மற்ற நாட்டில் மனிதனிடம்மனிதனுக்குப் பற்றும் அன்பும் உண்டாகவே கடவுள் மதம் இருக்கின்றன. நமது நாட்டில் மனிதனுக்கு மனிதன் வெறுப்பும் வேற்றுமையும் உண்டாக்கவே கடவுள், மதம், சாதி இருக்கின்றன. -பெரியார்
அந்தத் தேர் பின்னோக்கி இழுக்கப்படுகிறது. ஆதிக்கம், மூடத்தனம், வெறுப்புணர்வு, பகைமை, வன்மம் நிறைந்தவர்கள் அதற்காக தம் பலமனைத்தையும் திரட்டுகின்றனர். இப்போது வரை அந்த தேரை அசைக்க முடியவில்லை என்றாலும் அவர்களது முயற்சி மிகத் தீவிரமானதாகவும் தீவிரவாதத் தனமானதாகவும் இருக்கிறது. பாகுபாட்டையும் சக மனிதரை ஒடுக்குவதையும் மட்டுமே கொள்கையாகக் கொண்ட அவர்களது கிளைகள் எங்கும் பரவுவதைப் பார்க்கிறோம். அவர்களது வன்ம வேர்கள் இந்த ஜனநாயகப் பூமியைப் பதம் பார்க்கின்றன. இந்நாட்டின் ஜனநாயகம் முற்றிலுமாக வேரறுக்கப்படும் சேரிகள் தொடங்கி அதை நிலைநிறுத்தும் பேரதிகாரத்தைக் கொண்ட நாடாளுமன்றம் வரை எங்கும் அவர்கள் வியாபித்துவிட்டனர்.
சனாதன தர்மம் எனும் கதிர்வீச்சு ஒவ்வொரு மூளைக்குள்ளும் ஊடுருவிப் பாய்ச்சப்படுகிறது. இரண்டாயிரம் ஆண்டு அறச்சிதைவு வரலாறு கொண்ட இந்நாட்டை பண்படுத்தும் முயற்சியில் சாத்தியப்படுத்தப்பட்ட புரட்சிகள் அனைத்தும் வேகமாக சிதைகின்றன. படித்த சமூகம் பண்பட்டதாக மாற வேண்டிய இயற்பியல் விதி இங்கு தோல்வியுற்றது. நேரில் பின்பற்றும் அத்தனை மூடத்தனங்களையும் அடிப்படை வாதத்தையும் இணையத்திற்கும் ஆப்களுக்கும் கடத்தி வாழத் தலைபட்டிருக்கிறது இத்தலைமுறை. வரன்கள் சாதிக்கேற்ப வலைதளங்களில் தேடப்படுகின்றன. முக நூலிலும் வாட்ஸப்பிலும் சாதி இழிவும் மத இழிவும் அரங்கேற்றப்படுகின்றன. கலவரங்கள் விரும்பப்படுகின்றன. அழிவுவேண்டப்படுகிறது. தன் ரத்தம் இல்லாதவர்களை கொன்றழிக்கும் நாஸி வன்மம் படித்து முன்னேறிய நாகரிக (!) இந்தியர்களால் வெளிப்படையாக உமிழப்படுகிறது. இவ்வாறே சுதந்திரம், சமத்துவம் சகோதரத்துவம் என மூன்று தூண்களைக் கொண்டு ஜனநாயகத்தை நிறுவிய அண்ணலின் தேர் பின்னோக்கி இழுக்கப்படுகிறது. அது நகரவில்லை என்றாலும் நாம் பார்க்க பார்க்க அது மூர்க்கத்தனமாக இழுக்கப்படுகிறது.
1956ஜூலை31அந்தசெவ்வாய்க்கிழமையில், புது டெல்லி அலிப்பூர் சாலையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து பாபாசாகேப் அம்பேத்கர் இவ்வாறு சொன்னார்.
“நான்என்னவெல்லாம்செய்திருக்கிறேனோ, அவற்றை, என் வாழ்க்கை முழுவதும் எதிரிகளுடனானபோரில்விளைந்தநொறுக்கும் துயரங்கள் மற்றும் முடிவில்லா பிரச்னைகளை கடந்துவருவதன்மூலமேசெய்யமுடிந்திருக்கிறது. மிகப் பெரிய சிரமங்களுடன் நான் இந்த தேரை, அது நிற்கும் இடத்திற்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறேன். அதன் பாதையில் வரப் போகும் தடைகள், புதைகுழிகள் மற்றும் இடர்களைக் கடந்து இந்த தேர் முன்னோக்கி, மென்மேலும் நகர வேண்டும். என் மக்கள், என்னுடைய படைவீரர்கள் இந்த தேரை முன்னோக்கி நகர்த்த முடியாமல் போனால் அவர்கள் அதை அது நிற்கும் இடத்திலேயே விட்டுவிட வேண்டும், எந்த சூழலிலும் இந்த தேர் பின்னோக்கி நகர அவர்கள் அனுமதித்துவிடக் கூடாது”
டாக்டர்.அம்பேத்கர், தேர் என குறிப்பிட்டது சமத்துவத்தை, ஒடுக்கப்பட்டோருக்கான உரிமைகளை, சமூக நீதியை, சமா தானத்தை, சுயமரியாதையை சாதி/மத ஆதிக்கத்திற் கெதிரானப் போரை. அந்த தேர் முன்னோக்கி மிக நிச்சயமாக நகரவில்லை என்பது நாமறிந்ததே. நல்வாய்ப்பாக, அம்பேத்கர் எங்கு விட்டுச் சென்றாரோ அங்கேயே நிற்குமாறு இந்நாட்டின் மிக சொற்பமான சாதி/மத எதிர்ப்பு சமத்துவவாதிகள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்துமதத்தினரால்/பார்ப்பனர்களால்/சாதி இந்துக்களால் பாரம்பரிய இந்துயிஸத்தின் அத்தனை வன்மங்களும் நவீனத் தளங்களுக்குக் கடத்தப்படுகின்றன. அவ்வகையிலேயே இந்நாட்டில் இந்துத்துவம் புத்தெழுச்சி பெறும் கெடுவாய்ப்பு இங்கு உருவாகியிருக்கிறது.
இந்துத்துவம் ஒரு மதமே இல்லை, அது மனிதர்களை பிரித்தாள்வதற்கான வஞ்சக ஏற்பாடு என்றார் அம்பேத்கர்.
