parliament 500இந்தியத் துணைக் கண்டத்தில் இன்று 130 கோடி மக்களுக்கு மேல் இருக்கிறார்கள். இவர்களுள் 80 விழுக்காட்டுப் பேர் இந்துக்கள்; 20 விழுக்காட்டுப் பேர் இசுலாமியராக, சீக்கியராக, பவுத்தராக, சமணராக, கிறித்தவர்களாக இருக்கிறார்கள்.

இந்தியருள் 80 விழுக்காடு உள்ள இந்துக்கள், 104 கோடிப் பேராக இருக்கிறார்கள். இவர்களைப் பிறப்பால் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என நான்கு பிரிவுகளாக மநுநீதி பிரிக்கிறது. இதையே இன்றைக்கு இந்துச் சட்டம் காப்பாற்றுகிறது; இந்துச் சட்டத்தை இந்திய அரசமைப்புச் சட்டம் காப்பாற்றுகிறது.

இந்தியாவில், இந்து மதம் அன்னியில், பல மதங்கள் இருக் கின்றன. இந்து மதம் தவிர்த்து, வேறு எந்த மதத்திலும் பிறவியில் உயர்ந்தவர் - தாழ்ந்தவர் இல்லை; பிறவியில் மதகுரு பிறப்பது இல்லை. இதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

படித்தவர்களும், படிக்காதவர்களும் - இந்த விவரங்களை அறியாமல் இருக்கலாம். அறியாமல் இருப்பதனால், இந்தச் சட்டம் நடைமுறையில் இல்லை என்று ஆகிவிடாது.

இந்தக் கேடான நிலைமை, விடுதலை கிடைத்து 70 ஆண்டு களுக்குப் பிறகும் இருக்கலாமா?

இந்திய அரசமைப்புச் சட்டம், விடுதலை பெற்ற இந்தியாவில் எப்படிச் செய்யப்படும் என்று காந்தியார் 1922-இல் பின்வருமாறு சொன்னார் :

“விடுதலை பெற்ற இந்தியாவில், முதலில் வயது வந்தவர்களுக்கு வாக்குரிமை தரப்படும். நாடாளுமன்றம் தேர்ந்தெடுக்கப்படும். வெளியார் தலையீடு இன்றி, இந்தியர்களுக்கான அரசமைப்புச் சட்டம் செய்யப்படும்” என்று கூறினார்.

1936-இல், பீகார் மாநிலத்தில், ஃபைஸ்பூரில் கூடிய இந்தியத் தேசிய காங்கிரசு, பின்வருமாறு தீர்மானம் நிறைவேற்றியது.

“இந்தியத் தேசியக் காங்கிரசு இந்தியா வுக்குச் சுதந்தரம் பெறவும், மக்கள் நாயக ஆட்சியை நிறுவவும் பாடுபடுகிறது. சுதந்தரம் பெற்ற பிறகு வயது வந்தோருக்கு வாக்குரிமை தந்து, அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்தைக் கொண்டு, வெளியார் தலையீடுயின்றி - தனக்கு வேண்டிய அரசமைப்புச் சட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளும்” என்று தீர்மானம் நிறைவேற்றியது.

பண்டித நேரு எழுதிய புகழ்பெற்ற, “நான் கண்ட இந்தியா” (Discovery of India) என்கிற நூலில், மேற்கண்ட செய்தியையே விதந்து பாராட்டினார். ஆனால் நடந்தது என்ன?

சுதந்தரப் பிரகடனத்தை வெள்ளையன் 1947 சூலையில்தான் அறிவித்தான்.

ஆனால், இந்தியாவில் 1946-இல் நடை பெற்ற மாகாணச் சட்டப்பேரவைகள், மத்தியச் சட்டமன்றம் ஆகியவற்றின் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதி நிதிகளைக் கொண்டு, 9.12.1946 அன்றே இந்திய அரசமைப்புச் சட்டம் எழுதத் தொடங்கி விட்டனர். இதுவே ஒரு மோசடி. ஏன்?

1946 தேர்தலில் மாகாணச் சட்டசபைக்கு வாக்குப் போட, 14 விழுக்காடு இந்தியரே வாக்குரிமை பெற்றிருந்தனர்; மத்தியச் சட்ட சபைக்கு வாக்குப் போட வாக்குரிமை 4 விழுக்காட்டுப் பேரே பெற்றிருந்தனர்.

இன்னொரு குறுக்கு வழியையும் செய்தனர்?

இந்திய அரசமைப்புச் சட்டம் எழுத, பிரதமர் பண்டித நேரு தலைமையில் தனியே ஒரு குழு அமைத்து, பி.என். ராவ் (B.N. Rau) என்கிறவரை அரசமைப்புச் சட்ட ஆலோசகராக (Constitutional Adviser) ப் பதவியில் அமர்த்தி - அவரை கனடா, அமெரிக்கா, பிரான்சு, செருமனி, இங்கிலாந்து, அயர்லாந்து முதலான நாடுகளுக்கு அனுப்பித் தங்களுக்குத் தேவை யான சட்டக் கூறுகளைத் திரட்டி, “முதலா வது இந்திய அரசமைப்புச் சட்ட வரைவு மற்றும் அட்டவணைகள்” (The first draft of the Indian Constitution and Schedules) எழுதி அச்சிட்டு, அதை, இந்திய அரசமைப்புச் சட்டத்தை எழுதத் தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களிடம் 18.10.1947-இல் அதிகாரப்பூர்வமாக அளித்தனர்.

