‘பிரண்ட் லைன்’ அம்பலப்படுத்துகிறது

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று ‘பிரண்ட் லைன்’ ஆங்கில ஏடு (ஏப்.23) விரிவான கட்டுரை ஒன்றை எழுதியுள்ளது. அதில் கருத்துக் கணிப்பு வெளியிட்ட தொலைக்காட்சி ஊடகங்கள் எப்படி மிரட்டப்பட்டன என்ற தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

தி.மு.க. மிகப் பெரும் வெற்றி பெறும் என்ற கருத்துக் கணிப்புகளை தொலைக்காட்சிகள் ஒவ்வொரு நாளாக ஒளி பரப்பத் தொடங்கின. உடனே தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு அரசு சார்பில் அழுத்தம் தரப்பட்டு ‘கடும் போட்டி நிலவுகிறது’ என்பதுபோல் மாற்றி ஒளி பரப்புமாறு மிரட்டினார்கள்.

குறிப்பாக ‘புதிய தலைமுறை’ தொலைக் காட்சியின் கருத்துக் கணிப்பு தி.மு.க.வின் வெற்றி உறுதி யானது என்று கூறியவுடன் நெருக்கடிகள் தரப்பட்டதாக அந்த நிறுவனத்தில் பணியாற்றும் உயர் மட்ட நிர்வாகிகள் கூறினர்.

அதைத் தொடர்ந்து ‘புதிய தலைமுறை’ நடத்தும் மற்றொரு ஊடகமான ‘புது யுகம்’ என்ற தொலைக்காட்சியில் அ.இ.அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகள் கூறுவதாக ஒரு போலியான கருத்துக் கணிப்பு ஒளி பரப்பப்பட்டது. தொடர்ந்து ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி, ‘புதுயுகம்’ தொலைக்காட்சியின் (போலி) கருத்துக் கணிப்பையும் ஒளி பரப்புமாறு கட்டாயப்படுத்தி ஒளிபரப்ப வைத்தார்கள்.

‘மாலை முரசு’ தொலைக்காட்சி எடுத்த கருத்துக் கணிப்பு, அ.இ.அ.தி.மு.க.வின் மோசமான தோல்விகளை உறுதிப்படுத்தியது. இதில் முதல்கட்டமாக மார்ச் 25ஆம் தேதி 50 தொகுதிகளுக்கான கருத்துக் கணிப்புகள் ஒளி பரப்பப்பட்டன.

உடனே அரசு கேபிள் இணைப்பில் தர வரிசையில் கீழே தள்ளப்பட்டு தொலைக்காட்சி ஒளி பரப்பை தெளிவாக பார்க்க முடியாமல் செய்து விட்டார்கள். அரசு கேபிள் நிறுவனம் தமிழக அரசு கட்டுப்பாட்டிலுள்ள அமைப்பாகும்.

உடனே ‘மாலை முரசு’ தொலைக் காட்சி நிறுவனம் தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு எழுத்துப் பூர்வமாக புகார் அளித்தது. “நாங்கள் முதல் நாள் கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்ட உடன் 146ஆவது வரிசையில் இடம் பெற்றிருந்த எங்கள் கேபிள் இணைப்பு - பார்வையாளர்கள் தெளிவாக பார்க்க முடியாத நிலைக்கு இருட்டடிப்புக்கு உள்ளாக்கப்பட்டது. இதில் ஆளும் கட்சியின் தலையீடு இருப்பதால் தேர்தல் ஆணையம் தலையிட வேண்டும்” என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தொடர்ந்து அ.இ.அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு, கடும் போட்டி நிலவுகிறது என்பதுபோல பல தொலைக்காட்சிகள் கருத்துக் கணிப்பு வெளியிட கட்டாயப்படுத்தப் பட்டன.

‘டைம்ஸ் நவ்’ ஆங்கில தொலைக்காட்சி, பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமான நிறுவனம் என்றாலும் இந்த சதிக்கு உடன்பட மறுத்து விட்டது. தி.மு.க. அணி 177 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று ‘சி ஓட்டர்’ நிறுவனத்துடன் இணைந்து இரண்டாவது கருத்துக் கணிப்பையும் நடத்தி அது உறுதி செய்தது - என்ற தகவலை ‘பிரண்ட் லைன்’ வெளியிட்டுள்ளது.

- விடுதலை இராசேந்திரன்

Pin It