யுகபுருஷன் எனும் சொல்லால் விளிக்கத்தகும் மனிதன் ஃபிடல் காஸ்ட்ரோ. ரொபேஷ்பியர், கார்ல் மார்க்ஸ், லெனின், மாவோ போன்று ஃபிடல் உலகின் அரசியல் வரைபடத்தை மாற்றினான். உலகப் புரட்சி களின் ஆதர்ஷமானவன். அவன் காலத்திலேயே வரலாறு அவனை விடுவித்து உலகின் உச்சிக்குக் கொண்டு சென்றது. ஃபிடலை இன்று எப்படி மதிப்பிடலாம்?
ஃபிடலும் சே குவேராவும் முழு இலத்தீனமெரிக்க நாடுகளின் விடுதலையைக் கனவு கண்டவர்கள். கியூபப் புரட்சியின் பின் குவேரா அந்த லட்சியத்தின் பொருட்டு ஆப்ரிக்காவுக்கும் பொலிவியாவுக்கும் செல்கிறார். ஃபிடல் கியூபாவில் தங்கி ஆட்சியதிகாரம் ஏற்கிறார். சே குவேரா கொல்லப்பட்ட பின்னால் ஃபிடல் தனது நாட்டின் ஆட்சியதிகாரத்தைக் கவிழ்க்கச் சதி செய்தார் என பொலிவிய அரசு குற்றம் சாட்டியது. சர்வதேசியச் சட்டங்களின்படி ஃபிடல் சதியாளர்தான். புரட்சியின் பொருட்டு அன்று நிலவிய சர்வதேசச் சட்டங்களை அவர் மீறினார். கியூபப் புரட்சி வெற்றி பெற்ற பின், தனது அரசுப் பதவிகளைத் துறந்துவிட்ட, சே குவேரா பிற நாடுகளில் புரட்சியைத் தூண்டுவதற்குப் புறப்படும் முன் ஃபிடலுடன் பேசிவிட்டு அவரது ஒப்புதலுடன் தான் காங்கோவுக்கும் பொலிவியாவுக்கும் போகிறார். குவேராவுடன் ஒப்பிடுகிறபோது அவர் சர்வதேசியப் புரடசியாளனாக அல்ல, ஒரு நாட்டின் தலைவனாகத் தான் ஆனார்.
குவேரா கியூபாவிலிருந்து விலகி பொலிவியாவில் தோன்றும் வரையிலான கால கட்டங்களில் ஃபிடல் குவேராவைக் கொலை செய்துவிட்டார் என்றும், ஃபிடலிடமிருந்து தப்பவே குவேரா தலைமறைவாகவே இருந்தார் என்றும், ஃபிடல் குவேரா இடையிலான முரண்பாட்டை கொச்சைப்படுத்தும் போக்கு இன்றும் பலரிடம் உள்ளது. சே குவேரா வரலாற்றை எழுதிய மெக்சிகத் தாராளவாத எழுத்தாளரான கஸ்டநாடாவும் இந்தப் பண்பு கொண்டவர்தான். இந்த அவதூறுகள் அனைத்துமே பின்னாளில் அர்த்தமற்றுப் போனது வரலாறு.
கியூபப் புரட்சியின் எதிரிகளும், பின்னாளில் எதிரிகளாக ஆகியவர்களும், மயாமிக்கு வர அமெரிக்கா அனைத்து விதமான உதவிகளும் செய்தது. ஃபிடல் குவேராவை வேட்டையாடியவராக இருந்திருந்தால், குவேராவின் குடும்பத்தினர் எப்போதோ மயாமிக்குச் சென்றிருப்பார்கள். குவேராவின் அன்பு மனைவி அலீடா மார்ச்சேவும் அவரது குழந்தைகளும் அவரது தோழர்களும், கிரனடா, ஆல்பர்ட்டோ உள்பட இன்றும் அவர்கள் கியூபாவில்தான் வாழ்கிறார்கள். குவேராவின் ஆவணக் காப்பகம் இன்றும் கியூபாவில்தான் இருக்கிறது. குவேராவின் எலும்புக்கூடும் அவரது ஆறு தோழர்களுடைய எலும்புக் கூடுகளும் கியூபாவில்தான் இன்று புதைக்கப்பட்டிருக்கிறது.
ஃபிடல் காஸ்ட்ரோவிற்கும் குவேராவுக்கும் இடையிலான முரண்பாடு ஒரு அரசுத் தலைவருக்கும், ஒரு மனோரதியமான நாடோடிப் புரட்சியாளனுக்கும் சர்வதேசியவாதிக்கும் இடையில் இருந்த முரண்பாடு. அரசுத் தலைவன் தேசிய எல்லைகளுக்குள்தான் செயல்பட முடியும். அன்று நிலவிய சர்வதேச முறைமைக்குள்தான் செயல்படமுடியும். என்றாலும், அங்கோலாவுக்குக் கியூபப்படைகள் சர்வதேசியத்தின் பொருட்டுச் சென்றது. குவேரா மூன்று கண்டங்கள் கருத்தரங்கில் பேசியபடி, ‘நூறு நூறு வியட்நாம்களை ஆப்ரிக்காவிலும், ஆசியாவிலும் இலத்தீனமெரிக்காவிலும் உருவாக்க’ விரும்பியவன் அவன்.
