கீற்றில் தேட...

சமூகநீதி-சமத்துவ பரப்புரைப் பயணம்

கழக தலைமைக் குழுவின் முடிவுகள்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழுக் கூட்டம் 2017 ஜூலை 10ஆம் தேதி காலை சென்னை கழகத் தலைமை நிலையத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் கூடியது. காலை 10.30 மணிக்கு தொடங்கிய கூட்டம், மாலை 7 மணி வரை நீடித்தது.

தமிழ்நாட்டில் குறுக்கு வழியில் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி காலூன்ற துடிக்கும் பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். மதவாத சக்திகளின் ஆபத்துகளை முறியடிப்பது குறித்தும் தமிழ்நாட்டு மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்கும் பரப்புரை இயக்கங்களை முன்னெடுப் பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. குறிப்பாக இந்தியாவிலேயே தமிழ்நாடு மதக்கலவரங்கள் இல்லாத சமூகநீதி கோட்பாடுகளைப் பின்பற்றி ஏனைய மாநிலங் களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்து வருவதை சீர்குலைக்கும் சதிகள் திட்டமிட்டு நடத்தப்பட்டு வருவதை கவலையுடன் தலைமைக்குழு பரிசீலித்தது.

குறிப்பாக கல்வித் துறையில் மோடியின் குறுக்கீடு, தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் உயர்கல்விக்கு உருவாக்கி வரும் தடைகள், நீட் தேர்வால் தமிழகத்துக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு; இந்தி, சமஸ்கிருதத் திணிப்பு; மாடுகளை சந்தைகளில் விற்பதற்குக் கொண்டு வரப்பட்ட கெடுபிடிகளால், மாட்டு வர்த்தகர்கள், தோல் ஏற்றுமதி, தோல் தொடர்பான தொழில் களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி, ஜாதி அமைப்புகளை ஊக்குவித்து அதன் வழியாக பா.ஜ.க. ஆதரவு சக்திகளை வளர்க்கும் சூழ்ச்சித் திட்டங்கள்; இந்தியாவை ஒற்றைப் பண்பாடு; ஒற்றை ஆட்சியாக மாற்றி, ஒவ்வொரு தேசிய இனங்களின் அடையாளம், மாநிலங்களின் தனித்துவத்தை அழிக்கும் முயற்சிகள் குறித்து விரிவாக விவாதித்தது.

‘பெரியார் எதிர்ப்பு’ திராவிடர் கருத்தாக்க எதிர்ப்பு என்ற கருத்துகளுக்கு முன்னுரிமை தந்து செயல்படும் அமைப்புகள், பா.ஜ.க.வின் ஒற்றைப் பண்பாட்டுத் திணிப்பை எதிர்ப்பதில் முனைப்புக் காட்டாமல், பெரியார் எதிர்ப்பை முன்னிறுத்துவது மதவாத சக்திகளுக்கு மறைமுகமான ஆதரவுத் தளத்தை உருவாக்குவதற்கே பயன்படுவதையும் தலைமைக் குழு கவலையுடன் பரிசீலித்தது.

ஜாதி ஆணவப் படுகொலை எதிர்ப்பு - ஜாதி ஒழிப்பு இயக்கங்களை தொடர்ச்சியாக பெரியார் - அம்பேத்கர் வழியில் முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத் திட்டங்கள் குறித்தும் விரிவாக தலைமைக் குழு விவாதித்தது. பெரியார் - அம்பேத்கர் என்ற

இரு பெரும் தலைவர்களும் வெவ்வேறு கருத்துடையவர்கள் என்று கூறிக் கொண்டு, இந்தத் தலைவர்களின் கருத்தியல்களுக்கிடையே முரண்பாடுகளைத் திணிக்கும் சில ‘ஆய்வாளர்கள்’ எழுதும் கட்டுரைகள் சமூகத்தில் பிற்போக்கு - ஜாதிய - மதவாத சக்திகளுக்கே பயன்படுவதை கவனத்தில் கொண்டு பெரியார், அம்பேத்கர் வலியுறுத்திய ஜாதி ஒழிப்பு - சமூக ஒடுக்குமுறை பார்ப்பன மதவாத எதிர்ப்பு கருத்துகளை அந்த இருபெரும் தலைவர்களை இணைத்து மக்களிடையே கொண்டு செல்வதில் தீவிரமாக செயல்படவேண்டும் என்றும் தலைமைக் குழு முடிவு செய்தது.

