modi eps ops copyஎப்போதும் இல்லாத அளவிற்கு இந்தச் சட்டப்பேரவை தேர்தல் மிக முக்கியத்துவமானதாக இருக்கின்றது. தேர்தல் புறக்கணிப்பு செய்யும் இயக்கங்கள் கூட வெளிப்படையாக இந்த தேர்தலில் அதை செய்ய தயங்கிக்கொண்டு இருக்கின்றன.

காரணம் பாசிசத்தின் இருள் மேகங்களால் ஒட்டுமொத்த இந்தியாவும் சூழப்பட்டு அந்தகார இருட்டில் தத்தளித்துக் கொண்டு இருக்கும் போது, கிடைக்கும் சிறு துரும்பை பற்றியாவது வெளிச்சத்தின் கங்குகளைப் பார்க்க மக்கள் தவித்துக் கிடக்கின்றார்கள்.

இந்த தேர்தல் நீதிக்கும் அநீதிக்குமான போர்களமாக மாறி இருக்கின்றது என்பதைவிட குறைந்த பட்சம் உயிரோடு வாழ அனுமதிக்கும் சக்திகளுக்கும் மக்களை தீப்பிழம்புகளால் தினம் தினம் வாட்டி சித்திரவதை செய்துகொல்லும் மனநோயளிகளுக்கும் இடையேயான மோதல் என்று புரிந்துகொள்வதுதான் சரியானதாக இருக்கும்.

இந்த மோதலில் நாம் யார் பக்கம் நிற்க வேண்டும் என்பது நமது சொந்த சித்தாந்த அபிலாசைகளை தாண்டி நாம் உயிரோடு வாழ்வாத இல்லை சாவதா என்பதை மனதில் வைத்துத்தான் முடிவெடுக்க வேண்டி உள்ளது.

காரணம் நாம் உயிரோடு இருந்தால்தான் அதற்கு அனுமதித்தால்தான் நம்மால் எந்த வகையான செயல்பாடுகளையும் மேற்கொள்ள முடியும். ஒன்றுமற்ற சூனியத்தில் இருந்து நம்மால் எந்தவித நம்பிக்கை பேரோளிகளையும் கண்டடைய முடியாத போது நம்மிடம் இருக்கும் குறைந்தபட்ச ஆற்றலைப் பயன்படுத்தி உயிர் வாழ்வதற்கான போராட்டத்தில் வெற்றி பெற்றாக வேண்டும்.

அந்த அடிப்படையில்தான் நாம் திமுக கூட்டணியை ஆதரிக்கின்றோம். நாம் ஜனநாயக சக்திகள் என்று கருதும் பலரும் இன்று அதே சிந்தனையோடு திமுகவை ஆதரிப்பதும் அதற்கு முக்கிய காரணம்.

திமுகவை ஆதரிப்பது அவர்கள் ஆட்சிக்கு வந்தால் எல்லாவற்றையும் மாற்றி விடுவார்கள் என்றோ இல்லை சமூக சமத்துவத்தையோ பொருளாதார சமத்துவத்தையோ உண்டாக்கி விடுவார்கள் என்றோ உறுதியாக நம்பி அல்ல. அப்படியான எந்த பிரமையும் சமூக மாற்றத்தையே தங்களின் வாழ்வின் குறிக்கோளாக கொண்டவர்களிடம் ஒரு போதும் இருப்பதில்லை.

மாநிலத்தின் நன்மைக்காக தினம் தினம் போராடி பல வழக்குகளை சந்தித்துக் கொண்டு இருக்கும் விசிக மற்றும் இடதுசாரிகளுக்கு தலா 6 சீட்டும் தமிழ்நாட்டு மக்களால் வெறுக்கப்படும் காங்கிரசுக்கு 25 சீட்டும் திமுக கொடுத்ததில் இருந்தே திமுகவின் ஜனநாயக பண்பை நாம் புரிந்துக் கொண்டிருக்கின்றோம்.

ஆனால் சம்மந்தப்பட்ட கட்சிகளே அதை சகித்துக் கொண்டு பாசிசத்தை எதிர்க்கும் நோக்கோடு தேர்தல் பணிகளை துவங்கிவிட்ட பிறகு பேசுவதில் பயனில்லை.

