இந்து பார்ப்பனிய மதத்தை எதிர்த்தவர் அம்பேத்கர். “இந்துவாக பிறந்தேன்; ஆனால் இந்துவாக சாக மாட்டேன்” என்று அறிவித்த அவரை ‘இந்துத்துவ’ ஆதரவாளராக சித்தரிக்க சங் பரிவாரங்கள் முயற்சிக்கின்றன. ‘இந்து’ மதம் ஒரு மதமல்ல; அது ஒரு சமூகமும் அல்ல; இந்து மதம் என்பதே ஜாதிகளின் தொகுப்பு என்கிறார் அம்பேத்கர்.

பொருளாதாரச் சார்பாகப் பார்த்தாலும், ஜாதி நன்மை தரக்கூடியதல்ல. ஜாதி ஏற்பாட்டினால் மக்கள் சமூகம் விருத்தியடைய முடியாது; விருத்தியடையவு மில்லை. எனினும் ஜாதியினால் ஒரு பலன் ஏற்பட்டிருக்கிறது. அதாவது ஜாதி, இந்து சமூகத்தைச் சின்னாபின்னமாக்கிச் சீரழித்து விட்டது. இந்து சமூகம் என்ற வார்த்தைக்கே பொருளில்லை; அது வெறும் கற்பனை. இதை நாம் முதன்முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இந்து என்ற பெயரே வெளிநாட்டார் சூட்டியது. தம்மையும் இந்தியச் சுதேசிகளையும் பிரித்துக் காட்டும் பொருட்டு முகம்மதியர் இந்தியச் சுதேசிகளை இந்துக்கள் என்று அழைத்தார்கள். முகம்மதியர் படையெடுப்புக்கு முன்னுள்ள சமஸ்கிருத நூல்களில் ‘இந்து’ என்ற பதமே காணப்படவில்லை. அக்காலத்தில் இந்தியர்கள் தம்மை ஒரு தனிச் சமூகமாக மதியாததனால் இந்தியர்களுக்கெல்லாம் பொதுவான ஒரு சமூகப் பெயரை உண்டாக்க அவர்களுக்குத் தேவையுண்டாக வில்லை. உண்மையில் இந்துச் சமூகம் என ஒரு சமூகமே இல்லை. இந்துச் சமூகம் என்பது உண்மையில் பல ஜாதிகள் சேர்ந்த ஒரு கதம்பமேயாகும். ஒவ்வொரு ஜாதியும் தன்னைத் தனிச் சமூகமாக மதித்துக் கொள்கிறது.

ஒவ்வொரு ஜாதியும் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதே தனது உயிர் இலட்சியமாக மதிக்கிறது. பல ஜாதியாரும் ஒரு சமஷ்டியாகக் கூடச் சேர்வதில்லை. இந்து-முஸ்லிம் கலகம் ஏற்படும் காலங்களில் அல்லாமல் - மற்றக் காலங்களில் தமக்குப் பரஸ்பரத் தொடர்புண்டென்று இந்து ஜாதிகள் உணர்வதில்லை. மற்றக் காலங்களில் ஒவ்வொரு ஜாதியாரும் தனியாகப் பிரிந்து நின்று, மற்ற ஜாதிகளுக்கும் தனக்கும் சம்பந்தமில்லையென்ற உணர்ச்சியை வளர்த்துக் கொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொரு ஜாதியும் மற்றவருள் கொண்டு கொடுப்பதுமில்லை; சமபந்தி போசனம் செய்வதுமில்லை, அம்மட்டோ! ஒவ்வொரு ஜாதியாரும் உடையிலுங்கூட வித்தியாசம் காட்டியே வருகிறார்கள். இன்றேல் ஒவ்வொரு ஜாதியாரும் தனிப்பட்ட முறையில், அய்ரோப்பிய யாத்திரீகர்கள் வேடிக்கை பார்க்குமாறு விதவிதமாக உடுத்திக் கொள்ளக் காரணமென்ன?

