பெரியார், அம்பேத்கர், லோகியா பாடுபட்டும் பிற்படுத்தப்பட்டோருக்கும், பட்டியல் வகுப்பினருக்கும் அரசு நிருவாகங்களில் உரிய பங்கு கிடைக்கவில்லை!

ambedkar periyarபுத்தர் காலந்தொட்டு, பிறவி நால்வருண வேறு பாட்டை எதிர்த்து இங்குப் போராட்டம் நடக்கிறது. மகாத்மா புலே 1870இல் நால் வருணத்தை எதிர்த்தார்; தந்தை பெரியார் 1922இல் நால் வருணத்தை எதிர்த்தார்;  மேதை அம்பேத்கர் நால் வருணத்தைக் கண்டித்து, 1927இல் மனுஸ்மிரு தியை எரித்தார்.

ஆனாலும் வெள்ளையன் வெளியேறிய பிறகு, சுதந்தர நாட்டுக்குச் செய்யப்பட்ட அரசமைப்புச் சட்டம் கெட்டியாக நால் வருணத்தைக் காப்பாற்றுகிறது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில், பாகம் 3. அடிப்படை உரிமைகள் பற்றியது. அதில் விதி 13 (3) (a) உட்பிரிவில், “சட்டம் என்பது எந்தவொரு அவசரச் சட்டம், ஆணை, துணை விதி, விதி, ஒழுங்குமுறை, ஆணை, அறிவிக்கை, வழக்கம் அல்லது பழக்கம் என்கிற பேரால் இந்திய எல்லைக்குள் நடப்பில் இருக்கிற சட்டமாகும்”

அதேபோல் அதன் (b) உட்பிரிவில் “Law in Force”  என்பது “இந்தச் சட்டம் நடப்புக்கு வருவதற்கு முன்னர், சட்டமன்றத்தாலோ அல்லது தகுதி வாய்ந்த அதிகாரத்தாலோ செய்யப்பட்ட சட்டத்தைக் குறிக்கும். அச்சட்டம் இதற்கு முன் நீக்கப்படாமலோ அல்லது இந்தியாவின் எந்தப் பகுதியிலும் நடப்பில் இல்லாமலோ இருந்த சட்டத்தைக் குறிக்கும்” என்று குறிக்கப்பட்டுள்ளது.

"அதாவது பழைய பழக்கம் வழக்கம் என்பது இன்றும் இந்த அரசமைப்புச் சட்டம் நடப்புக்கு வந்த பிறகும் செல்லுபடியாகும் என்று பொருளாகும்.

அதேபோல் விதி 372 (3) (b) உட்பிரிவில் இதே கருத்து (Explanation)-1  “விளக்கம்” என்கிற தலைப்பில் குறிக்கப்பட்டுள்ளது".

மேலே கண்ட அரசமைப்புச்சட்ட விதிகளின்படி தென்னாட்டில் பிராமணன், சூத்திரன் என்கிற இரண்டு வருணங்கள் மட்டுமே உண்டு. தென்னாட்டில் பார்ப்பனர் 3 விழுக்காடு மட்டுமே. வட இந்தியாவில் பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்கிற நால் வருணங்கள் உண்டு.

"பார்ப்பனன் பிறப்பினாலேயே பார்ப்பனன் (A Brahmin is born) என்று இன்றும் சட்டத்தில் உள்ளது. இந்த நீதி 2500 ஆண்டு காலமாக உள்ளது".

இந்தியாவில் சூத்திரர், ஆதிசூத்திரர் என்கிற தீண்டப்படாதார், பழங்குடிகள் ஆகிய இவர்கள் எல்லோரும் உடல் உழைப்புச் சாதிகள்; சூத்திரர்கள்; கல்வி உரிமை மறுக்கப்பட்டவர்கள். ஆதி சூத்திரர் என்கிற தீண்டப்படாதார் எல்லா உரிமைகளும் மறுக்கப்பட்டவர்கள். இம் மூன்று பிரிவு மக்களும் அரசு நிர்வாகங்களில் பங்கு பெறாதவர்கள்.

