கட்சி வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுவதும், வாக்குகள் கேட்டு அவரவர்கள் பிரச்சாரம் செய்வதும் அவர்களின் ஜனநாயக உரிமை. ஆனால் அதில் ஒரு நேர்மை வேண்டும்.

சில நாள்களுக்கு முன் பா.ஜ.கவுக்கு ஆதரவாகத் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக ஒரு நாள் பயணமாக கோவைக்கு வந்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்.

அவர் தமிழகத்தை உத்தரப் பிரதேசம் என்று நினைத்துக் கொண்டார் போலத் தெரிகிறது.

யாத்திரை என்ற பெயரில் சங்கபரிவாரங்கள், இரு சக்கர வாகனங்களில் காவிக் கொடிகளுடன் வலம் வந்தார்கள். கோவை டவுன்ஹால் பகுதியில் கடைகளின் மீது கற்களை வீசியும், சாலையோர பழக்கடை போன்றவைகளை சாலையில் வீசிச் சிதறடித்துச் சென்றார்கள் என்பதைத் தொலைக் காட்சிகளிலும், சமூக ஊடங்களிலும் பார்த்தோம்.

இந்தப் பேரணியைத் தேர்தல் ஆணையம் எப்படி அனுமதித்தது ?

இது சாதாரணமான ஒன்றுதான், ஊடகங்கள் பெரிது படுத்துகின்றன என்கிறார் பிரதமர் மோடி. இது ஒன்றும் பெரிய விசயம் இல்லை என்கிறார் வானதி சீனிவாசன். மதம் கூர்மையான கத்தி போன்றது. கவனமாகக் கையாள வேண்டும்.

அமைதியாக இருக்கும் தமிழகத்தில் கலவரத்தை உருவாக்கும் வகையில் இந்தச் செயல் அமைந்திருக்கிறது.

அரவக்குறிச்சியில் பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை, தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜியைப் பார்த்துச் சொல்கிறார் தனக்குக் கர்நாடகா என்ற இன்னொரு முகம் இருக்கிறது என்று. இந்தப் பேச்சிலும் ஒரு வகையில் வன்முறை தெரிகிறது.

இது வரையும் அமைதிச் சோலையாக இருக்கும் தமிழ்நாட்டில் வன்முறைக்கு இடம் இல்லை, இடம் கொடுக்கவும் கூடாது.

தந்தை பெரியார் இந்த மண்ணில் விதைத்த மனித நேயம், பெண் விடுதலை, சமூகநீதி , சுயமரியாதை போன்ற கருத்துகளால் வலிமை பெற்ற "பெரியார் மண்ணில் " சங்க்பரிவாரங்களின் காவி வேலைகள் எடுபடாது.

காவி வண்ணம் காற்றில் கரையப் போகிறது என்பதை இந்தத் தேர்தலில் மக்கள் சொல்வார்கள்.

- திராவிடர் விடுதலைக் கழகம்

Pin It