“இந்துத்துவ அம்பேத்கர்” என்ற பெயரில் தமிழக பா.ஜ.க.வின் தலைவர்கள் அண்மையில் வெளியிட்ட நூலில் முன் வைக்கப்பட்ட கருத்துகளை மறுத்து ‘மக்கள் விடுதலை’ மாத இதழுக்காக எழுதி வெளிவந்துள்ள கட்டுரை.
அம்பேத்கர் - இந்துத்துவக் கொள்கையின் தீவிர ஆதரவாளர் என்று நிலைநிறுத்த சங்பரிவாரங்கள் துடிக்கின்றன. இதற்காக வரலாறுகள் திரிக்கப்படுகின்றன. ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்களில் வழிபடக் கூடிய தலைவர்களில் ஒருவராக அம்பேத்கரையும் இணைத்துக் கொண்டிருப் பதாக கூறுகிறார்கள். இன்னும் சில காலம் கழித்து காந்தியையும் ஆர்.எஸ்.எஸ். வழிபாட்டுத் தலைவர் பட்டியலில் இடம் பெற்றாலும் வியப்பதற்கு இல்லை.
அருண்ஷோரி என்ற ஒருவர் வாஜ்பாய் அமைச்சரவை யில் இருந்தார். அரசு பொதுத் துறை பங்குகளை கார்ப்பரேட்டுகளுக்கு விற்பதற்காகவே நியமிக்கப்பட்ட அமைச்சர். அவர், ‘அம்பேத்கர் - பிரிட்டிஷ் ஆதரவாளர், பிரிட்டிஷ் உளவாளி’ என்று ஒரு ‘ஆராய்ச்சி’ நூலையே எழுதினார். பா.ஜ.க. - சங்பரிவாரங்கள் - அந்த நூலைத் தலையில் தூக்கி வைத்து ஆடின. இப்போது தமிழக பா.ஜ.க., அம்பேத்கருக்கு சொந்தம் கொண்டாட ம.வெங்கடேசன் என்ற ஒரு தலித் இளைஞரைப் பிடித்து, ‘இந்துத்துவ அம்பேத்கர்’ என்ற ஒரு நூலை எழுத வைத்திருக்கிறது. இந்த நூல் வெளியீட்டு நிகழ்வில் தமிழக பா.ஜ.க. தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் எல்லோரும் பங்கேற் றிருக்கிறார்கள். இப்போது அம்பேத்கர் இவர்களுக்கு தேவைப்படுகிறார். வெளிப்படையாகச் சொன்னால் தலித் வாக்கு வங்கிக்கு வலை வீசக் கிளம்பியிருக்கிறார்கள்.
இந்த நூல் வரலாற்று அபத்தமாகவே வெளி வந்திருக்கிறது. இதில் முன் வைக்கப்பட்ட வாதங்கள் தான் என்ன? ஒவ்வொன்றாகப் பார்ப்போம்!
“இந்து என்பதில் பவுத்தர்கள், சீக்கியர்கள், ஜைனர்கள் ஆகியோர்களை அம்பேத்கரே உள்ளடக்கியிருக்கிறார். அந்த வகையில் அவர் இந்துவாகவே இருந்திருக்கிறார். ..... அம்பேத்கர் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த சட்ட திருத்தத்துக்குப் பெயரே ‘இந்து சட்டத் திருத்த மசோதா தான்’.” - எனவே அம்பேத்கர் இந்துத்துவ ஆதரவாளர் - இப்படி ஒரு வாதம்!
முதன்முதலாக ‘இந்து’ என்ற பெயரைத் தந்து ‘இந்து’ சட்டங்களை உருவாக்கியவர்கள் யார்? பிரிட்டிஷ்காரர்கள் தான்.