தென்னாட்டில் 1921 முதல் பார்ப்பனரல்லாதார், பார்ப்பனர், கிறித்தவர், முகமதியர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் என சமுதாயத்தின் 5 பிரிவினருக்கும் 100 விழுக்காடு இடங்களும் பங்கிட்டுக் கொடுக்கப்பட்டன. இது 1928இல்தான் நடப்புக்கு வந்தது.  இந்த ஏற்பாடு 1947 நவம்பர் 20ஆம் நாள் வரையில் நீடித்தது.

தந்தை பெரியார் அவர்களின் கோரிக்கையை ஏற்று முதன் முதலில் 1947 நவம்பர் 21ஆம் நாள் பார்ப்பனரல்லாத இந்துப் பிற்படுத்தப்பட்டோருக்கு 14 விழுக்காடு வழங்கப்பட்டது. பிறகு அது காமராசர் ஆட்சியில் 25 விழுக்காடாக உயர்த்தப்பட்டது.

தந்தை பெரியார் அவர்கள் 1969இல் வைத்த கோரிக்கையை ஏற்று, தி.மு.க. ஆட்சியில் கலைஞர் மு.கருணாநிதி 7.6.1971இல் பிற்படுத்தப்பட்டோருக்கு 25 விழுக்காடாக இருந்த இடஒதுக்கீட்டை 31 விழுக் காடாக உயர்த்தினார்.

மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி 19.8.1979இல் வைத்த கோரிக்கையை ஏற்று, அ.தி.மு.க. ஆட்சியில், அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். 31 விழுக்காட்டை 1.2.1980இல் 50 விழுக்காடாக உயர்த்தினார்.

இவ்வளவு ஏற்பாடும் தந்தை பெரியாராலும் அவரு டைய தொண்டர்களாலும் மட்டுமே சாதிக்கப்பட்டது.

ஆனால், இந்தியத் துணைக்கண்டத்தில் இந்திய அரசமைப்புச்சட்டம் 26.1.1950 இல் நடைமுறைக்கு வந்த பிறகும்

1) எந்த வடமாநிலத்திலும் சமூகத்திலும் கல்வி யிலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 1977 வரை இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.

2) மத்தியஅரசில், விதி 15(4) இன்படி, கல்வி யிலோ, விதி 16(4)இன்படி வேலையிலோ பிற்படுத்தப் பட்டவர்களுக்குக் கோரிக்கை வைத்துப் போராட எந்த இயக்கமும் 1978 வரை முன்வரவில்லை.

இந்த நிலையில்தான், 17.9.1978 முதல் 18.10.1978 வரையில் 32 நாள் பீகார் மாநிலத்தில், மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்கள், பீகார் மாநிலப் பிற்படுத்தப்பட்டோர் பேரவையின் தலைவர் இராம் அவதோஷ்சிங் ஏற்பாட்டில், 32 நாள் தொடர் பரப்புரை செய்தனர். அதைத் தொடர்ந்து தலைநகர் பாட்னாவில் காந்தி மைதானத்தில் 10 நாள் தொடர் சிறை நிரப்பும் போராட்டமும் நடைபெற்றது; 10 ஆயிரம் பேர் சிறைப்பட்டனர்.

இதன் விளைவாக அப்போதைய பீகார் முதலமைச்சர் கர்ப்பூரி தாகூர் அவர்கள், பீகார் மாநிலப் பிற்படுத்தப் பட்டோருக்கு மாநில அரசில் 11.11.1978இல் 20 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கினார். அதுவே, வட மாநிலத்தில், நம் பரப்புரையினாலும் பீகார் மக்களின் போராட்டத்தினாலும் முதன்முதலாக வழங்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடாகும்.

அதைப் பின்பற்றி வடமாநில அரசுகள் வேலையில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிக்கத் தொடங்கின. சனதாக் கட்சி ஆட்சிக்கு வந்ததால் உத்தரப்பிரதேசத்தில் 1977இல் பிற்படுத்தப்பட்டோருக்கு அம்மாநிலத்தில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.

