இளைய தலைமுறை பெரியாரியலை எப்படி புரிந்து கொள்ள வேண்டும்? (1)

பார்ப்பனியம் என்ற அரசியல் சமூகக் கோட்பாட்டை தகர்க்க பெருந்திரளான மக்களிடம் படிந்து நிற்கும் உளவியலுக்கு எதிரான கருத்தியலைக் கட்டமைக்க வேண்டும் என்று பெரியார் சரியாக சிந்தித்தார்.

புராணப் புரட்டு - பனிப் போரின் பெருமைகளை மக்கள் மொழியில் போட்டுடைத்ததன் விளைவாக பார்ப்பனியம் தனக்காக நிலைநிறுத்திக் கொண்ட உயர்தனிப் பெருமைகள் சிதையத் தொடங்கின.

periyar 28மானுடச் சமூகப் பரிணாமத்தில், ‘அடிமைச் சமூகம்’ (Slavery) என்ற பண்புக்கூறு உலகம் முழுவதும் தோன்றிய ஒரு ‘உழைப்புச் சுரண்டல்’ ஏற்பாடு. அது ஒரு விதத்தில் உழைப்பிலிருந்து ஒரு சிறு மக்கள் திரளை விலக்கி அமர வைத்ததிலேயே, மனித சமூகம் கலை இலக்கிய உருவாக்கம் நோக்கி நகர முடிந்தது. ஆனால், உலக நிலப் பரப்பெங்கும் இந்த அடிமை சமூக முறையில்; உழைப்பைச் சுரண்டி பயன்படுத்தும், அனுபவிக்கும் சமூகப் படிநிலைகளில் மாற்றங்கள், ஏற்றத் தாழ்வுக் கட்டமைப்புத் திருப்பங்கள் என்பவை வரலாறு நெடுகிலும் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன.

இந்த வகையில், ஒரு எளிய புரிதலிலே; இந்திய நிலப்பரப்பின் வர்ணாசிரமம் என்ற அநீதியின் வகைப்பாடு என்பது நிரந்தரமாக உழைக்கும், அடிமைத் தொழிலாளர்களை போதுமான அளவில் எப்பொழுதும் குறைவின்றி அதே நிலையில் வைத்திருக்கும் ஒரு சமூக ஏற்பாடு என்பது புரியும். இந்த ஏற்பாட்டின் பயனாளிகள், சந்தேகமே இல்லாமல் இந்த அடுக்கின் மேல் அமர்ந்திருப்பவர்கள் தான். இந்தச் சுரண்டல் அடுக்கடுக்காக பகிரப்பட்டு உச்சத்தில் முழுமையாக உட்கொள்ளப் படுகிறது. அடிமைச் சமூக வகைப்பாட்டு முறையில் இது ஓர் இயல்நிலைதான். ஆனால் இங்கு எது, இந்திய வர்ணாசிரம சமூக அமைப்பை மிகக் கொடூரமான தாக்குகிறதென்றால்; இந்த சுரண்டலடுக்கின் மேலிருந்து கீழான படிநிலைகள்; சில நூற்றாண்டுகளல்ல, சில ஆயிரமாண்டுகள் எந்தவொரு சிறு அசைவுமின்றி இன்று வரையில் அப்படியே அசைக்கப்பட முடியாமல் தொடர்வது தான்.

இல்லை, இந்த வர்ணாசிரம அடுக்கின் மேலிருப்பவர்கள் மிகுந்த அறிவு கொண்டவர்கள், ஒரு மரபுத் தொடர்ச்சியான கல்வி கொண்டவர்கள் என்றால்; ஏன், எப்படி… அந்தக் கல்வியும் அறிவும் அவர்களுக்கு மட்டுமானதாக ஆயிரமாண்டுகளாக உள்ளது, என்பதை சிந்திக்கும் எவரும் கேள்வி கேட்க வேண்டும். இல்லை அவர்கள் அதற்கான சூழலை உருவாக்கித் தக்க வைத்துக் கொள்கிறார்கள் என்றால்; அது எவ்வாறு அவர்களால் மட்டும் சாத்தியமாகிறது? என்பது கேட்கப்பட வேண்டும். இல்லை; ஏன், அவர்கள் அந்த தங்களுக்கான உடைமையாக்கிக் கொண்ட அறிவை சமூகம் முழுமைக்கும் பகிர மறுக்கிறார்கள் எனபது உரையாடப்பட வேண்டும்.