இந்த ஆவணம், டாக்டர் அம்பேத்கரிடம் கொடுக்கப்பட்ட பிறகு, 1948-இல் டாக்டர் அம்பேத்கர் அவர்கள், நான்கு பகுதிகள் கொண்ட “இந்துச் சட்டத்திருத்த மசோதா” (Hindu Code Bill) என்பதை நாடாளுமன் றத்தில் முன்மொழிந்தார்.

இந்த நான்கு பகுதிகளில், மூன்று பகுதிகள், இந்து ஆண்கள் வாழ்விய லிலும், குடும்பச் சொத்திலும் எப்படி வாரிசு உரிமை அடைகிறார்களோ - அப்படியே இந்துப் பெண்களும் வாரிசு உரிமை அடைய வழிகாண ஏற்ற சட்டங் களை இயற்றவேண்டும் என்பதை நோக்க மாகக் கொண்டவை.

நான்காவது பகுதி, இந்திய அரச மைப்புச் சட்டம் இயற்றப்பட்ட பிறகு, எந்த எந்தச் சட்டங்கள் செல்லுபடியாக மாட்டா என்பது பற்றியது.

அதன் விவரம் பின்வருமாறு :

அ) இந்துச் சட்டம் பற்றிய மூல பாடம், விதிகள், பொருள் விளக்கம் அல்லது இந்தச் சட்டம் நடப்புக்கு வருவதற்கு முன்னால் ஏற்கெனவே நடப்பிலிருந்த - எந்தப் பழக்கச் சட்டமும் வழக்கச் சட்டமும் - இந்தச் சட்டம் நடப்புக்கு வந்த உட னேயே நீக்கப்பட்டுவிடும். இந்தச் சட்டத் தில் சொல்லப்பட்ட எந்த ஒன்றும் உடனடியாக நடப்புக்கு வந்துவிடும்.

ஆ) இந்தச் சட்டம் நடப்புக்கு வருவதற்கு முன்னால், இந்தச் சட்டத்திற்குப் பொருந்தாத தன்மையில் இதற்கு முன்னர் நடப்பிலிருந்த எந்தச் சட்டமும் உடனடியாக நீக்கப்பட்டு விடும்.

விடுதலை பெற்ற ஒரு நாட்டில், எந்த வகுப்பு மக்களும் பழக்கச் சட்டம், வழக்கச் சட்டம் என்கிற பேரால் அவற்றை நம்ப வேண்டும்; பின்பற்ற வேண்டும் என்கிற கோட்பாட்டுக்கு, எந்தச் செல்லுபடி அதிகாரத்தையும் அளிக்கக் கூடாது.

டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் இவ்வாறு தன் வாழ்நாள் முழுவதும் கனவு கண்டார். அக்கனவு நிறைவேறிற்றா என்பது பற்றி நாம் கவலையோடு சிந்திக்க வேண்டும். ஏன்?

இந்துச் சட்ட மசோதாவை 1948-இல், டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் முன்மொழிந்த உடனேயே, அரசமைப்புச் சட்டப் பேரவையின் தலைவராக விளங்கிய பாபு இராசேந்திர பிரசாத், அம்பேத்கர் பேரில் சீறிப் பாய்ந்தார். டாக்டர் அம்பேத்கரைப் பார்த்து, “நீங்கள் முன்மொழிந்துள்ள இந்த நான்காவது சட்டப் பகுதி நிறைவேற்றப்பட நான் அனுமதிக்க மாட்டேன்” என்று கூறினார்.

அத்துடன் நின்றாரா? இல்லை. பிரதமர் பண்டித நேருவிடம், “அம்பேத்கரின் இந்தப் பகுதி மசோதாவை நீங்கள் நிறைவேற்றினால், நான் அரசமைப்புச் சட்ட அவையின் தலைவர் பதவியிலிருந்து விலகி விடுவேன்” என்று கண்டிப்பான குரலில் அச்சுறுத்தினார்.

இந்துச் சட்டத் திருத்த மசோதாவின் முற்பட்ட மூன்று பகுதிகள், 1951-இலேயே நிறைவேறி விட்டன.

ஆனால், நான்காவது பகுதியாகிய வெகுமக்கள் பேரில் பிறவி இழிவைச் சுமத்தும் இந்திய அரசமைப்புச் சட்ட விதி 13(3), 372(3) மற்றும் பழைய சட்டங்களைக் காப்பாற்றும் விதி 25, விதி 395 (கடைசி விதி) இவை இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இருக்கிற வரையில் - இந்தியாவில் இந்துக்களில் நூற்றுக்குத் தொண்ணூறு பேர் சூத்திரராகப் பிறந்து, சூத்திரராக வாழ்ந்து, சூத்திரராய்ச் சாவதைத் தவிர வேறு வழியே இல்லை.

சூத்திரரும், தீண்டப்படாதாரும் ஒன்றிணைந்து, பிறவி இழிவை, அரசமைப்புச் சட்டத்திலிருந்து நீக்கிட வழி காண்போம், வாருங்கள்!

- வே.ஆனைமுத்து

Pin It