உண்மையில் உண்மையான இந்து, நாட்டு வளப்பமறியாத கிணற்றுத் தவளையாகவே இருந்து வருகிறார்கள். இந்துக்களுக்குள்ளே ஒற்றுமை உணர்ச்சி என்பதே இல்லை. நாம் எல்லாம் இந்துக்கள் என்ற பொது உணர்ச்சியுமில்லை; ஜாதி உணர்ச்சிதான் இந்துக்களுக்குள் முனைந்து நிற்கிறது. இதனாலேயே இந்துக்கள் ஒரு சமூகமாகவோ ‘நேஷ’னாகவோ அய்க்கியப்பட முடியாமலிருக் கிறார்கள். ஆனால், தேசாபிமான மேலீட்டினால், இந்தியா ஒரு ‘நேஷன்’ அல்லவென்று ஒப்புக் கொள்ளப் பல இந்தியர்கள் தயங்குகிறார்கள்.

இந்தியர்களுக்குள் பலதரப்பட்ட வேற்றுமைகள் இருந்தாலும், மத நம்பிக்கை ஆசாரங்கள், பழக்க வழக்கங்கள் காரணமாக அந்த வேற்றுமைகளுக்கிடையிலும் ஒரு ஒற்றுமையிருப்பதாக அவர்கள் மழுப்புகிறார்கள். அது ஒருக்கால் உண்மையாகவிருந்தாலும் அதனால் இந்துக்கள் எல்லாம் ஒரு சமூகம் என எவரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அவ்வாறு ஒப்புக் கொள்வது ஒரு சமூகத்துக்குத் தேவையான முக்கியமான அம்சங்களைத் தப்பர்த்தம் செய்வதாகும். பல பேர் நெருங்கி வாழ்வதனால் அவர்கள் ஒரு சமூகம் ஆகிவிட மாட்டார்கள். அது போலவே ஒருவன் வெகுதூரத்திலிருப்பதனால் ஒரு சமூகத்தின் அங்கத்தினனா யிருக்க யோக்கியதையற்றவன் ஆகிவிடவு மாட்டான். மற்றும் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் காரணமாக மக்கள் ஒரு தனிச் சமூகம் ஆகவும் மாட்டார்கள்.

ஒரு கூட்டத்தார் பழக்க வழக்கங்களை வேறொரு கூட்டத்தார் பின்பற்றலாம். அதனால் அவர்களுக்குள் ஒற்றுமையிருப்பதாகவும் தோன்றலாம். பழக்க வழக்கங்கள் இயல்பாகவே பரவுகின்றன. அதனாலேயே உலகத்தின் நாலாபாகங் களிலுமுள்ள மலைவாழ் பழங்குடியினருக்குள் பல பொதுவான பழக்க வழக்கங்கள் இருந்து வருகின்றன. ஆனால் அந்தப் பொதுவான பழக்க வழக்கங்களை ஆதாரமாக வைத்துக் கொண்டு அவர்களை எல்லாம் ஒரே சமூகத்தார் என எவரும் கூறத் துணிய மாட்டார்கள். ஏனெனில் பொதுவான பழக்க வழக்கங்கள் மட்டும் ஒரு சமூக அமைப்புக்குப் போதமாட்டா. பொதுவான குணங்கள் சில தமக்கு இயல்பாக அமைந்திருக்கும் மக்களே சமூகமாகிறார்கள்.

