22.2.2008 அன்று திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் பெரியார் உயராய்வு மையமும், மகளிரியல் துறையும் இணைந்து நடத்திய ‘பெரியார் அம்பேத்கர்: இன்றைய பொருத்தப்பாடு’ என்ற தலைப்பிலான சிறப்புச் சொற்பொழிவில் பங்கேற்று மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சர் ஆ.ராசா ஆற்றிய உரையின் சென்ற இதழ் தொடர்ச்சி:

அம்பேத்கர் சொல்லுவார்:

Hindus are the only people in the world whose relation between man to man has been consecrated by the religion as inviolative and eternal மாற்ற முடியாது. ஒருமுறை ஒருவன் பிறந்து விட்டால் மாற்ற முடியாது. நீ இந்த ஜாதி என்று பிறந்து விட்டால் நான் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் மாற்ற முடியாது. அய்யா கிண்டலாகச் சொல்லுவார். இந்து யார் என்று சொல்லுகிறபோது, இந்து யாரென்று அரசியல் சட்டத்திலே, நம்முடைய இந்து லாவிலே சொல்லுகிறபோது, யார் இந்து என்று சொன்னால் அய்யா சொல்லுகிறார்:

“ஆடு எதுன்னு கேட்டா எதுன்னு நீ சரியாச் சொல்லனுமில்ல? எது மாடு இல்லையோ, எது கோழி இல்லையோ, எது கொக்கு இல்லையோ அதெல்லாம் ஆடுன்னு சொன்னா அவன் பைத்தியக்காரன்ல?”

அது மாதிரின்னு சொன்னார். அதுவரைக்கும் புரியல நமக்கு. அய்யா சொல்றார், இந்துன்னா யாரன்னு இவன் சொல்லணுமில்ல?

Those who are not Muslims, those who are not Christians, those who are not Persians, those who are not Jews, they are Hindus. . யாரெல்லாம் முகம்மதியன் அல்லவோ, யாரெல்லாம் கிறிஸ்துவன் அல்லவோ, யாரெல்லாம் பார்சியன் அல்லவோ, யாரெல்லாம் அவனல்லவோ, இவனல்லவோ அவனெல்லாம் இந்து.

இதைத் தாண்டி இன்னொருவன் பிறக்க முடியாது இந்த மண்ணில். இந்த முடிச்சைக் கொண்டு வந்து சேர்த்த இழிவு, பெருமை எது என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அது இந்த இந்துமதத்திற்குத்தான் உண்டு.

இதைத்தான் தந்தை பெரியார் அவர்களும், அண்ணல் அம்பேத்கர் அவர்களும் ஒரே இடத்தில் நின்று சொன்னார்கள். தந்தை பெரியார் பிராமணீயம் என்று எடுத்துக் கொண்டிருக்கக்கூடாது. இந்துத்துவா என்றுதான் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று சொன்னார்கள். நாங்கள் படித்துப் பார்த்தவரை, பிராமணியத்திற்கும், இந்துத்துவாவிற்கும் மிகப் பெரிய வித்தியாசமில்லை. இரண்டும் ஒன்றுதான்.

ஒரு சமூகத்தைப் படைத்து அந்த சமூகம் இப்படித்தான் வாழ வேண்டுமென்பது மட்டுமல்ல, அவர்களைப் படிக்காதே என்று சொன்ன சமூகம் உலகத்திலே இன்னொரு சமுதாயம் இல்லை. இன்னும்கூட அம்பேத்கர் ஒருமுறை ஆய்வு செய்கிறார். The caste system in India is not virtually visible இந்த அரங்கத்திலே இருக்கிற யாரையாவது பார்த்து வன்னியர் யார்? ஆதிதிராவிடர் யார்? கவுண்டர் யார்? பள்ளர் யார்? என்று நிறம் பிரிக்க முடியுமா? இந்த முகத்தைப் பார்த்து யாரையாவது ஜாதி சொல்ல முடியுமா உங்களால்? வேறுபாடு இருக்கிறது என்பது வேறு. Racial difference என்று சொல்லுவார்கள். ஒரு இன வேறுபாடு என்பது முகத்திலேயே தெரியும்.

நீக்ரோக்களைப் பார்த்தால் தெரியும். நீக்ரோக்கள் எவ்வளவு அல்லல்பட்டிருக்கிறார்கள்? The world owes a duty to untouchables as it is declared to other communities in the world என்று அம்பேத்கர் ஒரு இடத்திலே சொல்லுவார். உலகத்திலே நீக்ரோவை எப்படிப் பார்த்தீர்களோ, உலகத்திலே வேறு விதமான இன ஒடுக்கல் முறையை எப்படிப் பார்த்தீர்களோ, அப்படிப்பட்ட இன ஒடுக்கல் முறைதான் இந்தியாவில் இருக்கிறதென்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அது தெரியவில்லை நமக்கு. அவ்வளவுதான். ஒரு நீக்ரோவைப் பார்த்தால் தெரியும், வெள்ளைக்காரன் இவன், கருப்பன் இவன், இவனுக்கு கஷ்டம் இருக்கிறது என்று சொல்லலாம்.

நீக்ரோக்கள் படும் கொடுமையை பெஞ்சமின் மொலாய்சியஸ் என்கின்ற கவிஞன் ஒருமுறை சொன்னான். ஒரு கருப்புப் பெண்மணியை நீதிமன்றத்துக்கு அழைத்து வருகிறார்கள். அந்தக் கருப்பு இனப் பெண்மணி வெள்ளைக்காரப் போலீஸ்காரர்களால் கைது செய்யப்பட்டு காவல்நிலையத்தில் கொடுமைப்படுத்தப்படுகிறாள். எப்படிக் கொடுமைப்படுத்தப்படுகிறாள் என்பதை நீதிமன்றத்திலே பெஞ்சமின் மொலாய்சியஸ் என்கின்ற சிந்தனையாளன் தன்னுடைய கருத்தை சொல்லுகிறபோது நீதிமன்றக் காட்சி வாயிலாகச் சொல்லுவான். ஒரு கருப்பு இனப் பெண்ணை நீதிமன்றத்திற்கு கூட்டி வருகிறார்கள். நீதிபதி கேட்கிறார்:

“அம்மா, சிறையில் உன்னை யாராவது கொடுமைப்படுத்தினார்களா? இல்லை, எந்தக் கொடுமையும்படுத்தவில்லை. நன்றாகச் சொல் கொடுமைப்படுத்தினார்களா? இல்லை. அய்யா எனக்கு எந்தக் கொடுமையும் நடக்கவில்லை. ஆனால் ஒன்று, என் அருகிலே இருக்கிறானே இந்தப் போலீஸ்காரன் அவனுடைய தடிக்கு மட்டும் விந்து பாய்ச்சுகிற ஆற்றல் இருந்தால் நான் இந்நேரம் ஒரு குழந்தைக்குத் தாய்”.

