கீற்றில் தேட...

சூத்திரர்கள், தலித்துகள், ஆதிவாசிகள் ஆகியோர் பற்றிய நிலவுகின்ற நிலைப்பாடு புதிய கோட்பாட்டில் மாறாது என்கின்றபோது அக்கோட்பாட்டினால் என்ன பயன்?

இராட்டிரிய சுயம் சேவக் சங் (ஆர் எஸ் எஸ்), பாரதிய சனதாக் கட்சி ஆகியவற்றின் அறிவாளிகள் ஒருங்கிணைந்த மனிதநேயம் என்ற கோட்பாட்டை முன்வைக்கிறார்கள். அது தீனதயாள் உபாத்யாயா (1916-1968)வால் முன்மொழியப்பட்டது என்கிறார்கள்.

ஆர் எஸ் எஸின் தலைவர் மோகன் பகவத், பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா கோசபாலே, செயலாளர் இராம் மாதவ், ஆகியோர் உபாத்யாயாவின் ஒருங்கிணைந்த மனிதநேயம் பற்றித் திரும்பத் திரும்பப் பேசி வருகிறார்கள், எதிர்கால அதிகாரத்தில் தங்களுக்கு வழிகாட்டும் அடிப்படை மெய்யியல் அதுவே என வரையறுக்கிறார்கள்.

தலைமையமைச்சர் நரேந்திர மோடியும் தம் அரசாங்கத்திற்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கு இம்மெய்யியலே என அவ்வப்போது பேசுகிறார். அண்மையில் இக்கோட்பாடு பற்றிப் பேசியது, இராம் மாதவுடைய “இந்துத்துவாச் சட்டகம் .. ; ஒருங்கிணைந்த மனித நேயமும் மேற்கத்தியம் தவிர்த்த உலகப் பார்வைக்கான தேடலும்” என்ற புத்தக வெளியீட்டின் போதுதான். அங்கு பேசிய கோசபாலே, “இந்துத்துவம் என்பது இடதும் அல்ல, வலதும் அல்ல; ஒருங்கிணைந்த மனிதநேயமே அதன் சாரமாகும்.” என்றார்.ram madhav book releaseஎது எப்படியிருப்பினும், ஒருங்கிணைந்த மனிதநேயம் என்கின்ற இந்த மெய்யியல், ஆர் எஸ் எஸையும் அதன் கோட்பாட்டாளர்களையும் எந்த வகையில் வி.டி. சவர்க்கர், கே.பி. ஹெட்கேவர், எம்.எஸ். கோல்வால்கர் போன்றோர்களைப் பின்பற்றுவர்கள் என்கின்ற அவர்களது முந்திய நிலையை மாற்றியுள்ளது என்பதே கேள்வி. காலங்காலமாக ஆர் எஸ் எஸால் தூற்றப்பட்ட இந்தியாவின் சிறுபான்மையர் நலனுக்காக மட்டுமின்றி குறிப்பாகச் சூத்திரர்கள், தலித்துகள், ஆதிவாசிகள் ஆகியோர் நலனுக்காகவும் இந்த மெய்­யியலை ஆய்வது முக்கியமாகிறது. இவர்களுக்கு, பார்ப்பனிய இந்துத்துவ மெய்யியலாளர்கள் இதுவரை பின்பற்றி வருகின்ற சாதியை அடிப்படையாகக் கொண்ட மதத்தில் சமமான எந்தத் தகுதியும் தரவில்லை. ஆனால் அவர்களை இசுலாமியர்களுக்கும் கிறித்துவர்களுக்கும் எதிரான வன்முறைக்கு மட்டும் பயன்படுத்துகிறார்கள்.