பன்றி வளைகுடா நிகழ்வில் அமெரிக்க படையெடுப்பையும், கென்னடியின் காலத்தில் ஏற்பட்ட கியூப ஏவுகணை நெருக்கடியையும் நாம் புரிந்து கொள்ள முடியுமானால், ஃபிடலின் சோவியத் சார்பையும் நாம் புரிந்து கொள்ள முடியும். தனது வாசலில் புரட்சியின் கொத்தளமாக இருந்த கியூபாவை அழித்துவிட அணு ஆயுதத்தையும் பாவிக்க நினைத்தது அமெரிக்கா. அன்று புரட்சியைப் பாதுகாக்க சோவியத் யூனியனும் கிழக்கு ஐரோப்பியப் பொருளாதாரமும் ஃபிடலுக்கு வேண்டி யிருந்தன. தன்னெழுச்சியான உழைப்பிலும் தியாகத்திலும் புதிய மனிதனை உருவாக்குவதைக் கனவு கண்டவன் குவேரா. தனது ‘சோசலிசமும் மனிதனும்’ கட்டுரையில் குறிப்பிட்டபடியில் நொடிதோறும் ஒரு புரட்சியாளனாக வாழ்ந்தவன் குவேரா. ஃபிடல் குவேராவுக்கிடையில் அன்று நிலவிய முரண் அரசியல் ரீதியிலானதே யல்லாமல், குவேராவைப் ஃபிடல் தீர்த்துக் கட்டிவிட வேண்டும் என்ற வகையிலானது அல்ல என்பது, பொலிவியப் புரட்சிக் காலத்திலும் குவேரா ஃபிடல் இடையில் நிலவிய உறவின் வழி தெளிவாகிறது. குவேரா ஃபிடல் இடையிலான முரண்பாடு அன்று நிலவிய சீன-ரஸ்ய முரண்பாடு, அமெரிக்க-ரஸ்ய முரண்பாடு, அமெரிக்காவின் வாசலில் இருந்த கியூபத்தீவு, கியூபத் தேசிய அரசின் தலைவனாக ஃபிடல், மனோரதியமான சர்வதேசிய நாடோடிப் புரட்சியாளன் சேகுவேரா என்ற வரலாற்று அடிப்படையிலேயே புரிந்து கொள்ளப்பட வேண்டும். சோசலிச நாடுகளின் உதவி என்பது வட்டி அறவிடுவதாக இருக்கக் கூடாது என சே குவேரா கருதினார். ஃபிடல் ஒரு அரசுக் தலை வராக அவ்வாறு ஒரு நிலைப்பாடு எடுக்க முடியாது.
மாவோ ஃபிடலை விடவும் சர்வதேசியவாதி எனும் கருத்து பொருத்தமற்றது. ஃபிடல் போலவே மாவோவும் தேசியவாதிதான். அதிலும் பெருந்தேசியவாதி. தேசிய விடுதலைப் போராட்டத் தலைவர்கள் அனைவரும் கூடக்குறைய தேசியவாதிகள்தான். இவர்கள் தமது தேசிய எல்லைகளை மீறிய தருணங்களும், தமது தேசிய நலன்களின் பொருட்டு சர்வதேசியக் கடமை என ஒருவர் கருதுவதை மீறிய சந்தர்ப்பங்களும் உண்டு. சோவியத் யூனியன் வீழ்ச்சி வரை கியூபா சர்வதேசியத்தைக் கடைப்பிடித்தது. அங்கோலா-அல்ஜீரியா போன்ற நாடுகளுக்கு புரட்சிகர இயக்கங்களுக்கு அது நேரடி யாகப் படைகளை அனுப்பி உதவி செய்தது. முழு இலத்தினமெரிக்க நாடுகளின் விடுதலை இயக்கங்களை அது நேரடியாக ஆதரித்தது. கியூப எதிர்ப்பு இயக்கமான சைனிங் பாத்தை அது ஆதரிக்கவில்லை. பின் சோவியத்-பின் செப்டம்பர் நிலையில் அது உலகின் எந்த ஆயுத விடுதலை இயக்கத்தையும் ஆதரிக்கவில்லை. சே குவேரா தன் காலத்தில் எல்லா தேசிய விடுதலை இயக்கச் சமூகங்களுக்கும் பயணம் செய்தார். முழு இலத்தீன மெரிக்காவிலும் அதனது எல்லாப் பொருளிலும் சே மட்டுமே முழுமையான சர்வதேசியவாதி.
