நிர்வாகத்தை மேம்படுத்தவும், புதிய திறமைசாலிகளை முக்கியப் பதவிகளில் புகுத்தவும் பல்வேறு ஒன்றிய அமைச்சகங்களில் இணைச் செயலர், இயக்குநர், துணைச் செயலர் பதவிகளுக்கு 45 நிபுணர்களை நியமிப்பதாக பா.ஜ.க அரசு அறிவித்துள்ளது. இந்த முயற்சி புதிய முன்னோக்குகளையும் சிறப்பு நிபுணத்துவத்தையும் அரசாங்கத்தில் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
ஆனால் இதில் பிற்படுத்தப் பட்டோருக்கும், பட்டியல் ஜாதியினருக்கும், பழங்குடியினருக்கும் இடஒதுக்கீடு அறிவிக்கப் படவில்லை. இடஒதுக்கீட்டை ஒழிக்க ஒருபுறம் தொடர் முயற்சி எடுத்து வந்தாலும், அதுவரையிலும் இடஒதுக்கீட்டை எப்படியெல்லாம் தவிர்க்க முடியுமோ அப்படியெல்லாம் தவிர்த்து வருகிறார்கள்.
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) 10 இணைச் செயலாளர் பதவிகள் மற்றும் 35 இயக்குநர்/துணைச் செயலாளர் பதவிகள் அனைத்தும் ஒப்பந்த அடிப்படையில் பக்கவாட்டு நுழைவு (lateral entry) மூலம் நிரப்பப்படும் என்று விளம்பரம் செய்துள்ளது. இவ்விளம்பரம் தனியார் துறை நிபுணர்களை அரசாங்கப் பணிகளில் இணைத்துக் கொள்ளும் நடைமுறையின் தொடர்ச்சியாகும். இந்த நேரடிப் பணி நியமனங்கள் 2018 ஆம் ஆண்டு முதல் நடந்து வருகிறது.
உள்துறை, நிதி மற்றும் எஃகு அமைச்சகங்களில் இணைச் செயலாளர்கள், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு போன்ற அமைச்சகங்களில் இயக்குநர்/துணைச் செயலாளர் பதவிகள் இந்த நேரடி நியமனங்கள் மூலம் நிரப்பப்பட இருக்கின்றன.
தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் (என்டிஎம்ஏ) இணைச் செயலாளர் (கொள்கை மற்றும் திட்டம்), இணைச் செயலாளர் (வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள்) மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இணைச் செயலாளர் (செமிகண்டக்டர்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்) போன்ற பதவிகளை நிரப்ப முயல்கிறது. நிதி அமைச்சகம் மற்றும் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் உள்ளிட்ட மற்ற அமைச்சகங்களிலும் அய்.ஏ.எஸ்களுக்குப் பதிலாக தனியார் துறையிலிருந்து ஆட்கள் நிரப்பப்பட இருக்கிறார்கள்.
35 இயக்குநர்/துணைச் செயலாளர் பதவிகளில், எட்டு பேர் விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத் துறையிலும், ஜல் சக்தி அமைச்சகம் மற்றும் சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்திலும் கூடுதல் பதவிகளுடன் நிரப்பப்பட இருக்கிறார்கள்.
இந்நியமனங்கள், இந்த அமைச்சகங்களுக்குள் கொள்கை உருவாக்கம் மற்றும் நிர்வாகச் செயல்பாடுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
தற்போது, இந்த முறையில் 63 நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன, 35 பேர் தனியார் துறையிலிருந்து வந்தவர்கள். தற்போது இத்திட்டத்தின் கீழ் பல்வேறு அமைச்சகங்களில் 57 அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.
ஒன்றிய அரசின் 'அமைச்சகங்களில் உயர் பதவிகளில் நேரடியாக பார்ப்பனர்களை, ஆர்.எஸ்.எஸ் காரர்களைப் பணியமர்த்தும் முயற்சி ஒருபுறம் என்றால், அரசுப் பணியாளர்கள் ஆர்.எஸ்.எஸ் இல் சேர்வதற்கான தடை நீக்கப்பட்டது இன்னொரு புறம்.
இனி அரசு வேறு ஆர்எஸ்எஸ் வேறு என்கின்ற கருத்துக்கு இடமில்லாமல் எல்லாம் ஒன்றே என்கின்ற இலக்கை நோக்கி இந்தியா பயணித்துக் கொண்டிருக்கிறது.
அரசு வேலைகளில் இருப்போரை ஆர். எஸ்.எஸ் இல் சேர்க்கவும், ஆர்.எஸ்.எஸ் இல் இருப்பவர்களை அரசு வேலைகளில் சேர்க்கவும் முனைப்புடன் செயல்பட்டுவருகிறது ஒன்றிய பாஜக அரசு.
ஆட்சியில் இருப்பவர்கள் மாறலாம், கட்சிகள் மாறலாம். ஆனால் அரசு இயந்திரம் எப்போதும் பார்ப்பனர்கள் கையிலேயே இருக்க வேண்டும் என்பதற்காகச் செய்யப்படும் சூழ்ச்சிகளே இந்த நேரடி நியமனங்கள்.
இந்தியாவில் இருக்கும் இதரப் பிற்படுத்தப் பட்டோரும், பட்டியல் ஜாதியினரும், பழங்குடியினரும், பெண்களும், சிறுபான்மையினரும் பார்ப்பனர்களின் இச்சூழ்ச்சிகளை விளங்கிக் கொள்ள வேண்டும். ஒன்றியத்தில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், மண்டல் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தி, தன் பதவியை இழந்து சமூக நீதி காத்திட்ட துணிச்சல்மிகு பிரதமர் வி.பி.சிங் போன்ற பிரதமர் கிடைத்தால்தான் இச்சூழ்ச்சிகளை நாம் முறியடிக்க முடியும்.
* நாட்டில் அனைத்துத் தரப்பில் இருந்தும் ஏற்பட்ட எதிர்ப்பினால் இப்போதைக்கு இந்தத் திட்டத்தை ரத்து செய்வதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது என்பது இப்போது கிடைத்துள்ள செய்தி.
- மா.உதயகுமார்