இந்தியாவுக்கு படை எடுத்து வந்த இஸ்லாமியர்கள், சிந்து நதிக்கு அப்பால் இந்திய துணைக் கண்டத்தில் வாழ்ந்தவர்களுக்கு ‘அல்-ஹிந்த்’ என்று பெயரிட்டனர். இது வாழும் இடத்தைக் குறித்த சொல்! இதிலிருந்துதான் ‘இந்து’ என்ற சொல்லை பிரிட்டிஷ்காரர்கள் எடுத்துக் கொண்டனர். அப்போது இஸ்லாமியர் - இஸ்லாமியர் அல்லாதார் என்ற இரண்டு அடையாளங்கள் மட்டுமே சமூகத்தில் இருந்தன. முஸ்லிம் அல்லாத மக்களுக்கு சட்டங்களை உருவாக்க பிரிட்டிஷ் ஆட்சி விரும்பியபோது, பார்ப்பனர்கள் அதற்கு அடிப்படை ‘சித்தாந்தமாக’ மனு சாஸ்திரத்தை வழங்கினர். சுமார் 70 ஆண்டுகாலம் இந்தியாவில் இயங்கிய பிரிட்டிஷ் நீதிமன்றத்திலும், லண்டனில் இயங்கிய உச்சநீதிமன்றமான ‘பிரிவி கவுன்சிலிலும்’ தீர்ப்புகள் மனு சாஸ்திர அடிப்படையில்தான் வழங்கப்பட்டன. அனைவருக்கும் பொதுவான கிரிமினல் சட்டத்தை மெக்காலே கொண்டுவரும் வரை இதுதான் நிலை. ஆக, ‘இந்து’ என்ற பெயரை தந்தது பிரிட்டிஷ்காரன்; அம்பேத்கர் அல்ல. இதற்கு இறந்துபோன காஞ்சி சங்கராச்சாரியே சாட்சி.
சங்கராச்சாரி கூறும் ஒப்புதல் வாக்குமூலம் இது.
“அவன் (வெள்ளைக்காரன்) மட்டும் இந்து என்று பெயர் வைத்திருக்காவிட்டால் ஒவ்வொரு ஊரிலும் சைவர், வைணவர், சாக்தர், முருக பக்தர், எல்லை அம்மனைக் கும்பிடுபவர் என்று நம்மைப் பிரித்துக் கொண்டு தனித்தனி மதமாக நினைத்துக் கொண்டிருப்போம்.
சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் ஒரே சாமி இருக்கிறாரா? இல்லை. வைணவர்களுக்கு சிவன் சாமியே அல்ல; சைவர்களிலும் தீவிர வாதிகள், ‘விஷ்ணு சாமியே அல்ல; சிவன்தான் சாமி; விஷ்ணு சிவனுக்குப் பக்தன்’ என்று சொல்லுகிறார்கள். இவர்கள் இரண்டு பேரையும் எப்படி ஒரு மதம் என்று சொல்வது? வெள்ளைக்காரன் நமக்கு இந்துக்கள் என்று பொதுப்பெயர் வைத்தானோ, நாம் பிழைத்தோம். அவன் வைத்த பெயர் நம்மைக் காப்பாற்றியது.” (நூல்: தெய்வத் தின் குரல் - பாகம் 1 - பக்.266)
ஏதோ அம்பேத்கர்தான், ‘இந்து’ என்ற பெயரை ‘இந்துத்துவா’ உணர்வோடு கொடுத்ததாக எழுதுவது வரலாற்று மோசடி. பல்வேறு மதக் குழுக்களை தனக்குள் இழுத்துக் கொண்டதே ‘இந்து’ மதம்.
அரசியல் நிர்ணய சபையில் ‘இந்து’ சட்டம் குறித்த விவாதங்கள் வந்தபோது, இஸ்லாமிய கிறிஸ்துவ மத சட்டங்களைப்போல் அதற்கு ஒற்றை வடிவம் தர முடிய வில்லை. எனவே தான், எது கிறிஸ்துவ மதம் இல்லையோ எது முஸ்லிம் மதம் இல்லையோ எது யூத மதம் இல்லையோ அதுதான் ‘இந்துமதம்’ என்றுதான் சட்ட வரையறை வழங்கப்பட்டது.