இங்கு பார்ப்பனியம் என்பது; தமிழக அரசியல் சிந்தனைத் தளத்தில் வெற்று பிராமண எதிர்ப்பு என்பதாக தட்டையாக புரிந்து கொள்ளப்படுகிறது. இல்லை; அது ஜெர்மனியின் நாசிசம், இத்தாலியின் பாசிசம் போன்று இந்திய நிலப்பரப்பு தன் மானுட படிமலர்சியில் கண்டறிந்த ஒரு அரசியல் சித்தாந்தம் (Political Ideology). ஆம், பார்ப்பனியம் ஒரு மனவியல் கட்டமைப்பு (Psychological Phenomenon), இதன் மனவியல் கூறுகள் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதோர் என நம் அனைவருக்குள்ளும், இந்திய நிலப்பரப்பின் எல்லா மனங்களுக்குள்ளும் பரவி இருப்பதையும்; அது காலங்காலமாக தன்னைத்தானே படி எடுத்துக் கொள்வதையும் மிகத் தீவிரமாக ஆய்ந்து எழுதியிருக்கிறார் அம்பேத்கர்.

ஆம், பார்ப்பனியம் ஒரு அரசியல் கோட்பாடு; அது வெறுமனே பிராமணர்களையோ அல்லது வேறெந்தவொரு குறிப்பிட்ட சாதியையோ சார்ந்ததன்று. அது இந்திய முழுமைக்குமான ஒரு சமூக மனநிலை அமைப்பொழுங்காகி கெட்டிப்பட்டுள்ளது, அதை இந்திய நிலப்பரப்பிற்குள் எந்தவொரு தனிமனித நினைப்பாலும் விட்டுவிலக முடியா தன்மையுடைத்ததாகி விட்டது. இந்தச் சுரண்டல் அரசியல் கோட்பாட்டமைப்பை கேள்விக்குள்ளாக்க, விவாதிக்க ஒரு பெருந்திரள் சமூக கட்டமைப்பு மனநிலையை உருவாக்க வேண்டும். இந்தப் பெருந்திரளை சிந்தனைத் தளத்தில் துளியேனும் சாத்தியப்படுத்தியதே பெரியாரின் வரலாற்றுப் பாத்திரம். இது அவ்வளவு எளிதான போராட்டமல்ல என்று கூறும் பெரியார், ஆனாலும் இதைச் சாதித்தே ஆக வேண்டும் என்கிறார்.

“நாம் நம்முடைய உரிமைகளைப் பெறுவது என்றாலே என்ன அர்த்தம் என்றால், நம்முடைய உரிமைகளைப் பறித்து அனுபவித்து வருகிற எதிரிகளின் ஆதிக்கம் அழிவு என்றுதான் அர்த்தம் ஆகும். அவர்களுடைய அழிவின் மீதுதான் நாம் நம்முடைய உரிமைகளைப் பெற முடியும், அந்த அளவுக்கு அவர்கள் நம் மீது நம் உரிமைகளைப் பெறுவதற்கில்லாமல் ஆதிக்கம் பெற்று இருக்கிறார்கள்.

ஆனால், இந்தக் காரியம் சுலபமானதல்ல; சாதாரணமாகச் சாதித்து விடலாம் என்கிறதான தன்மையில் இல்லை. இது மிகப் பெரிய காரியம் என்பதோடல்லாமல் மிக மிகப் பயங்கரமான பலர் பலியாக வேண்டிய காரியமாகும், நம்முடைய எதிரிகளுக்கு இருக்கிற வசதிகளும், பக்கபலமும் மிக மிக ஏராளமானவை. மதமும் கடவுளும், சாஸ்திரங்களும், ஆட்சியும், அதனைச் சார்ந்தவைகளும் அவர்கள் பக்கம் இருக்கின்றன என்பதுடன், நம்முடைய எதிரிகளைப் பாதுகாப்பதற்காகவே, நம்முடைய எதிரிகளின் ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காகவென்றேதான் அவைகளோடுகூட சர்க்காரும் இருந்து வருகிறது.

