அலங்கார பொம்மை

நாட்டின் 14 –வது குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகின்ற ஜூலை 17 ஆம் தேதி நடக்க இருக்கிறது. தேர்தல் முடிவு மூன்று நாள் கழித்து 20 ஆம் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. ஆனாலும் தேர்தல் முடிவு இப்போதே தெரிந்த ஒன்றுதான். ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பாக போட்டியிடவுள்ள முன்னாள் பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்திற்கு எதிர்க்கட்சிகளின் வேட்பாளாராக போட்டியிடவுள்ள மீராகுமாரை விட அதிகப்படியான ஆதரவு உள்ளது. ஆளும் கூட்டணி மற்றும் ஆளும் கூட்டணியை ஆதரிக்கும் மாநில கட்சிகளின் எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை பலத்தைக் கணக்கிட்டால் ராம்நாத் கோவிந்த் 60 சத வாக்குகளுக்கு மேல் பெற்று குடியரசுத் தலைவராகப் போவது உறுதி. ஆனாலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தங்கள் இருப்பை உணர்த்த முன்னாள் பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமாரை நிறுத்துகின்றன. தொடர்ச்சியாக ஐந்து முறை பாராளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று முதல் பெண் சபாநாயகராகவும் இருந்த மீராகுமார், தான் போட்டியிட்ட இரண்டு தேர்தல்களிலும் தோற்று வேறுவழியின்றி ராஜ்யசபா எம்பியாகி பின்னால் கவர்னராகிய ராம்நாத் கோவிந்திடம் நாட்டின் உச்சபட்ச அலங்காரப் பதவிப் போட்டியில் தோற்கப்போவதுதான் ஜனநாக விந்தை.

Ramnath and modiபொதுவாகவே நாட்டின் ஜனாதிபதித் தேர்தல் நாட்டு மக்களின் நேரடி பங்களிப்பில்லாமல் நடப்பது போல தேர்ந்தெடுக்கப்படும் ஜனாதிபதிகளும் நாட்டு மக்களுக்கு தொடர்பில்லாமலே நடந்து கொள்வார்கள். நாட்டில் நடக்கும் முக்கிய சம்பவங்களிலோ பிரச்சனைகளிலோ குறைந்தபட்சம் தங்களுடைய கருத்தைக் கூட பதிவு செய்ய முடியாத நிலைதான் ஜனாதிபதிகளுக்கு. ஆளும் அரசின் அமச்சரவைக்குழு எடுக்கும் முக்கிய முடிவுகளில் ஓரளவிற்கு மேல் ஜனாதிபதியால் தலையிட முடியாது. தவறான முடிவானாலும் அதை தடுத்து நிறுத்த முடியாது, அப்படி அரசுக்கு எதிராக முடிவெடுக்கும் தைரியமும் எந்த ஜனாதிபதிக்கும் இருந்தது இல்லை.

தன் பதவிக்கு ஆபத்து வந்தவுடன் நாடு முழுமைக்கும் அவசரநிலைப் பிரகடனம் செய்ய இந்திரா முடிவெடுத்த போது, “நள்ளிரவானாலும் பரவாயில்லை, தீர்மானத்தைக் கொண்டு வாருங்கள், நான் கையெழுத்திடுகிறேன்” என்றுதான் சொல்ல முடிந்தது அன்றைய ஜனாதிபதியாக இருந்த பக்ருதின் அலி முகம்மதினால். அதே எமெர்ஜென்சியில் 21 மாதங்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள் தேடித்தேடி கைது செய்யப்பட்டபோதோ, உண்மை செய்திகளை எழுதவிடாமல் பத்திரிகைகள் தடுக்கப்பட்ட போதோ , இன்னும் பல ஜனநாயக விரோத, சர்வாதிகார செயல்களை இந்திரா அரசு அரங்கேற்றியபோதோ வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது அவரால். 100 க்கும் மேற்பட்ட முறை 356 வது பிரிவை பயன்படுத்தி மாநில அரசுகளை கலைக்க மத்திய அரசு பரிந்துரை செய்த போதெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்திட்ட ஜனாதிபதிகளே அதிகம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை மக்களுக்கு சம்பந்தமே இல்லாத குடியரசுத் தலைவர்கள் பலமுறை கலைத்து மக்களாட்சித் தத்துவத்தையும், மாநில உரிமைகளையும், இந்திய கூட்டாட்சித் தத்துவத்தையும் கேலிக்கூத்தாக்கி இருக்கிறார்கள். எஸ் ஆர் பொம்மை – இந்திய அரசு வழக்கில் உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பளித்த பின்னரே ஆட்சிக்கலைப்புகள் குறைந்தன.