கழகத்தில் ஏராளமான இளைஞர்கள் இணைந்து செயல்படுவதற்கு முன்வரும் நிலையில் இந்த இளைஞர் சக்தியை ஒரு முனைப்படுத்தி இயக்கப் பணிகளை தீவிரமாக முன்னெப்பதற்கு கழகக் கட்டமைப்புகளை மேலும் வலிமைப்படுத்துவது குறித்தும் இயக்கப் பணிகளில் தீவிரம் காட்டி செயல் படாத கழக அமைப்புகளில் பொறுப்பாளர்கள் மாற்றம் பற்றியும் தன் முனைப்பின்றி சமுதாய நலனை முன்னிறுத்தி இயக்கச் செயல்பாடுகளை தீவிரப்படுத்துவதற்கான பயிற்சிகள் மற்றும் பிரச்சினைகளை அணுகும் கண்ணோட்டம்; தோழமை அமைப்புகளிடம் உறவுகளை மேம் படுத்துதல்; கழகம் அறிவிக்கும் செயல்திட்டங்களை  நிறைவேற்ற வேண்டிய இயக்கப் பொறுப்புகள் குறித்து செயல்பாட்டாளர்களுக்கு பயிற்சிகளை நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

கழக செயல்பாடுகளை விளக்கி தலைமைக் கழகத்துக்கு அறிக்கை அனுப்புதல்; கழக ஏடுகளுக்கு சந்தா சேர்த்தல் குறித்தும் தோழர்கள் கவனம் செலுத்தி செயல்பட வேண்டும் என்ற கருத்துகளும் முன் வைக்கப்பட்டன.

திராவிடர் விடுதலைக் கழகம் 2012 ஆகஸ்டு 12ஆம் நாள் தொடங்கப்பட்டது. அதையொட்டி கடந்த ஆண்டு ‘நம்புங்க அறிவியலை; நம்பாதீங்க சாமியார்களை’ என்ற தலைப்பில் தமிழகம் முழுதும் பரப்புரை இயக்கங்களை நடத்தி, ஆகஸ்ட் 12ஆம் தேதி ஆத்தூரில் பயண நிறைவு விழா மாநாடு போல் நடத்தப்பட்டது.

அதேபோல இவ்வாண்டு ஜூலை 8ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதி வரை பரப்புரைப் பயணம் நடத்த முடிவெடுக்கப்பட்டு அதற்கான பயணத் திட்டங்களும் வடிவமைக்கப்பட்டன.

“இழந்து வரும் உரிமைகளை மீட்போம்; தமிழகத்தின் தனித்தன்மை காப்போம்” என்ற முழக்கத்தை முன் வைத்து, “சமூக நீதி - சமத்துவ பரப்புரைப் பயணம்” என்ற தலைப்பில் பயணம் தொடங்க முடிவு செய்யப்பட்டது.

மேட்டூர், கோவை, மதுரை, சென்னை, மயிலாடுதுறை ஆகிய ஐந்து ஊர்களிலிருந்து பரப்புரைக் குழு ஆகஸ்டு 8ஆம் தேதி புறப்படும், ஆகஸ்டு 12இல் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பயணம் நிறைவடைகிறது. திருச்செங்கோட்டில் நிறைவு விழா நிகழ்வு நடைபெறுகிறது. (பயணத் திட்டங்கள், பொறுப்பாளர்கள் பெயர்கள் தனியே வெளியிடப்பட்டுள்ளது)

அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பரப்புரை செயலாளர் பால் பிரபாகரன், அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவகாமி, தலைமைக் கழக செயலாளர் தபசி குமரன், இரா. உமாபதி, அன்பு தனசேகர், கொளத்தூர் குமார், ந. அய்யனார், மயிலாடுதுறை இளையராஜா உள்ளிட்ட தலைமைக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

பரப்புரைக் குழுக்கள் - பயணத் திட்டம்

கோவை :

8.8.2017 - கோவை, சூலூர், பல்லடம், திருப்பூர் (தங்கல்)

9.8.2017 - குன்னத்தூர், கெட்டிசெவியூர், கொளப்பலூர், கோபி (தங்கல்)