அரசியல் நிர்ணய சபையிலேயே அம்பேத்கர், அதில் அடங்கியுள்ள ஒவ்வொரு தனித் தனிக் குழுக்களுக்குமான நடைமுறைகளை மாற்றி அனைத்து ‘இந்து’க்களுக்கும் பொதுவான ‘சிவில்’ சட்டத்தைக் கொண்டு வர விரும்பினார். ‘பார்ப்பன சனாதன வர்ணாஸ்ரம’ மேலாதிக்கத்தில் இருந்த இந்து மதத்துக்குள் குறைந்த பட்சம் அதிலுள்ள பார்ப்பன மேலாண்மையை அகற்றி, அனைவரையும் முயன்றவரை சமப்படுத்தலாம் என்பதற் காகவே அம்பேத்கர் இந்த முயற்சியில் இறங்கினாரே தவிர, ‘இந்துத்துவா’வை ஆதரித்து அல்ல. ஆனால், ‘இந்து ராஷ்டிர’க் கூட்டம் இந்த முயற்சியையையும் முறியடித்தது. மீண்டும் நேருவின் முதல் அமைச்சரவையில் அம்பேத்கர் சட்ட அமைச்சரான போது இந்து பார்ப்பனிய மதம் திணித்த சமூகக் கேடுகளை அகற்றுவதற்கு 1952இல் இந்து சீர் திருத்தச் சட்டத்துக்கான மசோதாவை கொண்டு வந்தார்.
ஏற்கனவே அமுலில் இருந்த ‘இந்து’ சட்டத்தில் ‘பலதார மணம்’ அனுமதிக்கப்பட்டிருந்தது. இதை ஒழித்து, வெவ்வேறு ஜாதிகளுக்கிடையே திருமணம் செய்யும் உரிமை; பெண் குழந்தைகளையும் வாரிசாக தத்தெடுக்கலாம் என்ற உரிமை; விதவைகளுக்கும் குடும்ப சொத்தில் உரிமை என்ற அம்சங்களை உள்ளடக்கியதுதான் அம்பேத்கர் கொண்டு வந்த இந்து சட்ட திருத்தம். இந்த மாற்றங்களை ‘இந்து’ சமூகத்தில் ஏற்கவே முடியாது என்று நாடாளுமன்றத்தில் இந்து மகாசபை தலைவர்களான என்.சி. சட்டர்ஜி, எஸ்.பி. முகர்ஜி உள்ளிட்ட மதவெறி பார்ப்பன சக்திகள் பலரும் எதிர்த்தனர். பழமையில் ஊறிப்போன அன்றைய குடியரசுத் தலைவர் இராஜேந்திர பிரசாத்தும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க மறுத்தார். உடனே அம்பேத்கர் சட்ட அமைச்சர் பதவியை தூக்கி எறிந்துவிட்டு வெளியேறினார். இதுதான் வரலாறு. சரி; அவர்கள் வாதப்படியே கேட்போம். அப்படி அம்பேத்கர் கொண்டு வந்த ‘இந்து’ சட்டதிருத்தம், ‘இந்து’த்துவத் துக்கான ஆதரவின் அடையாளம் என்றால், அதை, ஏன் ‘சங்பரிவார்’களும் - இந்து மகாசபைக்காரர்களும் எதிர்த் தார்கள்? இந்த சீர்திருத்த மசோதாவை எதிர்ப்பதற்காகவே 15,000 பேர் கொண்ட ‘இராமராஜ்ய பரிஷத்’ என்ற ஒரு படையை உருவாக்கினார்கள். நாடாளுமன்றத்தின் முன்பும் டெல்லியிலும் அம்பேத்கர் உருவ படத்தை எரித்து போராட்டம் நடத்தினார்கள். டெல்லியில் மட்டும் 70 இடங்களில் அம்பேத்கர் படங்கள் எரிக்கப்பட்டன.
இவர்கள் எடுத்து வைக்கும் அடுத்த வாதம் -
“அம்பேத்கரின் கடுமையான விமர்சனங்கள் இந்து மதத்தை அழிக்க நினைப்பது அல்ல; சீர்திருத்த நினைப்பது தான். இதை அண்ணல் அம்பேத்கரே தெளிவாக ‘சாதி ஒழிப்பு’ நூலில் கூறியுள்ளார்.” இது உண்மையல்ல. அம்பேத்கர் இந்துமத ஒழிப்பைத் தான் பேசினார்.
அம்பேத்கரைப் பொறுத்தவரை இந்து மதம் - ஒரு மதமே அல்ல என்பதே அவரது உறுதியான கருத்து. அது ஜாதிகளின் பட்டியல் என்றார். ‘இந்துத்துவா’ எழுத்தாளர் குறிப்பிடும் ‘ஜாதி ஒழிப்பு’ நூலிலிருந்தே ஆதாரத்தை எடுத்துக் காட்டுவோம்.