தீனதயாள் உபாத்யாயா ஒர் ஆர் எஸ் எஸ். தொண்டர். அவர் பின்னர் ஆர். எஸ். எஸின் அரசியல் பிரிவான பாரதிய சனசங்கின் இரண்டாவது தலைவர் ஆனார். அவர் உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த பார்ப்பனர். பகவத், கோசபாலே, இராம் மாதவ் ஆகியோரின் குழந்தைப் பருவச் சூழ்நிலையை ஒத்த சூழ்நிலை­யிலேயே வளர்ந்தவர். வேறு வேறு பகுதிகளில் பிறந்தவர்களாயினும் இவர்கள் அனைவரும் ஒரே சாதிப் பின்புலத்தைக் கொண்டவர்கள் ஆவர்.

குழந்தைப் பருவத்திலேயே இந்தியப் பண்புநலனில் இடம்பெற்று வளர்கின்ற சாதியப் பண்பாடு பின்னர் அவர் அவள் வாழ்நாள் முழுவதும் தொடர்கிறது.

மனிதச் சமத்துவத்திற்கு எதிரான பார்ப்பனியப் பண்புக்கூறுகள் பல உள்ளன. இந்துத்துவத்திற்குள்ளும் அவை சமத்துவமற்ற நிலையைப் பேணுகின்றன. அவை பார்ப்பனிய மரபு வர்ண தர்ம சாதியத்தின் பக்கவிளைவுகள் ஆகும். ஆர். எஸ். எஸின் தொடக்கக்காலக் கோட்பாட்டு எழுத்துகளில், குறிப்பாக கோல்வால்கர் எழுத்துகளில் இந்துத்துவ மரபின் முழுவடிவமும் விரிவாக விளக்கப் பெற்றுள்ளது. கோல்வால்கர், கெட்கேவர் ஆகிய இருவரும் பார்ப்பனியப் பின்புலத்தைக் கொண்டவர்கள். சங் அணிவரிசையில் இதுவரை தலித் அல்லது ஆதிவாசியைச் சேர்ந்த எந்தவொரு கோட்பாட்டாளரும் இடம்பெறவில்லை.

சாதியப் பண்பாட்டிற்குள் வளர்வது மற்ற சாதியினருடன் ஒருங்கிணைந்து வாழ்வதைப் பறித்துவிடுகிறது. வேறுவேறு மதங்களில் பிறந்து அம்மதப் பண்பாடுகளில் வளர்ந்து வருவோர் மீது திணிக்கப்படும் மதப்பண்பாடுகளைக் காட்டிலும் வேறுவேறு சாதிகளில் பிறப்போர்மீது சாதிப் பிரிவினைகள் கடுமையாகத் திணிக்கப்படுகின்றன. இந்தியாவைச் சமவுரிமை கொண்டோர் நாடாக மாற்ற ஒருங்கிணைந்த மனிதநேயத்தைப் பயன்படுத்த முடியுமா? இந்துவியத்தை சனநாயக மதமாக மாற்றுவதைக் குறிக்கோளாகக் கொள்ளும்போது அது சாத்தியப்படும்.

தேவைப்படும் அவ்வப்போது மேற்கத்திய அறிவியலை உபாத்யாயா ஆதரித்தாலும், மேற்கத்திய முதலாளித்துவத் தனிமனிதவுரிமைக் கோட்பாடு, மார்க்சியச் சோசலிசம் ஆகிய இரண்டையும் எதிர்த்தார்.

மேற்கத்திய அறிவியலோ கிழக்கத்திய அறிவியலோ எந்தவோர் அறிவியலும் உழைப்பின் கண்ணியத்திலும் பொருள்கள். சரக்குகள் உற்பத்தியிலும் வேர் கொண்டுள்ளது. அது உழவு, கைத்தொழில் ஆகியவற்றை உள்ளடக்கிய மனித உற்பத்தியின் மீது தூய்மை, தீட்டுக் கோட்பாடுகளைச் சுமத்துவது இல்லை.