மக்கள் தங்களுக்குள் கூட்டுறவாடுவதனாலேயே அவர்களுக்குள் பொதுவான குணங்கள் அமையக் கூடும். அதாவது கூட்டுறவினாலேயே சமூகங்கள் அமைகின்றன. சமூகங்கள் அமைவதற்கு மக்கள் ஒற்றுமையாகச் செயலாற்றினால் மட்டும் போதாது. போட்டி முயற்சிகளில் ஒற்றுமையிருந்தாலும், அதனால் சமூகம் உருப்படாது. உதாரணமாக, இந்துக்களின் திருவிழாவை எடுத்துக் கொள்வோம். ஒரே மாதிரியான திருவிழாவையே இந்து ஜாதியாரெல்லாம் தனித்தனியாய் கொண்டாடுகிறார்கள். எனினும் அவர்களுக்குள் ஒத்துணர்ச்சியோ, சமூக உணர்ச்சியோ காணப்படவில்லை. ஒரே முயற்சியில் பலதரப்பினரும் ஈடுபட்டால்தான் அவர்களுக்குள் ஒத்துணர்ச்சியும் அனுதாபமும் அந்தரங்கப் பற்றும் ஏற்படும். சமூகத்தில் ஒவ்வொரு தனிமனிதனும் அங்கமாக இருந்தால்தான் சமூக இன்ப துன்பங்களில் அவனுக்குப் பற்றும் கவலையும் உண்டாகும். ஜாதிப் பாகுபாடு கூட்டுறவு முயற்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது. அதனால் இந்துக்கள் ஒரு சமூகம் ஆக முடியவில்லை. அவர்களுக்குள் பொதுவான ஒத்துணர்ச்சியோ ஒருமுகப்பட்ட வாழ்க்கை முறையே காணப்படவில்லை.

தொழில் பாகுபாடா?

ஜாதியை ஆதரிப்போர் இப்பொழுதும் இருந்து வருவது வருந்தத்தக்கதே. ஆதரிப்போர் தமக்கு அனுகூலமாகப் பல ஆதாரங்கள் காட்டுகிறார்கள். ஜாதி ஏற்பாடு, தொழிற் பாகுபாடு ஏற்பாடேயன்றி வேறல்லவென்றும், அத்தகைய பாகுபாடு உலகம் முழுதும் அமலில் இருந்து வருகிறதென்றும், எனவே ஜாதி ஏற்பாட்டில் குற்றம் எதுவுமில்லையென்றும் ஜாதி அபிமானிகள் கூறுகிறார்கள். ஆனால், ஜாதி ஏற்பாடு உண்மையில் வெறும் தொழில் பாகுபாடு மட்டுமல்ல. அது தொழிலாளரைப் பாகுபடுத்துவதாகவும் இருக்கிறது. நாகரிக சமூகங்களுக்குத் தொழிற்பாகுபாடு தேவையானதே. ஆனால், எந்த நாகரிக சமுதாயத்திலும் தொழிலாளர் தனித்தனிப் பிரிவினராய்ப் பிரித்து வைக்கப்படவில்லை.

.....................................................................

ஜாதி ஏற்பாடு தொழிலாளரைப் பாகுபடுத்தும் ஏற்பாடாக மட்டும் இருக்கவில்லை; தொழில் பாகுபாட்டுக்கும் தொழிலாளர் பாகுபாட்டுக்கும் நிரம்ப வித்தியாசமுண்டு; தொழிலாளர்களுக்குள்ளே உயர்வு தாழ்வைக் கற்பிக்கும் ஒரு பரம்பரை ஏற்பாடாகும். எந்தத் தேசத்திலும் தொழிலாளர், பரம்பரை முறையில் ஒருவர்மேல் ஒருவராக வகுக்கப்பட்டிருக்கவில்லை. மற்றும் அவரவர் விருப்பத்துக்குத் தக்கபடித் தொழில் பாகுபாடு ஏற்படுத்தப்படவில்லை. ஒரு சமூகம் விருத்தியடைய வேண்டுமானால், ஒவ்வொரு தனி நபருக்கும்

தனக்கு இஷ்டமான தொழிலைப் பின்பற்றச் சுதந்திரம் இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய தொழிலை முன்கூட்டியே நிர்ணயம் செய்திருப்பதானால் ஜாதி ஏற்பாட்டில் ஒவ்வொரு தனி நபருக்கும் தொழில் வித்தியாசத்தில் சுய நிர்ணய சுதந்திரம் இல்லை. ஜாதியோடு தொழிலும் இணைக்கப்பட்டிருப்பதனாலேயே, சமூக முன்னேற்றத்துக்கு ஜாதி பெரும் தடையாக இருந்து வருகிறது.

- ‘ஜாதியை ஒழிக்க வழி’ நூலிலிருந்து

Pin It