நீதிபதிக்குப் புரியவில்லை. அப்படியானால் எவ்வளவு பெரிய கொடுமையை அந்தப் போலீஸ்காரர்கள் அந்தப் பெண்ணுக்கு செய்திருக்கிறார்கள் என்பதிலிருந்து அந்த இன ஒடுக்கலினுடைய அடர்த்தியை உங்களால் அறிய முடியும்.

அம்பேத்கர் சொல்லுகிறார்: இந்த ஒடுக்கலைக் காட்டிலும் எங்கள் நாட்டில் இருக்கிற ஜாதிய ஒடுக்குமுறை கொடுமையானது. ஆனால் இதைச் சொல்லாமல் பார்த்துக் கொள்கிற வேலையை பிராமணீயம் இங்கே செய்து கொண்டிருக்கிறது. அதனால்தான் அவங்க அக்ரிமென்ட் போட்டாங்க. எந்த இடத்திலே தந்தை பெரியாருக்கும் , அண்ணல் அம்பேத்கருக்கும் ஓர்மை வருகிறது என்று சொன்னால், முதல்ல சுதந்திரம் வேணான்னு சொன்னது ரெண்டுபேர்தான். இன்னும் சொல்லப்போனால் 1927 இல் சைமன் கமிஷன் வருகிறது. 1919 ஆம் ஆண்டு அரசியல் சட்டத்தை எப்படித் திருத்தலாம் என்பதற்காக சைமன் கமிஷன் வந்தபோது, இங்கே இருக்கிற காங்கிரஸ்காரர்கள் சைமன் கமிஷனே வெளியேறு என்று சொல்லுகிறார்கள். அதற்கு அவர்கள் சொன்ன காரணம் போலித்தனமானது. இந்தியாவில் யாரும் இந்தியர்கள் அந்தக் குழுவிலே இல்லை என்று சொன்னார்கள்.

அது அல்ல நோக்கம். சைமன் கமிஷன் எதற்காக வந்தது என்றால், இந்தியாவில் ஜாதி என்றால் என்ன? எத்தனை ஜாதி இருக்கிறது? ஏன் இவர்கள் படிக்க வைக்கப்படாமலிருக்கிறார்கள்? ஏன் இவர்கள் நாகரீகம் இல்லாமல் இருக்கிறார்கள்? இவைகளுக்கு யார் காரணம்? என்பதைக் கண்டறிய வேண்டிய சூழ்நிலை கமிஷனுக்கு தேவைப்பட்டது. அம்பேத்கர் இன்னொரு இடத்தில் சொல்கிறார்.

No intellectual class in the world has prostituted its intelligence to invent a philosophy to keep its fellowmen in perpetual state of imbalance and poverty as Brahmin community has done to India உலகத்திலே இருக்கிற எந்த முன்னேறிய ஜாதியும், மேட்டுக்குடி ஜாதியும் தான் வளரும் சுரண்டும் உண்மைதான். ஆனால் படிக்காதே, வறுமையிலும், ஏழ்மையிலும் இரு என்பதற்காக கடவுளின் பெயரால் ஒரு தத்துவத்தைக் கண்டுபிடித்து, அந்த தத்துவத்தைச் சுமத்தி, ஒரு மிகப் பெரிய சமுதாயத்தை 95 பேர் இருக்கிற சமூகத்தை அறியாமையிலும், ஏழ்மையிலும், கல்வியறிவில்லாமலும் வைத்திருக்கிற ஒரு கொடுமைக்குச் சொந்தக்காரர்கள் யாரென்று சொன்னால், இந்தியாவில் பிராமணர்களைத் தவிர வேறு யாரும் கிடையாது.

இது அம்பேத்கர் அவர்கள் சொன்னது. இதைத் தான் அய்யா அவர்கள் சொன்னார்கள். உலகத்திலே எந்த தேசத்திலேயும் இப்படி இல்லையே, வேற்றுமைகள் இருக்கிறது. ஆனால் அந்த வேற்றுமைகளை பிறப்போடு முடிச்சுப் போடவில்லையே என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள். ஆக அந்த இரண்டு பேருக்கும் இருக்கின்ற ஒற்றுமை என்ன என்று சொன்னால், இந்து மதத்தை எதிர்ப்பது. அதற்குக் காரணம், மனிதனை மனிதனாகப் பார்ப்பது. அது ஒருவிதம். மேலெழுந்தவாரியாகப் பார்க்கின்ற போது, மார்க்சிய கண்ணோட்டத்தில் பார்த்தால் இரண்டு பேரும் பொருள் முதல்வாதிகள். ஒரு பொருள் முதல்வாதிக்கு இருக்கவேண்டிய அடிப்படையான பண்பு என்ன என்று சொன்னால், இயற்கைக்கும் மனிதனுக்கும் உள்ள உறவை இயற்கையாகவே பார்ப்பது. சிம்பிளா சொன்னா அவ்வளவுதான்.

மெட்டீரியலிசம்னா போட்டுக் குழப்பிகிட்டு இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. மெட்டீரியலிசம்னு சொன்னா, இயற்கைக்கும் மனிதனுக்கும் உள்ள உறவை இயற்கையாகவே பார்ப்பது. இந்த மார்க்சிய கண்ணோட்டத்தோடு இந்தியாவில் சமூகத்தைப் பார்த்த இரண்டு தலைவர்கள் உண்டு என்றால் பெரியாரும் அம்பேத்கரும்தான் வேறு எந்த கம்யூனிஸ்ட்காரர்களும் கிடையாது.

கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மிகப் பெரிய தலைவர் எஸ்.ஏ. டாங்கேவே வேதத்திலிருந்து தான் கம்யூனிசம் வந்ததுன்னு சொல்லி விட்டுப் போயிட்டாரு. வேதத்துக்கும் கம்யூனிசத்துக்கும் என்ன சம்பந்தம்? இன்றைக்கு இருக்கின்ற இந்த மேடையில் நின்று கொண்டு சொல்கின்றேன். பெரியாருக்கும் அம்பேத்கருக்கும் பொருத்தப்பாட்டைப் பற்றி இன்றைக்கு பேசிக் கொண்டிருக்கின்றோம்.

ஒரு காலகட்டத்தில் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் பெரியாரையும், அம்பேத்கரையும் ஏற்றுக் கொள்ளாதவர்கள். ஏற்றுக் கொள்ளாதவர்கள் என்றால் இவர்களுடைய வாழ்க்கைத் தளம், இவர்களுடைய நெறி எல்லாம் ஒரு சின்ன சிட்டிகைக்குள் அடைக்கப்பட வேண்டியவை என்று கருதியவர்கள். வர்ணபேதம் பேசப்பட வேண்டியதில்லை என்று கருதியவர்கள். ஆனால் அப்படிப் பேசாமல் இருப்பதற்கு அவர்கள் மார்க்சியத்தைப் படிக்காமல் போனார்கள் என்பதுதான் உண்மை.

