே மக்களின் விகிதாச் சாரத்தில் அதிக அளவில் டாக்டர்களையும், விஞ்ஞானிகளையும் கொண்ட நாடாக வளர்ந் திருப்பதை உலகம் ஒப்பியுள்ளது.
கியூப மக்களின் மனப்பக்குவத்தை விளக்க ஒரு நிகழ்ச்சி உதவக் கூடும். ஒலிம்பிக் குத்துச் சண்டைப் போட்டிகளில் நடந்த மூன்று ஒலிம்பிக் போட்டிகளிலும் கியூப நாட்டு வீரர் ஒருவர்
தங்கப் பதக்கம் வென்று வருகிறார். அவரிடம் “உலகில் பல நாடுகளில் நடக்கும் குத்துச் சண்டைப் போட்டிகளில் நீங்கள் கலந்துகொண்டால் கோடி கோடியாக டாலரைக் குவிக்கலாம். ஏன் நீங்கள் அமெரிக்கா போகக்கூடாது?” எனக் கேட்ட போது, அவர் கூறிய பதில் அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. “பணத்துக்காக நடத்தப்படும் போட்டி களில் கலந்துகொள்வோர் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளக் கூடாது என ஒரு விதி இருக்கிறது. எனவே, நான் அதில் பணத்துக்காகக் கலந்து கொண்டால், கியூபா சார்பில் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள இயலாது. தங்கப்பதக்கம் பெறும்போது, கியூபா என உலகின்முன் அறிவிக்கப்படுவதும், எங்கள் நாட்டு தேசிய கீதம் இசைக்கப்படுவதும் நின்று போய்விடும்... அதை இழக்க நான் உடன் பட மாட்டேன்” என்றார். நிருபர்கள், “அந்தக் கௌரவத்தை இழந்தாலும், நீங்கள் கோடி கோடியாக டாலரைச் சம்பாதித்தால், உங்கள் நாட்டின் பொருளாதாரமே மேம்படும்” என்ற போது, “அப்படி ஒரு வழி இருப்பது எனக்குத் தெரியாது. எங்கள் நாட்டு ‘மக்கள்’ சொன்னால், அதையும் செய்வேன்” என்றார்... நிருபர்கள் அவருக்கு மலர்ச் செண்டுகள் கொடுத்து வாழ்த்தினர்...
அவரைப் போலவே, இன்னொரு மருத்துவர் படை பற்றியும் நாம் தெரிந்துகொள்வது அவசியம்... கியூபாவிலிருந்து ஆப்பிரிக்க நாடுகள் பலவற்றில், குக்கிராமங்களிலும், மலைவாழ் பழங்குடி மக்கள் மத்தியிலும் 40 ஆண்டுகளாகச் சேவை செய்து வருகின்றனர். இவர்களுக்கான மாத ஊதியம் பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது, உயிர்வாழக் கொடுக்கும் பணம்தான்... “ளுரளெளைவநnஉந யடடடிறயnஉந” இருந்தும் முகம் சுளிக்கவில்லை. கிராமங்களுக்குப் போக மறுக்கவில்லை. பளபளக்கும் அமெரிக்காவை நோக்கியும் ஓடவில்லை. இந்த மருத்துவப் படை, உடல் நோய் தீர்க்கும் மருத்துவர்களாக மட்டு மல்லாது, சமுதாய நோய் தீர்க்கும் சேவைப் படையாகப் பணியாற்றிப் புகழ் பெற்றுள்ளது. இவர்களில் யாரும் புலம் பெயர்ந்து ஓடாதது சிந்திக்க வேண்டியது.
(இதே போல இந்திய விஞ்ஞானிகள் பலர், தங்கக் கட்டிகளைக் காட்டி அழைத்தும் போக மறுத்து, இந்த மண்ணில், மக்களுக்காகப் பாடு படுவோம் என இருப்போரும் உண்டு)
அதேபோல கரும்பு வெட்ட பிரதமரும், மந்திரிகளும் காடுகளில் பல நாட்கள் வேலை செய்ததை எங்காவது கண்டதுண்டா? அதுதான் கியூபா...