10.8.2017 - அத்தாணி, அந்தியூர், ஆப்பக்கூடல், பவானி (தங்கல்)

11.8.2017 - கவுந்தபாடி, காஞ்சிக்கோயில், திங்களூர், பெருந்துறை (தங்கல்)

12.8.2017 - வெள்ளோடு, மொடக்குறிச்சி, கொக்கராயன்பேட்டை, திருச்செங்கோடு (நிறைவு)

ஒருங்கிணைப்பாளர்கள் : பன்னீர்செல்வம் (சூலூர்),  நிர்மல்குமார் (கோவை)

மேட்டூர் :

8.8.2017 - மேட்டூர் தொடக்கம் : மேச்சேரி, தர்மபுரி, காவேரிப்பட்டிணம் (தங்கல்)

9.8.2017 - கிருட்டிணகிரி : பர்கூர், ஊத்தங்கரை(தங்கல்)

10.8.2017 - அரூர், வாழப்பாடி, சேலம் (தங்கல்)

11.8.2017 - ஓமலூர், தாரமங்கலம், சின்னப்பம்பட்டி, இளம்பிள்ளை (தங்கல்)

12.8.2017 - ஆட்டையாம்பட்டி, மல்லசமுத்திரம், திருச்செங்கோடு (நிறைவு)

ஒருங்கிணைப்பாளர்கள் : சி.கோவிந்தராசு (மேட்டூர்), கிருட்டிணன் (நங்கவள்ளி)

மயிலாடுதுறை :

8.8.2017 - மயிலாடுதுறை, குத்தாலம், ஆடுதுறை, திருவிடைமருதூர், கும்பகோணம்  (தங்கல்)

9.8.2017 - நாச்சியார்கோயில், வலங்கைமான், நீடாமங்கலம், மன்னார்குடி(தங்கல்)

10.8.2017 - மதுக்கூர், பட்டுக்கோட்டை, பாப்பாநாடு, தஞ்சாவூர் (தங்கல்)

11.8.2017 - வல்லம், செங்கிப்பட்டி, திருவெறும்பூர், காட்டூர், திருச்சி (தங்கல்)

12.8.2017 - முசிறி, தொட்டியம், நாமக்கல்,  திருச்செங்கோடு (நிறைவு)

ஒருங்கிணைப்பாளர்கள் : இளையராசா (மயிலாடுதுறை),  மகேஷ் (மயிலாடுதுறை)

சென்னை :

6.8.2017 - பல்லாவரம், பொழிச்சலூர், அனகாபுத்தூர், குன்றத்தூர் (தங்கல்)

7.8.2017 - தாம்பரம், கூடுவாஞ்சேரி, சிங்கபெருமாள்கோயில், செங்கற்பட்டு (தங்கல்)

8.8.2017 - மதுராந்தகம், சித்தாமூர், மரக்காணம், திண்டிவனம் (தங்கல்)

9.8.2017 - கூட்டேரிப்பட்டு, விக்கிரவாண்டி, விழுப்புரம், அரசூர் (தங்கல்)

10.8.2017 - திருவெண்ணெய்நல்லூர், திருக்கோவிலூர், பகண்டைகூட்ரோடு, சங்கராபுரம் (தங்கல்)

11.8.2017 - மூரார்பாளையம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம், ஆத்தூர்  (தங்கல்)

12.8.2017 - மங்களபுரம், இராசிபுரம், திருச்செங்கோடு (நிறைவு)

ஒருங்கிணைப்பாளர்கள் : இரா. உமாபதி (சென்னை),  ந. அய்யனார் (விழுப்புரம்)

மதுரை :

8.8.2017 - மதுரை

9.8.2017 - சிவகங்கை, காளையார்கோயில், காரைக்குடி (தங்கல்)

10.8.2017 - நத்தம், மணப்பாறை, குளித்தலை (தங்கல்)

11.8.2017 - மாயனூர், புலியூர், கரூர் (தங்கல்)

12.8.2017 - வேலாயுதம்பாளையம், வேலூர், பரமத்தி, திருச்செங்கோடு (நிறைவு)

ஒருங்கிணைப்பாளர்கள் : வேணுகோபால் (பவானி),  சிவக்குமார் (ஈரோடு)

- தலைமைக் கழகம்