எதிர்த்துப் போராடுகிற நம் எதிரிகளுக்கு ஒற்றுமை அதிகம். நமக்கு எவ்வித பலமும் கிடையாது. நமக்குள் ஒற்றுமையும் கிடையாது துரோகிகளுக்கு அதிகம். ஆனாலும் நாம், பலமிக்க வலுவுற்றிருக்கும் நம்முடைய எதிரிகளை எதிர்த்துப் போராடியாக வேண்டும். இதற்கு மனத்துணிவு வேண்டும்.

விடுதலை 30.05.1951

வர்ணாசிரமம், கேள்விக்குள்ளாக்கப்படுவதில் அதிகம் அஞ்சுபவர்களாக பிராமணர்கள் இருக்கிறார்கள். ஏனெனில் இந்த சமூகப்படிநிலையின் உச்சப்பங்கு இந்திய வர்ணப் பிரமிடின் உச்சத்தில் அமர்ந்து இருக்கும் அவர்களுக்கே சென்று சேருகிறது. அதற்காக இயல்பிலேயே இந்தக் கோட்பாட்டமைப்பை பாதுகாத்து நீட்டித்து தக்க வைக்க, அதிகம் மெனெக்கெட வேண்டிய தேவை அவர்களுக்குள்ளது. அதற்காக அரசியல், சமூகம், ஆன்ம நம்பிக்கைகள், தொழில் துறை பொருளுற்பத்தி என அனைத்து தளத்திலும் கடுமையாக செயல்பட்டு ‘பார்ப்பனியம்’ என்ற அரசியல் கோட்பாட்டை காலந்தோறும் மீட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது அப்படியே தன்னியல்பில் வர்ண பாகுபாட்டின் அடுத்தடுத்த படிநிலைகளைகளால் கடத்தப்பட்டு சமூகம் முழுமைக்குமாக தக்க வைக்கப்படுகிறது. “இந்தியாவில் சாதிகள்” என்ற கட்டுரையில், இதை சாதிகளின் போலச்செய்தல் பண்பு (Imitating Phenomenon) என்பதாக அம்பேத்கர் விரிவாக ஆராய்கிறார்.

இந்த நூற்றாண்டின் தவிர்க்க முடியா சிந்தனையாளர் காந்தி; ஆனால், வர்ணசிரமம் என்ற ‘சுரண்டல் அமைப்பை’, ஒரு கோட்பாடாக ஏற்றுக் கொண்டு அந்தக் கோட்பாட்டுக்குள்ளே நின்று கொண்டு, ‘தீண்டாமை ஒழிப்பை’ வெகுமக்கள் தளத்திற்கு நகர்த்த முயற்சித்தார். இது வர்ணக் கட்டமைப்பை சரித்து விடும் என்பதை உணர்ந்த ஒரு பார்ப்பனிய மனம் காந்தியை பௌதீகமாக அகற்றியது. இந்தப் பார்ப்பனிய கோட்பாட்டமைப்பு எவ்வளவு கொடுமையானதென்றால், அதை மறுத்து வெளியேறும் எந்த தனிமனத்திற்கும் தனித்து இயங்கும் சமூக பாதுகாப்பற்ற நிலையை ஒரு சமூக உளவியலாக ஆக்கிவைத்துள்ளது. இந்த அச்சத்தின் உச்ச விளைவுகளே இன்றும் நிகழும் ஆணவக் கொலைகள். ஆம், இந்திய நிலப்பரப்பில் பார்ப்பனியம் இன்று மிக மிக இறுக்கமான சமூக அரசியல் நிறுவனம் (Socio Political Entity). அது தனக்குள் எந்த ஜனநாயக விழுமியத்தையும் (Democratic belief) அனுமதிப்பதில்லை. இந்த ஜனநாயக மறுப்பே அதை ஒரு அழிவுக் கோட்பாடாக்குகிறது. விரும்புகிற உணர்வு, விரும்புகிற ஊர், விரும்புகிற சாதிய உடைப்புகளை மறுக்கும் ஜனநாயக மறுப்பை அது உள்ளாக்கியிருக்கிறது.