ஆனால் பேசப்பட வேண்டிய முக்கியச் செய்தி சில அமைப்புகள் பிஜேபி நிற்கும் தொகுதியில் மட்டும் பரப்புரை செய்து அதை தோற்கடிக்கப் போவதாக அறிவித்துள்ளதுதான். இது தமிழகத்தை பண்பாட்டு ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் காவு வாங்க காத்திருக்கும் பாசிஸ்ட்களின் ஆணிவேரை மக்களிடம் இருந்து மறைக்கும் சூழ்ச்சியான அரசியலாகும்.

உண்மையில் பிஜேபி மட்டும்தான் தமிழகத்தின் எதிரி. அதனால் அதை மட்டும்தான் எதிர்ப்போம் என்பது மோசடியே அல்லாமல் வேறில்லை. நாம் புரிந்துகொள்ள வேண்டியது 20 இடங்களில் மட்டும் தமிழகத்தில் பிஜேபி போட்டியிடவில்லை, 234 தொகுதிகளிலும் போட்டி இடுகின்றது என்பதைத்தான்.

அதிமுகவையும் பிஜேபியையும் தனித்து பிரித்துப் பார்ப்பது நெருப்பையும் வெளிச்சத்தையும் பிரித்துப் பார்ப்பது போன்றது. ஒன்றில்லாமல் இன்னொன்று இல்லை. ராஜேந்திர பாலாஜி, மாபா.பாண்டியராஜன், மைத்ரேயன், ஒபிஎஸ் மற்றும் அவரது மகன் ரவீந்திரன் என சில சங்கிகள் வெளியே தெரிந்தாலும் தெரியாத பல ரூபங்கள் உள்ளே உள்ளன.

தற்போது அதிமுகவைக் கைப்பற்றி வைத்திருக்கும் கும்பல் அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ் சாகாவில் பயிற்சிப் பெற்ற பிஜேபினருக்கு நிகரான பார்ப்பனிய அடிமை கும்பலாகும். இவர்கள் பாப்பாத்தி A1 இன் கீழ் இத்தனை நாளாக மண் சோறு தின்பது, பால் குடம் தூக்குவது, காவடி தூக்குவது, மீசையை மழிப்பது, மொட்டை அடித்துக் கொள்வது என வட மாநில சங்கிகளுக்கு எந்த வகையிலும் குறைவில்லாமல் செய்தவர்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

தமிழ்நாட்டில் பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் என்ற பெயரை பொதுவெளியில் சொல்லவே பயந்த சங்கிகளால் இன்று தைரியமாக ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டவும் கட் அவுட் வைக்கவும் முடிகின்றது என்றால் அதற்கு முக்கிய காரணம் இந்த அடிமை கும்பல்தான். அதுமட்டுமல்ல

கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தாக்கிய ஒக்கி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதில், பல்லாயிரக்கணக்கான மரங்கள் அடியோடு சாய்ந்தன. குமரி மாவட்ட மீனவர்கள் 162 பேர் உள்பட 204 மீனவர்கள் உயிரிழந்தனர்.

ஒக்கி புயலால் உண்டான பாதிப்புகளை சீர் செய்யும் பொருட்டு மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசு ரூ.13520 கோடி நிவாரணம் கேட்டது. ஆனால் சாகவாசமாக பாதிப்புகளைப் பார்வையிட குமரி வந்திருந்த பிரதமர் மோடி, தமிழக அரசுக்கு தேசியப் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வெறும் ரூ.280 கோடி முதல்கட்டமாக வழங்கப்படும் என்று அறிவித்தார்.

மேலும் குமரி மாவட்ட மறுசீரமைப்புக்கு தமிழக அரசு மத்திய அரசிடம் ரூ.558 கோடி நிதி கேட்டது. ஆனால், மத்திய அரசு ரூ.40 கோடி மட்டுமே ஒதுக்கியது. அதே போல 2018-ம் ஆண்டு தென் மாவட்டங்களைத் தாக்கிய கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.15 ஆயிரம் கோடி கேட்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு இடைக்கால நிவாரணமாக ரூ.353.70 கோடியை மட்டுமே அறிவித்தது.

