கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

periyar 343திருநெல்வேலி ஜில்லா மூன்றாவது சுயமரியாதை மகாநாடு இம்மாதம் 7, 8, 9, 10 தேதிகளில் திருநெல்வேலியில் வெகுசிறப்பாய் நடந்தேறியது. அம்மகாநாடு அங்கு கூட்டுவதற்கு ஏற்பாடு செய்யப் பட்டவுடன் திருநெல்வேலி நெல்லையப்பர் சாமி கோவிலில் மாஜி தாசில்தார் திருவாளர் எம். வி. நெல்லையப்ப பிள்ளை அவர்கள் தலைமையில் ஆஸ்திக மகாநாடு என்பதாக ஒன்றைக் கூட்டி “சுயமரியாதைக்காரர்கள் தங்கள் பத்திரிகையில் ‘திருடர்க்கழகு திருநீரடித்தல்’ என்று எழுதியிருப்பதால் இது சைவ உலகத்தை அவமானப்படுத்தினதாகும்.

ஆகவே சுயமரியாதை மகாநாட்டுக்கு சகோதரர்கள் யாரும் போகக்கூடாது” என்று முடிவு செய்து பல கனவான்கள் கையொப்பமுமிட்டுத் துண்டு பிரசுரமும் வழங்கி இருந்தார்கள்.

அப்படியிருந்தும் மகாநாட்டுக்கு ஏராளமான சைவர்கள் வந்திருந்ததோடு மகா நாட்டை ஒரு சைவப் பெரியாரும் தேவஸ்தான டிரஸ்டியும் போலீஸ் டிப்டி சூப்ரண்டெண்டெண்டாகயிருந்து பென்ஷன் பெற்றவருமான உயர்திரு. ராவ்சாகிப் கற்பக விநாயகம் பிள்ளை அவர்களே மகாநாட்டை திறந்து வைத்து திரு. ஈ. வெ. ராமசாமி வரும்வரை மகாநாட்டுக்கு அக்கிராசனராக வுமிருந்து நடத்திக் கொடுத்து திரு. இராமசாமி வந்தவுடன் அவர் வசம் அக்கிராசனத்தை ஒப்புவித்து விட்டுச் சென்றிருக்கிறார்.

மற்றொரு சைவப் பெரியாரான திரு. கடயம் சங்கரராயர் பி.ஏ.பி.எல். அவர்களே வரவேற்புத் தலைவராக இருந்து மகாநாட்டை நடத்தியிருக்கிறார்கள். இது தவிர மகா நாட்டில் காலையும் மாலையும் ஆயிரக்கணக்கான ஜனங்கள் பிரதிநிதிகளாகவும், காட்சியாளர்களாகவும் நாலுமணி நேரம், ஐந்து மணிநேரம் வந்திருந்து நடவடிக்கை யில் கலந்திருக்கிறார்கள். இந்த ஆஸ்திகக் கூட்டத்தாருடைய சைவக் கட்டளையை எத்தனை சைவப் பெரியார்கள் மதித்தார்கள் என்பது நடவடிக்கைகளைக் கவனித்தவர்கட்குத் தெரிந்திருக்கும்.

தவிர திருநெல்வேலி சைவர்களின் கையாயுதமாயிருந்து கொண்டு பார்ப்பனப் பிரசாரஞ் செய்து கொண்டிருக்கும் ‘லோகோபகாரி’என்னும் பத்திரிகையானது தனது ஜுன் 12 ம் நாள் பத்திரிகையில் “குடி அரசின் கூற்று” என்னும் தலையங்கத்தில் “திருடர்க்கழகு திருநீரடித்தல்” என்று குடி அரசில் எழுதியிருப்பதால் குடி அரசு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்ள வேண்டுமென்று எழுதியிருக்கிறது.