வியட்நாம் விடுதலைப் போரை ஆதரித்த மாவோவின் சீனா, சிலி, அங்கோலா போன்ற நாடுகளில் தனது தேசிய நலன்களின் அல்லது வெளியுறவுக் கொள் கையின் பொருட்டு எதிர்ப்புரட்சியாளர்களை ஆதரித்தது. சீனா, வியட்நாம் மீது தாக்குதல் தொடுத்த செயலில் சர்வதேசியம் இல்லை. சீனா திபெத்தில் செய்திருப்பது ஆக்கிரமிப்பு. ஸ்டாலின்-இட்லர் ஒப்பந்தத்தில் சர்வதேசியம் இல்லை. பொலிவியப் புரட்சி விஷயத்தில் சோவியத் யூனியன் சர்வதேசியத்தைக் கடைப்பிடிக்க வில்லை.
ஃபிடல் குறித்த விவாதங்களில் இரண்டு பொய்கள் அதிகமும் சொல்லப்படுகின்றன. ஃபிடலின் அரசு ஃபயரிங் ஸ்குவாட் கொண்டிருந்தது. மாற்றுக் கருத்தாளர்களுக்கு மரணதண்டனை விதித்தது. இது குறித்து சே குவேரா வரலாற்றை எழுதிய லீ ஆன்டர்சன் எழுதியிருப்பதை இங்கு சுட்டுவது பொருந்தும். மரணதண்டனையை ஒழிக்காத அரசுகளில் ஃபிடலின் கியூப அரசும் ஒன்று. தேசத் துரோகக் குற்றச்சாட்டுக்கு அன்று வழமையில் எல்லா அரசுகளும் விதித்த தண்டனையையே கியூப அரசும் விதித்தது. ‘உலகின் எல்லா அரசுகளும் மரணதண்டனையை ஒழிக்கும் வேளையில் கியூபாவில் தாமும் ஒழிப்போம்’ என ஃபிடல் சொன்னார். ஃபயரிங் ஸ்குவாட் ஒரு கட்டுக்கதை என்பதைப் பல சமயங்களில் ஃபிடல் தெரிவித்திருக்கிறார்.
இன்னொன்று, ஃபிடல் மாற்றுக் கருத்தாளர்களுக்கு மரணதண்டனை விதித்தார் எனும் அவதூறு. இப் பிரச்சினையை புரட்சிக் காலகட்டம், புரட்சிக்குப் பின் எனப் பிரித்துப் பேச வேண்டும். புரட்சிக் கால கட்டத்தில் ஃபிடல்-சே மாற்றுக் கருத்தாளர்களைக் கொல்லவில்லை. விடுதலை அமைப்பிலிருந்து துப்பாக்கி களை எடுத்துக் கொண்டு ஓடி, மக்களை மிரட்டிக் காசுபறித்து, பெண்களை வல்லுறவுக்கு உள்ளாக்கி, அவர்தம் குடிசைகளையும் எரித்தவர்களைத் தேடிக் கண்டுபிடித்து விடுதலை இயக்கம் மரணதண்டனை விதித்தது. சே அந்த மரணதண்டனைகளை நிறை வேற்றினார். தம்மிடம் சரணடைந்த எதிரிகளது ஆயுதங்களைப் பறித்துக் கொண்டு அவர்களைத் திரும்பிப் போக வைத்தார்கள். அரசியலில் ஈடுபடாத வெகுமக்களை துன்புறுத்தலாகாது என்பதை ஃபிடல் ஒரு புரட்சிகர அறமாகவே பேணினார். கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட மாற்றுக் கருத்தாளர்களைக் கண்டு உரையாடி ஃபிடலின் அரசியல் தலைமை உறுதிப் படுத்தப்பட்டது. புரட்சியின் பின், புரட்சியைப் பாதுகாப்பதற்காக, அமெரிக்க அரசுடன் சேர்ந்து சதியில் ஈடுபட்டவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. ‘இது அன்று எந்த அரசும் தமது நாட்டுச் சட்டங்களின் படி செய்யக் கூடியதுதான் என்கிறார் லீ ஆன்டர்சன்.