பார்ப்பனியத்தில் ஆழமாக வேரூன்றிய ஓர் அமைப்பு என்ற முறையில் ஆர்.எஸ்.எஸின் இந்திய மரபு பற்றிய கருத்தாக்கம் தீண்டாமையை உள்ளடக்கிய தூய்மை. தீட்டு, சமமற்ற முறையில் மேல்கீழாக வரிசைப்படுத்தப்பட்ட சாதி, பாலினம் ஆகிய பார்ப்பனிய மதிப்பீடுகளைச் சுற்றியே அமைந்துள்ளது.

பார்ப்பனியப் பின்புலத்திலிருந்து வந்த மார்க்சியவாதிகள், பரந்த கொள்கையினர் (liberals) போன்று உபாத்யாயா சாதி பற்றிய கேள்வியைச் சிக்கலுக்குரிய ஒன்றாகப் பார்க்கவில்லை. அதேபோன்று இன்றைய ஆர்.எஸ்.எஸ் அல்லது பாசகவின் அறிவாளிகளும் மகாத்மா பூலே, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் கருத்துகளை உள்வாங்கிச் சாதியைக் கேள்விக்கு உட்படுத்தவில்லை. அவர்கள் இருவர் கொள்கையிலும் மனித வாழ்க்கையின் எல்லாப் பக்கங்களிலிருந்தும் சாதியையும் மனிதத் தீண்டாமையையும் அகற்றுவதே அடிநாதமாக இருந்தது.

உபாத்யாயா செய்தது மகாத்மா காந்தியின் “சர்வோதயத்தையும்”, “கிராம சுயராச்சியத்தை”யும் ஒன்றிணைக்க முயற்சித்ததுதான். ஏன் அவர் பூலேயையும் அம்பேத்கரையும் தேர்ந்தெடுக்கவில்லை.? ஏனென்றால் மனிதத் தீண்டாமையை ஆதரிக்காவிட்டாலும் இந்து வர்ணாசிரமத்தைக் காந்தியும் ஆதரித்தவர்தாம்.

உபாத்யாயாவின் ஒருங்கிணைந்த மனிதநேயம் என்பது ஆதிசங்கரரால் வளர்த்தெடுக்கப்பட்ட அத்வைதத்தைப் பின்பற்றுகிறது என்கிறது ஒரு திறனாய்வு. புனித சாரத்தின் (divine essence) பிரிக்கவொண்ணாமை பற்றி அத்வைதம் பேசினாலும் புராண, இராமயணத் தொன்மங்கள் வழிவந்த சத்ரியர் கடவுள்களையும் (விஷ்ணு, சிறீராமர் முதலிய) பார்ப்பனர் கடவுளையும் (பரசுராமன்) வணங்குவதை அது எதிர்க்கவில்லை. “ஜெய் சிறீராம்” என்ற முழக்கமும் ஏற்றுக் கொள்ளப்பட்ட இயல்பான ஒன்று என்றான சிறுபான்மையினருக்கெதிரான வன்முறையும் இணைந்த இராமர் கோயில் இயக்கம் ஆர். எஸ்.எஸின் சொந்த உருவாக்கமே. இராமர் சத்திரிய அரசகுடி வழித்தோன்றல் என்பது ஆர்.எஸ்.எஸின் அறிவாளிகளுக்கு நன்கு தெரியும். சத்திரிய அரசகுடி சாதிவொழிப்பில் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை, சாதி நிலைபேற்றிலேயே நம்பிக்கை கொண்டிருந்தது.

அவர்கள் போற்றுகின்றதும் நிறுவனமாக்கப்பட்டதுமான புனிதத் தெய்வங்கள், சாதி ஆன்மீகத்தில் தங்கள் வேர்களைக் கொண்டிருக்கையில் ஒருங்கிணைந்த மனிதநேயம் என்பது எப்படிச் சாத்தியமாகும்? இருப்பது ஒரே ஒரு கடவுள், அவர் ஆண்,பெண் ஆகிய அனைவரையும் சமமாகப் படைத்தார் என்பதையாவது அத்வைதம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்துத்துவச் சிந்தனைப்பள்ளியில் பணிபுரிகின்ற சூத்திரர், தலித் ஆதிவாசிகள் ஆகிய அனைவருக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆன்மீக, பண்பாட்டுத் தேசியத்தில் தங்கள் இடத்தைத் தேர்வு செய்வதற்குப் பெரும் அறைகூவலாகவே இருக்கும். இப்பொழுது புதிதாக வலியுறுத்தப்படுகின்ற ஒருங்கிணைந்த மனிதநேயத்திலும் அவர்கள் நிலைமை அதேதான்.