நாம் இதுவரையிலும் எவ்வித தப்பிதமும் செய்து மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டிய சமயம் நேரவில்லையானாலும் தவறுதல் என்று தோன்றினால் மன்னிப்புக் கேட்க எப்பொழுதுமே தயாராய் இருக்கிறோம். ஆனால் இந்த விஷயத்தில் எவ்விதத்திலும் மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டிய அவசியமிருப்பதாக சிறிதும் விளங்கவில்லை.

அதாவது திருநீரு என்றால் என்ன? எதற்காக அதை நெற்றியில் இடுவது? இடுகிறவர்கள் அதை என்ன கருத்தோடு இடுகிறார்கள்? என்கின்ற விஷயங்களை யோசித்துப் பார்த்தால் “திருடர்க்கு அழகு திருநீரடித்தல்” என்பது நன்றாய் விளங்கும். இல்லா விட்டால் மூடர்க்கழகு யென்றாவது விளங்கும்.

எப்படி எனில் திருநீரு என்பது சாம்பல். அதை இடுவது கடவுளின் அருளைப் பெறவாம். அதை இடுகின்றவர்கள் கருதுவதும் தாங்கள் எவ்வளவு அக்கிரமக்காரர் ஆனாலும் திருநீரிட்ட மாத்திரத்திலே சகல பாவமும் போய் கைலாயம் சித்தித்துவிடும் என்பதேயாகும்.

இதற்கு ஆதாரமாக திருநீரின் மகிமையைப் பற்றி சொல்லுகின்ற பிரமோத்திர காண்டம் என்னும் சாஸ்திரத்தில் ஒரு பார்ப்பனன் மிக்க அயோக் கியனாகவும் கொலை, களவு, கள், காமம்,பொய் முதலிய பஞ்சமா பாதகமான காரியங்கள் செய்து கொண்டே இருந்து ஒரு நாள் ஒரு புலையனான சண்டாளன் வீட்டில் திருட்டுத்தனமாய் அவன் மனைவியை புணர்ந்த தாகவும், அந்த சண்டாளன் இதை அறிந்து அந்தப் பார்ப்பானை ஒரே குத்தாகக் குத்திக் கொன்று அப்பிணத்தை சுடுகாட்டுக்குப் பக்கத்தில் கொண்டு போய் எரித்துவிட்டதாகவும், அந்தப் பார்ப்பனனை அவன் செய்த பாவங்களுக்காக எமதூதர்கள் கட்டிப்பிடித்து கும்பிபாகம் என்னும் நரகத்திற்றள்ளக் கொண்டு போனதாகவும், அந்தச் சமயத்தில் சிவகணங்கள் ரத்தின விமானத்துடன் வந்து அந்தப் பார்ப்பனனை எமதூதர்களிடமிருந்து பிடுங்கி இரத்தின விமானத்தில் வைத்துக் கைலாயத்திற்கு பார்வதி இடம் கொண்டு போனதாகவும், எமன் வந்து “இவன் மா பாவம் செய்த கெட்ட அயோக்கியப் பார்ப்பனனாயிருக்க நீங்கள் கைலாயத்திற்கு எப்படி கொண்டு போகலாம்?” என்று வாதாடினதாகவும், அதற்கு சிவகணங்கள் இந்தப் பார்ப்பான் மீது சற்று திருநீறு பட்டு விட்டதால் அவனுடைய பாவம் எல்லாம் ஒழிந்து அவன் மோக்ஷத்திற்கு அருகனானதினால் பரமசிவன் எங்களை அனுப்பினார் என்று சொன்னதாகவும், இதற்கு எமன் சித்திரபுத்திரன் கணக்கைப் பார்த்து இந்தப் பார்ப்பான் ஒருநாளும் திருநீறு பூசவில்லை, ஆதலால் இவனுக்கு மோக்ஷமில்லை என்று சொல்லி வாதாடி சிவகணமும், எமகணமும் எமனும் சிவனிடம் சென்று இவ்வழக்கை சொன்னதாகவும், பிறகு சிவன் இந்த பார்ப்பனன் உயிருடன் இருக்கும்வரை மகாபாதகங்கள் செய்திருந்தாலும் இவனைக் குத்திக் கொன்று சுடுகாட்டில் இவன் பிணத்தை எறிந்து விட்டபோது மற்றொரு பிணத்தைச் சுட்ட சாம்பலின் மீது நடந்து வந்த ஒரு நாய் இவனது பிணத்தைக் கடித்துத் தின்னும்போது அதின் காலில்பட்டிந்திருந்த அந்த சாம்பலில் கொஞ்சம் பிணத்தின்மீது பட்டு விட்டதால் அவனுக்குக் கைலாயத்தில் இடம் கொடுக்க வேண்டியதாயிற்றென்று சொல்லி எமனைக் கண்டித்தனுப்பிவிட்டு பார்ப்பானுக்கு மோட்சம் கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