“இந்து சமூகம் என்ற வார்த்தைக்கே பொருளில்லை; அது வெறும் கற்பனை. இதை நாம் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்து என்ற பெயரே வெளிநாட்டார் சூட்டியது. தம்மையும் இந்திய உள்நாட்டினரை யும் பிரித்துக் காட்டுவதற்காக முகம்மதியர்கள் இந்திய உள்நாட்டினரை ‘இந்து’க்கள் என்று அழைத்தார்கள். முகம்மதியர் படையெடுப்புக்கு முன்புள்ள சமஸ்கிருத நூல்களில் ‘இந்து’ என்ற பதமே காணப்படவில்லை. அக்காலத்தில் இந்தியர்கள் தங்களை தனிச் சமூகமாகவே கருதவோ, மதிக்கவோ இல்லை என்பதால், இந்தியர்களுக்கு எல்லாம் பொதுவான ஒரு சமூகப் பெயரை உண்டாக்க அவர்களுக்குத் தேவையுண்டாகவில்லை. உண்மையில் இந்துச் சமூகம் என்று ஒரு சமூகமே இல்லை. இந்துச் சமூகம் என்பது பல ஜாதிகளைச் சார்ந்த ஒரு கதம்பம்.” இதுதான் அம்பேத்கரின் உறுதியான கருத்து. (நூல்: ஜாதியை ஒழிக்க வழி)
இந்து சமூகம் என்றே கிடையாது என்று அறிவித்த தலைவரை ‘இந்துத்துவா’ ஆதரவாளராக படம் காட்டு கிறார்கள். அவர் இந்துமதத்தை சீர்திருத்தவில்லை; அழிக்கவே விரும்பினார் என்பதற்கு இதோ மற்றொரு சான்று.
1935ஆம் ஆண்டு லாகூரில், ஜாதி ஒழிப்புச் சங்கம் ஒன்று மாநாட்டுக்கு தலைமை உரை வழங்க அம்பேத்கரை அழைத்திருந்தது. ‘ஜாட்-பட்-தோடக் மண்டலம்’ என்ற அந்த அமைப்புக்கு அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க அம்பேத்கர் தனது உரையை முன்கூட்டியே அனுப்பியிருந் தார். உரையைப் படித்த மாநாட்டு நிர்வாகிகள் உரையில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். அம்பேத்கர் அதற்கு ஒப்பவில்லை; எனவே மாநாடு நிறுத்தப்பட்டது. அம்பேத்கரின் அந்த ஆங்கில உரையை தமிழ்நாட்டில் பெரியார் அம்பேத்கரிடமிருந்து பெற்று 1936இல் ‘குடிஅரசு’ பதிப்பகம் சார்பில் தமிழில் வெளி யிட்டார். அந்த உரையுடன் அம்பேத்கருக்கும் அம்பேத்கரை அழைத்திருந்த ஜாதி ஒழிப்பு சங்கத்தினருக்கும் இடையே நடந்த கடிதப் பரிமாற்றங்களையும் அம்பேத்கர் இணைத்திருந்தார். அதில் அம்பேத்கர் உரையில் நீக்கப்பட வேண்டிய பகுதியாக ஜாதி ஒழிப்பு சங்கத்தினர் குறிப்பிட்டதும் இடம் பெற்றிருக்கிறது.
“தங்கள் உரையில் - பார்ப்பனியம் பற்றி தாங்கள் குறிப்பிட்டிருக்கும் பகுதி வரை சேர்த்திருக்கலாம். இந்துமதம் ஒழிய வேண்டும் என்றும், வேதங்கள் ஆபாசமானவை என்றும், தாங்கள் இந்து மதத்தை விட்டு நீங்கப் போவதாகவும் கடைசியில் சேர்த்திருக்கும் பகுதி - சந்தர்ப்பத்துக்குப் பொருத்தமாக இல்லை”.
ஜாதி ஒழிப்பு சங்கத்தினரின் வேண்டுகோளை மறுத்து அம்பேத்கர் அளித்த பதில் இது:
“இந்து மதம் ஒழிய வேண்டும் என்ற கூறுவதால் தங்கள் அமைப்பு அப்படியே கவிழ்ந்து போய் விடும் என்று நான் கருத வில்லை. வார்த்தைகளுக்குப் பயப்படுபவர்கள் மூடர்கள் என்பதுதான் எனது கருத்து..... மதம் ஒழிய வேண்டும் என்பதற்கு நான் கூறும் சமாதானங்களைக் கவனியாமல், மதம் ஒழிய வேண்டும் என்ற வார்த்தைகளைப் பார்த்த வுடனேயே பீதி அடையும். உங்கள் அமைப்பு மீது எனது மதிப்பு குறைந்து விட்டது.”
