மதுரையில் உள்ள சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் பார்ப்பனிய கூத்து அரங்கேறியிருக்கிறது. கேசவ சேவா கேந்திரம் மற்றும் சிறீகிருஷ்ணா அறக்கட்டளை சார்பாக ‘பாத பூஜை’ - ‘பாரத மாதா பூஜை’ நடத்த பள்ளி நிர்வாகம் அனுமதித்துள்ளது. மாணவர் - ஆசிரியர்கள் கால்களைக் கழுவும் ‘பாத பூஜை’யும் ஆர்.எஸ்.எஸ். கொடியை கரங்களில் ஏந்தியபடி நிற்கும் ‘பாரத மாதா’ சிலை வணக்கமும் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறது.
கோவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக ‘விசுவ இந்து பரிஷத்’ முன்னணி பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பழனி அருகே மாடுகளை விற்பனைக்குக் கொண்டு சென்ற ஒரு வாகனத்தைத் தடுத்து நிறுத்திய மன்னார்குடியைச் சார்ந்த ஒரு பார்ப்பன ‘ஜீயர்’ காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார். மதவெறி சக்திகள் திரண்டு வன்முறையில் இறங்கவே பொது மக்கள் திரண்டு வன்முறைக் கும்பலை திருப்பித் தாக்கி விரட்டியடித்ததாக செய்திகள் வந்துள்ளன. பார்ப்பன ஜீயர் பாதுகாப்போடு ஊர் திரும்பி விட்டார்.
ஈஸ்டர் பண்டிகையின்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய மதவெறி கும்பல், கம்பம் நகரில் ரம்ஜான் பண்டிகையின் போது மசூதி மீதும் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். கோவை அருகே ஈழ அகதிகள் முகாமில் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர்.
மதச்சார்பின்மை மற்றும் பெரியாரிய பரப்புரைகளுக்கு காவல்துறை கெடுபிடி காட்டி அனுமதி மறுக்கும் அதே நேரத்தில் ‘சங்பரிவார்’ வன்முறையாளர்கள் சட்டங்களை கரங்களில் எடுத்துக் கொண்டு வெறியாட்டம் போடுவதை காவல்துறை கண்டு கொள்வதே இல்லை.
‘ஓ.என்.ஜி.சி.’ நிறுவனம், கதிராமங்கலம் கிராமத்தின் நீர்வளத்தை பாழாக்குவதை எதிர்த்து தொடர்ந்து போராடும் பொது மக்களை ஒடுக்கி, காவல்துறை கைது செய்து சிறையிலடைத்து வருகிறது. உரிமைக்காக களத்தில் நிற்கும் செயல்பாட்டாளர்கள் மீது ‘குண்டர் சட்டம்’ ஏவப்படுகிறது. தமிழக காவல்துறையின் அதிகாரத்தை பா.ஜ.க. பறித்துக் கொண்டுவிட்டது போலவே ஒவ்வொரு நிகழ்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்தியாவை காவிமயமாக்கி, உணவு - மொழி - பண்பாடு - கல்வி - வரிவிதிப்பு - என்று அனைத்துத் துறைகளையும் தனது அதிகாரத்தின் கீழ் படிப்படியாகக் கொண்டு வருகிறது நடுவண் பா.ஜ.க ஆட்சி. மாநிலங்களின் தனித்துவங்கள் அழிக்கப்படுகின்றன.
இந்தியாவிலேயே ‘காவிப் படை’ கால் பதிக்க முடியாத ஒரு சில மாநிலங்களில் தமிழ்நாடு முன்னணியில் நிற்கிறது. இதன் ‘தனித்துவத்தை’ படிப்படியாக அழிக்கும் முயற்சிகள் வேகமெடுத்து வருகின்றன.
சாலையில் திரியும் மாடுகளின் ‘பின்புறத்தை’ தொட்டு வணங்கி, மாட்டின் சிறுநீரை விலைக்கு வாங்கி குடிக்கும் மக்கள் நிறைந்த இந்தி பேசும் ‘பசு மாட்டு’ மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாட்டையும் இணைத்து விட்டால் பிறகு தமிழகத்தின் நிலை என்னவாகும் என்ற கேள்வியை கவலையுடன் தமிழர்கள் சிந்திக்க வேண்டுகிறோம்.
மருத்துவமனையில் இறந்தவர்களின் சடலத்தைக்கூட தோள்களில் சுமந்துகொண்டு பல மைல் தூரம் நடந்தே செல்வதும், கை ரிக்ஷாவில் வைத்து கிராமத்துக்குக் கொண்டு செல்வதுமான கோரமான நிகழ்வுகள் - இந்தி பேசும் மாநிலங்களிலிருந்து தான் ஒவ்வொரு நாளும் வந்து கொண்டிருக்கின்றன.
தலித் மக்கள் தன்னை சந்திப்பதற்கு முன்பு சோப்பு போட்டு குளித்து விட்டு வரவேண்டும் என்று அரசு செலவில் சோப்புவையும் ‘ஷாம்பு’வையும் வழங்குகிறார், உ.பி. முதல்வராக இருக்கும் ‘காவிச் சாமியார்’ ஆதித்யநாத்.
கோவா மாநிலத்தில் பல்வேறு சங்பரிவார் அமைப்புகள் இணைந்து ‘இந்து ராஷ்டிர’ மாநாடு ஒன்றை நடத்தி முடித்துள்ளன. 2023ஆம் ஆண்டுக்குள் இந்தியா ‘இந்து ராஷ்டிரமாகும்’ என்று மாநாடு அறிவித்திருக்கிறது. மாட்டுக்கறி சாப்பிடுவோரை அரசுகள் பொதுவிடத்தில் வைத்து தூக்கிலிட வேண்டும் என்று சாத்வி சரஸ்வதி என்பவர் அந்த மாநாட்டில் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
அயோத்தியில் ‘இராமன்’ கோயிலைக் கட்டுவதற்கு செங்கல்லை இறக்கி வருகிறார்கள். நாடு முழுதும் ‘இராம ராஜ்யம்’ என்ற பார்ப்பன ராஜ்யத்தை அமைப்பதே இவர்கள் திட்டம்.
இந்த மதவெறி சூழலில் தமிழ் நாட்டின் தனித்துவத்தை நாம் காப்பாற்றியாக வேண்டும். தமிழ்நாட்டில் காலூன்ற துடிக்கும் காவி வன்முறை சக்திகளின் சூழ்ச்சி வலைகளில் சிக்கிடாமல் மக்களை சிந்திக்கச் செய்ய வேண்டிய கடமையும் பொறுப்பும் ஒவ்வொரு உண்மைத் தமிழருக்கும் உணர்வாளர்களுக்கும் இருக்கிறது என்பதை கவலையுடன் சுட்டிக் காட்டுகிறோம்.