-சாதியாக பிரிந்து கிடக்கும் மக்களை ஒன்றிணைக்கஇந்துமதம் ஒழிய வேண்டுமென்ற உண்மையை இவ்வுலகத்திற்கு உரக்கக் கூறினர் இருவரும். ஆனால் இன்றோ, சாதியாக பிரிந்திருக்கும் மக்களை இந்தியர்களாக அணிதிரட்ட, இந்து என்ற சட்டகத்திற்குள் எல்லோரையும் இழுத்து அடைக்கின்றனர் இந்துத்துவவாதிகள். கடந்த கால் நூற்றாண்டு கால ‘வளர்ச்சி’ காலத்தில் மதவாதம் கூர்மை யடைந்துள்ளது அதிர்ச்சிக்குரியது.
அம்பேத்கர் நூற் றாண் டு கண்ட 1990களின் சமகால சமூகப் பொருளாதார மாற்றமான உலகமயமாக்கலின்விளைவாக நிகழ்ந்த கல்வி பரவலாக்கம், தனியார்த்துறை வேலைவாய்ப்புகள், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, எந்திரமயமாக்கல், சுதந்திர வர்த்தகம், இணையப் பரவலாக்கம் எல்லாமே சமூகநீதிப் புரட்சியாளர்களான அம்பேத்கரும், பெரியாரும் இங்கு விதைத்த இந்துமத இழிவை மீட்டுருவாக்கம் செய்துகொண்டிருக்கின்றன. சாதிகளாகதம்மை அடையாளப்படுத்திகடந்த தலைமுறையின் வாரிசுகள் கூடுதலாக தம்மை இந்துக்கள் என பிரகடனப்படுத்துவதைப் பார்க்கிறோம். இந்து என்ற மேல்பூச்சின் அடியில் தமது சாதியக் குறியீடுகளை மறைத்துக் கொள்வதன் மூலம் தம்மை சாதி பார்க்காதவர்களாக, முன்னேறியவர்களாக, நாகரித்தை அடைந்துவிட்டவர்களாகக் காட்டிக் கொள்ள பலரும் முயல்கின்றனர்.
மேலே குறிப்பிட்ட உலகமயமாக்கலின் கூறுகளை அதிகம் விரும்பி, அதிகளவில் ஏற்று அதனால் பயனுற்ற (பெருமளவில் சாதி இந்துக்களை உள்ளடக்கிய) படித்த இந்தியர்கள், மனிதப் பேரிழிவுகளான இந்துமதம், பார்ப்பனியம், வருணாசிரமம், சாதிப் பாகுபாடு ஆகியவற்றுக்கு பொதுத் தளத்தில் வெளிப்படையான பேராதரவு அளிக்கத் தொடங்கியுள்ளனர். அறுபதாண்டுகால குடியரசின் முதல் முப்பதாண்டுகளில் நாம் காணாத இந்துமத ஆதரவுப் போக்கு புத்தெழுச்சிக்கான வாய்ப்பை நல்கியிருக்கிறது. மிகக் குறிப்பாக கற்றறிந்தவர்களென நாம் நம்பிக் கொண்டிருக்கும் சமூகம் அத்தனை பிற்போக்குத் தனங்களையும் பாகுபாடுகளையும் வாழ்வியல் அறமாக வரித்துக் கொள்ளத் தொடங்கியிருக்கிறது. உலகமயமாக்கலால் உருவான பொருளா தாரப் புரட்சியான தாராளமயமாக்கல், கிராமப் புறங்களின் ஊர்களில் ஆதிக்கத்தோடு இருந்த சாதி இந்துக்களை நகரங்களின் பணக்காரர்களாகவும் நடுத்தர வர்க்கத்தினராகவும் மாற்றியது.
நகர்ப்புறங்களுக்கு வந்த சாதி இந்துக்கள், தமது சாதியின் வேர்களை ஊர்களிலும் தமது மூளைகளிலும் படரவிட்டுக் கொண்டிருந்தனர் என்பது ஒருபுறமிருக்க, மறுபுறம் அவர்கள் ‘புத்தெழுச்சி’ காலத்தின் புதிய இந்துக்களாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்டனர். ஊர்களில் இருந்தவரை இவர்கள் சிறுதெய்வ வழிபாட்டைபண்பாடாகக் கொண்டிருந்தனர். ஆனால் நகரங்கள் இவர்களை இந்துக் கடவுள் களின் தீவிர பக்தர்களாக்கின. பார்ப்பனர்களைப் பின்பற்றி போலச் செய்தலில் பார்ப்பனர்களை மிஞ்ச முயன்றனர். அன்றாடம் பூஜைகள் செய்வது, சாஸ்திர சம்பிரதாயங்களை பின்பற்றுவது, இந்துமதப் பெருங்கடவுள்களை வழிபடுவது என முற்றிலுமான இந்துக்களாக தம்மை வரித்துக் கொண்டனர். மூளையை நகரத்திலும் இதயத்தை கிராமத்திலும் வைத்துக் கொண்டு இரட்டை வாழ்க்கை வாழ்ந்தனர். இந்த இரண்டு வாழ்க்கையில் அவர்கள் விட்டுக் கொடுக்காத விஷயங்களாக மதமும் சாதியும் இருந்தன.
கிராமங்களில் இந்த மூடத்தனங்கள் இல்லையா என்றால் இருந்தனவே. அங்கும் சாமியாடிகள் இருந்தனர், அங்கும் குறிசொல்லிகள், பூசாரிகள் இருந்தனர். அங்கும் தெய்வ வழிபாடு இருந்தது. ஆனால் இவர்கள் யாரும் தம்மை இந்துக்களாக பண்பாட்டு ரீதியாகஅடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. படித்த, நடுத்தர வர்க்க சாதி இந்துக்கள் இன்று தம்மை இந்து என அழைத்துக் கொள்ள மிகவும் விரும்புகின்றனர். அது நகரங்களில், வெளிமாநிலங்களில் அல்லது வெளிநாடுகளில் பாதுகாப்பையும் கவுரவத்தையும் அளிக்கிறது. சாதி இந்துக்களை பின்பற்றி தலித்துகளையும் பழங்குடியினரையும் கூட இந்த நோய் பீடித்தது தான் பெருந்துயரம்.