நாடு முழுவதும் சுற்றி மாணவர்களோடு கலந்துரையாடி மக்களோடு நெருக்கமாக இறந்த அறிவியலாளர், மக்கள் ஜனாதிபதி என்று பெயர் பெற்ற அப்துல்கலாமினால் கூட, 2002 ல் குஜராத் கலவரத்தில் மூவாரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டபோது எந்த நடவடிக்கையும் எடுக்கமுடியவில்லை, ஈழத்தில், போரில் பல்லாயிரக்கணக்கில் தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போது, தான் தயார் செய்த இரங்கல் அறிக்கையைக் கூட வெளியிடமுடியவில்லை கலாமினால். அவருக்குப்பின்னால் வந்த பிரதீபா பாட்டிலோ எந்த பிரச்சனையிலும் தலையிடாமல் உலகம் முழுதும் சுற்றிப்பார்த்தே ஐந்து ஆண்டுகளை கடத்தினார். தேர்ந்த அரசியல்வாதியான பிரணாப் கூட, மோடி அரசு, எந்த முன்னேற்பாடுகளையும் செய்யாமல் 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அவசரகதியில் அறிவித்து மக்களை மாதக்கணக்கில் அல்லாட விட்டபோது கூட, குறைந்தபட்சம் தன் கவலையைக் கூட தெரிவிக்க முடியவில்லை. ஆக இந்திய ஜனாதிபதி பதவி என்பது கண்ணிருந்தும் பாராமல், காதிருந்தும் கேளாமல், வாயிருந்தும் பேசாமல் இருக்கும் காந்தியின் குரங்கு பொம்மை போலதான். என்ன அதிகம் செலவு வைக்கும் அலங்கார பொம்மை.

இப்படிப்பட்ட இந்த பொம்மை பதவியில்தான்,  தலித் சாதியை சார்ந்தவர்களையே வேட்பாளாராக அறிவித்து உள்ளன இரண்டு அணிகளும். முந்திக்கொண்டு தலித் வேட்பாளரை, அதுவும் உபியைச் சார்ந்த ஒருவரை அறிவித்து இருப்பதன் மூலம், இந்தி பேசும் மாநிலங்களில் செல்வாக்கோடு உள்ள அகிலேஷ், மாயாவதி, லாலு, நிதிஷ்குமார் என்று பலரின் வாக்கு வங்கிக்கும் செக் வைத்தது பாசக. இதில் நிதிஷ்குமார் பாசக வேட்பாளரையே ஆதரிக்க வேண்டிய கட்டாயம் உருவாகிவிட்டது. உடனே இந்த பக்கம், காங்கிரசும் பீகாரைச் சார்ந்த தலித் வேட்பாளர் மீராகுமாரை அறிவித்து தன்னுடைய தலித் வாக்கு வங்கியை தக்க வைக்க போராடுகிறது. மொத்தத்தில் பாசக வலையில் எதிர்க்கட்சிகள் சிக்கிவிட்டன என்றே சொல்லலாம்.

எது எப்படியோ ஒரு தலித் ஜனாதிபதி ஆவதினால் தலித் மக்கள் வாழ்க்கை மாறிவிடப்போவதில்லை. ஒரு சிறுபான்மை மதத்தவர் ஜனாதிபதியாகவோ துணை ஜனாதிபதியாகவோ வருவதால் அம்மக்களின் வாழ்க்கை மாறப் போவதில்லை. இதற்கு முன்பும் சிறுபான்மை மதத்தவரும் தலித்தும் ஜனாதிபதியாக இருந்து இருக்கிறார்கள். அவர்களால் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடவில்லை. இனியும் ஏற்படப்போவதில்லை.

திக்கேங்கே திசையெங்கே?