- இது அம்பேத்கர் தந்த பதில்! இந்து மதம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே அம்பேத்கரின் உறுதியான கருத்து என்பதற்கு இதுவே தெளிவான சான்று. அந்த ஒரு வார்த்தையை தனது உரையிலிருந்து நீக்க விரும்புவதை அம்பேத்கர் ஏற்காததோடு மாநாட்டையே புறக்கணித்தார்.
அத்தகைய தலைவரை - “மத ஒழிப்பாளர் அல்ல; மதத்தை சீர்திருத்தத்தை விரும்பியவர்” என்று எழுது கிறார்கள். இவர்களுக்கு அம்பேத்கர் மொழியிலேயே பதில் கூற வேண்டுமானால் - “வார்த்தைகளுக்கே அஞ்சும் மூடர்கள்!” என்றுதான் கூறவேண்டும்.
“அம்பேத்கர் ‘ஜாதி ஒழிப்பு’ என்றுதான் நூல் எழுதி யிருக்கிறாரே தவிர ‘இந்து மத ஒழிப்பு’ என்று நூல் எழுதினாரா?” - இப்படி ஒரு அபத்தமான கேள்வியை எழுப்புகிறார்கள். இந்து மதமே ஜாதிகளின் தொகுப்பு என்பதைத் தவிர அது ஒரு மதமோ சமூகமோ அல்ல என்று அம்பேத்கர் தெளிவாகக் கூறிவிட்ட பிறகு, ‘இந்து மத ஒழிப்பு’ என்று தனியாக ஒரு நூல் எழுதவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களா? இந்து மதத்தின் உயிர்நாடி யான ஜாதி - பார்ப்பனியம் - வர்ணாஸ்ரமத்தை ஒழித்து, அதன் அதிகாரங்களை மறுக்க வேண்டும் என்று அவர் கூறியதே இந்துமத ஒழிப்பு தானே? இதைவிட்டால் இந்து மதத்தில் வேறு என்ன இருக்கிறது?
அம்பேத்கர் ஜாதி எதிர்ப்பை மட்டுமல்ல; பார்ப் பனர்களை எதிர்க்கிறார்; பார்ப்பனியத்தை எதிர்க்கிறார்; புரோகித வர்க்கத்தை எதிர்க்கிறார்; வேதங்களை எதிர்க் கிறார்; மனுஸ்மிருதியை தீயிட்டுக் கொளுத்தியிருக்கிறார்; கீதையை முட்டாள்களின் உளறல்கள் என்று கூறியிருக் கிறார்; வேத-சாஸ்திரங்களுக்கு உள்ள அதிகாரங்கள் அழிக்கப்பட வேண்டும் என்கிறார். கடைசியில் இந்து மதத்துக்கு முழுக்குப் போட்டுவிட்டு புத்த மார்க்கத்தில் இலட்சக்கணக்கான மக்களுடன் இணைந்தபோது எடுத்த உறுதிமொழியில், இராமன், கிருஷ்ணன் உள்ளிட்ட இந்து கடவுள்களை வணங்க மாட்டோம்; வீட்டில் நிகழ்ச்சிகளுக்கு புரோகிதர்களை அழைக்க மாட்டோம் என்று உறுதி ஏற்க வைக்கிறார். இந்து பார்ப்பன மதத்துக்குள் எந்த சீர்திருத்தத்தையும் கொண்டுவர முடியாது என்ற உறுதியான முடிவுக்குப் பிறகு தான் புத்த மார்க்கத்தையே தழுவுகிறார். இவ்வளவுக்குப் பிறகும் அம்பேத்கர் ‘இந்துத்துவவாதி’ என்றும் ‘இந்து’ சீர்திருத்தவாதி என்றும் கூப்பாடு போடுகிறார்கள்; நூல் எழுதுகிறார்கள்.
இனி அடுத்த வாதத்தைப் பார்ப்போம்!
(அடுத்த இதழில் முடியும்)