சித்திரவதையை, முடிந்தால் கொல்வதைத் தமது சொந்த விசாரணை முறையாகவும், குன்டனாமோ போன்ற பாழும் சிறைகளையும் கொண்டிருக்கும் அமெரிக்க அரசு, கியூபாவின் மனித உரிமை பற்றிப் பேசுவது முற்றிலும் அரசியல் அபத்தம். கலைஞர்களின் சுதந்திரம், சமப்பாலுறுவு பற்றிய விடயங்களில் மூன்றாம் உலக மார்க்சியர்களை விட ஐரோப்பிய மார்க்சியர் தொலைநோக்குக் கொண்டவர்கள் என்பது எனது புரிதல். புரட்சியின் ஆரம்ப ஆண்டுகளில் சமப் பாலுறவாளர்களைச் சிறையில் அடைத்தது ஃபிடலின் அரசு. எண்பதுகளில் சமப்பாலுறவு என்பது விமோசன அரசியலின் பகுதியாக ஆனபோது, தமது கடந்த காலத் தவற்றுக்கு ஃபிடல் முழுமையாகப் பொறுப்பேற்றுக் கொண்டார். சமப்பாலுறவுக் கொண்டாட்டங்கள் இன்று கியூபக் கலாச்சாரத்தின் அங்கமாக இருக்கிறது.
இருபத்தியன்றாம் நூற்றாண்டில், 2003 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் நடந்த கியூப இலக்கியவாதிகள்-அறிவுஜீவிகள்-கலைஞனின் சுதந்திரம் தொடர்பான சர்ச்சையில் நான்கு முக்கியமான இலக்கியவாதிகள் பங்கெடுத்துக் கொண்டனர். நோபல் பரிசு பெற்றவரும் மார்க்ஸியரும் நாவலாசிரியரும் ஆன ஸரமாகோ, அமெரிக்க நாவலாசிரியரும் இலக்கிய விமர்சகருமான சுசன் சொன்டாக், இலத்தீனமெரிக்க நாவலாசிரியரும் இலத்தீனமெரிக்கப் புரட்சிகளின் ஆதரவாளரும் ஆன கேப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ் மற்றும் ‘லத்தீன மெரிக்காவின் ரத்தநாளம்’ எனும் நூலை எழுதியவரும் எதேச்சாதிகார சோசலிசம் குறித்த விமர்சகருமான எடுவர்டோ கலேனியா போன்றவர்களே அவர்கள்.
நடந்த சம்பவம் இது : கியூபாவிலிருந்து பயணிகள் வல்லமொன்றைக் கடத்திக் கொண்டு அமெரிக்காவுக்குச் செல்ல முயன்ற கடத்தல்காரர்கள் சிலரைக் கியூப அரசு சுட்டுக்கொன்றது. அதே சமயத்தில் கியூபாவுக்குள் அமெரிக்கரொருவருடன் இணைந்து அமைப்பாகச் செயல்பட்டதற்காக இருபத்தியைந்துக்கும் அதிகமான அறிவுஜீவிகளுக்கும் எழுத்தாளர்களுக்கும் சிறைத் தண்டனையளிக்கப்பட்டது. இந்தச் செயல்பாட்டை எதிர்த்து அமெரிக்க எழுத்தாளர்கள் சிலர் கூட்டறிக்கை வெளியிட்டு கியூபாவைக் கண்டித்தார்கள். பாலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்பவரும், இஸ்ரேலை விமர்சிப்பவரும், செப்டம்பர் 11 க்குப் பின்னான அமெரிக்க அரசின் அத்துமிறல்களைக் கண்டித்ததால் ‘குடியுரிமையை விட்டுக்கொடு அமெரிக்கத் துரோகியே’ என அமெரிக்க விசுவாசிகளால் விமர்சிக்கப்பட்டவரும் ஆன சுசன் சொன்டாக் கியூபாவைக் கடுமையாகக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார்.
‘கியூபாவுக்கான எனது ஆதரவை இத்தோடு விட்டொழிக்கிறேன்’ என அறிவித்தார் போர்த்துக்கீசிய நாவலாசிரியர் ஸரமாகோ. இப்படி கியூபாவில் ஜனநாயகத்துக்கும் கலைஞர்களின் சுதந்திரத்திற்குமாகக் கூட்டறிக்கை வெளியிட்டவர்கள் பெரும்பாலுமானோர் அமெரிக்கர்களாக அல்லது ஐரோப்பியர்களாக இருந்தார்கள். சமகாலத்தில் கார்ஸியா மார்க்வெஸ் போன்ற எழுத்தாளர்கள் கியூபாவின் மீதான அமெரிக்க ராணுவத் தலையீட்டையும் அச்சுறுத்தலையும் பல்லாண்டு காலப் பொருளாதரத் தடையையையும் கண்டித்து கியூபாவின் இறையாண்மையை வற்புறுத்தியும் ஒரு கூட்டறிக்கை வெளியிட்டார்கள். இந்தக் கூட்டறிக் கையில் எடுவர்டோ கலேனியாவும் கையப்ப மிட்டிருந்தார். இவர்களோடு தென் ஆப்ரிக்க நோபல் பரிசாளர் நதின் கோதிமரும் கையப்பமிட்டிருந்தார். இந்தக் கூட்டறிக்கை கியூப அறிவுஜீவிகள் எழுத்தாளர்கள் மீதான பிரச்சனை குறித்து எந்தவிதமான அபிப்பிராயமும் தெரிவிக்கவில்லை. இதற்காக கேப்ரியல் கார்ஸியா மார்க்வெஸை சுசன் சொன்டாக் கடுமையாக விமர் சிக்கவும் செய்தார். அமெரிக்கத் தலையீட்டுக்கு எதிராக அறிக்கையில் கையப்பமிட்ட எடுவர்டோ கலேனியா, கியூபாவின் ஒற்றைக் கட்சியாட்சியையும் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படாத அதனது அரசியல் தலைமையையும் குறித்து தனது விமர்சனங்களைத் தனியே முன்வைத்திருந்தார்.