1848 இல் பெரியார் பிறப்பதற்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் சுதந்திரப் போர் என்கின்ற தலைப்பில் காரல் மார்க்ஸ் எழுதுகிறார். இந்தியாவைப் பற்றி, “பசுவையும் குரங்குகளையும் வணங்குகிற மூடத்தனம் இருக்கின்ற தெற்காசியாவில், குறிப்பாக இந்தியாவில், மனிதனை இன்னொரு மனிதன் கருவியாகக் கருதுகிற தெற்காசியாவில் குறிப்பாக இந்தியாவில் புரட்சி வருவதற்கான சாத்தியக் கூறுகளே இல்லை” - என்று 1848 இல் காரல்மார்க்ஸ் சொன்னார்.

காரல் மார்க்ஸ் சொன்ன அறிவுரையை ஏற்க மறுத்த மார்க்சியவாதிகள் ஏறத்தாழ 150 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றைக்கு தந்தை பெரியாரின் தடியையும், அம்பேத்கரின் கண்ணாடியையும் போட்டுக் கொண்டு அருந்ததியர்களின் மாநாட்டில் உரிமைக்காகக் கலந்து கொள்கிறார்கள் என்றால் பெரியாரும் அம்பேத்கரும் இன்னும் நூறு ஆண்டுகளுக்குத் தேவைப்படுகிறார்கள் என்பதைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இதுதான் இவர்களுக்கு இருக்கிற பொருத்தப்பாடு. இந்துயிசம் எதிர்ப்பு என்று வருகிறபோது இரண்டு பேரும் ஒரு தளத்தில் நின்றார்கள்.

அதற்கு என்ன காரணம்? இரண்டு பேரும் ஒருவிதத்திலே நாத்திகவாதிகள். அம்பேத்கர் தன்னை ஒரு இடத்திலேகூட நாத்திகவாதி என்று வெளிப்படையாகச் சொல்லிக் கொள்ளவில்லை. ஆனால், இருக்கிற கட்டமைப்பை உடைக்க வேண்டுமென்று விரும்பியவர். பெரியார் இன்னொரு இடத்தில் சொல்லுகிறார்: நான் நாத்திகன் என்றுகூட சொல்லிக்கொள்ள விரும்பவில்லை. நான் தாராளவாதி என்று அவர் சொல்கிறார்.

அதற்கு என்ன காரணமென்றால், பெரியாருடைய நாத்திகம், இன்றைக்கும் சொல்லுகின்றேன். திராவிடர் கழகத்தின் மீது அல்லது பெரியாரின் கருப்புச் சட்டைக்காரர்கள் மீது இருக்கிற மிகப் பெரிய குற்றச்சாட்டு. பெரியார் என்றால் இவர்கள் அறிந்தது, அல்லது பெரியார் என்றால் இவர்கள் அடையாளப்படுத்த விரும்புவது கடவுள் மறுப்பாளராக மட்டும்தான் பெரியாரைப் பார்க்கிறார்கள்.

மதம் வேண்டாம், கடவுள் வேண்டாம், மோட்சம் இல்லை, நரகம் இல்லை என்று சொல்லுவதற்காக மட்டுமே பெரியார் தேவைப்படுகிறார் என்கின்ற ஒரு வறட்டுத்தனமான நாத்திகத்திற்குள் பெரியாரை அடக்குவதற்கு இன்றைக்கு இருக்கிற பெரியாரிஸ்ட்டுகள் தெரிந்தோ, தெரியாமலோ ஆளாகிறார்கள் அல்லது ஆளாக்கப் பட்டிருக்கிறார்கள் என்கின்ற ஒரு குற்றச்சாட்டில் இருக்கிற உண்மையை நாம் மறுதலிப்பதற்கில்லை.

அதனால்தான் பெரியார் சொல்லுகிறார்: நான் நாத்திகன் என்பதைக் காட்டிலும் ஒரு தாராளவாதி என்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இப்படி அவர் சொல்லுவதற்குக் காரணம், பெரியாரின் நாத்திகம் சமூகம் சார்ந்தது. அறிவியல் பூர்வமாக அணுகி கடவுள் இல்லை என்று சொல்வது வேறு. பெரியார் சொல்கிறார்:

மனிதனுக்கு மனிதன் தொடக்கூடாது, கண்ணில் படக்கூடாது, தொட்டால் தீட்டு, நடந்தால் தீட்டு என்று சொல்லுகின்ற ஒரு நாட்டை பூகம்பத்தால் அழிக்காமலோ, சண்டமாருதத்தால் துகளாக்கப்படாமலோ, சமுத்திரம் பொங்கி எழுந்து அமிழச் செய்யாமலோ இருப்பதைப் பார்த்த பிறகும்கூட கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்றால் அதை எப்படி நான் நம்புவது? - என்று கேட்டார். எனவே பிரச்சினை கடவுளுக்கும் பெரியாருக்கும் அல்ல. இந்த சமூகத்தின் மீது பெரியாருக்கு அக்கறை இருக்கிறது.

ஜாதிப் பிரச்சினையைப் பெரியார் தொடுகிறபோது கடவுள் குறுக்கே வருகிறார். ஏன் காரணம் இப்படி இருக்கிறாய் என்று கேட்டபோது, இல்லை இப்படித்தான் சாஸ்திரம் சொல்கிறது என்ற விளக்கம் சொல்லப்பட்டது. அதனால் தான் அம்பேத்கர் Annihilation of caste என்ற புத்தகத்திலே சொன்னார், You must take the stand that Buddha took; You must take the stand that Guru Nanak took; those leaders who not only denied the sastras and also the authorities of sastras. வேதங்களை மறுப்பது மட்டுமல்ல, வேதங்களுக்கு ஆதாரமாக இருக்கிற எல்லாவற்றையும் நீ அறுத்துவிடு என்று Annihilation of casteஇல் சொல்லுவதற்குக் காரணம், இங்கேதான் அந்த மய்யப்புள்ளி இருக்கிறது. அதனால்தான் பெரியார் சொன்னார்:

நான் ஜாதியை ஒழிக்க வேண்டுமென்று விரும்புகின்றேன். நான் ஜாதியை ஒழிக்க விரும்புகிற இந்தப் போரில் உன்னுடைய கடவுளை, மதத்தைக் காப்பாற்றிக் கொள்ள முடியுமென்று சொன்னால், காப்பாற்றிக் கொண்டு போ.

நம்மால முடியலைங்கறது தானே பிரச்சனை. ஜாதியை ஒழிக்க வேண்டுமென்று முயற்சி செய்கிற போது அந்த ஜாதி எங்கே இருக்கிறது என்றால் வர்ணாஸ்ரமத்திலே இருக்கிறது. வர்ணாஸ்ரமம் எங்கே இருக்கிறது என்று சொன்னால், வர்ணாஸ்ரமத்தைப் படைத்தது நானே என்று கண்ணன் சொல்கிறான். ஆக, இந்துயிசத்தின் தத்துவம் என்று வருகிறபோது, அம்பேத்கர் தனியாகவே இதற்கென்று ஒரு சேப்டரே எழுதுகின்றார்.