விடுதலைக்குப் போராடிய பல நாடுகளுக்கு கியூபா உதவியது. நேரடியாக பல புரட்சியாளர்கள் போய் பங்கெடுத்தனர். இதைப் பல நாடுகள் கண்டித்தன... புரட்சியை ஏற்றுமதி செய்ய முடியாது என்பதை பிடலும் ஒப்புக் கொண்டு அந்த முறையைக் கைவிட்டார். அல்ஜியர்சின் விடுதலைக்குக் கியூபா செய்த உதவிதான் பெரிது. ஆப்பிரிக்க நாட்டின் ஒருங்கிணைப்புத் தலைமை, பிற நாடுகள் தலையிட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்ட பிறகு இது கைவிடப்பட்டது.
ஒன்றரை கோடிக்கும் குறைவான மக்கள் தொகையைக் கொண்ட சிறிய நாடுதான் கியூபா. அது உலகப் பெரும் வல்லரசைக் கண்டு அஞ்சாமல், பணியாமல், நிமிர்ந்து நடைபோடுவது ஆய்வாளர் களைத் திகைக்க வைக்கிறது.
என்னதான் தேன்வடியும் பேச்சாளராக இருந் தாலும், 45 வருடங்களாக, அதே முகம், அதே குரலைக் கேட்டுச் சலிப்படைந்திருக்க வேண்டாமா?
நாளாக ஆகக் கூட்டம் குறைந்து, உணர்ச்சி மங்கி, ஆதரவும், கரைந்திருக்க வேண்டாமா? நேரில் கேட்டு மயங்கினார்கள் என்றாலும், தொலைக்காட்சியில் அவர் பேசுகிற போதாவது மூடிவிடலாம் அல்லவா?
இவை எதுவுமே நடக்கவில்லை. தொலைக் காட்சியில் அவர் பேசும்போது சாலைப் போக்கு வரத்து நின்றே விடுகிறது. இதில் மாணவர், பெண்கள், முதியவர் என்ற விதிவிலக்கே இல்லாமல், அவரைத் தங்கள் தோழன், மகன், சகோதரன், போராளி, தனக்கென வாழாதவன் எனப் பாராட்டிக்கொண்டே இருப்பது ஏன்?
2002-ஆம் ஆண்டில், அமெரிக்க அதிபர் புஷ்சும், பிரிட்டனின் டோனி பிளேரும், ஆஸ்திரேலிய அரசின் துணையுடன் ஈராக் மீது நேரடிப் போர் தொடுத்தனர். உலகமே கண்டித்தும், உலக சண்டியர் மசியவில்லை. ஈராக்கை நாசமாக்கி விட்டனர். அங்குள்ள எரிபொருள் எண்ணெயை உறிஞ்சிக் கொண்டுள்ளனர். மக்களையும் கொன்றனர்; கொன்று வருகின்றனர்.
அதே காலத்தில் ஆணவக்காரன் புஷ், ‘ரௌடி நாடுகள்’ என்று ஒரு பட்டியலை வெளியிட்டு, “அவற்றையும் தாக்குவோம்” எனக் கொக்கரித்தான்... ஈரான், சிரியா, வட கொரியா, கியூபா ஆகிய நாடுகளின் பெயர்களையும் குறிப்பிட்டு எச்சரித்தான். அதற்குப் பதில் கூறும் வகையில், பல்கலைக்கழக மாணவர்களிடையே பேசுகிற போது, அவரது வழக்கமான முறையில், ஏசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட சம்பவத்தை வருணித்துவிட்டு, “இப்போது புஷ், ஆண்டவன் இட்ட கட்டளை என்கிறார்... அவரை விட ஆண்டவரிடம் நெருக்க மாக உள்ள போப் ஆண்டவரோ இது சாத்தானின் சனியன் வேலை என்கிறார். புஷ்சுக்கு ஒரு கடவுள். போப்புக்கு இன்னொரு கடவுளா? இதை அவர்களே தீர்மானிக்கட்டும்... பைபிளைத் தொட்டு சத்தியம் செய்து பதவிப் பொறுப்பேற்ற அமெரிக்கக் குடியரசுத் தலைவர்தான் ஜப்பானில் அணுகுண்டு போட்டார். வியத்னாமில் குண்டு மழை பொழிந்தார். ஈராக்கில் ஜெபமா பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்? யோசியுங்கள்” என்ற போது, மாணவர்கள் “வெட்கம். வெட்கம்” என முழங்கினர்.