இந்தச் சம்பவம் நடந்த வரலாற்றுத் தருணத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டியது முக்கியமானதாகும். ஈராக்கின் மீதான யுத்தத்தையடுத்து ஜோர்ஜ் புஸ்ஸினது அரசாங்கம் வடகொரியா லிபியா ஈரான் கியூபா போன்ற நாடுகளை போக்கிரி நாடுகள் என அறிவித்தது. ஈராக் அனுபவத்திலிருந்து இந்த நாடுகள் முன்கூட்டிய அமெரிக்கத் தாக்குதல் எனும் அனுபவத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும், அல்லவெனில் இவர்களுக்கும் இதே கதி காத்திருக்கிறது என அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் டொனால்ட் ரொம்ஸ் பீல்ட் எச்சரித்தார். பிரித்தானியாவிலிருந்து ‘பின்நவீனத்துவ அரசு’ எனும் நூலை எழுதிய ரோபர்ட் கூப்பர் இதனை நியாயப்படுத்து வதான சித்தாந்த வரையறையைத் தனது ‘தாராளவாத ஏகாதிபத்தியத்தின் தேவை’ எனும் கருத்தாக்கமாக வடித்துக்கொடுத்திருந்தார். இவர் பிரித்தானியப் பிரதமர் டோனி பிளேயர் அவர்களின் சிந்தனைக் களஞ்சியங் களில் ஒருவர். இதற்கான அரசியல் பொருளியல் கருத்துருவத்தை ‘வரலாற்றின் இறுதி’ எனும் நூலை எழுதிய அமெரிக்கரான பூக்குயேமாவும், அறவியல் அடிப்படையை இஸ்லாமிய எதிர்ப்பு நூலான ‘கலாச் சாரங்களின் மோதல்’ நூலை எழுதிய அமெரிக்கரான ஹன்டிங்டனும் வழங்கியிருந்தார்கள்.
இவ்வகையில் கியூபாவின் இறையாண்மையின் மீதான அமெரிக்க அச்சுறுத்தலின் தொடர்ச்சியாகவே கடத்தல்காரர்கள் கொல்லப்பட்ட சம்பவமும் அதனை யடுத்து கியூப அறிவுஜீவிகள் எழுத்தாளர்களின் மீதான தண்டனையும் நேர்ந்தது எனப் புரிந்து கொள்வதில் ஒருவருக்கு எந்தச் சிரமமும் இல்லை.
சமகால உலகில் எழுத்தாளர்களின் நிலைப்பாடுகள் என்பதைக் கருத்தியல் சார்ந்து வரையறை செய்வது சிக்கலாகி வருகிறது. கியூபப் பிரச்சினை என்று எடுத்துக் கொண்டாலே இடதுசாரிகளான ஸரமாகோவும் மார்க்வசும் கலேனியாவும் மூன்று வேறுவேறு விதமான நிலைப்பாடுகள் எடுத்திருக்கிறார்கள். கலைஞனின் சுதந்திரம், ஜனநாயகம், சோசலிசத்தின் எதிர்காலம், ஏகாதிபத்தியம், தேசிய இறையாண்மை போன்றதாகப் பிரச்சினைகள் பரிமாணம் பெற்றிருக்கிறது. புவியியல் இருப்பும் குறிப்பான தன்மையும் இன்று கலைஞனின் சுதந்திரம் எனும் பிரச்சினையைத் திர்மானிப்பதில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.