டெல்லியில் உள்ள செண்டர் பார் டெவலப் மெண்டல் ஸ்டடீஸ் மையத்தின் லோக்நிதி என்றமிகவும்ஆதாரப்பூர்வமானதகவல்திரட்டு நிறுவனம் 2004மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளில் செய்த தேசிய தேர்தல் ஆய்வில் இந்தியர்களின் மத நம்பிக்கை கணிசமாக உயர்ந்திருப்பதை சுட்டிக் காட்டுகிறது. இந்தஆய்வு வர்க்கம், சாதி மற்றும் கல்வி ஆகிய மூன்று அடிப்படைகளில் செய்யப்பட்டது. 2004இல் நடத்திய ஆய்வில் மேல்வர்க்க மற்றும் நடுத்தர வர்க்க இந்துக்களில் 60 சதவீதம் பேர் தாங்கள் தினமும் பூஜை செய்வதாகக் கூறினர். ஏழைகளின் அளவு 3040% இருந்தது. சமூக நிலைப்படி - வருணா சிரமத்தில் ‘இரு பிறப்பாளர்’களான பார்ப்பன, வைசிய, சத்திரியர்களில் 58% பேர் மிகுந்த மத நம்பிக்கைக் கொண்டவர்களாக தினமும் பூஜைகள் செய்ய தலித் மற்றும் பழங்குடியினர் 35% மட்டுமே அதே முறையை பின்பற்றினர். கல்வி அடிப்படையில் பார்த்தாலும் கல்லூரி படிப்பு வரை முடித்தவர்களில் 53% பேர் தினசரி பூஜைகள் செய்கின்றனர். கல்லாதவர்கள் 38 சதவிகிதமும் தொடக்கக் கல்வி பெற்றவர்கள் 46% பேரும் வழிபாடுகளில் ஈடுபடுவதாகக் கண்டறியப்பட்டது . இந்த புள்ளிவிபரம், படிப்பறிவு பெற்று பொருளாதார நிலையில் முன்னேறிய, ஆதிக்க சாதியினரிடையே மதப்பிடிப்பு அதிகமுள்ளதை நிரூபிக்கிறது. ஆனால் பொதுவாக அவ்வாறு நம்பப்படுவதில்லை. படித்த இந்தியர்கள் பகுத்தறிவு பெற்றுவிட்டதைப் போன்ற ஒரு மாயை இங்கே கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
இதில்அச்சுறுத்தும்விஷயம்என்னவென்றால் இதே நிறுவனம் 2009இல் இதே போன்றதொரு ஆய்வை மேற்கொண்டதில், பணக்கார, படித்த சாதி இந்துக்களின் மத நம்பிக்கை அப்படியே இருக்க, ஆதிவாசிகள் (43%) மற்றும் தலித்களின் (40%) இந்துமத நம்பிக்கை ஐந்தாண்டுகளில் கவனிக்கத்தக்க வகையில் அதிகரித்திருப்பதாகக் கண்டறிந்தது. தீண்டாமையில் இருந்து தப்பித்துக் கொள்ளும் அவர்களது மனக்குமுறலும் பரவும் இந்துமயத்தில் தன்னையறியாமல் ஈர்க்கப்படுதலுமே இதன் பின்னணியில் உள்ள சமூகக் காரணங்கள்.
கிராமப்புறங்களில் கோவில்களுக்குள் அனுமதி மறுக்கப்படும் தலித்கள், ஊருக்கு வெளியேஎங்கோ தொலைவில்உள்ள இந்துமத ஆலயங்களுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களால் சாதி இந்துக்களுடன் சேர்ந்து வழிபட முடிகிறது. அந்த சமூகக் கலப்பு சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டதால் உண்டானக் காயங்களுக்கு மருந்திடுவதால் தலித்கள் தம்மை மதப்பிடிப்பாளராகக் காட்டிக் கொள்ள தலைபடுகின்றனர். பொருளாதார முன்னேற்றம் தலித்களின் சமூக இழிவை துளியளவுக்கூட மாற்றாத நிலையில்பூஜைகளும், தொடர்ச்சியான வழிபாடுகளும், விரதம் போன்ற சம்பிரதாயங்களும், மாலை போடுதல், பாத யாத்திரை போன்றவையும் தங்களுக்கு மரியாதையை தருவதாகக் கருதுகின்றனர். சாதி இந்துக்களோடு தோளோடு தோள் இணைந்து நிற்கும் பொது மத வழிபாடுகளில் தலித்களின் எண்ணிக்கைஆண்டுக்குஆண்டுஅதிகரிக்கிறது. அதோடு இந்த குறிப்பிட்ட காலத்தில் ஆர்.எஸ். எஸ், இந்துமுன்னணி போன்ற அமைப்புகள் தலித்களின் மனதில் அவர்களும் ‘இந்துக்களே’ என்ற மூளைச்சலவையைத் தீவிரப்படுத்தியதும் ஒரு முக்கியமான காரணம். ஷாகா போன்ற வகுப்புகள் மூலமாக அவர்கள் தலித் இளைஞர்களிடையே இந்துமத உணர்வையும் வெறியையும் விதைக்கத் தொடங்கினர்.
ஆதிவாசிகளின் சூழல் இக்காலகட்டங்களில் முற்றிலும் வேறானதாக இருந்தது. இந்துத்துவ வாதிகள் கிறித்தவத்திற்கும் இஸ்லாத்திற்கும் மாறிய பழங்குடியினரை மையப்படுத்திவேலை செய்தனர். கர் வாப்ஸி என அழைக்கப்படும் தாய்மதத்திற்கு திரும்புதல் என்ற சூழ்ச்சி அறிவிக்கப்படாமலேயே நிகழ்த்தப்பட்டது. பழங்குடியினர் அடையாளத்துடன் இருந்து காலனிய ஆட்சியில் கிறித்தவத்துக்கு மாறிய பழங்குடியினர் 1990களின் பிற்பகுதியில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இந்து மதத்துக்கு மாற்றப்படும் சூழ்ச்சிகள் அரங்கேறின. இதற்காக இந்துத்துவ அமைப்புகள் தீவிரமாக பணி செய்தன. அசீமானந்தா போன்ற இந்து சாமியார்கள் ஆதிவாசியினரை இந்துக்களாக மாற்றும் வேலையை வெற்றிகரமாகச் செய்தனர். மலேகான் குண்டுவெடிப்புக் குற்றவாளியான அசீமானந்தாவை பேட்டி கண்டு அவரது ஒப்புதல் வாக்குமூலத்தை ’தி கேரவன்’ இதழில் விரிவானக் கட்டுரையாக எழுதினார் அதன் நிர்வாக ஆசிரியர் லீனாகீதா ரெகுநாத். அந்த வாக்குமூலத்தில் பழங்குடியினர் பெருமளவில் வாழும் குஜராத்தின் டேங்க்ஸ் மாவட்டத்தில் அசீமானந்தா நிகழ்த்திய இந்து வெறியாட்டங்கள் பற்றி வெளிப்படையாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.