பார்ப்பனியக் கோட்பாட்டில் அடங்கியுள்ள உள்ளார்ந்த பண்பு, அது ஒரு தனிமனிதன் சுயத்தை - சுயமரியாதை அடையாளத்தை இழக்கச் செய்வது மட்டுமல்ல, இந்த அடையாள அழிப்பை அவரை விளிம்பு நிலைக்கு ஒதுக்குவதை தன்னிலையாக ஏற்கச் செய்கிறது. இந்த ஆபத்தான உள்ளடக்கத்தைக் கண்டறிந்த தலைவராக பெரியார் உயர்ந்து நிற்கிறார்.

இந்திய சாதியமைப்பில் வர்ண அடிப்படை, பார்ப்பனர் மேலிருந்து சத்திரியர், வைசியர், சூத்திரர், சண்டாளர் என கீழ்நோக்கி விரியும் சமூகப் பிரமீடாக வேத காலம் முதல் இயங்கி வருகிறது. அடிமைச் சமூக வர்ணாசிரம முறைமையையும், அதன் இயங்கு நிலையையும் அம்பேத்கரும் பெரியாரும் மட்டுமே புரிந்து, அதன் வேர் பார்ப்பனர்களிடமிருக்கும் மதக் கண்ணோட்டம் தான். கீழிருந்து அடுக்கடுக்காக பிற வர்ணங்களை மேல்நோக்கி விரித்து சமூக விளிம்பிற்கு தள்ளும் தலைகீழ் பிரமீடாக விளக்கினார்கள். அதனாலேயே; இருவரும் தொடர்ந்து பார்ப்பனியத்தின் மூலவேரான பிராமணர்களை நோக்கி பேசினார்கள், செயல்பட்டார்கள். இதுவே பெரியாரை வெறும் பார்ப்பன வெறுப்பாளர் என்ற தட்டைப் புரிதலுக்கு வழிவகுக்கிறது.

“முட்டாளே, நீ சூத்திரனாம் பாப்பானுக்கு பணிவிடை செய்யனுமாம் உனக்கு அறிவில்லையா, சிந்திச்சு பார்க்க மாட்டியா” என ஒரு பொது மாந்தனை நோக்கி உணர்நிலையில், அவன் சுயம் சார்ந்த கேள்விச் சொற்களில் தாழ்சுயத்தை (Inferior Self) உடைக்க முற்படுகையில்; பார்ப்பனர்களை வந்தேறிகள், நீங்கள் நிலமற்றவர்கள், புராணப் பொய்யையும் புரட்டையும் சொல்லி சுரண்டித் தின்பவர்கள் என்ற சொற்களில் பிராமண மனங்களின் மீயுணர் சுயத்தை (Imferious Self) சிதைக்க முற்படுகிறார் பெரியார். ஏனெனில் இந்த முன் சொன்ன சூத்திர தாழ்சுயமனமும், பின் சொன்ன பிராமண மீயுணர்மனமுமே சனாதன வர்ணாசிரம் என்ற கோட்பாட்டின் தாங்குநிலைப் புள்ளிகள். இந்த தாங்குநிலைப் புள்ளிகள் அசைக்கப்படுகையில் வர்ணாசிரமம் சிதைவுறத் துவங்கும். நவீன இந்திய மனம் தேடும் அனைவருக்குமான அதிகாரப் பரவலாக்க சமூக ஜனநாயகம் (Social Democracy) இந்திய நிலப்பரப்பில் செயல்படத் துவங்கும் என்பதே பெரியாரின் சரியான புரிதலாக இருந்தது.

(தொடரும்)

பூபாலன்

Pin It