ஆனால் விதி 15(4) இன் படியும், விதி 16(4) இன் படியும் மத்திய அரசின் கல்வியில் இட ஒதுக்கீடும் வேலையில் இட ஒதுக்கீடும் பிற்படுத்தப்பட்டோருக்கும்  உண்டு என்கிற உண்மை பிற்படுத்தப்பட்ட நாடாளு மன்ற உறுப்பினர்களுக்கோ மற்ற உறுப்பினர்களுக்கோ தெரிந்திருக்கவில்லை.

அவர்களுக்கு இந்த உண்மையைத் தெரிய வைப்ப தற்காகவே தில்லியில் மார்க்சியப் பெரியாரியப் பொது வுடைமைக் கட்சித் தோழர்களும், இராம் அவதேஷ் சிங் அவர்களும் 23.3.1979இல் பேரணியும் மாநாடும் நடத்தி, அந்நிகழ்வில் பெரியாரின் கட்டுரைகளையும் பேச்சுக்களையும் இந்தியில் மொழியாக்கம் செய்து பிற்படுத்தப் பட்டோருக்கு ஏன் இட ஒதுக்கீடு? என்னும் நூலும் வெளியிடப்பட்ட பின்னர்தான், வடநாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உண்மை தெரிந்தது;  உணர்வு வந்தது.

1989-இல் பிரதமர் மொரார்ஜி தேசாய் பீகார் மாநிலப் பயணத்தில் கற்ற பாடத்தின் விளைவாக, 20.12.1978-இல் இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அமைப்போம் என்று நாடாளுமன்றத் தில் அறிவித்தார். அதன்படி 1.1.1979-இல் மண்டல் தலைமையில் அந்த ஆணையம் அமைக்கப்பட்டது. பிரதமரை 25.3.1979இல் பிரதமரின் இல்லத்தில் அனைத்து இந்தியத் தலைவர்கள் சார்பில் வே.ஆனை முத்துவும், இராம் அவதேஷ்சிங்கும் சந்தித்து, மனு கொடுத்து விளக்கிச் சொன்ன பிறகுதான், “பிரதமர் மண்டல் பரிந்துரையை அறிக்கை கிடைத்த பின் அமல்படுத்துவேன்” எனக் கூறினார்.

பிரதமர் சரண்சிங் அவர்களை வே.ஆனைமுத்து, இராம்அவதேஷ் சிங் இருவரும் 25.9.1979இல் சந்தித்துக் கோரிக்கை மனு அளித்தனர். “ஆய்வு செய்யவும்” என்று அந்த மனுவில் பிரதமர் சரண்சிங் குறிப்பு எழுதி, அதைச் சட்ட அமைச்சர் கக்கர் அவர் களுக்கு அனுப்பினார்.

மண்டல் குழுவின் அறிக்கை 31.12.1980இல் அரசுக்கு அளிக்கப்பட்டது. ஆனால் அந்த அறிக்கை நாடாளுமன் றத்தில் வெளியிடப்படவில்லை. இவ்வளவுக்கு இடையே உள்துறை அமைச்சர் கியானி ஜெயில் சிங், 25.1.1982 ஆம் நாள் வே.ஆனைமுத்துவை நேரில் தில்லிக்கு அழைத்துப்பேசி உண்மை நிலையை அறிந்து, பிற்படுத் தப்பட்டோருக்கு மய்ய அரசில் இடஒதுக்கீடு கிடைத்திட நான் எல்லா உதவிகளையும் செய்வேன் என்று உறுதி கூறி அதன்படியே மண்டல் குழு அறிக்கையை 30.4.1982இல் நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.

இவ்வளவு செயல்களும் நடந்தாலும், பிரதமர் வி.பி.சிங் பிரதமராக வருகிற வரையில் மண்டல் பரிந்துரையை நடப்புக் கொண்டு வர வேறு எவரும் முன் வரவில்லை.