“கியூபாவைத் தாக்கப் போவதாகவும், பிடலைத் தீர்த்துக் கட்டப் போவதாகவும் சொல்வது இது முதல் தடவையா? பிறந்த நாள் முதல் இதைக் கேட்காத நாளே இல்லை. அமெரிக்க மக்கள் தெரிந்துகொள்வதற்காக ஒன்றைச் சொல்கிறேன். 2000 ஆண்டுகட்கு முன்னர் இயேசு ஏன் சிலுவையில் அறையப்பட்டார்? இயேசுநாதர் கூறியது மாதிரியே தான், நானும் இளைஞர்களை, ‘உங்களிடம் உள்ளதை உதறி விட்டு வாருங்கள்... சிலுவை சுமக்க விரும்புவோர் என் பின்னே வரலாம்’ என்றார்... நாங்களும் அதையேதான் சொல்கிறோம்...
“அமெரிக்காவிடம் மலைபோல் ஆயுதங்கள் இருப்பது தெரியும்... பணமும் அளவற்றுக் குவிந் துள்ளது. படைகளும் இருக்கின்றன... ஆனால் எங்களிடம் உள்ள ஒரு பேராயுதம் அவர்களிடம் இல்லை. அவர்களிடம் உள்ள உலோகத்தால் செய்யப்பட்ட ஆயுதங்கள் எங்களிடம் இல்லை என்பது உண்மை... எங்களிடம் ஓர் உன்னத லட்சியம் இருக்கிறது. நாங்கள் அதன் பிரதி நிதிகளாக வாழ்கிறோம். எங்களது லட்சியத்தைத் துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்க முடியாது. அது நான் மாண்ட பிறகும் இந்தப் பூமியில் வலம் வரும் வெற்றியைப் பெறும்” என்று பேசிய போது மாணவர்கள் புரட்சி “வெல்லும் - வெல்லும்” என முழங்கினர். அவர் உரையாற்றிய இடம் பொலிவியா பல்கலைக்கழகம்.
அண்மையில் பிரேசிலில் தொழிற்சங்கத் தலைவர் லூலா குடியரசுத் தலைவராகத் தேர்ந் தெடுக்கப்பட்டார். அவர் பதவியேற்பில் வாழ்த் துரை வழங்கிய பிடல், பின்னர் ஒரு மாபெரும் கூட்டத்தில் பேசினார். லத்தீன் அமெரிக்க நாடு களில் அர்ஜண்டைனா, பொலிவியா, பெரு, பிரேசில் ஆகிய நாடுகள் கியூபாவுடன் வணிகம் செய்யத் தொடங்கி விட்டன. ஆதரவாக, நட்புடனும் நிற்கின்றன. ஐ.நா. சபையும் பொருளியல் முடக்கத்தை ரத்து செய்துவிட்டது.
கியூபா தலைநிமிர்ந்து நடந்து முன்னேறி வருகிறது. அது மனித குலத்தின் மனசாட்சியாய், செஞ்சூரியனாய்த் திகழ்கிறது. அதன் பிரதி நிதியாக நிற்பவர்தான் தோழர் பிடல் காஸ்ட்ரோ!