இன்றைய (14.09.2019) நாளேடுகளில், ஒரே நாளில் மூன்று செய்திகள் வெளிவந்துள்ளன. மூன்றுமே ஆன்மீகம், பக்தி தொடர்பானவை! 

chidambaram temple 380அவை, 1. சிவகங்கை அருகே பாசங்கரையைச் சேர்ந்த இருளப்ப சாமி என்பவர் நடத்திய ஜீவசமாதிக் கூத்து. 2. சிதம்பரம் தில்லைக்கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தைத் தீட்சிதர்கள் ஆடம்பரத் திருமணத்திற்கு  வாடகைக்கு விட்ட வணிக நடவடிக்கை. 3. பிள்ளையார் சிலையைக் கரைக்கச் சென்ற 33 பேர் உயிரிழந்த துயரம். 

இவற்றை எப்படிப் பார்ப்பது? பக்தியின் பெயரால் நடைபெறும் மோசடிகள், பக்தியைக் காசாக்க முயலும் பார்ப்பனியம், மக்களின் அறியாமை என்று மூன்றாகப் பார்க்க வேண்டியுள்ளது. 

செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு மேல் அதிகாலை 5 மணிக்குள் ஜீவசமாதி அடையப் போவதாகக் கூறி, சிவகங்கை அருகில் உள்ள பாசங்கரையைச் சேர்ந்த இருளப்ப சாமி என்பவர் ஊரையே கூட்டியுள்ளார். மாவட்ட ஆட்சியர் வேறு இரவு 11.30 மணியிலிருந்து அங்கு வந்து இரவு முழுவதும் அதே இடத்தில் இருந்துள்ளார். பாதுகாப்புக்காக 200 காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

மக்கள் முன்னிலையில் பேசிய அந்தச் சாமியார், ஜீவசமாதி அடையப் போகும் செய்தியைச் சிவபெருமானே கனவில் வந்து தனக்குச் சொன்னதாகவும், அவர் ஜீவசமாதி அடைந்தவுடன், புரட்டாசி 1 முதல் 7 வரையில் தமிழ்நாடு முழுவதும் கனமழை பெய்யும் என்றும் கூறியுள்ளார். இப்படி ஒரு பக்தி அறிவிப்பையும், வானிலை அறிவிப்பையும் கலந்து சொன்ன சாமியார், இறுதியில் தனக்கு மூன்றரை லட்சம் ரூபாய் கடன் இருப்பதையும் ஒரு கொசுறுச் செய்தியாகச் சொல்லியுள்ளார். கடன் கொடுத்தவர்கள் கனவில் போய் சிவபெருமான் என்ன சொன்னார் என்று தெரியவில்லை. 

சட்டம் ஒழுங்குச் சிக்கல் வந்து விடுமோ என்ற வகையில் அங்கு வந்ததாக ஆட்சியர் சொல்லியுள்ளார். சாமியாரை நம்பி வந்ததாகவே மக்கள் கூறுகின்றனர். கடைசியில், சிவபெருமான் சொன்ன வாக்கைக் காப்பாற்றவில்லை போலிருக்கிறது. சாமியார் இப்போதும் நலமுடன் இருக்கிறார். காவல்துறையின் வேண்டுகோளை ஏற்று மக்கள் ஏமாற்றத்துடன் (!) கலைந்து சென்றுள்ளனர். 

அடுத்த செய்தி, தில்லைக்கோயில் தொடர்பானது. அந்தக் கோயிலை அங்குள்ள தீட்சிதர்கள், தங்களின் சொந்தச் சொத்துப் போலவே வைத்துள்ளனர். அவர்கள் வீட்டு நிகழ்ச்சிகளை அங்கேயே நடத்திக் கொள்கின்றனர். இப்போது பக்தி முற்றிப் போய்விட்டதால், சிவகாசித் தொழில் அதிபர் ஒருவரின் திருமணத்திற்கு வாடகைக்கும் விட்டுள்ளனர். 

இரவு 11 மணிக்கு நடை சாத்தப்பட்டுவிட்ட பிறகும், விடிய விடிய அங்கு அலங்கார வேலைகள் நடைபெற்றுள்ளன. போகிற போக்கில் ஆகமங்களெல்லாம் காற்றில் பறந்து விட்டன. காசு, பணத்தை விட ஆகமங்கள் பெரிதில்லை என்று தீட்சிதர்கள் முடிவு செய்து விட்டார்கள் போலிருக்கிறது. 

ஒரு விதத்தில் நல்லதுதான். இனி நாம் சிதம்பரத்தில் கூட்டம் போடுவதென்றால், தில்லைக் கோயிலை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். திராவிடர் கழகக் கூட்டங்களும் இனிமேல் தில்லைக் கோயிலில் நடக்கும் என்பது மகிழ்ச்சிதானே!

அப்புறம், பிள்ளையாரைக் கரைக்க ஏரிக்கும், கடலுக்கும் சென்றபோது, மத்திய பிரதேசத்தில் 18 பேரும், மராத்தியத்தில் 11 பேரும். தில்லியில் 4 பேரும் உயிரிழந்துவிட்ட செய்தியும் வந்துள்ளது. அவர்களின் குடும்பத்தினரோடு நாமும் துயரத்தைப் பகிர்ந்து கொள்கின்றோம். அதே நேரத்தில், இன்னொரு செய்தியையும் நாம் பகிர்ந்து கொள்ள வேண்டியுள்ளது. சென்னையிலும், பிள்ளையார் சதுர்த்தியை ஒட்டி ஊர்வலங்கள் நடந்தன. அதில் பல இடங்களில் பணம் கேட்டு வன்முறைகள் அரங்கேறின. ஊர்வலத்தில் வந்த பலர் 'நிதானமாக' இல்லை என்பதைப் பலரும் கூறினர்.  

இது ஆன்மீக பூமி என்று சிலர் கூறுகின்றனர். ஆன்மீகம் செல்லும் வேகத்தைப் பார்த்தால் எதிர்காலம் எப்படித் தாங்கி கொள்ளப் போகிறதோ என்று கவலையாய் இருக்கிறது!

- சுப.வீரபாண்டியன்

Pin It