பிலாசபி ஆப் இந்துயிசம் என்று வருகிறபோது தந்தை பெரியார் சொன்ன அந்தத் தத்துவத் தளத்திலேதான் அம்பேத்கர் நிற்கிறார். அம்பேத்கர் செய்த ஆய்விலேதான் தந்தை பெரியார் நிற்கிறார். இது இவர்களுக்கிடையிலே இருக்கிற ஓர்மை. சரி இந்துத்துவா என்னும் கொள்கை சொல்கிறோமே, இதனுடைய அடிப்படைக் கூறுகள் என்ன? முதல் கூறு, சமூகத்தை ஏற்றத்தாழ்வுள்ள படைப்புகளாக மாற்றுவது. Gradual graded inequality - the first character of the Hinduism, இந்துயிசத்தினுடைய தத்துவம் என்று அவர் நான்கு கூறுகளைச் சொல்லுகிறார். வேற்றுமையைக்கூட ரொம்ப புத்திசாலித்தனமாக படிப்படியாக வைப்பது. Horizontal division வேறு Vertical division வேறு அம்பேத்கர் மிகத் தெளிவாகச் சொல்லுகிறார்.

Horizontal division வேறு என்று சொன்னால், கிடை நிலையில் பாகுபடுத்திக் கொண்டே போவது. இதிலே ஒரு கட்டையை எடுத்துவிட்டு இன்னொரு கட்டைக்குத் தாவலாம். ஆனால் ஏணிப்படியைப் போல வெர்டிக்கல் ஆக வைத்தால் ஒரு படியை விட்டு இன்னொரு படிக்குப் போக முடியாது. இந்தியாவில் சாதி எப்படி இருக்கிறது என்றால், படிக்கட்டைப் போல இருக்கிறது. வெர்டிக்கல் டிவிஷன் - வெர்டிக்கல் ஆக இருக்கிற காரணத்தினாலேதான் ஒரு ஜாதியிலிருந்து இன்னொரு ஜாதியை தாண்ட முடியாமல் போகிறது என்கிற ஆய்வினை அம்பேத்கர் வைக்கிறார்.

அதைத் தந்தை பெரியாரும் ஒப்புக் கொண்டு, ஜாதியை நாம் எடுக்க வேண்டுமென்று சொன்னால் மதத்தை ஒழித்தாக வேண்டும். மதத்தை ஒழிக்க வேண்டுமென்று சொன்னால் மதத்தைக் காப்பாற்றுகின்ற கடவுளை ஒழித்தாக வேண்டும் என்றார். இந்த இடத்திலே நான் ஒன்றைச் சொல்ல வேண்டும்.

அம்பேத்கர் தன்னை ஒரு ஆன்மீகவாதி என்று அடையாளப்படுத்திக் கொண்டவர். அதனால் தான் பெரியாரை நான் கவனமாகச் சொன்னேன். பெரியாரை நாம் நாத்திகனாகப் பார்ப்பது என்பது வேறு, அந்த நாத்திகத்துக்குள் அவர் சொல்லுவது நான் ஒரு தாராளவாதி என்று அவர் சொல்லுவதற்குக் காரணம், கடவுளை நேரடியாக வெறுக்க வேண்டிய அவசியம், எதிர்க்க வேண்டிய அவசியம் பெரியாருக்கு வந்ததற்குக் காரணம் வேறு. பகுத்தறிவு என்பது வேறு.

ஆனால் பெரியாருடைய நாத்திகத்திற்குப் பின்னால் இருக்கிற சமூகம் சார்ந்த உணர்வும், அம்பேத்கர் உயர்த்திப் பிடித்த ஆன்மீகமும் ஒரு இடத்தில் சந்திக்கிறது. ஜாதி கூடாது, இறப்புக்குப் பிறகு ஒன்றும் கிடையாது. புத்தரிடத்திலே கேட்டார்கள், இறப்புக்கு சாவிற்குப் பிறகு மனிதன் எங்கே போகிறான் என்று கேட்டதற்கு அவர் சொன்னார்: “ஒரு விளக்கு அணைந்ததற்குப் பிறகு அந்த ஒளி எங்கே போகிறது என்று கேட்டால் நான் என்ன சொல்லுவேன்.”

ரொம்ப எளிமையாகச் சொன்னார். ஒரு கால கட்டத்தில் அவர் இன்னும் தெளிவாகச் சொல்லுகிறார். அவர் எழுதிய இரண்டு புத்தகங்களைக் கல்லூரி மாணவர்கள், வரலாற்று மாணவர்கள் படித்தாக வேண்டும். Who were the sudras? Why they have been called as sudras and termed as fourth varna in Indo-aryan society? சூத்திரர்கள் யார்? அவர்கள் ஏன் நான்காவது வர்ணமாக ஆக்கப்பட்டார்கள்? என்று ஒரு புத்தகம். ஆய்வுக் கட்டுரை.

இன்னொரு புத்தகம். Who were the untouchables? Whey they have been called as untouchables? அவர்கள் ஏன் தீண்டத் தகாதவர்களாக அழைக்கப்பட்டார்கள்? என்று சொன்னபோது சொல்கிறார், இந்தத் தீண்டாமை ஜாதி எல்லாம் எப்போ வருகிறது என்ற சொன்னால், கிறிஸ்து பிறந்ததற்குப் பின்பு 400 ஆண்டுகளில்; அதற்கு முன்பு கிடையாது. பாகியான் வருகிற பொழுது அதைக் குறிப்பிட்டுச் சொல்கிறார். கி.மு. 400வது ஆண்டு பௌத்தத்திற்கு ஏற்கனவே இருந்த ஆரிய சமூகத்திற்கும் நடந்த மோதலின் வெளிப்பாடு தான் இந்த ஜாதிகளெல்லாம் வருகிறதென்று அங்கே அவர் குறிப்பிட்டு ஒரு ஆய்வுக் கட்டுரை வைக்கிறார். அந்த ஆய்வை மறுதலிக்கிறவர்களும் இருக்கிறார்கள், ஏற்றுக் கொண்டவர்களும் இருக்கிறார்கள்.

ஆனால், எங்கே நாம் நிற்கிறோம் என்று சொன்னால், இந்த நான்கு குணங்கள் இருக்கிறதே, Graded Inequality-number one வேறுபாடுகளை ஏற்படுத்தி அந்த வேறுபாடுகளைக் கட்டாயமாக ஆக்குவது. இன்னொன்று, அப்படி வேறுபாடுகளை ஏற்படுத்தியதற்குப் பின்னால் பெரும்பான்மை சமூகத்திற்குக் கல்வியை மறுப்பது. இது ஒரு குணாம்சம்.

இந்துத்துவாவினுடைய குணாம்சத்தில் இதுவும் ஒன்று. மூன்றாவது, Prohibition of power அவன் அதிகாரத்திற்கு வந்துவிடக்கூடாது என்று கவனமாக இருப்பது. 1930 இல், 40 இல் எல்லாம் என்ன பண்ண முடியும்? உங்களுக்குத் தெரியாது. பல மாணவர்களுக்குத் தெரியாது. இன்றைக்கு இருக்கிற அரசியலில் மாணவர்கள் எங்கெங்கோ போய்க் கொண்டிருக்கிறார்கள்.