1998இல் இந்த பகுதிக்கு சென்று ஆசிரமம் அமைத்த சங் உறுப்பினரான அசீமானந்தா, கிறித்தவத்தை பற்றியும் கிறித்தவ மதத்தைப் பற்றியும் மோசமானக் கருத்துகளைப் பரப்பினார்.அவ்வாண்டின்கிறிஸ்துமஸ்நாளில் பள்ளிகளும் தேவாலயங்களும் இந்துத்துவ வெறியர்களால் தாக்கி சிதைக்கப்பட்டன. வீடுகள் நொறுக்கப்பட்டன. கிறித்தவ மற்றும் முஸ்லிம் பழங்குடியினரின் வர்த்தம் அழிக்கப்பட்டது. இப்படியாக நடந்தேறிய வன்முறைகளுக்கிடையில் டிசம்பர் மத்தியில் தொடங்கி 1999 ஜனவரி மத்திம காலம் வரை வெறும் 30 நாட்களில் சுமார் 40,000 கிறித்தவப் பழங்குடியினர் இந்துமதத்திற்குமாற்றப்பட்டனர். அப்போது சுமார் 30 சர்ச்சுகள் இடிக்கப்பட்டு கோவில்கள் கட்டப்பட்டதாக அசீமானந்தா இந்த வாக்குமூலத்தில் பெருமையாகக் குறிப்பிடுகிறார். இதுவொரு சிறிய எடுத்துக்காட்டுத்தான். இந்த 25 ஆண்டுகளில் வடக்கிலும் வடகிழக்கிலும் பழங்குடியினர்பெருமளவில் கட்டாயமதமாற்ற வன்முறையை அனுபவித்துள்ளனர். அசீமானந்தா போன்றவர்களின் மூளைச்சலவையால் ஒருகட்டத்தில் தாம் ’இந்துக்களே’ என அவர்கள் நம்ப வைக்கப்பட்டனர்.
இப்படியாக தலித்களையும் ஆதிவாசி களையும் உள்ளடக்கி இஸ்லாமியர்கள் மற்றும் கிறித்தவர்களுக்கு எதிரான இந்து ராமராஜ்யத்தைகட்டமைக்கும் சதியில்மெல்ல வெற்றியை ருசிக்கின்றனர் இந்து வெறியர்கள். கோவை குண்டுவெடிப்பு, குஜராத் கலவரம் என எங்கெல்லாம் முஸ்லிம்கள் தாக்கப்பட்டனரோ அங்கெல்லாம் இஸ்லாமியர்களுக்கு எதிராக களத்தில் இறக்கப்பட்டவர்கள் பெருமளவில் தலித்களே. ஷாகா வகுப்புகளிலும் பல்வேறு மத மூளைச்சலவைக் கூட்டங்களிலும் இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புணர்வை விதைப்பதுதான் ஒற்றைக் குறிக்கோள். கோவை, குஜராத் கலவரங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிராகத் தாக்குதலில் ஈடுபட்ட தலித்கள், இன்றளவிலும் வழக்குகளை எதிர்கொண்டு வருகின்றனர். தலித்களையும் ஆதிவாசிகளையும் வைத்து இஸ்லாமியர்களையும் கிறித்தவர்களையும் தாக்குவதன்மூலம்’அடிமையையும் எதிரியையும்’ ஒரே கல்லில் வீழ்த்தும் சூழ்ச்சியில் வெற்றி பெறுகின்றன இந்துத்துவ அமைப்புகள். சாதியால் இழந்த மரியாதையை மதத்தால் பெற்றுவிடலாம் என நம்பி இந்துக்களாக புத்துயிர் பெறும் தலித்கள், இந்துமதத்தின் ஆண்டாண்டுகாலக் கள்ளச் சதியின் நவீன சூழ்ச்சிகளில் புதிய முறைகளில் வதைபடுகின்றனர்.
பண்பாட்டு ரீதியாக மிகுந்த மத நம்பிக்கை கொண்டவர்களாக மக்களை மாற்றியதன் மூலம் அரசியல் தளத்தில் அதை வாக்குகளாக அறுவடை செய்தது பாரதிய ஜனதா கட்சி. பொருளாதார ரீதியாக முன்னேறிய படித்த, சாதி இந்துக்களின் பேராதரவை மட்டுமே பெற்ற பா.ஜ.க கடந்த தேர்தலில் வெற்றி பெறக்காரணம் எல்லா படிநிலைகளிலும் இந்து மத நம்பிக்கை அதிகரித்ததே! சங் பரிவாரத்தின் பிரச்சாரமான ’இந்துத்துவம் ஒரு மதமல்ல அதுவொரு வாழ்க்கைமுறை’ என்ற பொய்யை நம்பி, ஏற்று அதை செயல்படுத்த படிக்காத இந்தியர்களும் படித்த இந்தியர்களும் முனைப்புக் கொண்டதன் தீயபலன் அது. இவர்கள் அனைவருமே, ’இந்தியா இந்துக்களின் நாடு’ என நம்பத் தொடங்கியதிலிருந்து இங்கே மதசார்பின்மைக் கொள்கைஆட்டம் காணத் தொடங்கிவிட்டது. மதத்தின் பெயரால் படித்தவர்களின் ஊழலைக் காப்பாற்றி படிக்காதவர்களின் கோபத்தை ஆற்றுபடுத்தும் வேலைகள் நடக்கின்றன. கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் அதே காலச் சூழலில் ஏழைகள்/தலித்கள் மென்மேலும் நலிந்து நாசமாகின்றனர். ஆனால் இருவரையும் இணைக்கும் பாலமாகஇந்துமதம் செயல்படுகிறது.