மூன்றாம் உலகச் சமூகங்களைப் பொறுத்த அளவில் அந்த மக்கள் மூன்றாம் உலக நாடுகளில் வாழ்ந்தாலும் சரி, புலப் பெயர்வினால் ஏற்பட்டிருக்கிற புதிய யதார்த்தத்தினால் மேற்கிலும் அமெரிக்காவிலும் வாழ்ந்தாலும் சரி, அவர்களது நினைவில் காலனி யாதிக்கத்தின் கசப்பான நினைவுகள் பொதிந்து கிடக்கிறது. ஐரோப்பிய மையவாதத்தையும் அமெரிக்க மையவாதத்தையும் இன்று இவர்கள் சகல தளங்களிலும் நேரடியாக எதிர்கொள்கிறார்கள். இத்தகைய அறிவு ஜீவிகளும் எழுத்தாளர்களும் குறிப்பானவற்றையும் புவியியல் தன்மை கொண்டவற்றையும் சகலவிதமான புரிதல்களுக்கும் பற்றி நிற்கிறார்கள். கலைஞனின் சுதந்திரம் என்கிற பிரச்சினையையும் இவர்கள் இந்த அடிப்படைகளில் இருந்தே அணுக வேண்டும் எனக் கருதுகிறார்கள். இவர்கள் அந்நிய ஆதிக்கத்தை முற்றிலும் நிராகரிக்கிறார்கள். அதே வேளையில் தமது புவியியல் அரசியல் சார்ந்து வரலாற்று ரீதியில் மதச் சார்பற்ற சமூகத்தையும் ஜனநாயக சமுகத்தையும் அவாவுகிறார்கள். மார்க்வஸையும் கலேனியாவையும் நாம் அப்படிப் பாரக்கலாம்.
ஃபிடல் ஸ்திரீலோலன், ஃபிடல் கொலைகாரன், ஃபிடல் கியூப விடுதலைக்கு ஏதும் பங்களிக்கவில்லை. ஃபிடல் சர்வாதிகாரி. ஃபிடல் ஜயவர்த்தனாவைக் கட்டித்தழுவியதால் திரிபுவாதி எனவெல்லாம் ஈழத் தமிழ் தேசியவாதிகள் விமர்சனம் முன்வைக்கிறார்கள். இத்தகைய வசவுகள் எல்லாவற்றுக்கும் ஓரேயரு காரணம் கியூப அரசு இலங்கை தொடர்பாக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை மறுத்து இலங்கை அரசுக்காக வாக்களித்தது. கியூபா மட்டுமல்ல, ஆயுத விடுதலைப் போராட்டத்தினால் ஆட்சிக்கு வந்த லத்தீன மெரிக்க அரசுகள், தேர்தல் மூலம் ஆட்சிக்கு வந்த லத்தினமெரிக்க இடதுசாரி அரசுகள், (சிலி நீங்கலாக) அமெரிக்க தீர்மானத்துக்கு எதிராகவே வாக்களித்தன.
அதற்கான காரணங்கள் இரண்டு, முதலாவதாக, 500 ஆண்டுகால காலனிய எதிர்ப்பும், 60 ஆண்டுகால அமெரிக்க ஆதிக்கத்துக்கு எதிரான எதிர்ப்பும். இரண் டாவது, அமெரிக்கா பேசும் மனித உரிமை என்பது தனக்கு ஒவ்வாத நாடுகளில் ரெஜிம் சேஞ்ஜ்ஜூக்கான ஒரு தந்திரம். சதாம் குசைன், கடாபி, மகிந்த என இவர்களை லத்தீனமெரிக்க நாடுகள் அனைத்தும் ஆதரித்தது என்பது அமெரிக்காவின் ராணுவ-அரசியல் தலையீட்டுக் கொள்கைக்கு எதிராகவே. கடந்த 60 ஆண்டுகளாக இதனை நேரடியாக அனுபவித்து வருபவை லத்தீனமெரிக்க நாடுகள்.
ஈழத்தில் விடுதலைப் புலிகளின் தலைமை அழிக்கப் பட வேண்டும் என்பதில் மேற்குலக நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் எந்த ஆட்சேபமும் இல்லை. தொழில்நுட்பம் மற்றும் உளவறிவு இரண்டையும் இந்த நாடுகள் இலங்கை அரசுக்கு வழங்கின. முள்ளிவாய்க்கால் பேரழிவு தொடர்பான நோர்வே நாட்டின் அறிக்கை ஒன்றைத் தெளிவாகச் சொல்கிறது : ‘அமெரிக்கா முன்னெடுத்த உலகப் பயங்கரவாத எதிர்ப்பு எனும் கொள்கையின் முன்பு தமது முயற்சிகள் அனைத்தும் பயனற்றுப் போயின’ எனச் சொல்கிறது அந்த அறிக்கை. மகிந்த ‘உங்களது பயங்கரவாத எதிர்ப்பு யுத்தத்தைத்தான் நான் நடத்துகிறேன்’ என்று அமெரிக்காவுக்கும் மேற்குலகுக்கும் சொன்னார். இலங்கை குறித்து அமெரிக்காவும் மேற்குலகும் பேசிய மனித உரிமை-போர்க் குற்றங்கள் இப்போது என்ன ஆனது? அரசியல் பாஷையில் இலங்கையில் நேர்ந்த ரெஜிம் சேன்ஞ்ஜின் பின்பு என்ன ஆனது? அல்லது சுயாதீன மனித உரிமை அமைப்புகள் தவிர மேற்குலகோ அல்லது அமெரிக்காவோ இனக்கொலை என்பதை ஒப்புக் கொண்டதா? கியூபாவின் மீதும் ஃபிடலின் மீதும் கொள்கிற கோபத்தை-வசவுகளை ஏன் அமெரிக்க-மேற்குலகத் தலைவர்கள் மீது தமிழ் தேசியவாதிகளில் சிலர் ஏவுவதில்லை?
