காசி விசுவநாதர் கோயில் வெறும் கட்டிடம் அல்ல; இந்திய ஆன்மீக ஆன்மாவின் சின்னம் என்று மோடி, பூரித்துப் பேசியிருக்கிறார். அந்த ஆன்மீக ஆன்மா அப்பாவிகளின் கொலைக்களமாக பார்ப்பனர்களால் மாற்றப்பட்டது என்பது தான் உண்மையான வரலாறு. சுவாமி சிவானந்த சரசுவதி எழுதி, வஉ.சி. முன்னுரையுடன் பெரியாரின் சுயமரியாதைப் பிரச்சாரம், 1928இல் வெளியிட்ட ‘ஞான சூரியன்’ நூல் இந்த உண்மையை அம்பலப்படுத்துகிறது. சுவாமி சிவானந்தர், தமிழ், வடமொழி இரண்டிலும் கற்றுத் தேர்ந்தவர். ஆழ்ந்த இறை பக்தி கொண்ட பார்ப்பன எதிர்ப்பாளர்.

காசிக்குப் போய் இறந்தால் மோட்சம் போகலாம் என்ற செய்தியை பார்ப்பன புரோகிதர்கள் பரப்பி மக்களை நம்ப வைத்தனர். இதனால் காசிக்கு பெரும் பணக்காரர்கள்கூட குடும்பத்துடன் நடந்தே போனார்கள். வழியில் வழிப்பறி - திருடர்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கோயிலின் ஒரு பகுதியில் பரமசிவன் பார்வதியுடன் காட்சி தந்து பக்தர்களை நேரடியாக மோட்சத்துக்கு அழைத்துச் செல்லும் இடம் என்று ஒரு இடத்தைத் தேர்வு செய்தார்கள். புரோகிதர்கள் அந்த இடத்துக்கு ‘காசிக் கருவெட்டல்’ என்று பெயர் சூட்டினார்கள். அது ஒரு கிணறு. பாதி மூடப்பட்டிருக்கும்.

பார்ப்பனர்களுக்கு அவர்கள் கேட்கும் தட்சணைகளைத் தந்து அவர்களிடம் கெஞ்சிக் கூத்தாடினால் மட்டுமே மோட்சம் போகும் கிணற்றுக்கு அழைத்துப் போவார்கள். கிணற்றுக்குள்ளே ஒரு சிவலிங்கம் இருக்கும். அதைக் குனிந்து பார்க்கச் சொல்வார்கள். குனிந்து பார்க்கும்போது கிணற்றுக்கு மேல் சங்கிலியால் உருட்டப்பட்ட உருளைக் கட்டி உருட்டி விட்டு கழுத்தை வெட்டச் செய்து கிணற்றுக்குள் தள்ளி விடுவார்கள். முதியவர்களுடன் உடன் வந்த இளம் பெண்களையும் உடைமைகளையும் பார்வைக்குப் படாத தூரத்தில் தலைவாசலிலேயே வெளியிலே நிறுத்தி வைத்து விடுவார்கள். மோட்சத்துக்கு அனுப்பிய பிறகு இளம் பெண்களையும் உடைமைகள் நகைகளையும் புரோகிதர்கள் தங்கள் உரிமைகளாக்கிக் கொள்வார்கள். பிரிட்டிஷ் ஆட்சி, இந்தப் ‘படுகொலை’ மோட்சத்தைத் தடை செய்தது. தடை செய்த பிறகும் வேறு வேறு தந்திரமான குறுக்கு வழிகளில் பார்ப்பனர்கள் பணம், நகை பறிக்கும் தந்திரங்களை செய்து வந்தார்கள் - என்று எழுதியிருக்கிறார் சிவானந்த சரசுவதி.

- விடுதலை இராசேந்திரன்

Pin It