ஆர்.எஸ்.எஸ். பாசக அறிவாளிகள் பரப்புரை செய்கின்ற ஒருங்கிணைந்த மனிதநேய மெய்யியத்தில் சாதி, பாலினச் சமத்துவமின்மை, தீண்டாமை ஆகியவற்றை ஒழிப்பது என்கின்ற வேலைத்திட்டம் அடிப்படையான ஒரு பகுதியாக அமையவில்லை என்கின்றபோது சூத்திரர்கள், தலித்துகள், ஆதிவாசிகள் ஆகியோரின் சபத்துவமற்ற நிலை இந்திய அமைப்பில் என்னவாகும்? மேலும் இந்துத்துவ அமைப்புகள் உள்ளேயும் அவர்கள் நிலைமை என்னவாக இருக்கும்?

ஆர்.எஸ்.எஸ். பாசக கட்டமைப்புகளுக்குள், சூத்திரர் தலித் அல்லது ஆதிவாசி அறிவாளிகள் உருவாவதற்கும் அவர்கள் தங்கள் சொந்தத் தகுநிலையை வெளிப்படுத்துவதற்கும் அனுமதிப்பது இல்லை என்பது எதேச்சையான ஒன்று அன்று.

ஆர்.எஸ்.எஸும் பாசகவும் உழைப்பின் கண்ணியத்தை அவர்கள் கருத்தியல் வேலைத்திட்டத்தின் ஒருபகுதியாக இதுவரை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்து ஆன்மீகத் தளத்திலும்கூட அவர்கள் அப்படி ஏற்றக் கொள்ளவில்லை. சாதி மொழியை நீங்கள் புறந்தள்ளினாலும், இந்து செருப்புத் தைப்பவரோ, குடம் செய்பவரோ, தெருக் கூட்டுபவரோ, தூய்மைப் பணியாளரோ, ஆடு மேய்ப்பவரோ இந்துக் கோயில்களில் பூசாரிகளாக முடியாது, அவர்கள் அதற்கான தகுதி பெற்றிருந்தாலும் அது நடைபெறாது. இந்த வரலாற்றுச் சிக்கலை ஒருங்கிணைந்த மனிதநேயம் எப்படி வெற்றி கொள்ளும்? மனிதச் சமத்துவம் என்றவொரு கோட்பாடு இல்லாமல் ஒருங்கிணைந்த மனிதநேயம் என்பதின் பொருள்தான் என்ன?

உபாத்யாயாவின் ஒருங்கிணைந்த மனிதநேயம் கொள்கையளவில் உடல், மனம், அறிவு, ஆன்மா ஆகியவற்றின் ஒன்றிணைந்த பங்களிப்புகள் பற்றிப் பேசுகிறது.. இந்துத்துவ அமைப்புகளில் ஒன்றிணைக்கப்பட்ட சூத்திரர்கள், தலித்துகள், ஆதிவாசிகள் ஆகியோரின் மனமும் அறிவும், ஆன்மாவும் அதில் உள்ளடங்கி உள்ளனவா? இப்பொழுதுவரை இந்துயிசத்தில் அவர்கள் சமமான ஆன்மீக உரிமையைப் பெற்றிருக்கவில்லை. இந்தக் கொள்கைகளைப் பேசுகின்ற பார்ப்பனர்களுக்கு நிகரான அறிவுத் தகுநிலையையும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை.