ஃபிடலின் மீது முன்வைக்கிற விமர்சனங்களை-அரசியல் தவறுகள் தொடர்பான தார்மீகக் கேள்விகளை இதே சொற்களில் ஈழப் போராட்டத் தலைமையின் மீதும் முன்வைப்பது ஆபாசமாக இருக்காதா? ராவுல் காஸ்ட்ரோ ஒபாமாவுடன் கைகுலுக்குகிறார். ஃபிடல் இந்திரா காந்தியுடன் கைகுலுக்குகிறார். ஈழப் போராட்டத் தலைமை பேச்சுவார்த்தைகளில் தமது அரசியல் எதிரிகளுடன் கைகுலுக்குவதும் சேர்ந்து படமெடுத்துக் கொள்வதும் இல்லையா? கருத்தியல் உறவுகளுக்கும் ராஜீய உறவுகளுக்கும் இடையிலான வித்தியாசங்களைக் கூட இல்லாது செய்து ஒரு வரலாற்று ஆளுமையின் மீது சேறடிப்பது என்ன அரசியல் மேதைமை?
இன்று இடதுசாரிகள் சோவியத் அனுபவங்கள், சோவியத்-சீன-மூன்றாம் உலகப் புரட்சிகளின் அனுபவத்தில் இருந்து ஒன்றை உணர்ந்திருக்கிறார்கள். இதற்குப் ஃபிடல் எனும் தனிமனிதர் காரணமில்லை. கியூபா எனும் நாடும் காரணமில்லை. இதுவரையான மார்க்சிய அரசுகள் உள்நாட்டில் கம்யூனிஸ்ட்டுகளைத் தடை செய்த ஒடுக்குமுறை அரசுகளை ஏகாதிபத்திய எதிர்ப்பு எனும் வகையில் ஆதரித்து வந்திருக்கின்றன. சோவியத் யூனியன் ஈரானில் கொமேனியை ஆதரித்தது. சோசலிச நாடுகள் அனைத்தும் சதாம் குசைனை-கடாபியை ஆதரித்தது. இந்த நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள்-தொழிற்சங்கங்கள் தடை செய்யப்பட்டிருந்தன. சோசலிச நாடுகளின் ஒரு கட்சி ஆட்சி போன்றதுதான் கொமேனி-சதாம்-கடாபி ஆட்சிகள். இவை இனி மாற்று சமூகத்திற்கான மாதிரிகளாக இருக்காது. இதுவெல்லாம் எதிர்கால சமூகம் நோக்கிய அரசியல் அவதானங்கள். இந்த அவதானங்கள் எதுவும் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கும், காலனிய எதிர்ப்புக்கும், ஏகாதி பத்திய எதிர்ப்புக்கும் கொமேனியும், சதாமும் கடாபியும் ஃபிடலும் வரலாற்றில் செய்த பங்களிப்புகளை இல்லாமல் செய்துவிடாது. வரலாறு கறுப்பு வெள்ளை யானது அல்ல. இதுபோலத்தான் விடுதலைப் புலிகளின் மீதும், அதனது தலைவர் பிரபாகரன் மீதும் எத்தகைய விமர்சனங்கள் கொண்டிருந்தாலும் அந்த இயக்கம் ஒரு எதிர்ப்பு இயக்கம் என்பதையும் அதன் தலைவர் ஒரு விடுதலைக் கனவுடன் அதனை வழிநடத்தினார் என்பதையும் எவரும் மறுத்துவிட முடியாது. கியூபா வாக்களிக்காததனால்தான் இனக்கொலை என்பதை நிறுவமுடியவில்லை எனும் தமிழ் தேசியவாதிகளின் வாதம் சிறுபிள்ளைத்தனமானது.
வரலாறு முழுதும் கியூப அரசை அழிக்க முயன்ற அமெரிக்க அரசு ஆதரிக்கும் எதனையும் கியூபா ஆதரிக்க முடியாது. அமெரிக்க அரசு உலக அரசியலில் மனித உரிமை என்பதைத் தனது அதிகாரத்தை நிலைநாட்டும்-தலையிடும் தந்திரமாகவே பாவிக்கிறது. அமெரிக்கா மகிந்த அரசு இருந்த போது கொண்டிருந்த நிலைப்பாட்டையும் இன்றைய நிலைப்பாட்டையும் ஒருவர் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.
