சமூகநீதி – சமத்துவத்துக்கு முதற்பெரும் தடை பார்ப்பனிய சமூகக் கட்டமைப்பு என்று பெரியார் அடையாளப்படுத்தினார். வரலாற்றுப் போக்கு இதை உறுதிப் படுத்துகிறது. பிரச்சனைகளின் வடிவங்கள் வெவ்வேறாக இருந்தாலும் மய்யம் பார்ப்பனியம் × திராவிடம்; மனுநீதி × சமூகநீதியாகவே சுழன்று கொண்டிருக்கிறது. இந்தப் பார்வையில் கடந்த ஆண்டின் நிகழ்வுகள் சிலவற்றின் தொகுப்பு.
- அயோத்தி இராமன் கோயில் தேர்தலுக்கு முன்பு கட்டுமானப் பணிகள் முடிவதற்கு முன்பே அவசர அவசரமாக ஒன்றிய ஆட்சி திறந்தது. (ஜன 5) மோடி கோயிலுக்குள் இராமன் சிலையைத் தூக்கிச் சென்று கர்ப்பகிரகத்தில் நிலைநாட்டுவார் என்று அறிவிக்கப்பட்டது. பிரதமராக இருந்தாலும் ‘பிறப்பால்’ சூத்திரர்; பூரி பார்ப்பன சங்கராச்சாரி நித்தியானந்த சரஸ்வதி, மோடிக்கு அந்தத் தகுதி இல்லை; இது சாஸ்திரத்துக்கு எதிரானது என்று நிகழ்ச்சியைப் புறக்கணித்தனர். கோயில் திறப்புக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஆங்கில ஊடகத்துக்கு அளித்தப் பேட்டியில் வர்ணாஸ்ரமமே சனாதனம், அதை மீற பிரதமராக இருந்தாலும் அனுமதிக்க முடியாது என்று பேட்டியளித்தார். பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அழைக்கப்படவேயில்லை.
- குஜராத் கலவரத்தின் போது பில்கிஸ் பானு என்ற இஸ்லாமிய கர்ப்பிணிப் பெண்ணைச் சிசுவோடு எரித்தனர் சங்கிகள். அவரது குடும்ப உறுப்பினர்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர். 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. முறைகேடாக குறுக்கு வழியில் தண்டனை குறைப்பு செய்து அவர்களை விடுதலை செய்தது குஜராத் நீதிமன்றம். குற்றவாளிகளை மாலை அணிவித்து வரவேற்றனர் பா.ஜ.க.வினர். இவர்கள் பிராமணர்கள், குற்றம் செய்யமாட்டார்கள் என்றார் ஒரு பா.ஜ.க. அமைச்சர். உச்சநீதிமன்றம் தலையிட்டு விடுதலையை ரத்து செய்து மீண்டும் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.
- அரசுப்பள்ளிகளில் கடவுள் வாழ்த்து – சரசுவதி துதிப் பாடல்கள் பாடப்பட்டு வந்த நிலையில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை “சமூகநீதி”ப் பாடலோடு பள்ளிகள் தொடங்க வேண்டும் என்று ஆணையிட்டது. உதயநிதி ஸ்டாலின் இதற்கு முன் முயற்சி எடுத்தார்.
- கோயில்களை அரசுக் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து தனியாரிடம் வழங்க வேண்டும் என்பது பார்ப்பனர்களின் நீண்டகாலப் போராட்டம். நீதிக்கட்சியில் பனகல் அரசர், அறநிலையத்துறை வாரியம் கொண்டு வருவதற்கு முன்பு கோயில்கள் பார்ப்பனர்கள், நிலவுடமையாளர்களின் கொள்ளைக் கூடாரமாக இருந்ததை, சர்.சி.பி.ராமசாமி அய்யர் முதல் பல்வேறு விசாரணை ஆணையங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இந்தப் பின்னணியில் கோயில்களை அறநிலையத்துறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று பச்சையாக சட்டத்துக்கு விரோதமானக் கருத்தை உயர்நீதிமன்றப் பார்ப்பன நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் கருத்தரங்கு ஒன்றில் பேசினார். மூத்த வழக்கறிஞர் துரைசாமி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு கடிதம் எழுதி பதவிநீக்கம் செய்யக் கோரினார். தொடர்ந்து நீதிபதிகள் அரசியல் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்று சந்திரசூட் பேசினார்.