திருவிழாவிலே குழந்தைகளை ஒரு நிமிடம் இடுப்பிலேயிருந்து தாய்மார்கள் கழட்டிவிட்டால் கிலுகிலுப்பைக்காரர்கள் பக்கத்திலே ஓடிப்போகிற குழந்தைகளைப் போல் இன்றைக்கு இருக்கிற இளைஞர்கள் எங்கெங்கோ அரசியல் கட்சிக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நான் சொல்ல விரும்புகிறேன் 1931 வரை இந்த மண்ணில் சமஸ்கிருதம் படித்தால் மட்டும்தான் எம்.பி.பி.எஸ். - இல் அட்மிஷன். பார்ப்பதற்குப் பைத்தியக்காரத்தனமாக இருக்கும்.

அண்ணா எழுதுகிறார்; அண்ணா நேரடியாகச் சொன்னால் எடுக்காது என்று சொல்லி வேறுவிதமாக எழுதுகிறார்: ரோமனசோ என்று ஒருவன் இருந்தான் ரஷ்யாவில். அவனுக்குத் தாய்மொழி இலத்தீன். ஆனால் இலத்தீன் படித்த அவனுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் மறுக்கப்பட்டது. அதனால் அவன் இலக்கியத்திலே பின்னால் பெரிய ஆளாகி பெரிய நோபல் பரிசு பெற்றான். ஆனால் அவன் அப்போது வருந்தினான்.

எனக்கு இரஷ்ய மொழி தெரியவில்லை என்பதற்காக எம்.பி.பி.எஸ் சீட் கொடுக்கவில்லையே என்று, உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும், ஒரு மொழி தெரியவில்லையே என்பதற்காக அந்த மண்ணிலே வாழுகிறவனுக்கு எம்.பி.பி.எஸ்ஸிலே சீட் இல்லையா என்று கேட்கிறாய் தம்பி, இங்கு மட்டும் என்ன வாழ்ந்தது? 1931 வரை எந்த ஜாதிக்காரனாக இருந்தாலும் சமஸ்கிருதம் தெரிந்தவனுக்கு மட்டும்தான் எம்.பி.பி.எஸ்.ஸில் இடம் என்கின்ற சட்டத்தை உருவாக்கிய நாடு இந்த நாடு. எத்தனை மாணவர்களுக்குத் தெரியும்?

ஆக இது தெரியாமல் போன காரணத்தினால் தான் இன்றைக்கு நிழலிலே இருக்கின்றோம் என்கிற காரணத்தினால்தான் வெயிலின் வெப்பம் அறியாமல் நடந்து வந்த தலைவர்களையெல்லாம் நாம் மறந்து போகின்ற அவலத்திற்கு நாம் ஆளாகியிருக்கிறோம். ஆகவே இது மூன்றாவது இடம். Prohibition of power அதிகாரத்துக்கு வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள்.

மூன்று Ban on property - சொத்து வாங்கக் கூடாது என்பது இந்துயிசத்தினுடைய தத்துவம். நான்கு பெண்களை சிறுமைப்படுத்துவது, பெண்களை அடக்கி வைப்பது, Suppression of women - மிகப் பெரிய குற்றச்சாட்டு ஒன்று இருக்கிறது, அம்பேத்கர் மீது! பெரியார் பேசிய அளவிற்கு, பெரியார் போராடிய அளவிற்கு அம்பேத்கரை ஒரு பெண்ணுரிமைப் போராளியாக அடையாளப்படுத்த முடியவில்லை என்று சொல்லுகிறார்கள். அம்பேத்கர் அதற்காகத் தனியாகக் குரல் கொடுக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், அவருடைய குரல் வேறுவிதமாக இருக்கிறது.

Rise and fall of Hindu womenஎன்று ஒரு சிறு நூலை எழுதியிருக்கிறார். பெரியார் பெண் விடுதலையை பகுத்தறிவிலிருந்து பகுத்தறிவுத் தளத்திலிருந்து பார்த்தார். பெரியார் ஜாதி ஒழிப்பைப் பகுத்தறிவுத் தளத்திலேயிருந்து பார்த்தார். அம்பேத்கர் ஜாதி ஒழிய வேண்டுமென்று விரும்பினார், பெரியாரைப் போலவே ஆய்வு செய்தார், எழுதினார், எல்லாம் உண்மைதான். ஆனால், விடுதலையை ஒரு ஆன்மீகத் தளத்திலிருந்து பார்க்க விரும்பினார். பவுத்தத்திற்குப் போனார். பவுத்தத்தில் பெண்களுக்கு எல்லா உரிமையும் இருந்தது. அதைவிட அம்பேத்கரை நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு இடம். நான் அதற்குப் பின்னால் வருகிறேன்.

எந்த இடத்திலே பெரியார் செய்த காரியத்தை, பிரச்சாரம் செய்த காரியத்தை அம்பேத்கர் மிகச் சாதுர்யமாக அரசியல் சட்டத்திலே கொண்டு வர முயற்சி செய்தார் என்பதை நான் அடுத்த ஓரிரு நிமிடங்களில் சொல்ல இருக்கிறேன். இந்த இடத்திலே வரும் பொழுது Suppression of women ஆக Graded inequality, Prohibition of education, Prohibition of power, Ban on property, Suppression of women இதுதான். இந்த இந்துயிசம் இந்த ஐந்து கோட்பாடுகளை வைத்திருக்கிறதே இதனுடைய விளைவு இந்த சமூகத்தில் மட்டும் தானா? அரசியலில் கிடையாதா என்றால் அரசியலில் இந்த சமூகத்தினுடைய அமைப்பின் சார்ந்த சாரம் எல்லா இடங்களிலேயும் ஒரு மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நாட்டினுடைய விடுதலையை நான் குறைவுபடுத்தவில்லை. நான் இந்திய அரசாங்கத்தினுடைய அமைச்சர். என்னுடைய காரில் தேசியக் கொடி பறந்து கொண்டிருக்கிறது. எனக்கு தேசப்பற்று இருந்தாக வேண்டும். ஆனால் வரலாற்றைச் சொல்லுகிற பொழுது சரியாகச் சொல்ல வேண்டும் பெருஞ்சித்திரனார் சொல்லுகிறார்:

நல்லவேளை வெள்ளைக்காரன் வந்தான், நம்மையெல்லாம் காப்பாற்றினான், அவன் மட்டும் வராமல் போயிருந்தால் நாமெல்லாம் நரியாக, பூனையாக ஊளைவிட்டுக் கொண்டிருந்திருப்போம்.