உலக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் அத்தனை பலன்களையும் அனுபவிக்கும் தலைமுறையாக இது இருக்கிறது. சுதந்திர வர்த்தகத்தால் உலகின் எந்த மூலையில் இருந்தும் எதையும் வாங்கிவிட முடிகிறது. சந்தை என்ற அளவில் இங்கே கலப்பிற்கு பஞ்சமில்லை. ஆனால், சமகால அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி பழைய பிற்போக்குத்தனங்களை சிதைக்கவில்லை. மாறாக, கூடுதலான புதிய பிற்போக்குகளை அவை தோற்றுவித்திருக்கின்றன. சிலை வழிபாடும், கடவுள்மனிதர்களும், விலங்குபலியும் பரிகாரங்களும் கிரக/நட்சத்திர நம்பிக்கைகளும் படித்தவர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. சத்குரு ஜக்கி வாசுதேவ், அமிர்தானந்தமயி, பாபா ராம்தேவ் என நீளும் கார்ப்பரேட் சாமியார்கள் இந்துமதவன்மத்தைஇளகியதாக, ஒரு மாறுபட்ட வடிவத்தில் படித்தவர்களுக்கு கடத்தும்வேலையைக்கச்சிதமாகச்செய்கின்றனர். ஷாகா வகுப்புகளில் மத மூளைச்சலவைக்கு ஆளாக்கப்படும் படிப்பறிவற்ற அடித்தட்டு மக்களுக்கும், யோகா வகுப்புகளில்வீழ்த்தப்படும் படித்த முன்னேறிய சமூகத்தவருக்கும் ஒரு வேறுபாடுமில்லை. இரண்டு இடங்களுக்கும் ஒரே குறிக்கோள், ஒரே நோக்கம், ஒரே இலக்கு. அது இந்து உளவியலை கட்டமைப்பது.
இந்திய அரசியலமைப்புச்சட்டப்படி இந்திய அரசு தனியொரு மதத்திற்கு ஆதரவாகச் செயல்படக்கூடாது. மாறாக மதச்சார்பின்மையை கடைபிடிக்க வேண்டும். ஆனால் அரசால் நிதியளிக்கப்பட்டு எல்லா தளங்களில் இந்துமதவாதம் வளர்த்தெடுக்கப்படுகிறது. அண்மைக் காலங்களில் இந்துமதத்தை வளர்த் தெடுப்பதற்கான நிதியுதவியை அரசு மற்றும் கார்ப்பரேட்டுகள் நேரடியாக வழங்குவது மிக வெளிப்படையாக நிகழ்கிறது. யாகங்களுக்கும், சொற்பொழிவுகளுக்கும், யோகா வகுப்புகளுக்கும் மக்களின் வரி பணமே வாரி இரைக்கப்படுவதைப் பார்க்கிறோம்.
உலக யோகா தினத்தை முன்னிட்டு நாடே யோகா செய்தாக வேண்டிய நிர்பந் தத்திற்கு ஆளானது. மத விழாக்கள் மற்றும் புனித யாத்திரைகளுக்கு மானியங்கள் வழங்கப் படுகின்றன; 2012 ஆம் ஆண்டு முக்திநாத் மற்றும் கைலாஷ் மானசரோவருக்கு யாத்திரை போகும் இந்துக்களுக்கு ஆகும் செலவின் ஒரு பகுதியை தமிழக அரசு ஏற்கும் என ஜெயலலிதா அறிவித்தபோது அதை வி.ஹெச்.பியும், பஜ்ரங்தளும் பாராட்டின. அது மட்டுமல்ல, கோவில்கள், ஆசிரமங்கள் மற்றும் அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளுக்கு நிலமும், அரசு நிதியுதவியும் அளிக்கப்படுகிறது. இவற்றுக்கெல்லாம் உடனடியான அரசு அனுமதியும் கிடைக்கிறது. இந்தியாவின்பிரபல தொழிலதிபர்கள், சினிமா நட்சத்திரங்களில் பலரும் இந்துமதச் செயல்பாடுகளுக்கு பெரும் நிதியை அளித்து வருகின்றனர். இந்நாட்டின் பிரதமர் மத ரீதியாக எதை அறித்தாலும் மக்களிடம் அவ்விஷயம் போய்சேர சினிமா பிரபலங்கள் அதை முன்மொழிய நிர்பந்திக்கப் படுகின்றனர். இவ்வளவுகளுக்கு மத்தியிலும் படித்த இந்தியா சாதி பார்ப்பதில்லை என கூறப் படுகிறது. நகரங்களில் வாழும் மனிதர்களுக்கு சாதியுணர்வே இருப்பதில்லை என வாதிடப் படுகிறது. ஒவ்வொரு இந்தியரும் தம் இதயத்தை ஒன்று ஊரிலோ அல்லது சேரியிலோ வைத்திருக்கின்றனர். ஊரானது ஒருவரின் ஆதிக்க அடையாளமாகவும் சேரி ஒருவரின் அடிமைக் குறியீடாகவும் தொடர்ந்து நீடிக்கிறது. எல்லோரும் கலந்து வாழும் சமத்துவக் கிராமங்கள் அரசியல் ஜனநாயகம் நிறுவப்பட்டு இந்த எழுபதாண்டுகளில் சாத்தியப்படவே இல்லை. இந்த கட்டமைப்பை கட்டிக் காக்கும் படித்த இந்தியா ‘ நாங்கள் இந்தியர்கள்’ என முகநூல்களில் தொண்டைகிழிய முழங்குவது எத்தனை முரணானது?
ஏன் இந்நாடு என்னை போன்ற மனிதரை தீண்டத்தகாதவராக வைத்து என கேட்கவே கேட்காதவர்கள், பாகிஸ்தான் எதிர்ப்பு முழக்கங்களில் தலித்கள் முன்னாள் நின்றுகோஷம் போட வேண்டுமென எதிர்பார்க்கின்றனர். அப்பன்களும் பாட்டான்களும் ஊர்களில் நிறுவிய ஆதிக்கத்தை கல்விக்கூடங்களுக்கும் அலுவலகங்களுக்குள்ளும் இழுத்து வந்ததுதான் படித்த இந்தியர்களின் ஆகப்பெரும் சாதனை. இவர்கள் சமூக வலைதளங்களில் சாதிக்கொரு குழுவை வைத்துக் கொண்டு பாரம்பரிய வன்மத்தை நவீன முறைகளில் கக்குகின்றனர்.