அஇஅதிமுக தற்போது சசிகலா அணி, தினகரன் அணி, இபிஎஸ் அணி மற்றும் ஒபிஎஸ் அணி என நான்காக சிதறுண்டு கிடக்கிறது. சசிகலா-நடராஜன் தம்பதி கடந்த முப்பது ஆண்டுகளாக சிறுக சிறுக கட்டி வந்த மாட மாளிகை, மண்ணோடு மண்ணாக இடிந்து கொண்டிருக்கிறது. ஜெயலிதா மறைவிற்குப் பின்னர் சுலபமாக அதிகாரத்தை எட்டிவிடலாம் என்று நினைத்த சசிகலா கும்பலுக்கு மோடி அரசும் உச்சநீதிமன்றமும் முடிவுரை எழுத, அந்த முடிவிலிருந்து எழுந்த தினகரனும் ஏகப்பட்ட வழக்குகள், திகார் சிறைவாசத்தையும் தாண்டி தனி ஆவர்த்தனம் செய்கிறார். சசிகலாவின் ஸ்லீப்பர்செல் திவாகரன் தனியாக சில அமைச்சர்களைக் கொண்டு, இபிஎஸ்ஸோடு அனுசரணையாகி தினகரனுக்கு எதிராக நடக்கிறார். ஆட்சி அதிகாரத்தில் உள்ள இபிஎஸ்ஸோ “சுப்பரானுக்கு அப்புறம், வராது வந்த மாமணியாய் கிடைத்த பதவியை எப்படியும் தக்க வைக்க வேண்டும்” என்ற கொங்கு லாபியோடு, சதா” சிவனின்” ஆசியோடு டெல்லிக்கும் சென்னைக்கும் அலைகிறார். தியானம் செய்து ஜெ ஆவியின் ஆசி பெற்ற ஒபிஎஸ் 12 எம்எல்ஏக்களைத் தாண்ட முடியாமல் பாதிக்கிணற்றில் டெல்லிக்காவடி தூக்கிநிற்கிறார்.

இந்த நான்கு அணியும் தனித்தனியே கிடந்தாலும் “நான்காண்டு கால ஆட்சி” எனும் பொன்முட்டை அவர்களை இன்னும் மெல்லிய நூலால் கட்டி வைத்துள்ளது. அந்த ஆட்சிக்கு ரெய்டு, வழக்கு எனும் அச்சுறுத்தலைக் காட்டியே மைய மோடி அரசு, நான்கு அணியையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கு விழுந்தடித்து ஆதரவு தருகிறது நான்கு அணியும். பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியை தன் விருப்பத்திற்கு பொம்மைகளாக்கி கலைத்துப் போட்டு விளையாடி பார்க்கிறார் மோடி எனும் பொம்மலாட்டி. இதில் தமிழக மக்கள் தான் பாவம். ஒரு பக்கம் வறட்சி வாட்டி எடுக்க, நெடுவாசல், கதிராமங்கலம் என்று போராட்டக்களம் தகித்துக்கொண்டிருக்க, பசு பாதுகாப்பு என்று சிலர் கலவரங்களை ஆரம்பித்து வைக்க, இந்தி திணிப்பு என்று அவ்வபோது மைய அரசு பூச்சாண்டி காட்ட, தொழில் வளர்ச்சி அதலபாதாளத்திற்கு சென்று கொண்டிருக்க ஆனால் இவை எவற்றிலும் அக்கறை காட்டாமல் மாநில அரசு “தன்னைக் காக்க தலையால் தண்ணீர் குடித்துக்கொண்டிருக்க”, எதிர்க்கட்சியோ “புலிப்பாய்ச்சல் காட்ட வேண்டிய நேரத்தில் அன்ன நடை நடந்து கொண்டிருக்க”, மொத்தத்தில் திருவிழா கூட்டத்தில் சிக்கிய வழிப்போக்கன் போல திசையும் தெரியாமல் திக்கும் தெரியாமல் திருதிருவென விழித்துக் கொண்டிருக்கிறது, பல பிரதமர்களையும் ஜனாதிபதிகளையும் உருவாக்கிய கிங் மேக்கர்கள் உலாவிய, தமிழ்நாட்டு அரசியல் களம்.

- கோ

Pin It