வரயிருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும்.
ஏன்?
‘நல்லாட்சி நடைபெறுவதற்கு' என்று ஒன்றை வரியில் சொல்லி விட முடியும்.
‘மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி ' என்ற தி.மு.க வின் நிலைப்பாடு செயல்வடிவம் பெறுவதற்கு தி.மு.க ஆட்சி வேண்டும் என்று இரண்டு வரியில் சொல்லிவிட முடியும்.
சமூகநதி, பெண்களுக்கானப் பாதுகாப்பு, சாதி - மதப் பேதமற்ற சமத்துவ வாழ்க்கை முறை ஆகியன நிலைபெறுவதற்கு தி.மு.க ஆட்சி வேண்டும் என்று மூன்றே வரியில் சொல்லிவிட முடியும்.
ஒட்டு மொத்தத் தமிழக மக்களுக்கும் முதலமைச்சராய் இருந்த ஜெயலலிதா சாவில் உள்ள மர்மங்களைப் பொதுவெளியில் வெட்ட வெளிச்சமாக்கி, அன்று முதல் இன்றுவரை நாடகமாடிக் கொண்டு இருக்கிற - தர்மயுத்தம் நடத்திக் கொண்டு இருக்கிற பலரை நட்டநடு வீதிக்குக் கொண்டு வரவும் திமுக ஆட்சி வேண்டும்.
தமிழ்நாட்டின் கல்வி, வேலைவாய்ப்புகள், சுகாதாரம், மருத்துவம், போக்குவரத்து, காவல்துறை, வங்கி மேலாண்மை, உணவுப் பங்கீடு என்று இருக்கிற அத்தனைத் துறைகளிலும் மண்ணின் மைந்தர்களுக்கு இருக்கக் கூட்டிய உரிமைகளையும், வாய்ப்புகளையும் முற்றும் முழுதாகப் பறித்தெடுத்து வடவர்களுக்கு வாரிக் கொடுக்கின்ற மத்திய பாஜக அரசின் அடிவருடி, மெய்தடவி, செவிகடித்து, கண்சிமிட்டி, மூக்கு சொறிந்து, முதுகுவளைத்து சேவகம் செய்கின்ற எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையிலான அரசின், தமிழக - தமிழக மக்கள் விரோதப் போக்கிற்குச் சாவு மணி அடிக்கவும் தி.மு.க ஆட்சி மலர வேண்டும்.
மேலும் தி.மு.க ஆட்சி மலர்ந்த நூறே நாட்களுக்குள் ஒவ்வொரு தொகுதியிலும் அதனதன் முக்கியப் பிரச்சனைகளுக்குச் சாத்தியப்படக் கூடிய முறையில் தீர்வு காணப்படும் என்று தி.மு.க தலைவர் தளபதி ஸ்டாலின் அளித்துள்ள பொறுப்புறுதி மெய்ப்படுவதைக் காணுகின்றப் பேறு நமக்குக் கிடைக்திடவும் தி.மு.க ஆட்சி மலர வேண்டும். தன்மானத் தமிழர்தம் அடையாளமாகத் திகழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞரின் வார்ப்பாக நம் கண் முன்னே நிமிர்ந்து நிற்கும் தளபதி ஸ்டாலின் அவர்கள் தலைமை ஏற்க வேண்டும்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ்நாட்டின் மக்கள் ஒவ்வொரு இரவும் மன அழுத்தங்களுக்கு ஆளாகாமல் தூங்கி, காலையில் நம்பிக்கையுடனும்,மகிழ்ச்சியுடனும் விழித்தெழ வேண்டும். குறிப்பாக மகளிர் பாதுகாப்பு உணர்வோடும், பெருமிதத்தோடும் இருக்க வேண்டும்.
நீதிமன்றத்தால் ஊழல் குற்றவாளி என்று சொல்லப்பட்டு, நான்காண்டு சிறையிலிருந்து, 10 கோடி ருபாய் அபராதம் கொடுத்த சசிகலா, தண்டனை காலம் முடிந்து விடுதலையாகி வந்த போது பெரிய தியாகத் தலைவியாகவும், ராஜ மாதாவாகவும், அரசியல் புலியாகவும் சாதனைத் தமிழ்ச்சியாகவும் காட்சிப் படுத்தப்பட்டார்.
அதற்கு அடுத்தடுத்த நாள்களில் ஆட்சியாளர்களால் ஜெயலலிதா நினைவிடம் மூடலும், வேதா இல்லத் தடை போன்ற செயல்களும் எவ்வளவு மோசமானவை ! ஊடகங்ககளில் பங்கு பெற்றவர்களின் பேச்சுகள் எவ்வளவு அருவருப்பாவை !
இந்நிலையில் இப்போதைக்கு அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த சசிகலாவின் பின்னால் பா.ஜ.க நடத்திய அரசியல் சகுனித் தனங்கள் பயங்கரமானவை.
மதச்சார்பின்மை, பெண்ணுரிமை, சமூகநீதி இவைகளைக் காலம் காலமாகக் கட்டிக்காத்தது திராவிடச் சித்தாங்களை நடைமுறைப்படுத்தியது தி.மு.கழக ஆட்சி.
பார்ப்பனர் அல்லாத மாணவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு, இட ஒதுக்கீடு போன்ற உரிமைகள் அற்றுப் போய்க் கொண்டு இருக்கின்றன.
மநுஸ்மிருதி காலத்தின் குலக் கல்விக்கும், குலத்தொழிலுக்கும் மக்களை மடைமாற்றிக் கொண்டு இருக்கிறது பா.ஜ.கவின் மத்திய மோடி -அமித் ஷாவின் பாசிச ஆட்சி.
வேளாண்மையை, சேலம் இரும்புத் தொழிற்சாலையை, கனிம வளங்களை அம்பானி அதானிகளுக்குத் தாரை வார்த்துக் கொண்டு இருக்கிறது மத்திய பாஜக அரசு.
இப்படிப்பட்ட மோடி - அமித் ஷாவின் அடிமைகளாக இருக்கும் ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் இன் அ.தி.மு.க ஆட்சி ஊழல்கள் தமிழகத்தில் தலைவிரித்து ஆடுகிறது. இப்படிப்பட்ட அரசுகளிடம் இருந்து தமிழகத்தை, தமிழ் மக்களின் உரிமைகளை மீட்கவும், தமிழ்நாடு தலைநிமிர்ந்து மாநில சுயாட்சியைப் பெறவும் திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும், தளபதி ஸ்டாலின் தலைமையில் !
- இரா.விஜயலட்சுமி