இப்போது மட்டுமல்ல இனிவரும் காலங் களிலும் சாதிப் படிநிலை நீடித்திருக்கவும் பார்ப்பனியம் தழைத்திருக்கவும் இந்துமதம் உயிர்ப்போடு இருக்க வேண்டும். இந்துமதம் உயிர்த்திருக்க வேண்டுமெனில் ஆதிக்கவாதியும் அடிமையும் ஒற்றை அடையாளத்தின் சமாதானத்திற்குள் வரவேண்டும். அப்படியெனில் அதற்கொரு பொது எதிரி வேண்டும். அந்த பொது எதிரியே சிறுபான்மையினர். அவர்களை கருவறுக்க வேண்டுமெனில் இந்துக்கள் ஒன்றிணைந்து இருக்க வேண்டும். புத்தெழுச்சி இந்துயிஸம் இதை அடிப்படையாகக் கொண்டே மீட்டுருவாக்கம் செய்யப்படுகிறது. பாரத மாதா, தேசிய கீதம், தேசியக் கொடி, இந்திய ராணுவம், புனிதப் பசு போன்ற வார்த்தைகள் இதற்கு பெரிதும் உதவுகின்றன. இந்துவெறியால் உருவாக்கப்படும் நவீன இந்திய தேசியத்திற்கு, மதச்சார்பற்ற இந்நாட்டை ஏகபோகமாக இந்துக்கள் நாடாக மாற்றுவது ஒன்றே லட்சியம்.
அதன் தொடர்ச்சியாகவே இங்கு எல்லா சமத்துவ தளங்களும் மதச்சார்புநிலையை நிறுவுகின்றன. திரையரங்குகளில் தேசிய கீதத்தை கட்டாயமாக்குகிறது நீதிமன்றம். சட்டப் புத்தகத்தின் அடிப்படையில் தீர்ப்புகள் வழங்குவதை நீதிமன்றங்கள் முற்றிலுமாக நிறுத்திவிடும் காலம் வெகுதொலைவில் இல்லை. ஆதாரம் மற்றும் சாட்சிகளை விடவும் மதம் சொல்லும்நியாயதர்மங்களின்அடிப்படையில் நீதிபதிகள் பேசத் தொடங்கிவிட்டனர். மத அடிப்படைவாதத்தை நம்பும் மக்களும் அரசும் அதைதெய்வவாக்காக ஏற்றுக்கொள்கின்றனர். அனைத்து வகையான நவீன ஊடகங்கள் வழியாகவும் சாதி/மதக் கருத்தியல்கள் பரப்பப்படுகின்றன. ஐயர் மேட்ரிமோனி, கவுண்டர் மேட்ரிமோனி என விளம்பரங்களில் சாதியை கூவி விற்கின்றன.. கும்பாபிஷேகம், ஜோதிட பலன்கள், சொற்பொழிவுகள் என சேனல்கள் மதஉணர்வை பரப்புவதற்கான முக்கிய வழியாகிவிட்டன. அதை தவிர்த்து அர்னாப் கோஸ்வாமிகள் தொண்டை கிழியக் கத்திக் கத்தியே இந்து தேசியத்தை வளர்த்தெடுப்பதில் வெற்றி பெறுகின்றனர். இத்தேசத்தின் சமூக/அரசியல்/பண்பாட்டு மேடைகளில் ஓங்கி ஒலிக்கும் இந்து ஆதிக்கவாதிகளின் குரல்கள் கட்டளையாக, எச்சரிக்கையாக, தீர்ப்பாக நம்மை நோக்கி பாய்ந்து வருகின்றன.. அவர்கள் முஸ்லிம்களை அழிந்து போக ஆணையிடுகின்றனர், தலித்களை சேரிகளுக்குள் ஒடுங்கியிருக்க உத்தரவிடுகின்றனர், பெண்களை அடுக்களையிலும் படுக்கையறையிலும் முடங்கிப் போக கட்டளையிடுகின்றனர். பிள்ளை பெற்றால் போதும் என்ற பெண்ணடிமைத்தனம், பண்பாடாக மீட்டுருவாக்கம் செய்யப்படும் நாள் நெருங்குகிறது. மாட்டிறைச்சி உண்பதை குற்றமெனக் கருதும் இந்நாட்டின் பிரதமர் தான் தினமும் 14 கிளாஸ் கோமயம் அருந்துவதாகச் சொல்லி அதையே இந்தியர்களுக்கு பரிந்துரைக்கிறார். (இச்செய்தி ஹிந்துஸ்தான் டைமிஸ் டிசம்பர் 13 அன்று வெளிவந்து பின்னர் நீக்கப்பட்டது). படித்த இந்தியா இந்த சர்வாதிகார, பிற்போக்குத்தனங்களைத்தான் பண்பாடெனக் கொண்டாடுகிறது.
மக்களுக்குள் ஒற்றுமையை சிதைக்கும் சாதியும் இந்துமதமும் இந்திய வாழ்க்கைமுறை என நம்பவைக்கப்பட்டு அதை பாதுகாக்கும் பொறுப்பு ஒவ்வொரு இந்தியருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது. இதில் பார்ப்பனர்களையும் முன்னேறிய சாதியினரையும் தவிர எல்லோருமே பலியாட்களே! தலித்கள், ஆதிவாசிகள்,பிற்படுத்தப்பட்டோர், பெண்கள், சிறுபான்மையினர் என பெரும்பான்மையான இவ்வளவு பேரும் ஒரு சிறியக் குழுவின் ஆதிக்கத்திற்காக இரண்டாயிரம் ஆண்டுகளாக பலியாட்களாக வைக்கப்பட்டுள்ளனர். அந்த பாரம்பரிய வன்மமே இப்போது பாதுகாக்கப்பட்டுள்ளது.
’ஏட்டுக் கல்வி என்பது வேறு, நமது நம்பிக்கைகள் / குடும்ப வழக்கங்கள்/சாதிய வழக்கங்கள் என்பது வேறு. இரண்டையும் குழப்பிக் கொள்ளக் கூடாது’ என குழந்தைப் பருவத்திலேயே கற்பிக்கப்படுகிறது.’படிச்சிட்டா, வழக்கம்மாறிடுமா’என்ற கேள்வியோடு சிந்திக்கும் திறன் முடக்கப்படுகிறது. இலக்கியத்தையும் தத்துவங்களையும் கரைத்துக் குடித்து உலக அறிவைப் பெற்றாலும் அற விழுமியங்களை இச்சமூகம்புறந்தள்ளமுளையில்விதைக்கப்படும் மதவாத நச்சுத்தான் காரணம். ஒற்றுமை உணர்வோ, குடிமக்கள் என்ற ஒருங்கிணைவோ இல்லாததால் சகமனிதருக்கு நேரும் எல்லா அநீதியும் நீதியாகிறது.