இதை நாம் மறுப்பதற்கில்லை. அதனால்தான் பெரியார் மீதும் அம்பேத்கர் மீதும் ஒரு மிகப் பெரிய குற்றச்சாட்டு - இவர்கள் வெள்ளைக்காரர்களுக்கு வால் பிடித்தார்கள். சுதந்திரம் வேண்டாம் என்று பெரியார் சொன்னார். அம்பேத்கர் இன்னும் வேகமாக ஒரு இடத்திலே சொன்னார் பெரியாருக்கும் அம்பேத்கருக்கும் இருக்கிற ஒற்றுமையைப் பார்க்க வேண்டும். பெரியார் சுதந்திரத்தைப் பற்றிப் பேசுகிறபோது, வெள்ளைக்காரர்கள் கொள்ளைக்கார பிராமணர்களுக்கு எழுதிக் கொடுத்த மேட் ஓவர்.- இந்த வார்த்தையை அய்யா அப்படியே சொல்லியிருக்கிறார்.

சுதந்திரம் என்பது வெள்ளைக்காரர்கள் கொள்ளைக்கார பிராமணர்களுக்கு எழுதிக் கொடுத்த மேட் ஓவர். நான் ஏற்றுக் கொள்ளவில்லை என்றார். இதைச் சொல்கிறபோது 1947. ஆனால் இது 1937, 39-லேயே அம்பேத்கருக்கு ஒரு சங்கடம் வருகிறது. இரண்டாம் உலகப்போர் வந்தபோது அந்த இரண்டாம் உலகப்போரில் வின்சென்ட் சர்ச்சில் இங்கிலாந்தினுடைய பிரதமர். நம்முடைய நாடு அவருக்குக் கீழே இருக்கிறது. அவர் ஹிட்லரை எதிர்க்க வேண்டுமென்பதற்காக இந்தியத் துருப்புகளைப் பயன்படுத்துகிறார். யாருக்கு எதிராக? நாஜிப் படைகளுக்கு எதிராக. ஹிட்லருக்கு எதிராக இந்தியாவினுடைய துருப்புகளை அவர் பயன்படுத்துகிற பொழுது, காந்தி ஒரு கேள்வியை வைக்கிறார் காங்கிரஸ் சார்பில்.

என்ன கேள்வி என்றால், “வின்சென்ட் சர்ச்சில் அவர்களே, உங்களுக்கு எதிரி ஹிட்லர், எங்களுக்கு அல்ல. இந்தப் போரில் எங்களுடைய சிப்பாய்களை, எங்களுடைய துருப்புகளை, எங்களுடைய ஆயுதங்களை நீங்கள் பயன்படுத்தப் போகிறீர்கள். இந்த வெற்றிக்குப் பின்னால் எங்களுக்குக் கிடைக்கப் போவது என்ன?” என்று கேட்கிறார், What will be the benefit after the war, having deployed our soldiers? இது காந்தி வைக்கிற கேள்வி. காந்திக்கு வின்சென்ட் சர்ச்சில் ரொம்ப அமைதியாக பதில் சொன்னார்: To restore traditional Britain நான் என்னுடைய மரபு மிக்க தொன்மைமிக்க பெருமை மிக்க பிரிட்டனை நான் மீண்டும் பெறுவதற்காகத் தான் போராடப் போகிறேன். எவ்வளவு பெரிய கொழுப்பு?

காந்தியாருக்குக் கோபம். என்னுடைய சகோதரன் இரத்தம் இழக்கிறான். என்னுடைய சகோதரன் வாழ்வை இழக்கப் போகிறான். குற்றுயிரும், குலை உயிருமாக இளம் மனைவிகளை இழக்கப் போகிற கணவனை என் கண்ணெதிரிலே பார்க்கிறேன். ஆனால் நீ சொல்லுகிறாய், To restore traditional Britain உன்னுடைய சிப்பாய்களை நான் கொல்லப் போகிறேன் என்று சொன்னால் இது உனக்குத் திமிரல்லவா என்று கேட்கிறார். இது யங் இண்டியாவில் வருகிறது.

அடுத்த நாள் அம்பேத்கர் கேட்கிறார். Yes, the question that was asked by Mr. Gandhi is legitimate. காந்தி கேட்கிற கேள்வி ரொம்ப நியாயமான கேள்வி. ஆனால், திரும்ப நான் கேட்கிறேன் காந்தியை. வின்சென்ட் சர்ச்சிலுக்கு சிப்பாயை அனுப்பிவிட்டு என்ன பயன் என்று கேட்கிறாயே? நான் கேட்கிறேன், இந்தியாவிற்கு சுதந்திரம் வேண்டுமென்று நீ கேட்கிறாயே, அந்த சுதந்திரத்திற்குப் பின்னால் எனக்கும் பிற்படுத்தப்பட்டவனுக்கும் பற, பள்ளனுக்கும் என்ன கிடைக்கப் போகிறது? What will be the social order after independence since you are fighting for independence? இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லி விட்டு நீ அவனுக்குக் கேள் என்று அம்பேத்கர் கேட்ட போதுதான் காந்தி தடுமாறிப் போனார். இது வரலாறு. இதைத் தான் தந்தை பெரியார் வெள்ளைக்காரர்கள் கொள்ளைக்கார பிராமணர்களுக்கு எழுதிக் கொடுத்த மேட் ஓவர் என்று சுதந்திரத்தைச் சொல்கிறார்.

ஆக, இந்துயிசம் என்பதும், இந்துயிசத்தினுடைய தத்துவம் என்பதும் இந்தியாவினுடைய இறையாண்மைக்கு ஊறு விளைவித்தது. இந்தியாவினுடைய சுதந்திரத்திற்குத் தடங்கலை ஏற்படுத்தியது. இதிலே பெரியாரையும், அம்பேத்கரையும் தனிப்பட்ட முறையில் குறை சொல்லிப் பிரயோசனம் கிடையாது. இன்னொன்றையும் நான் சொல்ல வேண்டும். அய்யா பெரியார் சொல்லியிருக்கிறார். கடைசியாக 1973-லே அவர் பேசும் போது சொல்லுகிறார்: இங்கு பிராமணியம்தான், இந்த இந்து மதத் தத்துவம்தான் இந்தியாவைப் பங்கு போட்டது, மக்களைப் பங்கு போட்டது, பிளவுபடுத்தியது.

உண்மை பல பேருக்குத் தெரியாது. 1940 வரைக்கும் ஜின்னா பாகிஸ்தான் கேட்கவில்லை. காங்கிரசுல என்னைக்கு 1906-லே ஒரு முதல் மாநாடு பாலகங்காதர திலகர் தலைமையிலே நடந்த பொழுது அவர் தான் மூஞ்செலி பிரச்சினையைக் கொண்டு வருகிறார். பிளேக் நோயால் பாதிக்கப்பட்டபோது வெள்ளைக்காரர்கள் எலியைக் கொல்லுகிறார்கள். எலியைக் கொல்லுகிறபொழுது பாலகங்காதர திலகர், இது விநாயகனுடைய வாகனம். இதைக் கொல்லாதேன்னு சொல்றார். ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இப்ப சேது சமுத்திரத் திட்டம் ஏன் நிக்குது?