ஆதலால் திருநீறு எப்படியாவது சரீரத்தில் சிறிது பட்டுவிட்டால் எப்படிப்பட்ட அயோக்கியர்களுக்கும் மோட்சம் கிடைக்குமென்று சிவன் சொல்லி இருப்பதைப் பார்த்து நமது சைவர்கள் திருநீறு அணிகின்றார்கள்.

அந்த சாஸ்திரத்தின் அடுத்த அத்தியாயத்தில் அத் திருநீறு அணியும் விதம், இடங்கள் எல்லாம் குறிப்பிட்டு அந்த முறைப்படி இட்டால் இதில் எழுதக் கூடாத மகாபாதகங்கள் செய்வதினால் ஏற்படும் பாவங்கள் எல்லாம் நீங்கும் என்றும், அவன் பிதிர்கள் செய்த பாவங்கள்கூட நீங்கி நரகத்திலிருந்தாலும் சிவனிடத்தில் சேர்வார்கள் என்றும் எழுதியிருக்கின்றது.

இவை பிரமோத்திர காண்டம் 14வது, 15வது அத்தியாயத்தில் உள்ளது. இந்த ஆதாரத்தை நம்பி மோக்ஷ ஆசையால் திருநீறு அணிகின்றவர் திருடராகவாவது, அதாவது பேராசைக்காரராகவாவது, மூடராகவாவது இருக்காமல் வேறு என்னவாய் இருக்கக் கூடும்? என்பதை யோசித்துப் பார்க்கும் வேலையை வாசகர்களுக்கே விட்டு விடுகிறோம்.

தவிர நாம் முன் எழுதியதற்காக வருத்தமடைந்த திரு நெல்லையப்ப பிள்ளை அவர்கள் வேளாளன் திருநீறு பூசினால்தான் மோக்ஷத்திற்கருக னென்றும், மற்றவன் பூசினால் அருகராகாரென்றும் கருதிக் கொண்டிருப்பவர்.

உதாரணமாக திருநெல்வேலி ஜில்லா முதலாவது சுயமரியாதை மகாநாட்டில் திருநீறு பூசிய யாவரும் கோவிலுக்குள் போகலாம் என்ற தீர்மானம் வந்த காலத்தில் 2000 பேர் உள்ள கூட்டத்தில் ஆக்ஷேபித்தவர் இவர் ஒரே ஒருவராவார்.

ஆகவே “திருடர்க்கழகு திருநீறடித்தல்” என்று எழுதிய விஷயத்தில் இவருக்குச் சிறிது கூட கோபம் வர நியாயமே இல்லை. ஒரு சமயம் லோகோபகாரிக்கு மன வருத்தமிருக்குமானால் அது “திருடர்க்கு அல்லது மூடர்க்கு” என்று திருத்த ஒரு திருத்தம் கொண்டு வந்தால் ஒப்புக் கொள்ள நாம் தயாராக இருக்கிறோம்.

(குடி அரசு - தலையங்கம் - 15.06.1930)