சாப்ட்வேர் எஞ்சினியர்கள், டாக்டர்கள், விஞ்ஞானிகள், எம்.பி.ஏ பட்டதாரிகளும் எத்தகைய குற்றங்களுக்கும் பரிகாரங்கள் செய்து அந்த பாவத்திலிருந்து விடுபட முடியும் என நம்புகின்றனர். இந்துமதம் அதற்கான கள்ள வழிகள் வைத்திருப்பதால் இந்துக்களுக்கு குற்றவுணர்வே வருவதில்லை. இந்நாட்டின் வறுமையை, தீண்டாமையை, வன்கொடுமைகளை, வன்முறைகளை எல்லாம் பூர்வஜென்மப் பலன் என்ற ஒற்றை நியாயத்தோடு ஏற்றுக் கொள்ள அப்பன் பாட்டன்களைப் போலவே இவர்களும் பழகியுள்ளனர். சகமனிதரின்அழிவும் துயருமே தனது இருத்தலின் அடையாளம் என நம்பும் கூட்டம் அது. அம்பேத்கர் இதைத்தான் “இந்துக்களின் மனநோய்” என்கிறார்.
கல்வி பெறும் சமூகம் பண்பட வேண்டும். ஆனால் அரசுக்கு பதிலாக கடவுளையும், நாடாளுமன்றத்திற்கு பதிலாக கோவில்களையும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு பதிலாக சனாதன விதிகளையும் நீதிமன்றங்களுக்கு பதிலாக சாதி பஞ்சாயத்துகளையும் விரும்பி, கல்வியை வெறும் பொருளீட்டுவதற்கான வழியாக மட்டுமே வைத்துக் கொண்டிருக்கும் படித்த இந்தியர்கள் இந்நாட்டின் ஜனநாயகக் கொள்கைக்கு புதிய விரோதிகளாக உருவெடுத்துள்ளனர். 25-30 ஆண்டுகளுக்கு முன்னர் நிச்சயமாக நிலைமை இப்படி இல்லை. சமூக அளவில் இல்லையென்றாலும் மையநீரோட்ட அரசியல் தளத்தில்மதச்சார்பின்மை கடைபிடிக்கப்பட்டது. அரசியலமைப்புச் சட்டத்தின்படியேனும் சாதி எதிர்க்கப்பட்டது. ’சமூக அளவில் ஜனநாயகம் மலர்விக்கப்படவில்லை எனில் அரசியல் ஜனநாயகம் அர்த்தமற்றதாகி அழிந்து போகும்’ என்ற அம்பேத்கர் எச்சரித்தார். மூர்க்கமாய்பரவும்இந்துமத நோயால்அரசியல் ஜனநாயத்திற்கும் ஆபத்து நேரும் அவலம் உருவாகியுள்ளது. பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னுரையில் இருந்து சோஷியலிஸ்ட் என்ற வார்த்தையை நீக்கும் சூழ்ச்சிகள் நடந்தேறின. இந்தியாவை ஏகபோக இந்துநாடாக ஆக்கும் வெறி அதில் தென்பட்டது. காந்தி கொலைக்குப் பின்னர் மூன்று முறை தடை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ்-ன் அரசியல் பிரிவான பாரதிய ஜனதா கட்சியிடம் ஆட்சி அதிகாரத்தைக் கொடுத்ததுதான் சுதந்திர இந்தியாவின் பெரும் தோல்வி. சமூக அளவில் நடந்தேறும் எல்லா சனாதன அட்டூழியங்களுக்கும் அரசியல் ரீதியான அனுமதி அளிக்கப்படும் ஆபத்து நம்மை குறிபார்க்கிறது.
ஒரு மதச்சார்பற்ற நாட்டிற்குரிய பண்பாக எல்லாம தங்களுக்கும் அதனதன் நம்பிக்கைகளுக்கு ஏற்ப சட்டங்கள் வகுக்கப்பட்டாலும் எல்லாவற்றையும் அடிப்படை உரிமைகள் எனும் கடிவாளத்தோடு இணைத்து சாதி/ மதரீதியான பாகுபாடுகளுக்கு முட்டுக்கட்டைப் போட்டது இந்திய அரசியலமைப்புச் சட்டம். அரசியலமைப்பு விதிகளை மதவிதிகள் விஞ் சக்கூடாது என்பதில் அம்பேத்கர் கவனமாக இருந்தார். இந்நாட்டின் ஒடுக்கப்பட்டோரையும் சிறுபான்மையினரையும் இன்றளவில் காத்துக் கொண்டிருப்பது அது மட்டுமே.
மற்றபடி பெரியாருக்கும் அம்பேத்கருக்கும் பிறகுஇந்துமதஎதிர்ப்பையும் சாதிஒழிப்பையும் உயிர்க் கொள்கையாகக் கொண்டு களத்தில் செயல்பட ஆளில்லை. நமது புரட்சி முழக்கங்கள் அன்று மேடையோடு முடிந்தது; இப்போது டி.வி விவாதங்களிலும் முகநூலிலும் முடிகிறது. பகுத்தறிவாளர்களின் செயலற்ற நிலையே மதவாதிகளையும் சாதியவாதிகளையும் சுதந்திரமாக செயல்பட வைக்கிறது. இந்துமத வஞ்சகங்கள் குறித்தும் மாண்புரிமைகள் குறித்தும் சாதியழிப்பு பேரிலக்கியத்தை அறிவாயுதமாக அம்பேத்கரும் பெரியாரும் இச்சமூகத்திற்கு நல்கிப் போனார்கள். ஆனால் அந்த ஆயுதத்தை இச்சமூகம் எவ்வளவு செறிவாக பயன்படுத்தியதுஎன்பதற்கு பெருகிநிற்கும்இந்த கால் நூற்றாண்டுகால அவலங்களே சாட்சி!