இந்த இடைவெளியில் பிற்படுத்தப்பட்டோர் பேரவையின் தலைவரான இராம் அவதேஷ்சிங் 1986 முதல் 1992 வரையில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். அப்போது பிரதமர் வி.பி.சிங் அமைச்சரவையில் அமைச் சராக இருந்த இராம்விலாஸ்பஸ்வான் மண்டல் பரிந்து ரைகள் ஆய்வு பற்றிய பொறுப்பில் இருந்தார். அவரை 22.3.1990இல் வே.ஆனைமுத்து, இராம் அவதேஷ் சிங் இருவரும் தில்லியில் சந்தித்து மய்ய அரசின் கல்வியிலும் வேலையிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பி னருக்கு இடஒதுக்கீடு அளிக்கும்படி வற்புறுத்தினர்.

மேலும் ஒவ்வொரு நாளும் இராம் அவதேஷ் சிங், நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு சென்று பிரதமர் வி.பி.சிங் அவர்களின் கவனத்தை ஈர்த்தார்.  நாடாளுமன்றத்தில் குடிஅரசுத் தலைவர் இரா.வெங்கட்ராமன் தம் உரையை நிகழ்த்த முற்பட்ட போது, மாநிலங்களவை உறுப்பினரான இராம் அவதேஷ் சிங் மண்டல் பரிந்துரையின் நிறைவேற்றம் பற்றிய குறிப்பு எதுவும் குடிஅரசுத் தலைவரின் உரையில் குறிப்பிடப்படாததால் அவர் உரையாற்றுவதைத் தடுத்து விட்டார்.

அதைத் தொடர்ந்து, பிரதமர் வி.பி.சிங் 6.8.1990 இல் மண்டல் பரிந்துரையின்படி 27 விழுக்காடு மத்திய அரசின் வேலைகளில் பிற்படுத்தப் பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்று மக்களவையில் அறிவித்தார். அது நடப்புக்கு வரும் வகையில் 13.8.1990 இல் அரசாணை வெளியிட்டார்.

மேலே கண்ட நிலைமையை நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம். நாம் 29.4.1981, 3.3.1982, 29.4.1986 ஆகிய நாள்களில் தில்லியில் நாடாளு மன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை நடத்தினோம்;  நம் கோரிக்கையை விளக்கி வலியுறுத்தினோம்.

தொடர்ந்து வே.ஆனைமுத்து “1990ஆம் ஆண்டு தமிழில் விகிதாசார இடஒதுக்கீடு செய்! நூறுசதவீத இடங்களையும் பங்கீடு செய்” என்னும் நூலை எழுதினார். அதில் தம் பட்டறிவைக் கொண்டு, அவர் அன்று எச்சரித்து எழுதியது இன்று பிரதமர் நரேந்திரமோடியின் ஆட்சியில் நடந்து விட்டதை என்னவென்று சொல்வது? நான் அன்று எச்சரித்து எழுதியதை அப்படியே தருகிறேன் படியுங்கள்:

“எனவே எத்தனை விகிதாச்சாரம் என்பதை எண் களாகக் குறிக்காமல் பிற்படுத்தப்பட்டோருக்கும் பட்டியல் குலத்தினருக்கும் பட்டியல் பழங்குடியினருக்கும் அவரவர் மக்கள் தொகை விழுக்காட்டுக்குச் சரிசமமான அளவில் மய்ய  மாநில அரசுக் கல்வியிலும் மய்ய மாநில அரசு வேலையிலும் இடஒதுக்கீடு தரப்பட வேண்டும் என்று சட்டம் செய்யப்படுவது ஒன்றுதான் சரியான  முடிவான தீர்வு ஆகும்.

