பெங்களூரிலிருந்து 80 மைல் தொலைவிலுள்ள பாண்டவபுரம் எனும் ஊரில் சாய் கிருஷ்ணன் எனும் ஏழு வயது சிறுவன் அற்புத சக்தியோடு கையசைப்பில் விபூதியை தருவதாக பெரும் கூட்டம் கூடத் தொடங்கியது. புட்டபர்த்தி சாய்பாபாவின் மறு அவதாரம் என்று இந்த சிறுவனைக் கூறினார்கள். இந்த சிறுவனைப் பார்த்து புட்டபர்த்தி சாய்பாபா சீடர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. ஒரு ஆஸ்திரேலிய நாட்டுக்காரர், இந்த சிறுவனின் ‘அதிசய சக்தியை’ விளக்கி வெளிநாடுகளில் பரப்ப ஒரு திரைப்படத்தையே தயாரித்தார். “இந்த சிறுவன் 11 மாதம் வயிற்றிலிருந்து பிறந்தான் என்றும், பிறக்கும்போது தனக்கு பிரசவ வலியே இல்லை என்றும், பிறந்ததிலிருந்தே அவனது உடலிலிருந்து விபூதி கொட்டத் தொடங்கி விட்டது என்றும் அவரது தாயார் கூறி வந்தார்.

பெங்களூர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்தவர் டாக்டர் எச். நரசிம்மையா - எளிமையான காந்தியவாதி; சீரிய பகுத்தறிவாளர்; மூடநம்பிக்கைகளுக்கு எதிராக இயக்கங்களை நடத்திய பெருமைக்குரியவர். பல்கலைக் கழகப் பேராசிரியர்களைக் கொண்டு மூடநம்பிக்கை ஒழிப்புக் குழு ஒன்றை உருவாக்கினார். புட்டபர்த்திக்கே சென்று சாய்பாபாவின் மோசடிகளை அம்பலப்படுத்தியது, இந்தக் குழு. உலகத்திலேயே பல்கலைக்கழகத்தில் முதலில் அமைக்கப்பட்ட மூடநம்பிக்கை ஒழிப்புக் குழு இது மட்டுமே. அக்குழுவில் கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், மனோதத்துவ நிபுணர்கள், மூளை நரம்பு தொடர்புடைய மருத்துவர்கள் என்று 12 பேர் இடம் பெற்றிருந்தனர். அதில் டாக்டர் வினோதா என்.மூர்த்தி, டாக்டர் அனுபமா நிரஞ்சனா என்ற உளவியல் பெண் மருத்துவர்களும் இடம் பெற்றிருந்தனர்.

பாண்டவபுரத்தில்

பண்டரிபுரம் ‘சாய் கிருஷ்ணன்’ அற்புத சக்தி பற்றி தாங்கள் அறிய வாய்ப்பளிக்க வேண்டும் என்று குழு பலமுறை கடிதம் எழுதியும் பதில் வரவில்லை. “பக்தர்களோடு பஜனையில் வேண்டுமானால் கலந்து கொள்ளலாம்; மற்றபடி சிறுவனைத் தொடவோ, சோதிக்கவோ அனுமதி இல்லை” என்று கடைசியாக பதில் வந்தது. அறிவியலாளர் குழு பாண்டவபுரம் சென்று பக்தர்களோடு அமர்ந்து பஜனையில் கலந்து கொண்டது. இது நடந்தது 1976ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி. “சாய் கிருஷ்ணனின் வீட்டில் தாள வாத்தியங்களோடு பஜனை நடந்து கொண்டிருந்தது. சாம்பிராணிப் புகை வீடு முழுவதும் நிரம்பியிருந்தது. தூங்கிக் கொண்டிருந்த சாய் கிருஷ்ணனைச் சுற்றி பக்தர்கள், அவனுடைய அருளை எதிர்நோக்கி உட்கார்ந்திருந்தனர். அவர்களுக்கு இடையேதான் பெங்களூரில் இருந்து சென்ற அறிவியலாளர் குழுவினரும், அடையாளம் காட்டாது, உட்கார்ந்திருந்தனர்.

பஜனை முடிந்தது. பையன் விழித்தெழுந்தான். பக்தர் கூட்டம் கலைய ஆரம்பித்தது. குழுவின் உறுப்பினரான திருமதி வினோதா மூர்த்தி (உளவியல் மருத்துவர்), பையன் தன் இடுப்பருகில், கீறிக் கொள்ளுவதைக் கவனித்தார். அந்த அம்மையார் நினைத்தார், பையனுக்கு வயிற்றில் ஏதோ சங்கடம் என்று, “குழந்தாய், உனக்கு வயிறு வலிக்கிறதா?” என்று கேட்கவும் செய்தார். பையன் ‘ஆம்’ என்று தலையசைத்தான். உடனே அம்மையார் பையனுக்கு உதவ முன் வந்ததோடு, அவன் போட்டிருந்த கால் சட்டையை இறுக்கிப் பிடித்து இடுப்பைச் சுற்றிக் கட்டியுள்ள நூலின் இறுக்கத்தை தளர்த்தினால் பையனுக்கு இதமாக இருக்குமே எனக் கருதி நூல் முனையை தேடினார்கள். நூல் முனை கிடைக்கவில்லை. அதனால் சட்டையையும் பனியனையும் உருவினார். ஏதோ பொலபொலவென உதிர்ந்தது. அதுதான் புனிதமான சாம்பல் - விபூதி - பையனின் கையில் மட்டுமல்ல, அம்மையாரின் கைகளிலும் சாம்பல்.” சாய் கிருஷ்ணன் விபூதி பொட்டலத்தை உடலில் மறைத்துக் கொண்டு விபூதியை கொட்ட வைத்த மோசடி அம்பலமானது.