அம்பேத்கரை தலித் போராளியாகவும் பெரியாரை கடவுள் மறுப்பாளராக/ பெண்ணுரிமை போராளியாக சுருக்கி எரிமலைகளை சிறுபுற்களாக்க தோழமை சக்திகளே முயல்கின்றன. மானுட விடுதலைத் தத்துவங்களான பெரியாரியத்தையும் அம்பேத்கரியத்தையும் அவரவர் வசதிக்கேற்க தமிழ் தேசியமாகவோ மதச் சீர்திருத்தமாகவோ சிறுமைப்படுத்தும் கொடுமையை பலர் நிகழ்த்து கின்றனர். பெரியாரை ஒழித்துக் கட்டவும் அம்பேத்கரை இந்துமத சீர்திருத்தவாக்கியாக்கவும் இந்துத்துவவாதிகள் பல நிலைகளிலும் முயல்கின்றனர். இந்துமதத்தை வேரறுக்கும் சாதி ஒழிப்பே அம்பேத்கரிய-பெரியாரிய தத்துவங்களின் உயிர் நாடி என்பதையும் அம்பேத்கரின் பவுத்தப் புரட்சிக்கும் பெரியாரின் பகுத்தறிவுப் பரவலாக்கத்திற்கும் இந்துமத ஒழிப்பைத் தவிர வேறு நோக்கமில்லை என்பதையும் பகுத்தறிவுச் சமூகம் உரக்க முழங்க வேண்டும்.
ஆறாயிரம் சாதிகளால்பிளவுண்டு கிடக்கும் இச்சமூகத்தில் சாதி ஒழிப்பே சமூகப் புரட்சியாக இருக்க முடியும் என்ற நிலையில் நமது மாற்று அரசியல் களங்கள் எல்லாம் இந்துமதம் குறித்தும் சாதியம் பற்றியும் சுரணையின்றி ஏதேதோபுரட்சிகளுக்குமுயன்றுகொண்டிருக்க, பொதுச் சமூகத்தை மூளைச்சலவை செய்து கையகப்படுத்தும் வேலையில் என்றென்றைக்கு மாக இந்துத்துவவாதிகளும் பார்ப்பனர்களும் வாகை சூடியுள்ளனர். அரசியல் அறிஞர்கள், பொருளாதார வல்லுநர்கள், சமூக ஆய்வாளர்கள் என எல்லோருமே ‘இந்துமதம் மற்றும் சாதியம்’ குறித்த அம்பேத்கர் மற்றும் பெரியாரின் ஆய்வுண்மைகளை புறந்தள்ளியபடியே இங்குள்ள சமூகப் பிரச்னைகளுக்கு ஏதேதோ தீர்வுகளை முன்மொழிகின்றனர். ஆனால் நேர்மையான, உண்மையான தீர்வை அம்பேத்கரியமும் பெரியாரியமுமே கொண்டிருக்கிறது.
அந்த தத்துவங்களே இந்நாடு இந்துமயமாவதை தடுக்கவல்லவை. அந்ததத்துவங்களே இந்நாட்டை பண்படுத்த வல்லவை. அந்த தத்துவங்களே பகுத்தறிவுச் சமூகத்திற்கு வலிமையைத் தர வல்லவை. மதச்சார்பின்மைக்கான நாகரிக இடத்தைக் கொண்டிருந்த பொதுத் தளங்கள் எல்லாம் இந்துமயப்படுத்தப்படுமெனில் இந்நாட்டில் சிறுபான்மையினரும் தலித்களும் வாழ முடியுமா? இந்துமத இழிவிலிருந்துதம்மை விடுவித்துக் கொண்டு கிறித்தவர்களாகவும் முஸ்லிம்களாகவும் சுயமரியாதையோடு வாழ்வோரை தாய் மதத்துக்கு திரும்புதல் என்ற பெயரில் இழிவுக்குள் இழுத்துப் போடும் கொடுமைக்கு யார் முடிவு கட்டுவது? இந்துமதத்தை சீர்திருத்த முடியாது.
அதிலிருந்து வெளியேறுவது ஒன்றே சாதி இழிவிலிருந்து விடுபட்டு மாண்புமிக்க வாழ்க்கை வாழ்வதற்கான ஒரே வழி என்று சொல்லி பவுத்தம் தழுவினார் அம்பேத்கர். அப்புரட்சிக்காகவே அம்பேத்கரை தன் தலைவராக ஏற்றுக் கொண்டார் பெரியார். இந்துமதத்தை ஒழிப்பதற்கான பாதை நம் முன்னே தெள்ளத் தெளிவாக இருந்தும் பகுத்தறிவுச் சமூகம் அதை தேர்ந்தெடுக்க மறுத்தபடி இருக்கிறது.
2025 ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு. அதற்குள் செய்து முடிக்க அவர்களுக்கு ஆயிரம் செயல்திட்டங்கள் இருக்கலாம். சமூக,அரசியல் பொருளாதாரத் தளங்களில் உருவாக்கப்படும் ஒவ்வொரு சலசலப்பும் இந்துமயமாக்கலை நோக்கிய நகர்தலே என்பதில் சிறிதளவும் ஐயம் கொள்ளத் தேவையில்லை. பகுத்தறிவுச் சமூகம் இதை எதிர்கொள்ள எவ்வகையில் தயாராக இருக்கிறதுஎன்பதுதான் மிகப்பெரியக்கேள்வி. நிறுத்திவிட்ட பகுத்தறிவுப் பிரச்சாரத்தை, சாதி ஒழிப்பு நடவடிக்கைகளை, பார்ப்பனிய எதிர்ப்பை களத்திற்கு எடுத்துச் செல்வதற்கான பணிகளை அது துரிதப்படுத்தியாக வேண்டும். இந்து நாடாக இந்தியா மாறுவதென்பது ஒடுக்கப்பட்டோரும் சிறுபான்மையினரும் அழிவதற்கான அறைகூவல். அதை பகுத்தறிவுச் சமூகம் வேடிக்கைப் பார்க்கப் போகிறதா?
‘‘சாதி ஒழிப்பே சமூக விடுதலைக்கு வழி வகுக்கும். சாதி ஒழிய வேண்டுமெனில் இந்துமதத்திலிருந்து ஒவ்வொருவரும் தம்மை துண்டித்துக் கொள்ள வேண்டும்” -நம் வழிகாட்டிகளிடம் நாம் கற்ற பழைய முழக்கம்தான். ஆனால் அதை நாம் மீண்டும் மீண்டும் உரக்கக் கூற வேண்டியிருக்கிறது. இச்சமூகத்தை இந்துமயப்படுத்த முயலும் அடிப்படைவாதிகளின் அடிவயிறு கலங்குகிற வகையில் மீண்டும் மீண்டும் முழங்க வேண்டி யிருக்கிறது. அவ்வாறே சமத்துவத்திற்கும் மனித மாண்பிற்குமான அறப்போரை மீண்டும் தொடங்க வேண்டியிருக்கிறது.