ரசாயனக் கலவைகளால் செய்யப்பட்ட விநாயகன் சிலைகளைக் கடலில் கரைக்கும்போது, தண்ணீர் மாசுபடுகிறது. அதனால் கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன.

“அறிவுக்குப் பொருந்தாத ஆபாச கதைகளுக்கு சொந்தமான விநாயகனை இப்படி ஏன் சுமக்க வேண்டும்? மதக் கலவரங்களுக்கு வித்தூன்றி, சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை உருவாக்கும் இந்த விழா இந்தத்துவ சக்திகளின் திட்டமிட்ட ஏற்பாடு அல்லவா?” என்று பெரியாரிஸ்டுகள் காலம் காலமாகக் கூறுகிறார்கள். தமிழன் காதுகளில் போட்டுக் கொள்ளவே இல்லை. எல்லாம் விநாயகன் பார்த்துக் கொள்வான் என்று நம்பினான். பகுத்தறிவாளர் சொல்லியும் கேட்காதவர்களுக்கு இப்போது கடல்வாழ் சுறாக்கள் பதில் சொல்லத் தொடங்கி விட்டன.

கடலூர் மாவட்டத்தில் விநாயகன் கொண்டாட்டத்துக்காக வைக்கப்பட்டிருந்த விநாயகன் சிலைகளை தேவனாம்பட்டினம் கடலில் கரைப்பதற்கு, நம்முடைய தமிழின சொந்தங்கள் தூக்கிக் கொண்டு, கடலுக்குள் போனார்கள். ஓம் காளி என்ற முழக்கத்தோடு, கடலுக்குள் கால் வைத்தவுடன், சுறா மீன்கள் சீறிப் பாய்ந்து காலைக் கொத்தத் துவங்கிவிட்டன. ஓம் காளி; ஓம் விநாயகா சத்தம் அப்படியே அடங்கிப் போய் ‘அய்யோ அப்பா, அய்யோ அம்மா’ என்று கேட்கத் துவங்கியது. காலில் ரத்தக் காயத்துடன் எல்லோரும் கரைக்கு ஓட்டமெடுத்தனர். 50க்கும் மேற்பட்டவர்கள் விநாயகனை ஏற்றி வந்த அதே வேனில் ஏற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

“மனித சமூகத்தின் அமைதிச் சூழலை சீரழிப்பதை - இந்த சமூகம் எருமையிலும் பொறுமையாக சகித்துக் கொள்ளலாம். ஆனால், கடலின் சூழலைப் பாழடிப்பதை, கடல்வாழ் உயிரினங்கள் எத்தனை காலம் தான் பொறுத்துக் கொண்டிருக்கும். எனவே தான் தன்மானத்துடன் சீறி எழுந்துவிட்டன போலும் என்கிறார், ஒரு பகுத்தறிவு வாதி; சரியான கேள்வி.

“அய்யோ, கடலுக்குள் உள்ள இந்த சுறாமீன்கள் இந்துக்களின் எதிரிகள்; பெரியார் கட்சியைச் சார்ந்தவைகளாக இருக்கும்; அல்லது பாகிஸ்தான் பயங்கரவாதிகளாக இருக்கலாம்; எனவே இந்த சுறாமீன்களை உடனே சிறையில் தள்ள வேண்டும். அதற்காக பொடாவைக் கொண்டு வரவேண்டும்” என்று இந்து முன்னணியினர் போர்க் கொடி தூக்கக் கூடும்!, பா.ஜ.க. வினர் இதற்காக நாடாளுமன்றத்தையே கூட முடக்கி வைத்து, தூள் கிளப்பலாம்.

ஆனால், எல்லாவற்றையும் “சர்வசக்தியுள்ள விநாயகன்” மட்டும் அசையாமல் சிலையாக, கல்லாக, பொம்மையாக பார்த்துக் கொண்டே இருப்பான். தமிழ் சகோதரா! சுறாமீனுக்குள்ள சொரணையாவது உனக்கு வேண்டாமா? இதற்குப் பிறகாவது நீ சிந்திக்க மாட்டாயா?

கேரளாவின் அடாவடி

இந்திய தேசிய ஒருமைப்பாட்டையும், தேசபக்தியையும் வலியுறுத்திப் பேசி வரும் கட்சிகள், உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பைக்கூட மதித்து செயல்பட மறுத்து விடுகின்றன. கேரளாவில் முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை உயர்த்தவே முடியாது என்று பிடிவாதம் காட்டி வந்தது கேரள அரசு. ஆட்சியில் இருப்பவர்கள் காங்கிரசாக இருந்தாலும், கம்யூனிஸ்டு கட்சியாக இருந்தாலும், இவர்கள் பேசுவது தேசிய ஒருமைப்பாடாக இருந்தாலும் அண்டை மாநிலமான தமிழகத்தின் உரிமைகள் பற்றி கவலைப்படுவதே இல்லை.

இறுதியாக உச்ச நீதிமன்றமே அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்று உத்தர விட்ட பிறகும், கேரளாவில் கம்யூனிஸ்ட் கூட்டணின் அச்சுமேனன் ஆட்சி, பிரச்சினையை மீண்டும் சிக்கலாக்கவே விரும்புகிறது. கேரளப் பொதுப் பணித்துறை அமைச்சர் ஜோசப் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில், உச்சநீதிமன்றம் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்கிறார்.

நில நடுக்கத்தால் முல்லைப் பெரியாறு அணைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்தப் பாதிப்பைத் தடுக்க, அணையின் தண்ணீரை இடுக்கிக்குக் கொண்டு போய் அங்கே புதிய அணை ஒன்றைக் கட்டுவது பற்றி அரசு பரிசீலிப்பதாகவும் கூறியிருக்கிறார்.

அணையின் தற்போதைய மட்டம் 136 அடி. தமிழகத்திலுள்ள விவசாயிகளுக்கு பாசன வசதி கிடைக்க வேண்டுமானால் இதை உயர்த்தியே ஆக வேண்டும். எனவே 142 அடி உயர்த்தலாம் என்று நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்ற பிறகு உச்சநீதிமன்றம் அறிவித்திருக்கிறது. ஆனால் கேரள பொதுப்பணித்துறை அமைச்சர் இப்போது இருப்பதையே 126 அடியாகக் குறைக்க வேண்டும் என்பதோடு, புதிய அணையையும் கட்டப் போவதாகக் கூறுகிறார்.

உச்சநீதிமன்றத்தையே அவமதிக்கிறது கேரள அரசு. வைகைப் பாசனப் பகுதி விவசாயிகள் கொதித்துப் போயிருக்கிறார்கள். தேசிய ஒருமைப்பாடு என்பதெல்லாம் தமிழனுக்குத்தானா? மத்திய அரசும், தமிழகத்தின் இடதுசாரி கட்சியினரும் இதில் மவுனம் சாதிக்கக் கூடாது. கேரளாவின் இந்த அடாவடியை வன்மையாகக் கண்டிக்கிறோம்.