மற்றொரு பார்ப்பன உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீ மதி, இந்துக் கோயில்களில் பிற மதத்தினரை அனுமதிக்கக் கூடாது என்று தீர்ப்பளித்தார். பழனி முருகன் கோயில் கொடி மரத்தில் இதை அறிவிப்பாக எழுத வேண்டும் என்று தீர்ப்பளித்தார். உண்மையில் பழனி முருகன் கோயில், அங்கே கொடிமரம் இல்லை. அதில் எப்படி எழுத முடியும் என்று ஆன்மீகவாதி சுகி.சிவம் கேட்டார். ‘இந்து’ என்றால் யார் என்ற கேள்வியை முன்னாள் நீதிபதி சந்துரு எழுப்பினார்.
- பார்ப்பன பயங்கர வாதத்துக்கு பலியானவர், பகுத்தறிவாளர் தபோல்கர். அவரை மகாராஷ்டிராவில் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். பத்து ஆண்டுகளுக்கு மேல் வழக்கு நடந்தது. மூளையாக செயல்பட்டவரை விடுவித்துவிட்டு அவருக்குக் கருவியாக செயல்பட்ட இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது பம்பாய் சிறப்பு நீதிமன்றம். பூனே காவல்துறையும், சி.பி.அய்.யும் மூளையாக செயல்பட்டவரை காப்பாற்றவே முயற்சித்தது. உரிய ஆவணங்களை மறைத்தது என்று நீதிபதியே தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.
டிசம்பர் திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் “அர்த்த மண்டபத்தில்” இசைஞானி இளையராஜாவை அனுமதிக்க ஜீயர்கள் மறுத்தனர். இந்தத் தீண்டாமையை எதிர்த்து கடும் விவாதங்கள் நடந்தன. பார்ப்பனிய ஆதிக்கம் மேலும் வெளிச்சத்துக்கு வந்தது.
- பார்ப்பனர்கள் சென்னையில் தங்களுக்கு தனிப் பாதுகாப்புச் சட்டம் வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினார்கள். அர்ஜுன் சம்பத் என்ற ஒரு ‘கோடாரிக் காம்பு’வைத் தலைமை தாங்க வைத்தனர் பார்ப்பனர்கள். ஜாதிவெறியுடன் பேசினார்கள். கஸ்தூரி என்ற பார்ப்பன நடிகை கலைஞர் குடும்பத்தைத் தெலுங்கு மொழிக் குடும்பமாக சித்தரித்து அந்தப்புரச் சேவை செய்ய வந்தவர்கள் என்று சாக்கடை மொழியில் பேசினார். பேசிய பிறகு ஆந்திராவுக்கு ஓடி தலைமறைவானார். போலீசார் தேடிப்பிடித்து கைது செய்தனர். நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் துணைவியார் அவருக்குப் பிணை வழங்க வேண்டும் என்று அறிக்கைவிட்டார். நீதிபதிகள் குடும்ப உறுப்பினர்கள் வழியாக தங்கள் கருத்தைத் தெரிவிக்கும் அதிசயம் முதன்முதலாக தமிழ்நாட்டில் நடந்தது.
- சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்குப் பார்ப்பன சக்திகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. உச்சநீதிமன்றத்திலும், பல மாநிலத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன. ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், உதயநிதி அழிந்து போவார் என்று சாபமிட்டார். ஆந்திரக் கோயில் வாயில் உதயநிதியின் படத்தை அச்சடித்து அதை காலால் மிதித்து உதயநிதியை அவமதித்தனர்.
பார்ப்பனியத்தின் அதிகாரத்தை இந்நிகழ்வுகள் வெளிப்படுத்தின.சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியான அனிதா சுமந்த் எனும் பார்ப்பனர் உதயநிதி பேச்சு சட்ட விரோதமானது என்றார். சனாதனத்தை நியாயப்படுத்துவதற்கு ஆதாரங்களைத் தேடி தீர்ப்பில் பதிவு செய்தார். இணையதளத்தில் தனது தீர்ப்பை பதிவேற்றியவுடன் (மார்ச் 9) அடுத்த இரண்டு நாட்களிலேயே தீர்ப்பில் திருத்தங்கள் செய்து வெளியிட்டார். (மார்ச் 10) தீர்ப்பைத் திருத்த வேண்டுமானால் மீண்டும் நீதிமன்ற நடவடிக்கை வழியாகவே செயல்படுத்த வேண்டும் என்ற சட்டத்தை மீறி செயல்பட்டார். பார்ப்பனியத்தின் முறைகேடுகளை மக்கள் மன்றம் புரிந்து கொண்டது.
- நாடாளுமன்றத்தில் புரட்சியாளர் அம்பேத்கரை உள்துறை அமைச்சர் அமித்ஷா அவமதித்தார். அந்தப் பெயரை உச்சரிப்பதே ஃபேஷன் ஆகிவிட்டது என்றும் அதற்குப் பதிலாக கடவுள் பெயரை கூறினால் மோட்சம் போகலாம் என்றும் பேசினார். அமித்ஷாவுக்கு எதிர்வினையாக மோட்சத்துக்கு எதிராகவும், கடவுள் மற்றும் பார்ப்பனியத்துக்கு எதிராகவும் கருத்துகள் வெடித்துக் கிளம்பின.