“இப்படிச் சட்டத்திருத்தம் வர, 545 உறுப்பினர்கள் உள்ள மக்கள் அவையிலும் 245 பேர் உள்ள மாநிலங் களவையிலும் சேர்த்து 790 பேர் வாக்கெடுப்பு நாளில் அவைக்கு வரவேண்டும். அப்படி வருகிறவர்களில் பெரும்பான்மையினர் - அதாவது மூன்றில் இரண்டு பங்கு பேர் ஆதரித்து வாக்களிக்க வேண்டும். அத்துடன் அது மொத்தம் 790 பேர்களில் சரிபாதி எண்ணிக் கைக்கு மேல் 395க்கு மேல் இருக்க வேண்டும்.

“இது நினைத்துப் பார்க்க முடியாத கடினமான முயற்சி போல் தோன்றலாம். ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்குப் போதிய விழிப்புணர்வு ஊட்ட இதுவரை நாம் தவறி விட்டோம். இனியும் நாம் தவறினால், நாடாளுமன்ற உறுப்பினர்களின் அறியாமையையும் ஒடுக்கப்பட்ட வகுப்புத் தலைவர்களின் அடிமைப் புத்தியையும், பயன் படுத்திக் கொண்டு, மொத்த இடஒதுக்கீடு அளவைப் பற்றிக் குறிப்பிடாமலே, முற்பட்ட வகுப்புகளிலுள்ள ஏழைகளுக்கு இடஒதுக்கீடு செய்யலாம் என்று பாரதிய சனதா அரசோ, காங்கிரசு அரசோ அரசமைப்புச் சட்டத்தின் விதிகளைத் திருத்த முடியும். எச்சரிக்கை! எச்சரிக்கை!.

“இந்த மக்கள் நாயக உரிமைகளைக் கூட வென் றெடுக்கத் துப்பற்றவர்களாக, பெரியார்  அம்பேத்கர்  லோகியா  தொண்டர்கள் இருந்தாலென்ன? மறைந்தா லென்ன? மக்கள் நாயகம் மலர்ந்த இந்திய மண்ணில் தான் மார்க்சியம்  லெனியம் மலர முடியும்; வெல்ல முடியும். இங்கு சமூக சமத்துவம் நிலைநாட்டப்பட்ட பிறகுதான் சமதர்மம் தழைக்க முடியும்.”

"எதிரிகள் ஒற்றுமையாகவும் தொலைநோக்குப் பார்வையோடும் என்றும் இருப்பதால்தான், பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்த நாடாளுமன்றப்  பெரும் பான்மையை நம்பி, பயன்படுத்தி அரசமைப்புச் சட்டத் தின் 103 ஆவது திருத்தத்தை வெற்றிகரமாக நிறை வேற்றி விதி 15(6), 16 (6) இவற்றை நிறைவேற்றி 10 விழுக்காடு இடங்கள் உடனே உயர்சாதி ஏழைகளுக் குக் கிடைக்கிற மாதிரி உயர்சாதியினர் ஏற்பாடு செய்து கொண்டார்கள்.

அனைத்திந்தியஅளவில் பார்ப்பனர்கள் 5.5 விழுக் காடு, சத்திரியர்கள் 1.5 விழுக்காடு, வைசியர்கள் 1.5 விழுக்காடு, காயஸ்தர்கள் 1.0 விழுக்காடு ஆக 10 விழுக்காடு இடங்கள் தங்களுக்கு கிடைக்கிற ஏற்பாட்டை உயர்சாதியினர் அப்படியே அள்ளிக் கொண்டார்கள்".

இதற்குத் தீர்வுதான் என்ன?

இந்தத் திருத்தங்களை எதிர்த்துப் போராடிக் கொண்டி ருப்பதா? பிற்படுத்தப்பட்ட மக்களை ஒன்று திரட்டி, “பிற்படுத்தப்பட்டோருக்கு விகிதாசாரம் கொடு!” என்று கோரிக்கை வைத்துப் போராடுவதா?  எதிரி அறிவாளி, வலிமையானவன் நம்மில் பலரும் தொலைநோக்குப் பார்வையற்றவர்கள் என்பதை எண்ணி வருத்தப்பட்டு வாளாவிருப்பதா? நாம் இப்போது என்ன செய்யலாம்?