மேலும் இந்திய மக்கள் அனைவரின் உணவுப் பண்பாட்டை ஒருங்கிணைந்த மனிதநேயம் எப்படி அணுகுகிறது?

நவீனப் பார்ப்பனியம், இந்துத்துவ அமைப்புகள் ஆகிய இரண்டும் சைவத்தையே ஏற்றுக் கொள்கிறது.

குடிமைச் சமூகமாக இருந்தாலும் சரி ஆன்மீகச் சமூகமாக இருந்தாலும் சரி எல்லோராலும் அறியப்பட்ட உலகளாவிய மனிதநேய மெய்யியல் உணவுப் பண்பாட்டு அடிப்படையில் மனிதர்களுக்கிடையே வேறுபாடு காட்டுவது இல்லை. ஆர். எஸ். எஸ்ஸின் ஓருங்கிணைந்த மனிதநேயம் உலகளாவிய மனிதநேயத்தைப் போன்றதுதான் என்றால் சைவத்தை வலியுறுத்தும் அதன் நீண்டகால வரலாற்றை (இன்றைய வடிவத்தில் ஏறத்தாழத் தொண்னூறு ஆண்டுகள்) அது என்ன செய்யும்?

உபாத்யாயாவின் ஒருங்கிணைந்த மனிதநேயம் தனிமனித உரிமையை எதிர்க்கிறது, அது மேற்கிலிருந்து தோன்றியது எனக் கருதுகிறது. அதன் தனிமனித உரிமை எதிர்ப்பு சாதியம் அல்லது வகுப்புவாதத்தின் மீதான அதன் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது எனத் தோன்றுகிறது. ஆனால் இந்திய அரசமைப்பே தனிமனித உரிமைகள் அடிப்படையில்தான் செயல்படுகிறது. அதன்படி ஒவ்வொரு தனிமனிதனும் ஒரு வாக்கும் சமமான மதிப்பும் கொண்ட குடிமகனாகத் திகழ்கிறான். அப்படியானால் ஆர்.எஸ்.எஸ்ஸின் ஒருங்கிணைந்த மனிதநேயம் என்பது இன்றைய அரசமைப்பிற்கு எதிரானது அல்லவா?

இங்குதான் சிறுபான்மையினர் உரிமைகள் மட்டுமின்றி சூத்திரர்கள், தலித்துகள், ஆதிவாசிகள் ஆகியோர் உரிமைகளும் இந்த மெய்யியலில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன.

இந்துச் சமூகத்தின் முரண்பாட்டைக் கவனியுங்கள். கொள்கையளவிலும், நடைமுறையிலும் பார்ப்பனர்கள் இருபிறப்பாளர்கள் ஆகிய இருவரையும் தவிர சூத்திரர்கள், தலித்துகள் ஆதிவாசிகள் ஆகிய அனைவரும் உடலளவில்தான் மனிதர்கள், மனம் அறிவு ஆன்மா ஆகியவற்றைக் கொண்டவர்கள் அல்லர் அவர்கள்.

சூத்திரர், வைசியர், சத்திரியர், பார்ப்பனர் என்கின்ற ரிக்வேதக் கோட்பாட்டின்படியான நான்கு வர்ணங்களில், சூத்திரர்களுக்கு அடிமைப் பாத்திரம் வழங்கப்பட்டுள்ளது. அது மற்ற மூன்று வர்ணங்களுக்குப் பணிவிடை செய்தல் என அழைக்கப்படுகிறது. மனதையோ அறிவையோ பயன்படுத்துவது அவர்களுக்கு மறுக்கப்படுகிறது. ஆன்மீக ஆன்மாவும் அவர்களுக்கு மறுக்கப்படுகிறது. ஆன்மா என்பது மனிதனுக்குள் அமைந்திருக்கும் தனி அலகு எனச் சொல்லப்படுகிறது, உடலைச் சார்ந்திராமல் இயங்கும் ஒன்றாக அது கருதப்படுகிறது.