நான் அடிக்கடி சொல்லுவேன், ஒரு பெரிய நிகழ்ச்சியில் சென்னையில் சொன்னேன். என்னுடைய வீட்டில் என்னுடைய தாய் தந்தையர் என்னுடைய தாத்தா இன்னமும் சிவன் படத்தை மாட்டி வச்சிருக்காங்க. சிவன் தலையில் நிலா இருக்கு. நானும் நம்பினேன். சிவனுடைய தலையில் தான் நிலா இருக்கிறதென்று. நம்புவதில் தவறில்லை. நான் அதன் குறுக்கே வரவில்லை. இறை நம்பிக்கை தவறென்று சொல்லுகிறவனல்ல.

நான் எப்போதும் திரும்பத் திரும்பச் சொல்லுவேன். உற்றாரை யான் வேண்டேன், ஊர் வேண்டேன், பேர் வேண்டேன், கற்றாரை யான் வேண்டேன், கற்பனவும் இனியமையும் குற்றாலத்து அமர்ந்துறையும் கூத்தா நின் குறைகளற்கே கற்றாவின் மனம் போலக் கசிந்துருக வேண்டுவனே என்று பாடினால் பாடிவிட்டுப்போ, உனக்கு எதாவது வந்தால் போதும். ஆனால் அது எனக்கு உடன்பாடல்ல. ஊர் வேணாம், உற்றார் வேணாம், அண்ணன் தம்பி வேணாம், நீ மட்டும் இருந்தால் போதும்னா, அப்புறம் ஏன் நீ சமூகத்தில வாழ்றே? அதுதான் எனக்குக் கேள்வி. தெய்வ நம்பிக்கை இருந்துவிட்டுப் போகட்டும். எனக்குப் பிரச்சினை இல்லாது இருக்கிறவரை. அதே போல நீ அரங்கப் பெருமாளைப் பாடு. எதை வேண்டுமானாலும் பாடு. ஆனால் கடவுள் என்னுடைய உரிமைக்குக் குறுக்கே வருகிறபோதுதான் எங்களுக்குப் பிரச்சினை.

ஆக, சிவன் தலையிலே நிலா இருக்கிறது என்பது நம்பிக்கை. நானும் நம்பினேன் ஒரு காலத்தில். என்னுடைய தந்தை நம்பினார், என்னுடைய தாத்தா நம்பினார், என்னுடைய பாட்டன், பூட்டன் எல்லோரும் நம்பினார்கள். ஆனால் குறைந்தபட்சம் 1969 இல் ஆம்ஸ்ட்ராங் போய் நிலாவில் காலடி வைத்ததற்குப் பிறகு என்ன கதி? ஒரு வகுப்பிலே மாணவன் இருக்கிறான், தமிழாசிரியர் வருகிறார் முதல் வகுப்பில், பித்தா பிறை சூடி பெருமானேன்னாரு. பெரிய புராணப் பாட்டு. தமிழாசிரியர் இருந்தா தெரியும். பித்தா பிறை சூடிப் பெருமானேன்னா, நிலாவைத் தலையில் வைத்திருக்கிற பெருமானே வணக்கம்ங்கறாரு. முடிச்சிர்றாரு. ரொம்ப நல்லா கேட்டுக்கிட்டு இருந்தான் பையன்.

மணியடித்தது. அறிவியல் ஆசிரியர் வந்தார். 1969 ஆம் ஆண்டு ஆம்ஸ்ட்ராங் நிலாவில் கால் வைத்தார்னாரு. அவர் சொல்கிறார்: இந்த புத்திசாலி மாணவன் கேட்டான், சிவன் தலையிலயா அவரு கால் வச்சாருன்னு கேட்டான். ஆக, சிவனுடைய தலையிலே நிலா இருக்கிறது என்பது நம்பிக்கை. ஆனால் ஆம்ஸ்ட்ராங் கால் வைத்துவிட்டான் என்பது அறிவியல். அறிவியல் வருகிறபோது நம்பிக்கை நகர்ந்து வழிவிட வேண்டும். நகர்ந்து விழவிடாத காரணத்தினால் சேது சமுத்திரம் நிற்கிறது.

நம்பிக்கையா? அறிவியலா? இந்த நம்பிக்கையைச் சொல்லுகிறபோது, ஒரு கால கட்டத்தில் இந்தியாவைத் துண்டாடுவதற்குக் காரணமாக இருந்தது இந்த இந்துமத நம்பிக்கை தான். 1946 இல் கிளமெண்ட் அட்லிங்கறவர் இங்கிலாந்துக்குப் பிரதமர். கிளமெண்ட் அட்லி என்ன பண்றார், இந்தியாவுக்குச் சுதந்திரம் எப்படித் தர வேண்டும் என்பதற்காக மூன்று பேரைக் கூப்பிடுகிறார். காங்கிரசுல இருந்து ஒருத்தர், முஸ்லீம் லீக்ல இருந்து ஒருத்தர், Princely States - சமஸ்தானங்களுக்கு ஒரு ரெப்ரசன்டேட்டிவ். இந்த மூணு பேர் போனார்கள். காங்கிரஸ் சார்பில் போனவர் அப்துல் கலாம் ஆசாத், முஸ்லீம். முஸ்லீம் லீக் சார்பாகப் போனவர் ஜின்னா, அவர் ஒரு முஸ்லீம். சமஸ்தானங்களின் சார்பாகப் போனவர் நவாப் ஆஃப், பீகார். இந்தியாவுக்குச் சுதந்திரம் வேணும்ணு போனது மூணு முஸ்லீம். இந்துக்கள் அல்ல. ஆனாலும் இந்த நாடு பிரிவினைக்கு காரணம், ஜின்னாகிட்ட கேட்டாங்க, ஏம்ப்பா நாடு கேக்குறேன்னு கேட்டாங்க.

அவர் ஜுலியஸ் சீசர் நாடகம் தெரியுமான்னு கேட்டார். காந்திய நம்புங்கன்னு சொன்னப்ப அவர் சொன்னார், காந்தியை நான் நம்புகிறேன், ஆனால் காந்தியினுடைய இராமராஜ்யத்தை என்னால் நம்ப முடியாது. அவர் சொன்னார், புரூட்டஸ் சொல்லுவான் அந்த நாடகத்துல, Not that I love Ceaser less, but I love my country more. குத்துனதுக்குப் பிறகு சீசர் கேப்பான், “அய்யோ நண்பா நீயுமா குத்துனன்னு” கேப்பான். புரூட்டஸ் சொல்றான், “நண்பா உன்னை நான் நேசித்தது உண்மைதான், என்ன செய்வது உன்னைக் காட்டிலும் இந்த நாட்டைக் கூடுதலாக நேசித்து விட்டேன்”.