"தந்தை பெரியார் 141ஆம் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகப் பிற்படுத்தப்பட்டோரை ஒன்றுதிரட்டி நாம் 1978இல் முனைந்தது போல மீண்டும் பெரியாரை - அம்பேத்கரை-லோகியாவை முன்னிறுத்தி “எல்லா மதங்களையும் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோரை ஒன்று திரட்டி பிற்படுத்தப்பட்டோருக்கு விகிதாசாரம் கொடு! பட்டியல் வகுப்பினருக்கு விகிதாசாரம் வரச்செய்! பழங்குடியினருக்கு விகிதாசாரம் வரச்செய்! என்று தனித் தனிக் கோரிக்கை வைத்துப் போராடுவதா?” அப்படிப் போராடுவதே சரி.

கீழே கண்ட மாண்புமிகு உச்ச நீதிமன்ற நீதிபதி பசல்அலி 1976இல் கேரள அரசு எதிர் என்.எம்.தாமஸ்வழக்கில் அளித்த தீர்ப்பை நாம் நமக்கு உந்து ஆற்ற லாகக் கொண்டு அதையே மக்களிடம் விளக்கிப் பேசி அதையே கோரிக்கையாக வைத்து நாடு முழுவதும் சென்று பரப்புரையாற்றி மக்கள் புரிந்து கொள்ளுமாறு செய்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழுத்தம் கொடுத்தால் இந்த நம் கோரிக்கை வெற்றிபெறும் நாள் வெகு தொலைவில் இல்லை".

அந்தத் தீர்ப்பின் ஆங்கில வாசகம் வருமாறு :

“Suppose for instance, a state has a large number of Backward Classes of citizens which constitutes 80% of the population and the government, in order to give them proper representation, reserves 80% of the jobs for them, can it be said that it is bad and violates clause 4 of article 16? The answer must necessarily be in the negative.”

State of Kerala Vs. N.M. Thomas, A.I.R. 1976, SC 490 : இதன் தமிழாக்கம் பின்வருமாறு :

“ஒரு வேளை, எடுத்துக்காட்டுக்காக ஒரு மாநிலத்தில் 80 விழுக்காடு அளவுக்கு மிகப்பெரிய அளவில் பிற் படுத்தப்பட்ட வகுப்புக் குடிமக்கள் இருப்பார்களானால் அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கின்ற தன் மையில், அந்த மாநில அரசு அரசின் பதவிகளில் 80 விழுக்காட்டை அவர்களுக்காக ஒதுக்கீடு செய்தால் அது தவறானது என்றோ விதி 16(4)ஐ மீறியது என்றோ சொல்ல முடியுமா? இதற்கு விடை “தவறானது என்று சொல்ல முடியாது” என்பதுதான்.

மேலே கண்ட கருத்தினை முன்வைத்துத்தான் 19.8.1979இல் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களிடம் விண்ணப்பம் கொடுத்தோம். அதில் தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் 67.5 விழுக்காடு மக்கள் தொகை உள்ளனர். அதனால் அவர்களுக்கு இப்போது வழங்கப் பட்டு வருகின்ற 31 விழுக்காடு இடஒதுக்கீடு 60 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்பட வேண்டும் என்று கோரினோம். இதை அமைச்சர் பண்ருட்டி ச.இராமச் சந்திரன் அவர்களிடமும் விளக்கினோம். அவர்கள் இருவரும் நன்கு ஆலோசித்து 1980 சனவரி இறுதி யில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 விழுக்காடு இடஒதுக் கீடு வழங்கப்படும் என கொள்கை முடிவு செய்து அறிவித்தனர். அதற்கான அரசாணை 1.2.1980இல் வெளியிடப்பட்டது.

தந்தை பெரியார் 141-ஆவது பிறந்த நாள் பணியாக, இந்த ஒரு கோரிக்கையை மட்டுமே முதன்மையான பணியாகக் கொணடு பரப்புரை செய்வது, போராடுவது ஆகிய இவற்றை நாம் மேற்கொள்ளலாம் என்று நான் மிகவும் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

Pin It