மேலும் "தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தைச் செயல்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை' என்றும், "மக்களின் கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்த வேண்டிய அவசியம் இல்லை' எனவும் மத்திய அரசு திமிர்தனமாக அரசாணை வெளியிட்டதை நாம் மறந்துவிட முடியாது.

இதன் மூலம் வருங்காலங்களில் தாங்கள் நினைத்தது போலவே காவிரி டெல்டாவை பாலைவனமாக மாற்றுவோம் என நேரடியாகவே தமிழகத்திற்கு பிஜேபி மிரட்டல் விட்டது.

அதுமட்டுமல்ல அனைத்துமத மக்களும் நல்லிணக்கத்தோடு வாழும் தமிழ்நாட்டில் பொறுக்கி, மொல்லமாரி, கேடி, பாலியல் குற்றவாளி, கந்துவட்டி பேர்வழி, கஞ்சா கடத்தல் பேர்வழி, விபச்சார தரகன் என எவனாவது கொல்லப்பட்டால் உடனே முஸ்லிம் தீவிரவாதிகள் தான் கொன்றுவிட்டதாக அவதூறு பரப்பிக் கலவரத்தை தூண்டி அரசியல் ஆதாயம் அடைய துடித்தது.

தனது வீட்டிற்கு தானே பெட்ரோல் குண்டுகளை போட்டுக் கொண்டும் தனது வாகனங்களை தானே எரித்துக் கொண்டும் தன்னைக் கொல்ல முஸ்லிம் தீவிரவாதிகள் முயற்சிக்கின்றார்கள் என்று சங்கிகள் நாடகம் ஆடினார்கள்.

இவை எல்லாம் ஜெயலலிதா மறைவிற்குப் பின்னால் தமிழ்நாட்டில் நடந்தவை. ஜெயலலிதாவின் ஆட்சியில் ஜெயலலிதாவே பார்ப்பனப் பாசிசத்தின் முகமாக செயல்பட்டது போய் அவரது மறைவிற்கு பின்னால் ஒட்டுமொத்த அடிமைக் கும்பலும் பார்ப்பன பாசிசத்தின் முகங்களாக வெளிப்படையாகச் செயல்பட்டதன் விளைவுதான் இன்று தமிழ்நாடு பேரழிவின் பிடியில் சிக்கிக் கிடப்பதற்குக் காரணம்.

அதனால் அதிமுகவை தவிர்த்துவிட்டு பிஜேபியை மட்டும் எதிர்ப்பது என்பது பாசிசத்தின் வேர்களை விட்டுவிட்டு கிளைகளை மட்டும் அழிக்கும் செயலாகும். உண்மையில் இன்று தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் பிஜேபியைவிட அதிமுகதான்.

பொள்ளாட்சி பாலியல் குற்றவாளிகளும், நிர்மலா தேவி வகையாறாக்களும், உதவி கேட்டு வந்த பெண்ணை மெயின் ரோட்டுக்கு வரச்சொன்ன கேடுகெட்ட பொறுக்கிகளும் எந்தவித பயமும் இன்றி தங்களது சமூகவிரோத செயல்களை அரங்கேற்ற முடிகின்ற இடமாக தமிழகத்தை இந்த பிஜேபியின் பினாமி அதிமுக ஊழல் அரசு மாற்றியுள்ளது.

அதனால் அதிமுக வீழ்த்தப்பட வேண்டும். பாசிசத்தை தமிழகத்தில் வரவேற்கும் எந்த ஒரு சக்தியும் இந்த மண்ணில் தலை தூக்க முடியாது என்பதை நாம் நிரூபிக்க வேண்டும். பிஜேபி 20 தொகுதிகளில் ஒன்றில் கூட வெற்றி பெற முடியாது என்பது ஏற்கெனவே இங்கிருக்கும் கள நிலவரத்தை அறிந்தவர்களுக்குத் தெரியும்.

ஆனால் அதிமுக? பிஜேபியோடு கூட்டுவைத்து தமிழர்களின் நலனுக்கு வேட்டு வைத்த வெத்துவேட்டு கும்பலின் மொத்த கூடாரத்தையும் மண்ணை கவ்வவைத்து புறமுதுகிட்டு ஓடச்செய்ய வேண்டும்.

- செ.கார்கி

Pin It