கியூபா பாரம்பரியமாகவே இந்திய அரசின் நண்பன். இந்தியப் பிரதமர் படுகொலையில் சம்பந்தப் பட்ட ஒரு அமைப்பை அதனது நட்பு நாடு ஆதரிக்க முடியாது. ஃபிடல் தனிமனிதன் அல்ல, ஒரு நாட்டின் தலைவன். எல்லாவற்றுக்கும் மேலாக விடுதலைப் புலிகள் அமைப்பு உலகின் இடதுசாரி விடுதலை அமைப்புக்களுடனோ அல்லது கலைஞர்கள்-சிந்தனை யாளர்களுடனோ ஒரு போதும் தோழமையைப் பேணியிருக்கவில்லை.
கியூபா திட்டமிட்டு விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிராகவோ அல்லது இனக்கொலைக்கு ஆதரவாகவோ சுயாதீனமாக முடிவெடுக்கவில்லை. பாரம்பரியமாக அமெரிக்க எதிர்ப்பைக் கொண்டிருந்த முழு இலத்தீனமெரிக்க நாடுகளும் அமெரிக்கக் கொள் கையை-அதனது மனித உரிமை மற்றும் தலையீட்டுக் கொள்கைகளை எதிர்த்தே வந்திருக்கின்றன.
நாடுகள் விடுதலை அமைப்புகளை ஆதரித்து வந்த காலம் சோவியத் யூனியனின் வீழ்ந்த நாளில் முடிவுக்கு வந்தது. முன்னாள் சோசலிச நாடுகள் கருத்தியல் ரீதியில் முடிவெடுப்பது என்பது முடிந்து தமது நாட்டைப் பாதுகாப்பது எனும் வெளிவிவகாரக் கொள்கையைத் தேர்ந்த காலமும் அதுதான். கியூபாவும் இந்த உலக நிலைமையில் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் அரசியல் முடிவுகளையே எடுக்க நேர்ந்தது. ஈழ விடுதலைப் போராட்டத்தை உள்ளார்ந்து உணர்ந்த நண்பர்கள் கியூபத் தோழமை அமைப்புகள் மூலம் கியூப அரசைத் தொடர்பு கொள்ள முயன்றனர். ரான் ரைட்னர் சர்வதேச அளவில் பயணம் செய்து தமிழகத்தின் இடதுசாரிப் பதிப்பகமான நியூ செஞ்சுரி புத்தக நிலையம் வழி ஈழதேசியம் தொடர்பான ஒரு விரிவான நூலையும் எழுதி வெளியிட்டார்.
பிரச்சினைகளை எப்போதுமே தனிநபர்களுக்கு இடையிலானதாகக் குறுக்கிக் காணும் எவரும் அரசியல் யதார்த்தங்களை பகுப்பாய்வு செய்வது கிடையாது. ஃபிடல் சொல்வது போல ‘கியூபா ஒரு நாளும் ஏகாதி பத்திய எதிர்ப்பு-புரட்சியைப் பாதுகாத்தல் என்பதில் மூலோபாயத் தவறுகள் செய்ததில்லை. ஒரு நாடு எனும் அளவில் தந்திரோபாயத் தவறுகளை அது செய் திருக்கிறது’. இந்தப் புரிதலுடன் வரலாற்றில் ஃபிடல் எனும் ஆளுமை வகித்த பாத்திரத்தை மறுப்பவர்களை, மிகுந்த அகவய உணர்வுடன் வசைபாடுபவர்களை வரலாறு கடந்து செல்லும்.
500 ஆண்டுகளிலான காலனியம், அதன் பின் அமெரிக்க ஆதரவு பெற்ற ராணுவ சர்வாதிகாரிகள், நிலப்பிரபுத்துவம் கோலோட்சிய ஒரு நாட்டில் கல்வி-மருத்துவம் இரண்டிலும் அவன் சாதித்தவை தன்னேரில்லாதவை. 60 ஆண்டுகள் அமெரிக்கப் பொருளாதாரத் தடை- புறக்கணிப்பின் பின்னும் அவன் கியூப தேசியப் பெருமிதத்தை உயர்த்திப் பிடித்தவன். இன-நிற உறவுகளில் சமத்துவத்தைப் பேணியவன். இலத்தீனமெரிக்கப் புரட்சிகளை மட்டுமல்ல, அங்கோலா-அல்ஜீரியா-நிகுரகுவா போன்ற உலக தேசிய விடுதலைப் புரட்சிகளைக் காத்தவன். கெரில்லா யுத்த காலத்திலும் ஐக்கிய முன்னணி, புரட்சிகர இயக்கங்களினிடையில் ஒற்றுமை போன்றவற்றைச் சாதித்த அவன் புரட்சிகர ஒழுக்க-அறவியல் முன்னோடி. இவற்றையும் தாண்டி அவன் இசையின்-கலைகளின்-கலைஞர்களின் காதலன்.