- புதிய நாடாளுமன்றத்தின் திறப்பு விழா வேத வைதீக மரபுப்படி நடத்தப்பட்டது. தீட்டாகிவிடும் என்று நாடளுமன்றத்தின் சட்டப்பூர்வ தலைவரான குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒரு பழங்குடி சமூகத்தை சார்ந்தவர் என்பதால் புறக்கணிக்கப்பட்டார். இதற்கு எதிர்வினையாக பார்ப்பனிய எதிர்ப்புக் கருத்தியல் ஊடகங்களில் விவாதிக்கப்பட்டன.
சிறைக்குள் பார்ப்பனர்கள்
1. மகா விஷ்ணு (சூத்திர) என்ற மதப் பிரச்சாரகர் சைதை அரசுப் பள்ளியில் மாணவர்களிடம் “ஊனமாகப் பிறப்பவர்கள் முன் ஜென்ம பாவம்” என்று பேசியது சர்ச்சையானது. மகா விஷ்ணு கைது செய்யப்பட்டார்.
2. பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று பேசிய எச்.ராஜா என்ற சங்கி பார்ப்பனருக்கு நீதிமன்றம் 6 மாதம் தண்டனை விதித்தது. ‘குற்றவாளியாக’ ஜாமீனில் வெளிவந்து மேல் முறையீடு செய்துள்ளார்.
3. திருவரங்கம் வேத பண்டிதர் ரெங்கராஜ நரசிம்மன், ஜீயர்கள், உதயநிதிப் பற்றி யூடியூப்பில் அவதூறு பரப்புரை செய்தார். கைது செய்யப்பட்டு பின்னர் நிபந்தனை பிணையில் வெளியே வந்துள்ளார்.
4. பெண் செய்தியாளர்களை ஆபாசமாக பதிவிட்ட எஸ்.வி.சேகர், ஒரு மாத சிறை தண்டனைக்குள்ளாகி மேல் முறையீடு செய்துள்ளார்.
40க்கு 40
தமிழ்நாட்டில் 40 நாடாளுமன்ற தொகுதிகளில் தி.மு.க. அணி வெற்றி வாகை சூடியது. பா.ஜ.க.வின் 400 எண்ணிக்கைக் கனவைத் தகர்த்து 240 என்ற எல்லையில் நிறுத்திய பெருமை தமிழ்நாடு வாக்காளருக்கு உண்டு.
ராகுலின் ‘பெரியார்’ குரல்!
ராகுல் ‘மனுசாஸ்திரத்துக்கு’ எதிராக வெளிப்படையாகவே பேசினார். பெரியார் இயக்கத்தின் குரலாகவே அது ஒலித்தது. இந்தியாவை ஆட்சி செய்வது டெல்லி அல்ல; ஆர்.எஸ்.எஸ். தலைநகர் நாக்பூர் என்றார். இட ஒதுக்கீட்டின் 50 சதவீத உச்சவரம்பை நீக்க வேண்டும் என்றார். உயர் பதவிகளில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் பங்கு என்ன? என்று ஊடகவியலாளர்களிடம் கேட்டார். நாட்டின் முதல் 200 தொழில் நிறுவனங்களில் ஒரு பிற்படுத்தப்பட்டவரோ, தாழ்த்தப்பட்டவரோ, உரிமையாளர்களாக இருக்கிறார்களா? என்று கேட்டார். (பிப் 18)
நாடாளுமன்றத்தில் பேசுகையில் அரசியல் சட்டத்தையும், மறு கையில் மனு சாஸ்திரத்தையும் ஏந்திக்காட்டி அரசியல் சட்டத்தைப் பின்னுக்குத் தள்ளி மனுசாஸ்திரம் ஆட்சி செய்கிறது என்று முழக்கமிட்டார். ராகுல். ஏகலைவன் கட்டைவிரலைத் துரோணாச்சாரியார் கேட்டதைப் போல ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை நசுக்குகிறது பா.ஜ.க. ஆட்சி என்று பெரியார் குரலை ஒலித்தார். (டிசம்பர் 14)
‘தகுதி திறமை’ பேசுவது மோசடி என்ற பெரியாரின் கருத்தை ராகுல் எதிரொலித்தார். தேர்வு முறையை யார் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்களோ அவர்களே தகுதியைத் தீர்மானிக்கிறார்கள் என்று நச்சென்று கூறினார்.
- விடுதலை இராசேந்திரன்