அது மாதிரி ஜின்னா சொன்னார், Not that I love Ceaser less, but I love my country more - காந்தியை எனக்குத் தெரியும், நேசிக்கிறேன். ஆனால் காந்தி வைத்திருக்கிறாரே இராமராஜ்ஜியம், அது ஜாதிய இராஜ்ஜியம், இந்த நாடு உருப்படாது. அதனால என்ன வெளிய விடுன்னாரு. ஆக, இந்த நாட்டைத் துண்டாடியது இந்துத்துவா, மறந்து விடாதீர்கள். ஆக, நாட்டினுடைய அரசியலிலிருந்து, சமூகத்திலிருந்து வருகிற வழியெங்கும் இந்த மண்ணிலே எல்லாவற்றிற்கும் நீங்கள் அரசியலைப் பார்த்தால், வெள்ளைக்காரர்கள் Untouchability Abolition Act, 1857 லிலேயே கொண்டு வந்தாங்க. அதுக்கு நேரடியா சொல்லல. Removal of disabilities act என்று ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். இந்த மண்ணில் நரபலியை ஒழித்தது வெள்ளைக்காரர்கள். உடன் கட்டை ஏறுவதை ஒழித்தது வெள்ளைக்காரர்கள். கைம்பெண் மறுமணத்தை கூடாது என்பதைத் தடை செய்தவர்கள் வெள்ளைக்காரர்கள். இப்படி எத்தனையோ சமூகக் கொடுமைகளை ஏற்றுக் கொள்ள முடியாமல் வெள்ளைக்காரர்கள் சட்டம் கொண்டு வந்தார்கள். ஆனால் இந்த சட்டத்தை கொண்டு வருகிறபோதெல்லாம், எதிர்ப்புத் தெரிவித்த இயக்கமாகவும், எதிர்ப்பு தெரிவித்த தலைவர்களாகவும் காங்கிரஸ்காரர்களும், காங்கிரசினுடைய தலைவர்களும் இருந்தார்கள் என்பது தான் மறுக்க முடியாத உண்மை.

எனவே அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் இந்த இரண்டு வெவ்வேறு தலைவர்களையும் நாம் வெவ்வேறு தளங்களிலே பார்க்கிறபோது ஓர் ஒற்றுமை தெரிகிறது. பெரியார் இந்தியாவினுடைய சுதந்திரம் வேணான்னு சொன்னதற்கும், வின்சென்ட் சர்ச்சில் கிட்ட காந்தி பேசினபோது அம்பேத்கர் அது வேணான்னு சொல்றதுக்கும் என்ன காரணம்? இந்த சமூக அமைப்பு, இந்த சமூக அமைப்பை இந்துத்துவா சமூகம் எப்படி மாற்றியிருக்கிறது என்பதனால்தான்.

இதைவிட இன்னொன்று 1916-லேயே பெரியாருக்கு முன்பாகவே, இங்கே அவர் பேசினாரே கம்யூனஸ்ட் கட்சியினுடைய அறிக்கை. ஒவ்வொரு தலைவர்களுக்கும் ஒரு அடையாளம் இருக்கிறது. மார்ட்டின் லூதர்கிங் என்று சொன்னால் March to Washington என்று சொல்வார்கள். ஒரு அடையாளம். மார்டின் லூதர் கிங் கடைசியா சொன்னது அதுதான். மார்ச் டு வாசிங்டன். அங்கே நான் உங்களுக்கு விடுதலை வாங்கித் தருகிறேன். ஆக, மார்டின் லூதர் கிங்னா மார்ச் டு வாசிங்டன். கம்யூனிஸ்ட் இயக்கத்தினுடைய தலைவர்கள் என்று சொன்னால் 1948-லே Manifesto of Communist Party.

அதே மாதிரி இந்த Non-brahmin movement அல்லது இந்துத்துவத்திற்கு எதிரான சங்கதிகள் என்று வருகிறபோது 1916-லேயே பிராமணரல்லாதார் அறிக்கையிலே மிகத் தெளிவாக இருக்கிறது:

“நாங்கள் வெள்ளைக்காரர்களுக்கு விசுவாசிகள். அவர்களால் தான் எங்களுக்கு ஓரளாவது கல்வியும், சுகாதாரமும், மனித உரிமையும் இங்கே தரப்படுகிறது” என்பதை 1916-லேயே நம்முடைய அறிக்கை மிகத் தெளிவாகச் சொன்னது. ஆக, இந்திய நாட்டினுடைய பிரிவினைக்குக் காரணம் இதுதான். இந்தியாவினுடைய சாதி ஏற்றத் தாழ்வுக்கு இதுதான் காரணம். இப்படிப்பட்ட மோதல்கள் உள்ள ஓர் இடத்தில், இப்படிப்பட்ட சமூக ஏற்றத்தாழ்வுகள் இருக்கிற ஓர் இடத்தில் தீர்வாக தந்தை பெரியாரும் அம்பேத்கரும் எதை முன் வைக்கிறார்கள் என்றால், நான் முன்னமே சொன்னதை போல இது ஒழிய வேண்டுமென்று சொன்னால், இந்த நிறுவனம் இன்ஸ்டிடியூஷன் இந்து மதம் என்கின்ற நிறுவனம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான்,

இந்து மதம் ஒரு நிறுவனம். கண்ணுக்குத் தெரியல அவ்வளவு தான். பாரதிதாசன் யூனிவர்சிட்டி ஒரு நிறுவனம் கண்ணுக்குத் தெரியுது. ஆனால், ஒரு கிராமத்திற்குப் போய் ஆதி திராவிடர் தெருவில் இருக்கிறவன் ஒரு வன்னியத் தெருவில், அல்லது வன்னியர் தெருவில் இருக்கிறவன் ஒரு ரெட்டியார் தெருவில் இன்றைக்கும் வீட்டிற்குப் போக முடியாது. குடியிருக்க முடியாது. அல்லது இன்றைக்கும் வீடு வாடகைக்குப் போக முடியாது. சொந்தமாக இடம் வாங்க முடியாது என்று சொன்னால் கண்ணுக்கு தெரியாத ஒரு நிறுவனம் இருக்கிறது.

எக்கனாமிக் புரபசர், ஹிஸ்டரி புரபசரா மாற முடியாது. இது இன்ஸ்டியூஷன். தெரியுது. உங்களுக்கு எக்கனாமிக் புரபசருக்குப் பதிலா ஹிஸ்டரி புரபசர் வந்தா நீ ஏன் வந்த? இன்னக்கி ஹிஸ்டரி வகுப்பு இல்லையேன்னு சொல்றிங்க. It is institution, ஆனா அங்க கண்ணுக்குத் தெரியாத ஒரு நிறுவனம் இருக்கிற காரணத்தினாலே தான் அந்த நிறுவனத்தைத் தகர்க்க வேண்டிய கட்டாயம் இவர்களுக்கு ஏற்பட்டது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அதனால் தான் தந்தை பெரியார் அவர்கள், அவர்மீது தேசத் துரோகி எனப் பட்டம் சூட்டப்பட்டபோது, மிகத் தெளிவான ஒரு விளக்கத்தைத் தந்தார். என்ன விளக்கம்?

(தொடரும்)

Pin It