இறுக்கமான மதக்கோட்பாட்டில் நம்பிக்கைக் கொண்டுள்ள இந்துத்துவச் சிந்தனைப் பள்ளி அதை அரசியலிலும் பயன்படுத்த விரும்புகிறது. இருந்தும் சூத்திரர், தலித், ஆதிவாசி ஆகியோரைப் பூசாரிகளாக அமர்த்த அது விரும்பவில்லை. இவ்வாறு அவர்கள் இதுநாள்வரை ஆன்மா அற்றவர்களாகவே நடத்தப்படுகிறார்கள்.

அப்படியிருக்க, ஒருங்கிணைந்த மனிதநேயம் உணவு உற்பத்திசெய்யும் உழவர்களான விளைவிப்பு மக்களிடையே ஆன்மாவை எப்படி உண்டாக்க முடியும்? அவர்கள்தாம் பெரும்பான்மை மக்களாக உள்ளனர். ஆர்.எஸ்.எஸ்ஸின் பார்ப்பனிய ஒருங்கிணைந்த மனிதநேயம் அவர்களுக்குப் புதிய விடுதலைப் பாதை எதையும் காட்டவில்லை.

கவுடில்யர் அர்த்த சாஸ்திரம், மனுவின் தர்மசாஸ்திரம், இராமாயணம், மகாபாரதம் ஆகியன சாதிகளை உறுதிப்படுத்துகின்றன. இன்றைய ஆட்சியாளர்கள் இப்புத்தகங்களைப் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் கற்றுத்தர ஊக்குவிக்கின்றார்கள்.

சாதியின்மை, உழைப்பின் கண்ணியம் ஆகியவற்றைக் கற்றுத் தர எந்தப் பாடத்திட்டமும் இல்லாத நம் கல்வி நிறுவனங்களில் எந்த வகையான ஒருங்கிணைந்த மனிதநேயம் கற்றுத் தரப்படும்? முறையாக நிறுவனமயமாக்கப்பட்டுள்ள சாதி, ஆழமாகப் பதிந்துள்ள உழைப்பின்மீதான இழிந்த பார்வை, அது ஊக்கப்படுத்தும் மனிதத் தீண்டாமை ஆகியவை பற்றிய மவுனம் எந்த மாற்றத்திற்கும் உதவாது.

ஆர். எஸ். எஸ்ஸும் பாசகவும் மாற்றத்திற்கு எதிரான அமைப்புகள் என்பதில் உறுதியான கருத்துடையவன் நான். அவ்வமைப்புகளுக்குள்ளே சூத்திரர்கள், தலித்துகள், ஆதிவாசிகள் ஆகியோரின் இன்றைய நிலைமைகளில் எந்த மாற்றமும் ஏற்படாது என்கின்றபோது ஒருங்கிணைந்த மனிதநேயம் அவற்றை மாற்றத்திற்குரிய அமைப்புகளாக எங்ஙனம் மாற்றும்?

புதிதாகப் பரப்புரை செய்யப்படுகின்ற ஒருங்கிணைந்த மனிதநேயக் கோட்பாடு இந்துத்துவப் பார்ப்பனியத்திலிருந்து எப்படி மாறுபட்டது என்பதையும், இங்கே எழுப்பப்பட்டுள்ள சில முதன்மையான சிக்கல்களுக்கு அது எப்படித் தீர்வு காணும் என்பதையும் மோகன் பகவத்தும் தாத்தரேயா கோசபல்லாவும், இராம் மாதவ்வும் நாட்டு மக்களுக்கு விளக்குவார்களேயானால் அவர்களுக்கு நாடு உண்மையாகவே நன்றியுடையதாக இருக்கும்.

(நன்றி: தி வயர், நவம்பர் 16, 2021.)

- காஞ்சா அய்லய்யா செப்பர்டு

தமிழில்: கலைவேலு